வெறுமையா? முழுமையா?
அன்புள்ள சிநேகிதியே,
நான் ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர். வயது 49. வாழ்க்கையில் நிறைய சோதனைகளைச் சந்தித்து இருக்கிறேன். சிறுவயதிலேயே அப்பா போய்விட்டார். நாங்கள் மூன்று பெண்கள். நான்தான் பெரியவள். என் அம்மா சில வருடம் வேலை செய்துவிட்டு முடியவில்லை என்று விட்டுவிட்டார். 12 வயதிலிருந்து குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து வீட்டுச் செலவுகளுக்கு அம்மாவுக்கு உதவினேன். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன். சில நிறுவனங்கள் ஏற்படுத்திய ஸ்காலர்ஷிப் வசதியைப் பயன்படுத்திக் கொண்டேன். இந்திய மல்டிநேஷனல் கம்பெனியில் வேலை பார்த்து, பணம் சேர்த்து, இரண்டு தங்கைகளையும் படிக்க வைத்தேன். ஒரு தங்கைக்குப் படிப்பு வரவில்லை. பக்கத்து வீட்டுப் பையனுடன் ஓடிப்போய்த் திருமணம் செய்துகொண்டாள். எனக்கு அப்போது 23 வயது. அவளுக்குப் பதினெட்டு. என் அம்மாவுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான். அந்தச் சமயத்தில்தான் எனக்கு அமெரிக்கா வர வாய்ப்புக் கிடைத்தது. பணி, கல்வி எல்லாவற்றுக்கும் அது உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். என் இரண்டாவது தங்கைக்கு அப்போது 15 வயது. அம்மாவையும் அவளையும் தனியாக விட்டுவிட்டு வரமுடியாத குழப்ப நிலையில்தான் கிளம்பி வந்தேன். வாழ்க்கையில் பணம் முக்கியமாக இருக்கிறதே! என் 15 வயது தங்கை பெரியவள் மாதிரி படிப்பை விட்டுவிட்டுக் காதலில் சிக்கிக் கொள்வாளோ, என் அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள், என்றெல்லாம் பயம் தொடர்ந்து இருந்தது.

இங்கே வந்து என் சௌகரியங்களைக் குறைத்துக்கொண்டு யார் வீட்டிலேயோ தங்கிக்கொண்டு மேற்படிப்புப் படித்து முடித்தேன். கிரீன் கார்டு வாங்குவதில் ஏற்பட்ட தடங்கல்கள். திரும்பிப் பார்ப்பதற்குள் வயது 35 ஆகிவிட்டது. என் இரண்டாவது தங்கை மிகவும் பொறுப்பாகப் படித்து முடித்து ஒரு வேலை தேடிக்கொண்டாள். அம்மாவைப் பார்த்துக் கொண்டாள். அதுதான் நான் செய்த அதிர்ஷ்டம். நிலைமை கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும், இந்தியா சென்று அந்தத் தங்கைக்கு மிகவும் ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்தேன். உறவினர் முன்பு ஒரு கௌரவமான நிலையில் நாங்கள் இருந்ததுபோல ஒரு உணர்வு. என் தங்கையை இங்கே வருவதற்கு என்கரேஜ் செய்யவில்லை. அம்மாவுக்கு இருதயப் பிரச்சனை. யாரேனும் பக்கத்தில் இருப்பது நல்லது என்று தோன்றியது. அம்மாவை அழைத்துக்கொண்டு வந்தேன். ஆறுமாதம் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால், வந்த இரண்டு மாதத்தில் உடம்பு முடியாமல் போகவே, இந்த இன்ஸ்யூரன்ஸ் பிரச்சினைக்காகத் திருப்பிக் கொண்டுபோய் விட்டுவிட்டேன். எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தேன்.

இதற்கு நடுவே வீட்டை விட்டுப் போன அந்தத் தங்கை பணத்திற்கு மிகவும் சிரமப்படுகிறாள் என்றும், அந்தக் கணவன் குடித்துவிட்டு அடிக்கிறான் என்றும் கேள்விப்பட்டேன். அவள் எந்த ஊரில் இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. யாரோ தெரிந்தவர்கள் செய்தி சொன்னார்கள். பையன் காலேஜ் படிப்புக்குக் கூட வசதி இல்லை என்றார்கள். நான் தேடி, அவள் அட்ரஸ் ஃபோன் நம்பரைக் கண்டுபிடித்துப் பேசினேன். பல வருடங்கள் ஆனதாலோ என்னவோ அந்த ஒட்டுதல் இல்லை. அவளும் என்னிடம் பல விஷயங்களைச் சொல்லத் தயங்கினாள். நான் அதைப் புரிந்துகொண்டேன். அவள் பையன் பேங்க் அக்கவுண்ட் கேட்டு ஒரு பெரிய தொகையை அனுப்பி வைத்தேன். அவன் அதற்கு மிகவும் நன்றி சொன்னான் . அவ்வப்போது அவன் படிப்பைப் பற்றி விசாரிப்பேன்.

ஏதோ இது மட்டும் எல்லோரும் கஷ்டப்படாமல் இருக்கிறோமே என்று நிம்மதியாக இருந்த சமயத்தில், திடீரென அம்மா காலமாகி விட்டார். நான் வைத்திருந்த ஒரே பாசக்கயிறு அறுந்து போனது. வாழ்க்கையில் வெறுப்பு, வெறுமையை உணர்ந்தேன். இந்தச் சமயத்தில் என் தொழில் ரீதியாக ஒருவர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். மத்திய வயது. வங்காளி. மிகவும் பண்பானவர். இந்த இடத்துக்குப் புதிது என்பதால் நான் அவருக்கு எல்லா வகையிலும் உதவினேன். எங்களுக்குள் ஒரு அருமையான நட்பு மலர்ந்தது. அவர் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நான் நேசத்தை வளர்த்துக்கொண்டேன். அவருடைய வேலை ஒப்பந்தம் முடிந்து இந்தியா செல்லும்போது, நான் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அப்போதுதான் அவர் தன்னுடைய சொந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மனைவி இருக்கிறார். மகளுக்குத் திருமணமாகி விட்டது. மனைவிக்கு மனநோய். பல வருடங்களாகப் பார்த்துக்கொண்டு வருகிறார். இந்த ஒரு வருடம் இங்கே நிறையப் பணம் சேர்த்து மனைவியை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். அந்தச் செய்தி தெரிந்தவுடன் அப்படிக் கோபம் வந்தது. என்னை ஏமாற்றிவிட்டார் என்று கொந்தளித்தேன். மனம் ஒரு சமநிலைக்கு வந்தபோது யோசித்தேன்.

எத்தனையோ முறை வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருமுறைகூட முறை தவறி நடந்தது இல்லை. அவர் குடும்பத்தைப் பற்றி ஏதாவது கேட்டால் ஒரு புன்சிரிப்பு மட்டும்தான் பதிலாக இருக்கும். நான்தான் அவரிடம் மயங்கிப் பின்னால் ஓடியிருக்கிறேன். அவர் ஊருக்குப் போவதற்கு இரண்டு நாள் முன்பு அவரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டேன். “அடுத்த ஜன்மம் என்ற ஒன்று இருந்தால் நாம் நிச்சயம் அப்போது ஒன்று சேர்வோம்” என்றார். அருமையான மனிதர். அந்த மனைவிக்குக் கொடுத்து வைக்கவில்லை. நல்ல நண்பர்களாக இருந்தோம். He was my soul mate.

மூன்று வருடங்களுக்கு முன்பு இந்தியா சென்றபோது, அவரை, அவரது ஊருக்குச் சென்று பார்த்தேன். அவர் மனைவியையும் பார்த்தேன். அவர்கள் பெண்ணும் அந்தச் சமயத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தார். ஒரு ஆக்சிடெண்டில் அம்மாவின் தலையில் அடிபட்டு குழந்தை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்று சொன்னார். மனம் கனத்தது. அவர்மேல் மரியாதை கூடியது. இங்கே திரும்பி வந்து நினைத்துப் பார்த்தேன். உடம்பால் வாழ்ந்தால்தான் உறவா, ஏன் மனதால் இருக்கக் கூடாது என்று அவரை மனதால் வரித்தேன். அடிக்கடிப் பேசிக் கொள்வோம். ஒரு ஆத்மார்த்தமான, அர்த்தமுள்ள உறவாக அது இருந்தது. மனம் நிறைவாக இருந்தது.

