பரதநாட்டிய அரங்கேற்றம்: ரேகா ஐயர்
ஜூன் 2, 2021 நாளன்று செல்வி. ரேகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு திருமதி ஹேமா ராஜகோபாலன் அவர்களின் பிரதம சிஷ்யையானா ரேகா, முதலில் அர்த்தநாரீஸ்வர கவுத்துவம் என்ற சங்கராபரண மற்றும் ரஞ்சனி ராகங்களில் அமைந்த பாடலுடன் அருமையாக நடனத்தைத் தொடங்கினார். அடுத்து வந்தது ராகமாலிகை வர்ணம். நடனப் பிதாமகர் திரு கே.என். தண்டாயுதபாணிப் பிள்ளையின் "சாமியை அழைத்தோடி வா" என்ற பாடலுக்கு நேர்த்தியாக நடனமாடினார்.

மிருதங்க சிகாமணி திரு ஜி. விஜயராகவனின் கைவண்ணத்தில் உருவான "மிருகவதி", ராகமாலிகையில் அமைந்த மிகப் புதுமையான விருந்து. இதற்குமுன் இப்படி ஓர் அனுபவத்தை யாரும் பெறவில்லை என்று எல்லோரும் சொல்வதைக் காணமுடிந்தது. ஹேமா ராஜகோபாலனின் இசை இயக்கத்தில் உருவான இந்த நடனம், ஒரு பெண்ணின் இயற்கையின் ரசனையை பிரதிபலித்தது. அடுத்து, பந்துவராளி ராகத்தில் அமைந்த பதம் மற்றும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் தில்லானாவுடன் நாட்டிய அரங்கேற்றம் இனிதே நடந்தேறியது.அரங்கேற்றத்தில் நவரசத்தையும் தன் முகபாவத்திலும் கண்களிலும் கொண்டுவந்து கொட்டி இருந்தார் ரேகா. இவர் ஐந்து வயதுமுதல் பரதநாட்டியம் பயின்று வருகிறார். பத்து வயதில் சலங்கை பூஜையை நிறைவேற்றிய இவர், நாட்டியா நடனப்பள்ளி சார்பில் நடந்த ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்குபெற்று இருக்கிறார். National Young Arts foundation என்ற கலைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இவர், யோகம் மற்றும் நாட்டியத்தை இணைத்து ஆராய்ச்சி செய்வதிலும் பரதக்கலை எல்லாவித மக்களிடமும் போய்ச் சேரவேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்.

வித்தகர் சித்ராம்பரி கிருஷ்ணகுமார் (வாய்ப்பாட்டு), திரு ஜி. விஜயராகவன் (நட்டுவாங்கம், மிருதங்கம்), திரு கலையரசன் ராமநாதன் (வயலின்), திரு முத்துகுமார் (புல்லாங்குழல்) ஆகியோர் சிறப்பாகப் பங்களித்தனர்.

நாட்டியா நடன குழு இயக்குநர் குரு திருமதி ஹேமா ராஜகோபாலன் திரு கே.என். தண்டாயுதபாணிப் பிள்ளையின் சிஷ்யை. கடந்த 45 வருடங்களாக இந்த அமைப்பைத் திறம்பட நடத்தி வருகிறார். ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கும் திருமதி ஹேமா, ஐநூறுக்கும் மேலான அரங்கேற்றங்களை நடத்தி இருக்கிறார். ஹேமாவின் புதல்வி குரு திருமதி கிருத்திகா ராஜகோபாலன், ஹேமாவிடமும் பின்னர் திருமதி கலாநிதி நாராயணன் அவர்களிடமும் பயிற்சி பெற்றவர். 'அபிநய அரசி' என்ற புகழ்பெற்ற இவர், தன் குருவுடன் இந்த நடனக் குழுவை நடத்தி வருகிறார். இவர்களது கலைச்சேவை மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்.

சிகாகோ ரகு

© TamilOnline.com