ரசூலா
"ரசூலா" எவ்வளவு அழகிய பெயர்! உச்சரிக்கையிலே உள்ளத்தில் இன்பம் ஊறுகிறதல்லவா? ஆனால், நல்ல வேளையாக "ரசூலா" என்பது ஒரு பெண்ணின் பெயரல்ல! அது ஒரு கப்பலின் பெயர். ஆகவே சத்தியமாக இது காதல் கதை அல்ல என்பதை நேயர்களுக்கு முன்னதாக உறுதி கூறுகிறேன். எனவே கூசாமல் படிக்கலாம்.

★★★★★


"ரசூலா" என்பது சிங்கப்பூரிலிருந்து நாகப்பட்டினம் வழியாகச் சென்னை வரும் பிரயாணிகள் கப்பல். அழகிய அந்தச் சிறு கப்பல் கடலில் மிதந்து வருவது வெகு கம்பீரமாக இருக்கும். சிங்கப்பூரிலிருந்தும் பினாங்கிலிருந்தும். தாய்நாடாகிய இந்தியாவுக்குத் திரும்பும் பிரயாணிகளை ஏற்றிக்கொண்டு அது கடலில் மிதந்து வரும்போது பிரயாணிகளின் மனதிலுள்ள உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் போட்டி போட்டுக்கொண்டு வெகுவேகமாக ஓடிவருவது போலிருக்கும். அந்த அழகிய கப்பலில் நானும் எனது அருமை நண்பர் லெட்சுமணனும் பினாங்கிலிருந்து நாகப்பட்டினத்திற்குப் புறப்பட்டோம். மூன்று ஆண்டுகள் தாய்நாட்டைப் பார்க்காமல் பினாங்கிலே இருந்துவிட்டு ஊர் திரும்பும்போது உண்டாகும் நாட்டுப்பற்று, பாசம் இவற்றை அளவிட்டுக் கூறமுடியாது.

பினாங்கிலிருந்து கப்பலில் ஐந்து நாட்கள் பிரயாணம் செய்தால் நாகப்பட்டினம் வந்து சேரலாம். இந்த ஐந்து நாட்கள் கழிவது ஐந்து யுகம் கழிவதுபோல் தோன்றும். எங்கும் ஒரே கடல்மயமாக இருக்கும். "எங்காவது பூமியைப் பார்ப்போமா" என்ற ஆவல் கட்டுக்கடங்காது. நாகப்பட்டினம் நெருங்குகிறது என்று தெரிந்தால் கப்பலில் உள்ளவர்களின் கும்மாளத்தைச் சொல்லி முடியாது. வேகமாகப்போகும் கப்பல் ஊர்ந்து செல்வதுபோல் தோன்றும். அது சகிக்க முடியாமலும் இருக்கும். கடலில் குதித்துக் கப்பலுக்கு முன் நீந்திக் கரைக்குச் சென்று விடுவோமா என்ற தைரியம்கூட உண்டாகும். ஆனால் பிரயாணிகள் எல்லோரும் உயிரின்மீதும் கொஞ்சம் ஆசை உள்ளவர்களாதலால் அப்படிச் செய்யவும் மாட்டார்கள், அதற்குப்பதில் குட்டிபோட்ட பூனை போல அங்குமிங்கும் அலைவார்கள். திடீரென்று ஒருவர் ஆனந்தத் தாண்டவம் ஆடுவார் உடனே அவரைச்சுற்றி பலர் "என்ன என்ன" என்பார்கள். "அதோ பாருங்கள் பனைமரம்" என்று கத்துவார். "ஆமா பனைமரம், பனைமரம்" என்று எல்லோரும் குதூகலிப்பார்கள். ஒரு பனைமரத்தைக் கண்டாலும் அவ்வளவு ஆனந்தம் உண்டாகும். "அதோ நாகூர் ஆண்டவரின் கோபுரம் தெரிகிறது" என்று மற்றொருவர் சொல்லுவார். எல்லோரும் "ஆமா, ஆமா" என்று சொல்லிக் கொண்டு "சாமி ஆண்டவனே" என்று கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

'கடல் மயக்கம்' என்பதாகச் சிலருக்குக் கப்பலில் உண்டாகும். அவர்கள் ஐந்து நாட்களும் கப்பலில் படுத்த படுக்கையாகவே இருப்பார்கள்.

