செவிலித்தாய்
செம்மண் புழுதி பறக்க வேகமாக வந்த பேருந்து பலத்த க்ரீச் சத்தத்துடன் பிரேக் போட்டு நின்றது. முதுகில் ஒரு பை, கையில் ஒரு பெட்டியுடன் இளங்கோ இறங்கினான். அதிகாலை கிராமத்து காற்றுச் சில்லென அவன் முகத்தை அணைத்தது. அவனைத்தவிர வேறு யாரும் இறங்காததால், தனியாக நடக்கத் தொடங்கினான். ஐந்து நிமிட நடையில் டீக்கடை போன்றதோர் இடத்துக்கு வந்தான்

பெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்ததில் கை வலித்தது. டீக்கடை பெஞ்சில் பெட்டியை வைத்துவிட்டுக் கொஞ்சம் இளைப்பாறினான். ஆள் ஆரவாரம் கேட்டு கடையில் அடுப்புடன் போராடிக்கொண்டிருந்த நடுத்தர வயதுக்காரர் வெளியில் வந்தார்

"தம்பி யாரு? டீ வேணுமா, பத்து நிமிசம் ஆகுமே..."

"நான் இளங்கோ, பாண்டியன் சாரோட பையன்..." அவன் சொல்லி முடிக்கவில்லை,

"அட, நம்ம கீதாம்மா பையனா, அடையாளமே தெரியலியே" என்று உற்சாகமாக ஆரம்பித்தவர், சட்டென குரல் கம்மினார்

"இந்த பெஞ்சில உட்காருங்க தம்பி, அஞ்சு நிமிசத்துல டீ ரெடி பண்ணிடுறேன், குடிச்சுட்டு போகலாம்" என்று பெஞ்சைத் துடைத்து விட்டார்.

"பரவாயில்லைங்க, வேண்டாம். பெட்டியைத் தூக்கிட்டு வந்ததில் கை வலிக்குது, அதான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தேன்" எனக் கிளம்பத் தயாரானான்.

"இருங்க தம்பி, பெட்டியைத் தூக்கிக்கிட்டு எவ்வளவு தூரம் நடப்பீங்க? கடைப்பையன் இப்ப வந்திடுவான், அவனை பெட்டியத் தூக்கிட்டு வரச்சொல்கிறேன், அதுவரைக்கும் உட்காருங்க. டீ குடிச்சுட்டுப் போகலாம்"

"இல்லங்க, நான் பார்த்துக்கிறேன், எனக்கு உடனே வீட்டுக்குப் போகணும், நன்றி" எனக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

அவன் நடந்து போவதைச் சற்று நேரம் பார்த்தபின், நீண்ட பெருமூச்சு விட்டார் அந்த டீக்கடைக்காரர்.

ஐந்து நிமிட நடையில் வீட்டை அடைந்தான். வீடு பூட்டியிருந்தது. அது அதிகாலை என்பதால் அக்கம், பக்கத்து வீட்டில் கேட்டுத் தொந்தரவு செய்யவேண்டாம் என்று வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். பயணக் களைப்பில் கண்கள் சொருகி அப்படியே தூங்கிவிட்டான்.

★★★★★


"இளங்கோ, இளங்கோ எந்திரி, என்னப்பா திண்ணையிலேயே தூங்கிட்டே! ரொம்ப டயர்டா? வீட்டுச்சாவி பக்கத்துவீட்டு கோபால் மாமாகிட்ட இருக்குமே, வாங்கியிருக்கலாமே?"

கண்விழித்த இளங்கோ, அம்மாவைப் பார்த்தவுடன் மலர்ச்சியானான். "என்னம்மா, காலங்காத்தால எங்க போனீங்க?"

"தெக்குத்தெரு மலர்விழிக்கு இடுப்புவலி வந்துவிட்டது, அதான் அவசரமா போக வேண்டியதாயிட்டுது. சரி நீ உள்ள வா."

வீடு பளிச்சென்று இருந்தது. அம்மாவுக்கு எப்போதும் தன்னையும், தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள ரொம்பப் பிடிக்கும்.