திடீரென்று போன வருடம் அந்தத் தொடர்பு நின்று போனது. நிலைகுலைந்து போனேன். அவருடைய நம்பர் மட்டும்தான் எனக்குத் தெரியும். இரண்டு வாரம் குழம்பினேன். நல்ல காலம் அவரது வீட்டு விலாசம் என்னிடம் இருந்தது. என் தங்கையின் பையன் (நான் உதவி செய்தவன்) அங்கே எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருந்தான். அவனைக் கூப்பிட்டு, அங்கு போய்ப் பார்க்கச் சொன்னேன். அதற்குள் ஒரு மாதம் ஆகிவிட்டது. அவன் அங்கே சென்று விசாரித்தபோது தெரிந்தது, அவர் உறக்கத்திலேயே இறந்துபோனாராம். அவருடைய பெண், தன் அம்மாவை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். இது பக்கத்து அபார்ட்மென்ட்டில் இருந்தவர்கள் சொன்ன தகவல். நான் யாரிடம் போய் என் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள முடியும்? ஏன் எனக்கு மட்டும் இந்த வெறுமையான வாழ்க்கையைக் கடவுள் கொடுத்திருக்கிறார்? நான் என்ன தவறு செய்திருப்பேன்?

ஒரு தூரத்து உறவினர் பெண்ணைப் போன மாதம் தற்செயலாகச் சந்தித்தேன். நான் அவர்களுக்கு முன்பு ஏதோ நிதி உதவி செய்திருக்கிறேன். என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். நான்தான் தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை. இந்த முறை அவரைச் சந்தித்த பின் ஃபோன் செய்து பேசத் தோன்றியது. அந்தச் சமயத்தில்தான் உங்களைப் பல வருடமாகத் தெரியும் என்றும், இந்தத் 'தென்றல்' பகுதியைப் பற்றியும் சொன்னார்கள். தென்றலை நான் பார்த்திருக்கிறேனே தவிர, முயற்சி எடுத்து வாங்கிப் படித்ததில்லை. உங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்கள் விவரங்களை அந்த ஆன்ட்டி பகிர்ந்து கொண்டார். என் வெறுமையை எப்படி போக்கமுடியும் என்று தெரியவில்லை. என் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.

இப்படிக்கு,
.................


அன்புள்ள சிநேகிதியே
வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்தித்திருக்கிறீர்கள். அதுவும் soul mate-ஐ இழந்து, அந்தச் சோகத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத நிலைமை. விரக்தி, வெறுமை புரிகிறது. நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்ததில், நீங்கள் ஒரு பாசமுள்ள, மனிதாபிமானம் கொண்ட நபராக இருந்திருக்கிறீர்கள். ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக உங்களால் முடிந்ததை எல்லாருக்கும் செய்திருக்கிறீர்கள். அதற்காகப் பெருமைப்படுங்கள். உங்கள் வயதில் பல பேருக்கு 'Empty nest syndrome' வந்துவிடுகிறது. குழந்தைகள், கல்லூரி, வேலை, திருமணம் என்று பிய்த்துக்கொண்டு போய்விடுகிறார்கள். உங்களுக்கு மானசீகமாக இருந்த துணையும் போய்விட்டது. தாக்கம் அதிகம் இருக்கும் என்பதில் மறுப்பில்லை. ஆனால் நீங்கள் தனிநபராக வாழ்க்கையில் இப்போது உயர்ந்திருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை செய்த சாதனைகளை நினைத்துப் பாருங்கள். வெறுமை குறையும். சிலருடைய வாழ்க்கை மற்றவரை வாழ வைப்பதிலேயே தனித்து நிற்கும். அதில் நீங்களும் ஒருவர். அதேபோல் உடலுறவுத் தொடர்பில்லாமல் எங்கேயோ இருக்கும் நபருடன் பேச்சளவில் தொடர்புவைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறீர்கள். அந்தப் பேச்சு இப்போது இல்லாவிட்டாலும், மனதளவில் உங்களுள் நிறைந்திருப்பார் அந்த வங்காளி மனிதர். உங்கள் மனதில் அந்த நினைவுகள் ஒரு நிம்மதியைக் கொடுக்கும். விரக்தி, சுயபச்சாதாபம் மறைந்துவிடும். உங்கள் மனிதசேவை தொடரட்டும்.

வாழ்த்துக்கள்
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com

© TamilOnline.com