ஆகாரம் ஒன்றும் சாப்பிடப் பிடிக்காது. அவர்களும் "பனைமரம், நாகூர் ஆண்டவர்" என்ற சொற்களைக் காதில் கேட்டவுடன் துள்ளி எழுந்து திடீரென்று திடசாலிகளாக எகிறி முன்வந்து பார்த்து "இடி இடி" என்று சிரித்து மகிழ்வார்கள். இவை எல்லாம் மனிதர்களுடைய இயற்கை உணர்ச்சிகளை உணர்த்துகிறது. ஆனால், இந்த இயற்கை உணர்ச்சி முதலியவைகள் அந்த நாகப்பட்டினம் சுங்க அதிகாரிகளுக்குத் தெரியுமா? தெரிந்தால் காலை எட்டு மணிக்குக் கப்பலை விட்டிறங்கிய பிரயாணிகளைச் சோதனை செய்ய வேண்டுமென்பதற்காக இரவு பத்துமணி வரையில், சப்ஜெயிலில் அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைப்பார்களா? "கஸ்டம் ஆபீஸ்" என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்தச் சுங்கத்தீர்வைக் காரியாலயத்தின் பெயரைச் சரியாக உச்சரிக்கத் தெரியாததால் தான், சில நண்பர்கள் அதைக் 'கஷ்டம் ஆபீஸ்' என்று கூறுவதாக, வெகுநாள் வரை நான் நினைத்திருந்தேன். நேரே கண்டபோதுதான் ரகசியம் விளங்கிற்று, உண்மையிலேயே அது ரொம்பவும் கஷ்டமான ஆபீஸ்தான்!

அன்று நாங்கள் சுமார் இருநூறு பேர் இந்த 'கஷ்டம் ஆபீஸில்' பரிசோதனைக்காகவும், பின்பு அவர்கள் நோக்கப்படி போடும் தீர்வைக்குப் பணம் கழற்றுவதற்காகவும் காத்திருந்தோம். 'கஷ்டம் ஆபீஸ்' உத்தியோகஸ்தர் ஒருவர் எதையோ பறிகொடுத்தவர் போல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார். அவருடைய ஓட்டத்துக்கு இடையூறாகப் பாதையில் கிடந்த ஒரு குரிச்சியை ஆத்திரத்துடன் தூக்கி எறிந்தார். குரிச்சியின் கால் முறிந்தது. முறிந்த சத்தம் கேட்ட திக்கை எல்லோரும் நோக்கினோம்.

என்ன ஆச்சர்யம்! முறிந்த குரிச்சியின் ஓட்டைக் காலுக்குள்ளேயிருந்து சலசல என்று பவுன்கள் கொட்டின. எல்லோரும் ஸ்தம்பித்து விட்டோம் குரிச்சிக்கு சொந்தக்காரர் 'கஷ்டம் ஆபீஸை' ஏமாற்ற வேண்டுமென்று குரிச்சிக் காலைக் குடைந்து அதற்குள் பவுன்களைத் திணித்து மூடிக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய துரதிர்ஷ்டம் இப்படி நேர்ந்துவிட்டது. என்ன செய்வது! அதிகாரியைப் பின்தொடர்ந்தார், பூசாரியைப் பின் தொடரும் ஆடுமாதிரி. பலன் இல்லை; பவுன்கள் பறிமுதலாயின.

இனி என்ன ஆகுமோ என்று நாங்கள் பயந்தோம். காரணமில்லாமல் எங்கள் குரிச்சிகளின் கால்களையும் அந்தக் 'கஷ்டம்' அதிகாரி ஒடித்துப் பரிசோதிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? இதை நினைக்க நினைக்க எங்கள் எல்லாருக்குமே உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. எனக்குக் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு பிரமுகர் ஒரு பெரிய கல்யாணத் துணி விசிறியால் ஓயாமல் விசிறிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். இதற்குள் பல 'கஷ்டம்' அதிகாரிகள் படை எடுத்து வந்து, திருடர்களை வளைத்துக் கொள்ளும் போலீஸ்காரர்களைப் போல் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

