ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-18c)
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளேன். ஆரம்பிக்கும் முன்னமே என் யோசனையைப் பற்றி பொது ஆரம்பநிலை அனுபவமும் நிபுணத்துவமும் உடையவர்களிடமும், வருங்கால வாடிக்கையாளர்களிடமும் கலந்தாலோசிப்பது அத்தியாவசியம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் அப்படிச் செய்தால் யாராவது என் யோசனையைத் திருடி என்னுடனேயே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று நான் தயங்குகிறேன். என் தயக்கம் சரியானதா? அல்லது, அதைத் தள்ளி வைத்துவிட்டுக் கலந்தாலோசிப்பதே நல்லதா? விளக்குங்களேன். (தொடர்கிறது...)

கதிரவனின் பதில்: கலந்தாலோசித்தே தீர வேண்டும் என்று சென்ற பகுதியில் ஆணித்தரமாகக் பதிலளித்து விளக்க ஆரம்பித்தேன். முதலில், ஏன் அப்படி அடித்துச் சொல்கிறேன் என்பதற்கான காரணங்களை மேலோட்டமாகப் பட்டியலிட்டோம்:
1. ஒரு டாலருக்குப் பத்து யோசனைகள்: முக்கியத்துவம் மிகக் குறைவு)
2. வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள்
3. கரப்பான் பூச்சிகள் (என்னடா இது என்கிறீர்களா, பொறுமை! பின்பு விளக்குகிறேன்!)
4. இறகுபோல் மெல்லிய யோசனை: ஊதினால் பறந்து விடுமோ?

இப்போது மேற்கண்ட காரணங்களை ஒவ்வொன்றாக விவரித்து வருகிறோம். முதலாவதாக:

யோசனைகளின் மதிப்பு மலிவு, குழுவின் திறனுக்கும் வலிமைக்குமே மதிப்பதிகம் என்பதை விளக்கினோம். அந்த வகையில் முதலாவதாக என் அனுபவத்திலிருந்து, எப்படி எக்ஸோடஸ் மற்றும் ஆன்க்கீனா உதாரணங்களை விவரித்தோம். மேலும் பல உதாரணங்களைக் கூறலாம். ஆனால் நீங்களே இணையத் தேடல் மூலம் மேலும் அறிந்துகொள்ள முடியும் என்பதாலும், மற்ற காரணங்களை விளக்கவேண்டிய அவசியத்தாலும் இரண்டு உதாரணங்களோடு அந்த விளக்கத்தை இத்தோடு முடித்துக்கொண்டு அடுத்த காரணத்துக்குச் செல்வோம்.

அடுத்த காரணம்: வளர்ச்சியில் (அல்லது தோல்வியில்) நேரும் யோசனை மாற்றங்கள். இது முதல் காரணம் போலவே மேலோட்டமானதாகத் தோன்றினாலும் மிக வித்தியாசமானது. முதல் காரணத்தில் யோசனை முக்கியமல்ல குழுதான் மிக முக்கியம் என்று பார்த்தோம். இந்தக் காரணத்தில், குழு மிக பலமாகவே இருந்தாலும், ஆரம்ப யோசனை மிக பிரமாதமானதாகவே இருந்தாலும், காலப்போக்கில் அந்த யோசனை பல காரணங்களால் பெரிதளவு மாறக்கூடும் என்பதைப் பார்ப்போம். அப்படி மாறக்கூடிய யோசனையைப் பற்றிக் கலந்தாலோசிப்பது சிறந்ததுதானே.

ஏனெனில், முதலில் கையிலெடுத்த யோசனையைக் கலந்தாலோசனையின் விளைவாக ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு, அதில் தற்செயலாக எழக்கூடிய வேறொரு யோசனையைத் தொடரலாம் அல்லவா? அதைத்தான் முன் குறிப்பிட்ட ஆன்க்கீனா உதாரணமும் கூறுகிறது.

ஆரம்பகால யோசனையையே மேற்கொண்டு தொடர்ந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலையால் யோசனையை மாற்றியே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாகக்கூடும். இதை யோசனைத் திருப்பம் (pivot) என்று கூறுவார்கள். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஆரம்பகால யோசனையிலேயே கடைசிவரை தொடர்ந்து பயணித்தே வெற்றி காண்பதில்லை. ஒரு யோசனைத் திருப்பமாவது அனுபவித்த நிறுவனங்கள்தான் அதிகம். சில நிறுவனங்கள் இரண்டு மூன்று திருப்பங்களையும் சந்தித்த பிறகே வெற்றியடைந்துள்ளன. அதற்கான சில உதாரணங்களைக் காண்போம்.

