எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 7
அருண் சாராவிடம் பேசிவிட்டு, அவளுக்கு எப்படி உதவுவது என்று யோசித்தான். அப்பா ஊரில் இல்லாததால் அம்மாவும் கீழறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். வீடே அமைதியாக இருந்தது. அருண் அம்மாவிடம் கொஞ்சநேரம் பேசலாமா என்று நினைத்தான். அவனுக்கு அது தோதாகப் படவில்லை.

சற்று நேரம் அப்படியே உட்கார்ந்து இருந்தவன், என்ன தோன்றியதோ, பட்டென்று தனது கணினியை இயக்கினான். ஹோர்ஷியானா நிறுவனத்தின் வழக்குகள் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான். கூகுள் தேடலில் மும்முரமானான்.

விதைகளுக்கு உரிமம் பதிவு செய்வதைப் பற்றியும் படித்தான். செடிகளின் விதைகளை விஞ்ஞானிகள் மாற்றி அமைப்பதை அறிந்தான். G.M.O (Genetically Modified Organism) என்றொரு பெரிய ஆய்வே இருக்கிறதென அறிந்தான். விவசாய விஞ்ஞானத்தின் வளர்ச்சி, அதன் அற்புதம், அப்படிச் செய்வதால் பெறும் நன்மை தீமைகள் என ஏராளமாக இணையத்தில் கொட்டிக் கிடந்தது.

அருணுக்கு ஒரே ஆச்சரியமாகவும், அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது. எவ்வளவு தெரிந்துகொள்ள முடியுமோ தெரிந்துகொண்டு பின்னர் அம்மாவிடம் கேள்வி கேட்கலாம் என்று நினைத்தான்.

இயற்கையாக விளையும் செடிகள் பலவித நோய்களால் மடிந்து போகலாம். ஒரு சில செடிகள் குறிப்பிட்ட தட்பவெட்ப நிலையிலோ, குறிப்பிட்ட மண்ணிலோதான் வளரும். ஒரு செடியின் பூவோ, காயோ, பழமோ ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், G.M.O. முறையில் ஒரு செடியின் குணாதிசயங்களை மாற்றமுடியும். செடியின் விதைகளை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து, அந்தச் செடியின் இயல்புகளை (native characteristics) மாற்ற முடியும். அப்படி மாற்றி அமைக்கப்பட்ட விதை அந்த நிறுவனத்தால் உரிமம் (patent) என்ற பெயரில் பாதுகாக்கப்படுகிறது. இதைச் சட்டம் அனுமதிக்கிறது. அறிவுசார் சொத்துப் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும் சலுகையை ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் எப்படித் தங்கள் லாபத்திற்கு உபயோகிக்கின்றன என்பதை அருண் படித்துத் தெரிந்து கொண்டான்.

ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் தயாரித்து, உரிமம் பதிவு செய்த விதைகளை, யாராவது உபயோகப்படுத்த விரும்பினால் அதற்குப் பெரிய தொகை ஒன்றைக் கட்டணமாகக் கேட்பார்கள். தொகையைக் கொடுக்க முடியாத ஏழை விவசாயிகளால் அந்த G.M.O. விதைகளைப் பயன்படுத்த முடியாது. லாப நோக்கில்லாத நிறுவனங்கள் இயற்கை விதைகளை கட்டணமில்லாமல் கொடுத்தாலும், G.M.O. விதைகளில் கிடைக்கும் அபரிமித விளைச்சல் அவற்றில் கிடைக்காது. அதனால், கட்டணம் அதிகம் என்றாலும் பல விவசாயிகள் G.M.O. விதைகளுக்கு அடிமை ஆகிவிடுகிறார்கள்.

G.M.O. விதைச் செடிகளில் இருந்து வரும் விதைகளை உபயோகிக்க, மீண்டும் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்மூலம் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டே இருப்பார்கள். ஹோர்ஷியானா போன்ற நிறுவனங்கள் லாபம் அடித்துக்கொண்டே இருக்கும். யாராவது கொடுக்காவிட்டால், இந்த நிறுவனங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களை ஒரு வழி செய்துவிடுவார்கள். பல நாடுகளின் அரசாங்கமே சட்டபூர்வமாக இதை அனுமதிப்பதால், யாரும் ஒன்றும் தடுக்க முடியவில்லை. இப்படியே போனால் பல விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிடும்படி ஆகலாம் என்றும் எழுதியிருந்தது.

