படிக்கலாம் வாங்க!
"இந்த கோவிட் வந்தாலும் வந்தது, வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம். வெளியில் போகவும் முடியவில்லை. யாருடனும் பேச முடியவில்லை. டி.வி. பார்க்கவும் பிடிக்கவில்லை. பாட்டுகள் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டன. எவ்வளவு நேரம்தான் ஃபேஸ்புக், வாட்ஸப்பையே கட்டிக்கொண்டு அழுவது! வாழ்க்கையே ரொம்ப போர்" என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு வரமாகப் பல குறுஞ்செயலிகள் வந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாமா?

பிஞ்ஜ் (bynge.in)
'பிஞ்ஜ்' இந்தச் செயலி மிகக்குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. காரணம், இந்தச் செயலி முழுக்க இலவசமாக வாசகர்களுக்குச் சுவையான நாவல், கட்டுரைகளை வாசிக்கத் தருகிறது. இந்தக் கருவியை ஆப்பிள் ஐ ஃபோன்களிலும் ஆண்டிராய்டு ஃபோன்களிலும் பயன்படுத்தலாம். திரில்லர், அமானுஷ்யம், வரலாறு, சமூகம், காதல் எனப் பல்வேறு வகைமைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாவல்கள் இதில் கொட்டிக்கிடக்கின்றன. தமிழின் பிரபல எழுத்தாளர்களான ராஜேஷ்குமார், சாருநிவேதிதா, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன், காலச்சக்கரம் நரசிம்மா, பா. ராகவன் போன்றோரது படைப்புகள் மிகப்பெரிய வாசக வரவேற்புடன் இதில் வெளியாகின்றன.

திங்கள் மற்றும் வியாழனன்று அப்டேட் ஆகிறது ராஜேஷ்குமாரின் 'நள்ளிரவுச் செய்திகள்: வாசிப்பது துர்கா' தொடர். வாசிக்கத் தொடங்கினால், இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டுத்தான் அலைபேசியைக் கீழே வைக்கமுடியும், அந்த அளவுக்கு விறுவிறுப்பான தொடர் இது. கிட்டத்தட்ட 10 லட்சம் வாசகர்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது இத்தொடர். பட்டுக்கோட்டை பிரபாகர், பரத் - சுசீலாவை நாயகர்களாக வைத்து எழுதியிருக்கும் துப்பறியும் தொடர் 'குற்றம் கற்றவன்' கிட்டத்தட்ட 50 லட்சம் வாசகர்களின் ஆதரவுடன் மிகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது. இந்திரா சௌந்தர்ராஜன் 'நந்திபுரம்' என்னும் ஆன்மிக அமானுஷ்ய மர்மநாவல் தொடரை எழுதுகிறார். சாரு நிவேதிதாவின் 'அகாலம்' நிறைவுற்று, விரைவில் 'ஔரங்கசீப்' தொடங்க இருக்கிறது. பா. ராகவனின் துள்ளலான நடையில் 'கபட வேடதாரி' வந்து கொண்டிருக்கிறது.முன்னோடி எழுத்தாளர்களான கி.வா.ஜகந்நாதன், கல்கி, புதுமைப்பித்தன், நா. பார்த்தசாரதி, லா.ச. ராமாமிர்தம், சாவி, ராஜம் கிருஷ்ணன், வல்லிக்கண்ணன் போன்றோரின் படைப்புகளும் வாசிக்கக் கிடைக்கின்றன. கலாப்ரியா, பெருமாள் முருகன், மனுஷ்யபுத்திரன், இந்துமதி உள்ளிட்டோர் சமீபத்தில் புதிய படைப்புகளுடன் நுழைந்துள்ளனர்.

ஜூலை 16 முதல் 'ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு' என்னும் தனது முதல் சரித்திரத் தொடரை ஆரம்பிக்க இருக்கிறார் சி. சரவணகார்த்திகேயன். இதுபற்றி அவர், "கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல்மூலம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானது சோழ இளவரசன் ஆதித்த கரிகாலனின் படுகொலை. ஆனால் அதன் சூத்ரதாரி யாரென்பது இன்றளவும் துலங்காத‌ மர்மமாகவே நீடிக்கிறது. கொஞ்சம் உண்மைகளும் கொஞ்சம் ஊகங்களும் குழைத்து அம்மரணத்தைத் துப்பறியும் சரித்திர நவீனம் 'ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு'. அவ்வகையில் தமிழின் முதல் Historical Whodunnit. வரலாற்றுப் புதினங்களில் வழமையாக உலவும் வாள்கள், புரவிகள், பல்லக்குகள், அழகிகள் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய‌ தமிழ் நிலத்தின் அரசியல், சமூகம், பண்பாடு, உளவியல் குறித்த நுண்மையான குறுக்குவெட்டுத் தோற்றத்தை இப்புனைவுத் தொடர் அளிக்கும்." என்கிறார். இன்னும் காஞ்சனா ஜெயதிலகர், விஜி பிரபு, எஸ். செந்தில்குமார் போன்ற தனித்துவமிக்க, வாசக வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர்களின் தொடர்களும் வெளியாகின்றன. மேலும் பல முன்னணி எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் விரைவில் இணைய இருக்கின்றனர்.

