ஒரு கோப்பைக் காப்பியும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையும்!
"நீங்கள் ஒரு கோப்பைக் காப்பி குறைவாகக் குடித்தால் மற்றொருவர் உடல்நலம் பெறுவார்" என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஒருவேளை உங்களுடைய வயிற்றெரிச்சல் (அதாங்க அசிடிட்டி) தீரும் என்று சொன்னாலாவது சரியாக இருக்கும். அதை இப்படிப் பாருங்கள்: நீங்கள் நினைத்ததும் ஓடிப்போய் அந்தக் கொதிக்கும் லாட்டேயை அடிக்கடி வாங்கிக் குடிப்பவராக இருக்கலாம். ஒரு நாளைக்கு 3 காஃபி குடிக்கும் இடத்தில் ஒன்றைக் குறையுங்கள். 3 டாலர் மிச்சம் பிடித்துவிட்டீர்களா? ஒரு வாரத்தில் 20 டாலர் மிச்சம். அதைப் பிறருக்கு உதவி செய்ய உபயோகிக்கலாம் என்கிறார்கள் பெங்களூரின் சாயி ஆஷ்ரயா நிறுவனர்கள் சாயி பிரசாத் வெங்கடாசலம் மற்றும் சாரிகா தாரேஸ்வர்.



கர்நாடக மாநிலத்தின் கோலார் அருகே சாயி ஆஷ்ரயா ஒரு சூப்பர்ஸ்பெஷாலிடி மருத்துவ மனையைக் கட்டுவதற்கான ஆயத்தங்களைச் செய்துவருகிறது. சாயி பிரசாத் வெங்கடாசலமும் சாரிகாவும் தம்மோடிருக்கும் தன்னார்வத் தொண்டர்களுடன் இதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.

ஆசைக்கு உச்சவரம்பு
நீங்கள் காஃபியை (சிகரெட், பாப் கார்ன், சினிமா அல்லது வேறு ஏதாவதொரு செலவை) குறைத்துக்கொண்டு மிச்சம் பிடித்த அந்த டாலர், அந்த மருத்துவமனையில் ஒரு செங்கல்லாக, ஒரு சுவராக, ஓர் அறுவை சிகிச்சை அறையாக, ஒரு CT ஸ்கேன் கருவியாக மாறலாம். அது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஏழை நோயாளிகளின் உயிரைக் காக்கலாம். இப்படி நினைத்துப் பார்க்கும்போது நீங்கள் குடிக்காமல் போன அந்தக் காஃபி ஒரு வைரக்கல்லுக்கு இணையாகிவிடுகிறது; உங்களை அன்பால், கருணையால், மன நிறைவால், மகிழ்ச்சியால் நிரப்பிவிடுகிறது. எப்போதும் போலச் சிந்திக்காமல் காஃபியைக் குடித்தவண்ணம் இருந்திருந்தால் இவற்றில் எதுவுமே கிடைத்திருக்கச் சாத்தியமில்லை.



இப்படி நம்முடைய அநாவசியப் பழக்கங்களைக் குறைத்துக்கொண்டு, அதனால் வரும் சேமிப்பை, சமுதாயத்தில் வறுமையாலும் நோயாலும் வாடும் ஒருவரின் நலத்துக்குச் செலவிடுவதை 'ஆசைக்கு உச்சவரம்பு' (Ceiling on Desires - COD) என்னும் அழகிய பெயரால் இவர்கள் அழைக்கிறார்கள். இதன் சிறப்பு என்னவென்றால், 'என்னிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது' என்பதற்காக இங்கே ஒருவர் பணத்தைத் தூக்கிக் கொடுப்பதில்லை; மாறாக, வீண்செலவைக் குறைத்துக்கொண்டு, அதில் மிஞ்சிய பணத்தை - தியாகத்தினால் வந்த பணத்தை - அவர் மருத்துவ மனைக்குக் கொடுக்கிறார். அந்த நன்கொடை, சிகிச்சை பெற்றவரை மட்டுமல்லாமல், பணம் கொடுப்பவரையும் உடல், மன ஆரோக்கியத்தில் திளைக்க வைக்கிறது. சாயி ஆஷ்ரயா மற்றும் அதன் ஆதரவாளர்கள் 'ஆசைக்கு உச்சவரம்பு' கோட்பாட்டைக் கடைப்பிடித்து அதன் சேவைப் பயணத்தில் உற்சாகத்தோடு உடன் நடக்கிறார்கள்.

