அ.க. நவநீதகிருட்டிணன்
கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பள்ளி ஆசிரியர் எனப் பன்முகச் செயல்பாட்டாளர் அ.க. நவநீதகிருட்டிணன். இவர் ஜூன் 15, 1921 அன்று திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஊர்க்காடு கிராமத்தில் புலவர் அங்கப்பப் பிள்ளை - மகாலட்சுமி இணையருக்கு இளையமகனாகப் பிறந்தார். இயற்பெயர் கங்காதார நவநீதகிருஷ்ணன். தனித்தமிழ்ப் பற்றால் பிற்காலத்தில் அ.க. நவநீதகிருட்டிணன் ஆனார்.

தந்தை தமிழ்ப் புலவர். சோதிடரும்கூட. ஊர்க்காட்டு ஜமீன் அரசவைப் புலவராக இருந்தார். அவ்வூர் ராஜபாஸ்கர சேதுபதிப் பள்ளியில் ஆசிரியப்பணி ஆற்றினார். அதே பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார், நவநீத கிருட்டிணன். தந்தையிடமிருந்து இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். மேலே அம்பாசமுத்திரம் தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். கல்வியை நிறைவு செய்தபின் 'வித்துவான்' படிப்பிற்காக அண்ணாமலை பல்கலையில் சேர்ந்தார். பல்கலைக்கழகம் பல சாளரங்களைத் திறந்துவிட்டது. சான்றோர் பலர் அங்கு ஆசிரியர்களாக இருந்தனர். அவர்கள் மூலம் மேலும் முழுமை பெற்றார் நவநீதகிருட்டிணன். ஓய்வுநேரத்தை நூலகத்தில் செலவிட்டார். அரிய நூல்களை வாசித்தார். வாசிப்பு எழுத்தார்வத்தைத் தூண்டியது. கவிதை, கட்டுரைகளை இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். 'செந்தமிழ்ச் செல்வி' போன்ற அக்காலத்தின் இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வந்தார். அக்காலத்தில் இவருடன் பயின்றவர்கள், இரா. நெடுஞ்செழியனும், அன்பழகனும் ஆவர். இறுதிவரை அவர்களது நட்பு நீடித்தது.வித்துவான் பட்டம் பெற்றவுடன் திண்டுக்கல்லில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. சில காலம் அங்கு பணியாற்றிய பின் ராஜபாளையம் பள்ளியில் ஆசிரியப்பணி கிடைத்தது. அக்காலகட்டத்தில், 23ம் வயதில் பிச்சம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. ஐந்து ஆண் மகவுகளும், மூன்று பெண் மகவுகளும் வாய்த்தன. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் பணி வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். சுமார் ஒன்பதாண்டுகள் அங்கு பணிபுரிந்த பின், மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கலாசாலைப் பள்ளியில் பணியைத் தொடர்ந்தார், நவநீதகிருட்டிணன் மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியரானார். தமிழோடு சைவத்தின் பெருமையையும் உயர்வையும் போதித்து மாணவர்களை நல்வழிப்படுத்தினார். பலருக்குத் தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் ஏற்படக் காரணமானார். இவரிடம் பயின்றவர்களுள் பிரபல வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகமும் ஒருவர்.

தமிழ் மற்றும் சைவ இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றுவதிலும் ஈடுபட்டிருந்தார் நவநீதகிருட்டிணன். சிறப்பாகப் பேசுகிறவர் என்பதால் தமிழகமெங்கும் பல கருத்தரங்குகளிலும், சொற்பொழிவுகளிலும் பங்கேற்றார். அவரது உரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு, 'பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள்', 'பரிபாடல் சொற்பொழிவுகள்', 'பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்', 'சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்' போன்ற தலைப்புகளில் நூல்களாக வெளிவந்தன. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பள்ளி மாணவர்களுக்காகப் பாடநூல்களை வெளியிட முன் வந்தது. அப்பணி நவநீதகிருட்டிணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1957ல் இவரது பாடநூலான 'காவியம் செய்த மூவர்' வெளியானது. தொடர்ந்து 'முதல் குடியரசுத் தலைவர்', 'கோப்பெருந்தேவியர்', 'சங்ககால மங்கையர்', 'சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை', 'பாரதியார் குயிற்பாட்டு', 'தமிழ் காத்த தலைவர்கள்', 'இலக்கிய அமைச்சர்கள்' போன்ற நூல்கள் கழக வெளியீடுகளாக வந்தன.குறள்மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். மாணவர்களுக்குத் தினந்தோறும் ஒரு குறளை விளக்கத்துடன் சொல்லிக் கொடுப்பது அவர் வழக்கம். கிடைத்த ஓய்வு நேரத்தில் வள்ளுவரின் குறள் குறித்து மிக விரிவான ஆய்வை மேற்கொண்டு 'வள்ளுவர் சொல்லமுதம்' என்ற தலைப்பில் நூல்களை எழுதினார். அவை நான்கு பகுதிகளாக தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளியாகின. 'துறவும் உணர்வும்', 'களவும் காமமும்', 'நன்றியும் நடுவும்', 'பெண்மையும் திண்மையும்' 'ஊழும் தாளும்', 'அரணும் உரனும்' என பல்வேறு தலைப்புகளில் அவர் குறளின் சிறப்பை விளக்கியுள்ளார். இந்நூல்கள் இவரது திருக்குறள் ஈடுபாட்டுக்கும், புலமைக்கும், மேதைமைக்கும் முக்கியச் சான்றாகும். 'அறநூல் தந்த அறிவாளர்', 'இலக்கியத் தூதர்கள்', 'தமிழ் வளர்த்த நகரங்கள்', 'நாடகப் பண்புகள்', 'முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்', 'வள்ளலார் யார்?', போன்றவை இவரது பிற குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