வாசகர் கேள்விகளுக்கு எழுத்தாளர்களின் பதில்களும், சிறந்த கேள்விகளுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. புதிய அத்தியாயங்கள் வெளிவரும்போது, அது தொடர்பான அறிவிப்புகள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டு வாசிப்பவர்களை வந்தடைகின்றன. அதன் மூலம் தாங்கள் பின்தொடரும் எழுத்தாளர்களின் தொடரை உடனடியாக வாசிக்க முடிகிறது. முற்றிலும் இலவசமான இந்தச் செயலியின் மூலம் வாசிப்பது மட்டுமல்ல; அப்படி வாசித்தவை குறித்துப் பிற வாசகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் விவாதிக்கவும் செய்யலாம். அவர்களது படைப்புகளைப் பற்றி விமர்சிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் எழுதவும் இந்தச் செயலி வாய்ப்பளிக்கிறது. (அதற்கான சுட்டி)

ஆப்பிள் கருவிகளில் பதிவிறக்க
கூகிள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்க

"வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளோம். இன்றைய ஸ்மார்ட்ஃபோன் தலைமுறையினருக்குத் தமிழ் இலக்கியங்களை எடுத்துச் செல்வதே எங்கள் நோக்கம்" என்கிறார், இதனை உருவாக்கிய நோஷன் பிரஸ் நிறுவனத்தின் இணை இயக்குநரும் BYNGE செயலியின் நிர்வாக இயக்குநருமான நவீன் வல்சகுமார்.

உண்மையில் Bynge செயலியை, வாசிப்பை நேசிப்போருக்கான திருவிழா என்றுதான் சொல்லவேண்டும்.

★★★★★
புஸ்தகா (pustaka.co.in)
பிஞ்ஜ் ஆப்பைப் போலவே புத்தக ஆர்வலர்களுக்காக 2014 முதல் இயங்கி வருகிறது புஸ்தகா. இதில் அலைபேசிகளில் மட்டுமல்லாமல், இணையத்திலும் வாசிக்க முடியும் என்பது இதன் சிறப்பு. ஆனால் இலவசமாக அல்ல. வாசகர் இதன் மின்-நூலகத்தில் சேர்ந்தபின், அதில் இருக்கும் ஆயிரக்கணக்கான நூல்களில் தனக்குத் தேவையான மொழியில் நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். மாதம் 99 ரூபாய் செலுத்தினால் ($2.49) 1 மாதத்திற்கு 20 புத்தகங்களைத் தரவிறக்கி வாசிக்க முடியும். மற்றுமொரு திட்டமாக 229/- ரூபாய் செலுத்தினால் ($6.49) மூன்று மாதத்திற்கு 50 புத்தகங்களைத் தரவிறக்கி வாசிக்க முடியும். அரையாண்டுத் திட்டத்தில் 429 ரூபாய் ($11.49) செலுத்த வேண்டும். ஆண்டுச் சந்தாவும் உண்டு.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என தற்போது கிட்டத்தட்ட 400 எழுத்தாளர்களின் புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. ராஜேஷ்குமார் தொடங்கி, பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், சிவசங்கரி, இந்துமதி, வித்யா சுப்பிரமணியம், காலச்சக்கரம் நரசிம்மா எனப் பல புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. மூத்த எழுத்தாளர்களான விக்கிரமன், ஜெயகாந்தன், ரசவாதி, சுப்ர. பாலன் எனப் பலரது படைப்புகளும் உண்டு. புதிய மற்றும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் நிறைய இருக்கின்றன.

தளத்தின் மற்றொரு சிறப்பு ஒலிப் புத்தகங்கள். கல்கியின் 'சிவகாமியின் சபதம்', திவாகரின் 'வம்சதாரா', லா.ச. ராமாமிர்தத்தின் 'ஜனனி', மு.வ.வின் 'அகல்விளக்கு' மற்றும் புதுமைப்பித்தன், ஆதவன், வாஸந்தி, ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன், வித்யா சுப்ரமணியம் எனப் பலரின் படைப்புகள் ஒலிநூல்களாகக் கிடைக்கின்றன. அதற்கான சந்தாத் தொகை ஒரு நூலுக்கு (ரூ.69, $1) சுமார் ஒரு மாதகாலம் கேட்கலாம்.

செயலியின் சுட்டி

★★★★★
நாவல் ஜங்ஷன் (noveljunction.com)
நீங்கள் க்ரைம் நாவல் ஆர்வலரா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய செயலி இது. (சுட்டி) இதில் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, தேவிபாலா, இந்துமதி, விமலா ரமணி, ஆர்.சுமதி, ஆர். மணிமாலா, பரிமளா ராஜேந்திரன் எனப் பலரது நாவல்கள் வாசிக்கக் கிடைக்கும்.

ராஜேஷ்குமாரின் பிரபலமான க்ரைம் நாவல்கள், பாக்கெட் நாவல்களை இங்கு வாசிக்கலாம். ஜீயே பப்ளிகேஷன்ஸின் வெளியீடுகளான க்ரைம் நாவல், ப்ரைம் நாவல், குடும்ப நாவல், சுபயோகம் இதழ்கள் போன்றவற்றையும் வாசிக்கலாம்.நாவல் ஜங்ஷனை இணையத்திலும் வாசிக்க முடியும். உறுப்பினராகி விதவிதமான புத்தகங்களை வாசிக்கலாம். இலவச நூல்களும் உண்டு. இதிலும் காலாண்டு (ரூ. 149) தொடங்கிப் பலவகை உறுப்பினர் திட்டங்கள் உண்டு.

இவை தவிர்த்து நூல் ரீடர், தமிழ் புக் நாவல்ஸ், பிரதிலிபி, நிலா தமிழ் புகஸ், நாவல் லைப்ரரி, நூலகம், பாக்ஸ் நாவல் என பல புத்தகங்களுக்கான செயலிகள் கூகிள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கின்றன.படிக்கலாம், வாங்க!

சிசுபாலன்

© TamilOnline.com