அருணுக்கு இப்போது சாராவின் குடும்பத்தினர் எந்த மாதிரி வம்பில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெளிவாகப் புரிந்தது.

மாடிப்படியில் அம்மா ஏறிவரும் சத்தம் கேட்டது. தன் அறைக்குத்தான் வருகிறார் என்று அவனுக்குத் தெரியும். உள்ளே வரட்டும் என்று இருந்தான்.

கதவில் 'டொக் டொக்' என்று தட்டினாள் அம்மா. கம்ப்யூட்டரில் படித்துக்கொண்டே, "என்னம்மா?" என்றான்.

"இன்னும் தூங்கலையா கண்ணா? ரொம்ப நேரமாச்சே."

"நாளைக்கு சனிக்கிழமைதானே அம்மா. அதான் கொஞ்சம் முழிச்சிட்டு இருக்கேன்."

"தூக்கம் வரலையா? சாராவைப் பத்தி கவலைப் பட்டுகிட்டு இருக்கிறயா?"

"நான் கொஞ்சம் G.M.O விதைகளைப் பத்தி படிச்சிட்டு இருக்கேன் அம்மா. விவசாய விஞ்ஞானத்துல இப்படி எல்லாம் பண்ண முடியுமா என்ன? ரொம்ப வியப்பா இருக்கு."

கீதா உள்ளே வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். அருண் படித்துக் கொண்டிருந்ததை அவரும் படித்தார். "இப்ப எல்லாம் விவசாயம் ஒரு பெரிய விவகாரமாவே ஆயிடிச்சு. பல பேரு விவசாயம் பண்ணுறதேயே விட்டுட்டாங்க. இதைப்பத்தி படிக்கப் படிக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்" என்று கீதா அருணின் தலையை வருடியபடி பேசினார்.

"அம்மா, சாராவோட அம்மா உங்ககிட்ட பேசினாங்களா?"

"ஆமாம், பீட்டர், சூஸன் ரெண்டு பேரும் என்கிட்ட சில முக்கியமான விஷயங்கள் பத்திக் கேட்டாங்க. நான் அவங்களுக்கு ஒரு நல்ல வக்கீலோட அறிமுகம் கொடுத்திருக்கேன்."

"அம்மா, உண்மையிலேயே வழக்கு தொடரப் போறாங்களா? இன்னிக்கு பள்ளிக்கு வந்த அதிகாரிங்க எல்லாம் ரகளை பண்ணிட்டாங்க. நானும் சாராவும் பயந்துட்டோம். எங்க தலைமை ஆசிரியர்கூட ஆடிப் போய்ட்டாரு. சாராவோட அம்மா அப்படி ஒரு கத்து கத்தினாங்க! அவங்க பொறுமை இழந்து நான் பார்த்ததே இல்லை."

கீதா அருணின் முதுகில் செல்லமாகத் தட்டினார். "நீ சாராகிட்ட பேசினயா கண்ணா? அவ எப்படி இருக்கா?"

"அவ ரொம்ப கூலா இருக்கா அம்மா."

அருண் கம்ப்யூட்டரை அணைத்தான். கட்டிலில் போய்ப் படுத்துக்கொண்டான். அம்மா அவனுக்குப் போர்த்திவிட்டார்.

"கண்ணா, நான் போகலாமா?"

அருண் சில நொடிகள் மௌனமாக இருந்தான்.

"அம்மா, எனக்கு நிறைய கேள்விகளுக்கு விளக்கம் தெரியணும். நாளைக்குப் பள்ளிக்கூடம் கிடையாதுதானே."

கீதா நமுட்டுச் சிரிப்போடு அருணின் தலையை வருடினார். அந்த இரவு ஒரு நீண்ட கேள்வி-பதில் இரவாகப் போகிறது என்று எண்ணித் தனக்குள் சிரித்துக் கொண்டார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com