தமிழின்மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த நவநீதகிருட்டிணன், தமிழின் சிறப்பை, பெருமையை, வளர்ச்சியை, 'தமிழ் வளர்ந்த கதை' என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார். இதன் முக்கியச் சிறப்பு இது 'வில்லுப்பாட்டு' வடிவில் எழுதப்பட்டதாகும். இதுபற்றி நவநீதகிருட்டிணன், "பண்டுதொட்டு இவ்வில்லிசையில் சிறு தெய்வக் கதைகளே பயின்று வந்தன. சிறந்த வரலாறுகளை இவ்வில்லிசையில் அமைத்துப் பாடினால் கல்லார்க்கும் கற்றவர்க்கும் நல்ல கருத்துக்கள் எளிதில் உள்ளத்தில் பதியும் என்னும் எண்ணத்தால் 'தமிழ் வளர்ந்த கதை' என்னும் இவ்வில்லிசைப் பாடலை இயற்றினேன்" என்கிறார். இவர் இதைப் பல சபைகளில் மக்கள்முன் அரங்கேற்றி, மிகுந்த வரவேற்பைப் பின்னரே நூல் வடிவம் பெற்றது. இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வில்லுப்பாட்டு வடிவிலேயே 'திருவள்ளுவர் வரலாறு', 'சிவஞான முனிவர் வரலாறு', 'மெய்கண்டார் வரலாறு', 'திருஞானசம்பந்தர் வரலாறு', 'மாணிக்கவாசகர் வரலாறு', 'கண்ணகி கதை', 'ஔவையார் கதை', 'பத்துப்பாட்டின்பம்' போன்ற நூல்களை எழுதினார். 'செந்தமிழ்ச் செல்வி', 'தமிழ்த்தென்றல்', 'தமிழ்ப்பொழில்', 'ஞானசம்பந்தம்', 'அருள் ஒளி' போன்ற இதழ்களில் தமிழ் குறித்தும் சைவம் குறித்தும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார்.திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியவர். நெல்லை அருணகிரி இசைக்கழகம் மூலம் திருக்குறள் பணிகளை முன்னெடுத்தவரும்கூட. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் நடந்து வந்த திருவள்ளுவர் செந்தமிழ்ப் புலவர் கல்லூரியில் மாலை நேரத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தார். டாக்டர் மு.வ., ஔவை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், டாக்டர் வ.சுப. மாணிக்கம், சைவசித்தாந்தக் கழக நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை, குன்றக்குடி அடிகளார் போன்றோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

இவரது தமிழ் மற்றும் சைவப் பணிகளுக்காக தருமபுர ஆதீனம் அவர்கள் இவருக்குச் 'செஞ்சொற் புலவர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். மதுரை ஆதீனம் 'தமிழ்க் கொண்டல்' என்ற பட்டத்தை வழங்கினார். நெல்லை திருக்குறள் கழகம், இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி, 'திருக்குறள் மணி' என்னும் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.

1967 ஏப்ரல் 14ல், தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு அன்று நிகழ்ந்த கைத்தறிப் பொருட்காட்சியில் கலந்துகொண்டவர், தமிழ் மற்றும் சைவத்தின் சிறப்பைப் பற்றிச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும் போது, குருதிக்கொதிப்பு அதிகமாகி மேடையிலேயே காலமானார். அப்போது இவருக்கு வயது 47 தான். இவரது தமிழ்ப்பணியைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. இவ்வாண்டு (2021) அ.க. நவநீதகிருட்டிணன் அவர்களின் நூற்றாண்டு.

பா.சு. ரமணன்

© TamilOnline.com