எனக்குப் பக்கத்தில் விசிறிக் கொண்டிருந்த செட்டியாரின் அருகில் ஒரு 'கஷ்டம்' அதிகாரி வந்து, மேலும் கீழும் உற்றுச் சந்தேகக் கண்ணோடு பார்த்தார். பிறகு, செட்டியாரிடமிருந்த பெரிய விசிறியைக் கேட்டு வாங்கிக் கொண்டு, "ஏன் ஐயா, பல சிறு ஓலை விசிறிகள் உங்களுக்குப் பக்கத்தில் கீழே கிடக்க இவ்வளவு பெரிய விசிறியினால் ஏன் சிரமப்பட்டு விசிறிக் கொள்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர் கேட்டு முடிக்கு முன்பே, செட்டியார் பரபரப்புடன், "அதில் ஒன்றுமேயில்லை ஸார்; ஒன்றுமேயில்லை" என்று பதட்டப்பட்டார் "ஓ! அப்படியானால் இதில் ஏதோ சூதிருக்கிறது" என்று கூறிய 'கஷ்டம்' அதிகாரி, விசிறியின் துணியைப் 'பர்' என்று கிழித்தார். 'கிர்' என்று சில சிறு பொட்டணங்கள் கீழே வந்து விழுந்தன. பொட்டணங்களைப் பிரித்தால், அத்தனையும் வைரங்கள்! அதிகாரியின் முகம் மலர்ந்தது; செட்டியாரின் தலை குனிந்தது. "என்னய்யா சங்கதி" என்றார் 'கஷ்டம்' அதிகாரி. பரீட்சையில் முழிக்கும் பையன் மாதிரி, செட்டியார் திருதிரு என்று விழித்தார். என்ன செய்துமென்ன? வைரம் பறிபோயிற்று.

இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு, ஆங்கிலத் துரைமார்கள் அனைவரும் இந்தியத் துரைமார்கள் புடைசூழ எழுந்தருளி, சாமான்கள் சோதிப்புப் படலத்தைத் தொடங்கினார்கள். புதுப்புதுச் சந்தேகங்கள் அவதாரமாயின. எங்கள் சாமான்களுக்குப் பிடித்தது சனியன். நாற்காலிகள் ஒடிக்கப்பட்டன; பெட்டிகள் பிய்க்கப்பட்டன; மெத்தைகள், தலையணைகள் கிழிக்கப்பட்டு, உள்ளிருந்த பஞ்சுக்கு விடுதலை அளிக்கப்பட்டது.

ஓர் ஆங்கிலத் துரை, எனது நண்பர் லெட்சுமணன் பெட்டியைப் பரிசோதித்தார். பெட்டியில் மேலாக வைரநகை அடங்கிய கைப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. துரை எல்லாச் சாமான்களுக்கும் தீர்வை போட்டார். அவர் எடுத்த வைரநகையை ஆறாயிர ரூபாய் மதிப்பு வைத்து இரண்டாயிரத்தைநூறு ரூபாய் தீர்வையும் விதித்தார். நண்பர், "அது அசல் வைரமல்ல. ரங்கூன் கெமிகல் வைரம். என் கணக்குப்பிள்ளைக்காக வாங்கியது. அது ஆறாயிரம் ரூபாய் விலையுள்ளதல்ல. ரூ200 தான் பெறும்" என்று வெகு நேரம் வாதாடினார். துரை ஒப்புக்கொள்ளவில்லை; "யாரை ஏமாற்றுகிறாய்?" என்று ஆவேசமாகப் பேசி, "பணம் கட்டுவதைத் தவிர, வேறு வழியில்லை" என்று சொல்லிவிட்டார். பார்த்தார் நண்பர். கொஞ்ச நேரம் யோசித்தபின், "சரி, இப்பொழுது என்னிடம் பணம் இல்லை: ஊருக்குத் தந்தி கொடுத்து நாளைக்கு வரவழைத்துத் தீர்வை கட்டுகிறேன். சாமானைப் பெற்றுக் கொண்டு ரசீது கொடுங்கள்" என்று கேட்டார். துரையும் அதற்குச் சம்மதித்து, உடனே, "ஆறாயிரம் ரூபாய் மதிப்புள்ள அசல் வைரம் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இதற்குத் தீர்வை ரூபாய் இரண்டாயிரத்தைநூறு கட்டிவிட்டு, இதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்" என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