"இளங்கோ, நீ போய் குளிச்சிட்டு வா. உனக்குப் பிடித்த இட்லியும், தக்காளி சட்னியும் செய்திருக்கேன். சூடா சாப்பிடலாம்."

பத்து நிமிடத்தில் குளித்து, உடை மாற்றிக்கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மா அங்கு இல்லை. வீட்டு வாசலில் பேச்சுச் சத்தம் கேட்டு அங்கு போனான். இவனைப் பார்த்தவுடன் "இளங்கோ, டைனிங் டேபிளில் டிபன் வச்சிருக்கேன், நீ சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடு, நான் அரைமணி நேரத்துல வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு, வந்தவர்களிடம் "நீங்க போங்க, நான் வரேன்" என்றார்.

இளங்கோவுக்கு லேசாக எரிச்சல் வந்தது.

"என்னம்மா, ரெண்டு வருஷம் கழிச்சு வந்திருக்கேன், என்னோடு இருக்காமல் இப்படி கிளம்புறீங்க!"

"நம்ம லைன்மேன் மாரிமுத்து, எலக்ட்ரிக் கம்பத்திலிருந்து விழுந்து காலில் அடிபட்டுவிட்டதாம், நான் போய்ப் பார்த்து, கட்டுப் போட்டு வருகிறேன். பாவம் அவன் ரெண்டு சின்னப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறான், அவனை நம்பித்தான் அவன் குடும்பம் இருக்கு" என்று வாஞ்சையுடன் பேசிய அம்மாவை மறுத்துப் பேசமுடியாம‌ல் "சரிம்மா, சீக்கிரம் வந்துடுங்க" என்று சொல்லிவிட்டு, வீட்டுள்ளே போய்ச் சாப்பிடத் தொடங்கினான்.

அம்மா எப்பவும் இப்படித்தான். அடுத்தவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உடனே கிளம்பிவிடுவார், நேரம், காலம் பார்க்க மாட்டார். மக்களுக்கு மருத்துவ சேவை செய்யவேண்டும் என்றே செவிலியர் பட்டப்படிப்பு படித்து, செவிலி ஆனவர். அதனால்தான், மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் கிடைத்த வேலையை வேண்டாம் எனத் தவிர்த்துவிட்டு, இந்தச் சிறிய ஊரில், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்தார்.

அப்பா நடுநிலைப்பள்ளி ஆசிரியர்/தலைமை ஆசிரியராகப் பல ஊர்களில் பணிபுரிந்த பின், அம்மா வேலை பார்க்கும் இந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். பின், இந்த ஊரிலேயே, நிரந்தரமாகக் குடி அமர்ந்துவிட்டனர்.

இந்த ஊர் மக்களுக்கு மிகவும் பிடித்தமானவர்களாக அம்மா, அப்பா இருந்தனர். அப்பா தன்னால் முடிந்த கல்விப் பணியைச் சிறப்பாகச் செய்து, அந்த ஊர் பிள்ளைகள் முன்னேறுவதற்குக் காரணமாக இருந்தார். அம்மா தன் மருத்துவப் பணி மூலம், டாக்டர் அவ்வளவாக வராத, வர விரும்பாத அந்தச் சிறிய ஊரில் தன் திறமையால் ஒரு டாக்டர் போலவே செயல்பட்டார். அம்மாவும், அப்பாவும் ஆதர்ச தம்பதிகளாக, ஒரு முன்மாதிரியாக‌ வாழ்ந்துவந்தனர்.

இளங்கோ தன் பள்ளிப்படிப்பை இந்த ஊரிலேயே முடித்தான், கல்லூரிப் படிப்பை அருகிலுள்ள ஊரில் முடித்து, பின் வேலைக்குச் சேர்ந்து, விரைவில் அமெரிக்கா வந்தடைந்தான். சில வருடம் முன்பு, அவனுடைய அப்பா மாரடைப்பில் இறந்து போனார். அப்பாவின் மரணம் அம்மாவை நிலைகுலையச் செய்தாலும், விரைவில் அதிலிருந்து மீண்டார். அப்பாவும் இல்லாமல், இவனும் வெளிநாடு சென்றுவிட்டதால், 24/7 அந்த ஊர் மக்களுக்காகவே உழைத்தார்.