சாயி ஆஷ்ரயா
தென்றல் வாசகர்களுக்கு சாயி ஆஷ்ரயா புதிதல்ல. முன்னரே 'அன்புத் தென்றலின் அமெரிக்க உலா' என்ற கட்டுரையில் நாம் சாயிபிரசாத் வெங்கடாசலத்தின் முந்தைய அமெரிக்கப் பயணத்தைப் பார்த்திருக்கிறோம். அதில் எழுதியிருந்தோம்:

"சாயிபிரசாதுக்கு உடல்நலம் குறைவுபட்டு, சக்கர நாற்காலியில் இருந்தபோதும், சிரியாவில் மக்கள் படும் அல்லல்களைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனம் வேதனைப்பட்டதாம். ஓர் அன்பான ஆத்மாவின் வழிகாட்டலைப் பெற்றார் அவர். மிகுந்த சிரமத்துடன் தொப்பிகள், இனிப்புகள், குடிநீர் எல்லாவற்றையும் சுமந்துகொண்டு அந்த எல்லைப்புற முகாம்களை அவர் அடைந்தார். ஒவ்வொரு செக்போஸ்டிலும் காவலர்கள் அவரைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.

சிரியாவின் எல்லையில் ஒரு சிறுபெண் நேரடியாக, "உங்கள் நாட்டில் என்னைப் போல உதவி தேவைப்படும் சிறார் இல்லையா?" என்று கேட்டாள். இந்தக் கேள்வி சாயியைச் சிந்திக்கவைத்தது. அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது சாயி ஆஷ்ரயா."



இன்றைக்கு சாயி ஆஷ்ரயா கணக்கற்ற சேவைகளைத் தொடர்ந்து செய்கிறது:
* பெங்களூருவில் உள்ள ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலைச் சிற்றுண்டியும் மதிய உணவும் வழங்குகிறது. மதிய நேரத்தில் இரண்டு இடங்களில் சூடான சுவையான உணவு பல்லாயிரக் கணக்கானவருக்கு வழங்கப்படுகிறது. கொரோனா சமயத்தில் தினமும் 4000 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. வேறு இரண்டு இடங்களிலும் உணவு வழங்கப்படுகிறது. தொலை தூரத்திலிருந்து பெரிய சரக்கு லாரிகளை ஓட்டிவரும் டிரைவர்களுக்கு நள்ளிரவு முதல் அதிகாலை வரை தேநீர், பிஸ்கட் மற்றும் சூடான உணவை வழங்குகிறது. ஜூன் 2021 வரை சுமார் இவ்வாறு 3,000,000 உணவு/சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
* தமிழ்நாட்டின் தர்மபுரி அருகே, எல்லோரும் அருவருத்து ஒதுக்கும் தொழுநோயாளிகள் காலனி ஒன்றைத் தத்து எடுத்துக்கொண்டு 4 ஆண்டுகளாக உணவு, உடை, மருத்துவம் எனப் பல சேவைகளை அன்போடு வழங்கி வருகிறது.
* பெங்களூரில் மட்டுமல்லாமல், அருணாசலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்திலும் பல்நோக்கு மருத்துவ முகாம்களை நடத்திவருகிறது. 14,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளின் நடுவே, இந்தியா-சீனா எல்லையருகில் இருக்கும் தவாங் பகுதி மக்களில் பலர், சாயி ஆஷ்ரயா செல்லும்வரை, மருத்துவர்களையே பார்த்ததில்லையாம். இந்த முகாம்கள் எல்லா நவீன பரிசோதனை வசதிகளையும் கொண்டு நடத்தப்படுபவை ஆகும்.
* மேற்கண்டபடி அருணாசலப் பிரதேசத்தின் 5 கிராமங்களும் தர்மபுரி தொழுநோயாளிகள் காலனியும் தத்தெடுக்கப்பட்டு அந்த கிராமங்களில் முழுமையான தற்சார்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன.
* வறிய குடும்பங்களுக்கு வீட்டுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.



சூப்பர்ஸ்பெஷாலிடி மருத்துவமனை
மருத்துவ முகாம்களால் தொடர்ந்து முக்கியமான சிறப்புச் சிகிச்சைகளையோ, அறுவை சிகிச்சைகளையோ கொடுக்க முடியாது. வழக்கமான மருத்துவமனைகள் ஏழை எளியவர்களுக்கு எட்டாக் கனிகள். இதைக் கருத்தில் கொண்டு, நோய்ப் பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள், சிகிச்சைக்குப் பின்னால் கவனிப்பு என எல்லாவற்றையும் ஒரே கூரையின் கீழ் இலவசமாகக் கொடுக்கலாமே என்று சாயி ஆஷ்ரயா எண்ணியது.

அதன் பலன்தான் பெங்களூருவிலிருந்து சுமார் 31 மைல் தொலைவில் கோலார் அருகே வரவிருக்கும் சூப்பர்ஸ்பெஷாலிடி மருத்துவமனை. கர்நாடக அரசிடமிருந்து இதற்காக 5 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. இந்த மருத்துவமனை 220 படுக்கைகள் கொண்டதாக, 24 மணி நேரமும் செயல்படுவதாக இருக்கும். இங்கு நோயாளி, அவருடன் வருபவர், பணிபுரிவோர் அனைவருக்கும் தங்குமிடமும் உணவும் இலவசமாக இருக்கும். நவீன வசதிகள் கொண்ட தொலைமருத்துவ மையம் (Telemedicine center), சிகிச்சைக்குப் பின்னும் உடல்நலத்தைக் கண்காணிப்பதில் சிறப்பான கவனம் செலுத்தும். சாயி ஆஷ்ரயாவின் தத்துக் கிராமங்களில் 10-12 படுக்கைகள் கொண்ட சிறிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்படும். அங்கிருந்து சிறப்புச் சிகிச்சை வேண்டுவோரை சூப்பர்ஸ்பெஷாலிடி மருத்துவ மனைக்கு அனுப்புவார்கள்.



பசுமை வளாகம்
இந்த மருத்துவமனை பசுமை வளாகமாக இருக்கும். மின்னாற்றல் தேவையைச் சூரிய ஒளியிலிருந்து பெறவும், தேவைக்கு மேல் உற்பத்தி ஆவதை மின்சாரத் துறைக்குக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கழிவுகளின் மறுசுழற்சி, மறுபயனீட்டு வசதிகளும் இங்கே இருக்கும். மொத்தத்தில் இங்கே எதுவும் வீணாக்கப்படாது (net-zero energy use).



பணம் செலுத்துமிடம் இல்லாத அதிசய மருத்துவமனை
பணம் செலுத்துமிடம் (cash counter) இல்லாததோர் அதிசயமான மருத்துவமனையாக இது அன்பை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும். இதற்கான ஆயத்தங்கள் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாம் செலவழிக்கும் பொருட்கள், நேரம், பணம் இவற்றைக் கூர்ந்து கவனித்துச் செய்வதால் நாம் வாழும் முறையே அடியோடு மாறும் வாய்ப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். அத்தோடு, அன்பினால் நம் மனம் விசாலமடைகிறது. உலகை நம் இரண்டு கைகளுக்குள் அரவணைக்கும் அந்த மாபெரும் முயற்சியில் வெற்றிகாண முடியும். அப்படி ஒரு அபூர்வ நிகழ்வின் கணத்தில் நாம் முன்னெப்போதும் இல்லாத ஆன்மீக அனுபவத்தைப் பெறவும் வாய்ப்பு. ஏற்படலாம். "தியாகத்தினால் மட்டுமே அமரத்துவம் கிடைக்கும்" என்கிறது ஸ்ரீமத் பகவத்கீதை.



சாயி ஆஷ்ரயா தனது தன்னலமற்ற தொண்டால் ஏராளமானவர்களை உற்சாகப்படுத்தி, சாதி, இனம், மதம் என்று பேதம் பார்க்காமல், தன்னையே பிறரின் உருவத்தில் பார்க்க வைத்து, இந்த அரிய சேவையைச் செய்து வருகிறது.

அருமையான திட்டம், அரிய வாய்ப்பு
இந்தியாவுக்கு வரும் சமயத்தில் சாயி ஆஷ்ரயாவின் சேவைகளில் பங்கேற்று உடல் உழைப்பை நல்க விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள்.



ஆசைக்கு உச்சவரம்புப் பழக்கத்தால் உங்கள் வாழ்க்கை உயரட்டும், அந்த அன்புத் துளிகள் சேர்ந்து பெருவெள்ளமாகி சூப்பர்ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக, ஒரு மருத்துவப் பொற்கோவிலாக வளரட்டும்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்புகொள்ளுங்கள்:
அமெரிக்காவில்
சி.கே. வெங்கட்ராமன் - 408.505.6488 - ckvenkatram@gmail.com
பரத்வாஜ் சுவாமிநாதன் - 713.598.9579 - bharad.swaminathan@gmail.com

இந்தியாவில்
சௌம்யா ரமணி - 99000 55992

© TamilOnline.com