தற்போது மிகப் பிரசித்தமாக இருக்கும் நிறுவனம் ட்விட்டர். அதன்மூலம் சிறிய தகவல்களை மின்வலை வழியே விரிவாகப் பரப்பப் பல பிரபலங்கள் பயன்படுத்துகின்றனர். (முன்னாள் அமெரிக்க அதிபர் டானல்ட் ட்ரம்ப் ஒரு பெரிய உதாரணம்!) ஆனால் அந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட போது அது ஓடியோ (odeo) என்ற பெயரில் வேறு யோசனையில் ஆழ்ந்திருந்தது. அப்போது அது நுகர்வோர்கள் மின்வலை முழுவதுமிலிருந்து வலையொலிகளைத் (podcast) தேடித் தருவிக்கும் சேவையை அளித்தது.

ஆனால் அந்தச் சேவை மிகப் பிரபலமடையவில்லை என்பதால் அதே தொழில்நுட்பத்தைக் கருவாக வைத்து வேறு எதாவது சேவையளிக்க இயலுமா என்று அதன் நிறுவனர் ஜாக் டோர்ஸீயும் இணை நிறுவனர் ஜாக் க்ளாஸ் என்பவரும் யோசித்தனர். இறுதியில் குறுஞ்செய்தி (short message) நுட்பத்தின் மூலம் நுகர்வோர்கள் தங்கள் சிறு கருத்துக்களை மின்வலை மூலம் பரவலாக தங்களுடன் இணைந்த நண்பர்கள் அல்லது பின்தொடர்வோருக்கு (followers) செலுத்தும் சேவையாக மாற்றினர். அது மெதுவாக வளர்ந்து இப்போது மின்வலையிலேயே கூகிள், முகநூலுக்கு (facebook) அடுத்தபடியாகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் சேவையாயிற்று. (அதை முன்னாள் அமெரிக்க அதிபர் டானல்ட் எவ்வாறு பயன்படுத்திப் பலன் கண்டார் என்பதும் வாசகர்கள் அறிந்ததே).

டுவிட்டராவது பரவாயில்லை, நுகர்வோர் துறையிலேயே ஒரு பயனிலிருந்து மற்றோரு பயனுக்குத் திரும்பியது. ஆனால் நுகர்வோர் துறையில் ஆரம்பித்து, நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் துறைக்கு யோசனைத் திருப்பம் செய்து பெருவெற்றி கண்ட மற்றோர் உதாரணம் உண்டு. அதுதான் ஸ்லாக் (Slack). ஸ்லாக் நிறுவனத்தை ஸேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் பல பில்லியன் டாலர் கணக்கில் மிக அதிக விலைக்கு வாங்கியதை நீங்கள் சில மாதங்களுக்கு முன் கேள்விப் பட்டிருக்கலாம். அந்த அளவுக்கு வெற்றிகண்ட ஸ்லாக் நிறுவனம், ஆரம்பத்தில் மின்விளையாட்டுத் துறையில் ஆரம்பித்தது.

அதை நிறுவிய ஸ்டூவர்ட் பட்டர்ஃபீல்ட் அதற்கு முன்பு ஃப்ளிக்ர் (Flickr) என்னும் புகைப்படப் பரிமாற்ற இணையதளத்தை ஆரம்பித்தவர். அவர் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக வளர்த்து யாஹூ நிறுவனத்துக்கு விற்றார். ஃப்ளிக்ர் நிறுவனம் நுகர்வோர் துறையில் இருந்ததால், கிளிட்ச் (Glitch) என்ற பெயரில் மின்விளையாட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்தத் தளம் பிரபலமாகவேயில்லை. பல மாற்றங்களும் படுதோல்வியையே தழுவின!

ஆனால் ஸ்டூவர்ட்டும் அவரது குழுவினரும் மனம் தளராமல் ஒரு யோசனைத் திருப்பத்தை நிகழ்த்திப் பெருவெற்றி கண்டனர். அவர்கள் நிகழ்த்திய மாற்றம் என்ன? எவ்வாறு வெற்றி கண்டனர்? இதில் புரிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com