உண்மையில் அது அசல் வைரமல்ல. ரங்கூன் கெமிகல் வைரம்தான். ஆனால் துரையின் 'கஷ்டம் ஆபீஸ்' சந்தேகக் கண்ணுக்கு அது அசல் வைரமாகத் தோன்றி விட்டது. "என்ன செய்யலாம்! லட்சுமணன் துரதிர்ஷ்டம்!" என்று நாங்கள் பேசிக்கொண்டோம். மறுநாள், நண்பர் இரண்டாயிரத்தைநூறு ரூபாயைக் 'கஷ்டம் ஆபிஸு'க்குக் கொண்டு வந்தார். நாங்களும் இன்னும் 'கஷ்டம் ஆபீஸ'ரால் விடுதலை செய்யப் படாததால், அங்கே அடைபட்டுக் கிடந்தோம். நண்பர் அந்த ஆங்கிலத் துரையிடம் சென்று, தீர்வை கட்ட ரூபாய் கொண்டுவந்திருப்பதாகவும், வைரத்தை எடுக்கும்படியும் சொன்னார். துரை வைரத்தை எடுத்துக் கொடுத்தார். நண்பர் நாலுதரம் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்து பிறகு கம்பீரமாகத் தலை நிமிர்ந்து, துரையை நோக்கி, "இது என் வைரமல்ல, என்னுடையது அசல் வைரம். இது ரங்கூன் கெமிகல் வைரம். என்னுடையதைக் கொடுங்கள்" என்றார்.

துரை குதித்தெழுந்தார்; கொம்பு கிடுகிட்டிச் சத்தம் கேட்ட மஞ்சு விரட்டு மாடு மாதிரித் துள்ளினார். சொல் மாரிகள், வசை புராணங்கள் எல்லாம் ஆங்கிலத் துரையின் வாயிலிருந்து குபுகுபு என்று கிளம்பின. ஆனால் நண்பர் துளியும் மசியவில்லை. கடைசியில் வைரப் பரிசோதகர் வரவழைக்கப்பட்டார். அவரும் "இது அசல் வைரமல்ல. இருநூறு ரூபாய் தான் பெறும்" என்று சொல்லிவிட்டார். ஆளும் ஜாதியைச் சேர்ந்தவரானாலும் அகப்பட்டுக் கொண்டால் என்ன செய்வது? துரை கெஞ்சினார்; நண்பர் மிஞ்சினார்; விஷயம் கோர்ட்டேறியது.

கோர்ட்டில் துரை சொல்லிய வாக்குமூலம்: "நான் லட்சுமணனிடம் வாங்கி வைத்தது அசல் வைரம்தான்; ஆறாயிரம் ரூபாய் விலையுள்ளதே; ஆனால், இரும்புப் பெட்டியிலிருந்து யாரோ அதைக் கையாடி விட்டார்கள்."

நீதிபதியின் தீர்ப்பு: "லெட்சுமணனுக்கு, துரையின் ரசீதுப்படி, துரை ஆறாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது. லெட்சுமணன், ரூபாய் இரண்டாயிரத்தைநூறு தீர்வை கட்ட வேண்டியது."

துரை என்ன செய்வார், பாவம்! அப்படிச் சொல்லாவிட்டால், அவருக்கு வேலை போய் விடுமாம். நண்பர் ரூபாய் ஆறாயிரத்தைப் பெற்றுக் கொண்டு தாராளமாக இரண்டாயிரத்தைநூறு ரூபாய் தீர்வையைக் கட்டினார்.

நண்பரிடம், "பேஷ்! நரி முகத்தில் விழித்தீர்கள் போல் இருக்கிறது; மூவாயிரத்து முந்நூறு ரூபாய் சுலபமாய்த் தட்டி விட்டீர்கள்" என்று சொல்லி, நாங்கள் அவரைப் பாராட்டினோம்.

அவரோ, "ஆமாம், ஆனால் அநியாயமாக அந்த அருமையான ரங்கூன் கெமிகல் வைரம் போய்விட்டதே, எங்கள் கணக்குப் பிள்ளைக்கு என்ன சமாதானம் சொல்லுவது? அதுதான் வருத்தமாயிருக்கிறது" என்றார்.

"வேறொன்றும் சொல்ல வேண்டாம் - 'ரசூலா' கப்பலின் அதிர்ஷ்டத்தால் கிடைத்த ரூபாயைக் கொண்டு எவ்வளவு கெமிகல் வைரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம் என்று சொல்லுங்கள்" என்று நாங்கள் அவரைச் சமாதானப்படுத்தினோம்.

சின்ன அண்ணாமலை

© TamilOnline.com