இளங்கோ சாப்பாட்டை முடித்துவிட்டு மணியைப் பார்த்தான். அம்மா இன்னும் வரவில்லை. பயணக் களைப்பும் அம்மாவின் அருமையான சாப்பாடும் நல்ல தூக்கம் வந்தது. தூங்கிப் போனான்.

★★★★★


"தம்பி, இளங்கோ" என யாரோ அவன் தோளைத் தொட்டு உலுக்க, திடுக்கிட்டு விழித்தான்.

பக்கத்து வீட்டு கோபால் மாமா. சுற்றும், முற்றும் பார்த்தான். அம்மாவைக் காணவில்லை. அவன் வாய் அனிச்சையாக "அம்மா?" என்றது.

கோபால் மாமா, அவனை ஆதரவாக அணைத்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டார்.

"என்னப்பா, கனவா? திண்ணையிலேயே தூங்கிட்டே? என் வீட்டுக்கு வந்து சாவி கேட்டிருக்கலாமே, சரி உள்ளே வாப்பா" என வீட்டைத் திறந்து உள்ளே போனார். இளங்கோவும் வீட்டினுள் சென்றான்.

வீடு சுமாராகச் சுத்தம் செய்யப்பட்டிருந்தது

"நீ வர்றேன்னு நேத்துதான் ஒரு ஆளை வச்சு சுத்தம் செய்தேன். என்ன இருந்தாலும் உங்கம்மா மாதிரி வராது. மகராசி, ஊருக்காகவே கடைசிவரைக்கும் வாழ்ந்தாள். கொரோனா ஊரில் அதிகமாகப் பரவி எல்லோரும் கஷ்டப்படும்போது, தன் உயிரைப் பணயம் வைத்து, ஓடி ஓடிப் பலருக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றினாள். கடைசியில் அவளே அந்த கொரோனாவுக்கு பலியாகிவிட்டாள். முழு அடைப்பு போட்டுவிட்டதால், உன்னால் அம்மாவின் இறுதிச்சடங்குக்குக் கூட வரமுடியவில்லை..." என்று அவர் பேசிக்கொண்டே இருக்க...

புன்னகையுடன் போட்டோவில் சிரித்து கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து, இளங்கோ குலுங்கிக் குலுங்கி அழுதான்.

அவன் அழுது துக்கத்தைக் கரைக்கட்டும் என்று இரண்டு நிமிடம் அமைதியாக இருந்த கோபால், ஆதரவாக அவன் தோளைத் தொட்டார். அவரிடம் திரும்பிய இளங்கோ, கண்களை துடைத்துக்கொண்டு "மாமா, அரைமணி நேரத்தில் ரெடியாகி வந்துடுறேன், நாம கிளம்பலாம்" என்றான்.

"இளங்கோ, நீ இன்னும் அதுல உறுதியாத்தான் இருக்குறயா?"

"ஆமாம் மாமா, எங்க அம்மா மாதிரி ஒருவருக்கு மகனாகப் பிறந்துவிட்டு, இத்தனை நாளா சுயநலமா, என்னையும், என் முன்னேற்றத்தைப் பற்றியும் மட்டுமே நினைத்து வாழ்ந்துவிட்டேன். இனி, என் அம்மா வழியில், இந்த ஊரிலேயே இருந்து, இந்த மக்களுக்காகச் சேவை செய்யப்போகிறேன்" என்று கூறிவிட்டு, அம்மாவின் போட்டோவை பார்த்தான், டாக்டர் இளங்கோ.

அம்மாவின் புன்னகை அவனை ஆசிர்வதிப்பது போல் உணர்ந்தான்.

(கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவர், செவிலியர், முன்களப் பணியாளர்களுக்கு இந்தக் கதை சமர்ப்பணம்.)

அப்துல்லா ஜெகபர்தீன்,
ப்ளெசன்ட்டன், கலிஃபோர்னியா

© TamilOnline.com