சில நூற்றாண்டுகளுக்கு முன்னால், கோவர்த்தனத்தில் ஒரு சிறிய ஸ்ரீநாதர் கோவில் இருந்தது. ஓர் ஏழை பிராமணருக்கு ஆறு வயது மகன் ஒருவன் இருந்தான். அவன் எப்போதும் கிருஷ்ணர் கதைகளையே கேட்டுக் களிப்பில் ஆழ்வான், பிரபுவின் லீலைகளைக் கேட்பதில் மட்டுமே ஆனந்தமடைவான்.
ஒருநாள் அவன் மாடுகளை ஓட்டிக்கொண்டு புல்வெளியை நோக்கிப் போனான். வழியில் கோவிலையும் உள்ளே இருந்த கிருஷ்ண விக்ரஹத்தையும் பார்த்தான். அதை அவன் கிருஷ்ணராகவே நினைத்துவிட்டான். நிலவொளியில் தன்னோடு விளையாட வரும்படி அவரைப் பரிதவிப்போடு அழைத்தான். பகலிலேயே பூசாரி கதவைப் பூட்டிக்கொண்டு போய்விட்ட போதிலும், பிரபு வெளியே வந்தார். இருவரும் கை கோத்துக்கொண்டு குளிர்ந்த வெள்ளி நிலவொளியில் புல்வெளியில் நடந்தனர். கிருஷ்ணர் ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டு புல்லாங்குழலை வாசிக்க, பிராமணச் சிறுவனின் மகிழ்ச்சி அளவுகடந்து போயிற்று. சிலமணி நேரத்துக்குப் பிறகு "சகோதரா" என்று அழைத்த அந்த ‘நண்பனோடு’ சிறுவன் திரும்பினான். யாரும் கவனிக்காதபோது அவர் கோவிலுக்குள் சட்டென்று மறைந்து போனார். அவனால் கதவின் ஓட்டை வழியே உள்ளே இருந்த விக்ரஹத்தைத்தான் பார்க்க முடிந்தது.
தெய்வீகமான தனது விளையாட்டுத் தோழனின் பிரிவைச் சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவையும் காலையையும் கதவுக்கு வெளியே உட்கார்ந்து அழுதபடியே கழித்தான். அவனுடைய பெற்றோரும் பூசாரியும் வந்து அவனை அங்கே கண்டனர். பெற்றோர் அவனை நையப் புடைத்தனர். ஆனால் பூசாரியோ அந்த அடிகளின் காரணமாகச் சிலையில் ரத்தம் வழிவதைப் பார்த்தார்.
"சகோதரா" என்று அழைத்தால் அவர் உனக்கு உல்லாசமான விளையாட்டுத் தோழனாக வருவார். அவரை குருவாக அழைத்தால், அவர் உனக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்துவார். தன்னை சிரத்தையோடும் நம்பிக்கையோடும் அழைப்போரை அவர் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |