இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்!
நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். இங்கே வந்து 20 வருடத்திற்கு மேல் ஆகிறது. ஒரே பெண். என் அப்பா ஒரு ராணுவ அதிகாரி. இந்தியாவில் நான் வடக்கில்தான் இருந்தேன், வளர்ந்தேன், படித்தேன். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரிடமும் பழகுவேன்.

என் கணவர் அமைதியானவர். தன் வேலையுண்டு என்று இருப்பார். எனக்கு எப்போதும் மனிதர்கள் வேண்டும். ஆகவே மேல்படிப்புக்கு வரும் மாணவர்களுக்கு நான் மிகவும் உதவி செய்வேன். மாணவர்கள், மாணவிகள் என்று என் வீட்டுக்கு வந்து நிறையப் பேர் சாப்பிட்டு, சில சமயம் நாள்கணக்கில் தங்கியும் இருக்கிறார்கள்.

சிலர் படிப்பை முடித்து வேலை பார்த்துக் கொண்ட பின்பும் தொடர்பு வைத்துக் கொள்வார்கள். சிலர் சொல்லிக் கொள்ளாமலேயே ஊரை விட்டும் போய் இருக்கிறார்கள். அப்போது எனக்கு வருத்தமாக இருக்கும். இப்போது, அதைவிட வருத்தமான விஷயத்தை எழுதுகிறேன். ராம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒரு பையன். முதலில் மிகவும் கூச்சப்படுவான். அப்புறம் பழகப்பழக நன்றாகப் பேச ஆரம்பித்தான். ஒவ்வொரு வாரமும் வீட்டுக்கு வருவான். தன் வீட்டுப் பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் பேசுவான். ஒரு செமஸ்டருக்கு உதவித் தொகை கிடைக்காமல் கஷ்டப்பட்டான். அப்போது நான் தான் அவனுக்கு உதவி செய்தேன். என்னிடம் மிகவும் பாசமாக இருப்பான்.

படிப்பு முடிந்து வேலைக்குப் போன பின்பும் வார இறுதியில் சில சமயம் வந்துவிட்டுப் போவான். தினமும் மின்னஞ்சல் பறிமாறிக் கொள்வோம். அவன் திருமணத்திற்கும் நான் முயற்சிகள் எடுத்துக் கொண்டேன். இந்தியா சென்று ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்தபோதுகூட எங்கள் ஆலோசனையைக் கேட்டுத்தான் செய்தான்.

திருமணம் முடிந்து புது மனைவியை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்குத் தான் முதலில் வந்தான். நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். தினமும் அவர்களுக்கு போன் செய்து நலம் விசாரிப்பேன். திடீரென்று 2 மாதமாக அவனிடமிருந்து எந்த மின்னஞ்சலும் வரவில்லை. தொலைபேசியில் அழைத்தாலும் மறுபடியும் திரும்ப அவன் என்னுடன் தொடர்பு கொள்வது இல்லை. எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆகவே, ஒருநாள் தொடர்ந்து 4, 5 தொலைபேசிச் செய்திகள் அனுப்பினேன். மறுநாள் சட்டென்று வந்தது ஒரு மின்னஞ்சல்: 'நீங்கள் மறுபடியும் தொடர்புகொள்ள முயற்சி செய்யாதீர்கள். இதுவரை நீங்கள் செய்த உதவிக்கு நன்றி. என் மனைவிக்குப் பிடிக்கவில்லை நம் சிநேகம். என்னைப் புரிந்து கொள்ளுங்கள்' என்று எழுதியிருந்தான். எனக்கு உலகமே இருண்டுவிட்டது போலத் தோன்றியது. என் கணவரிடம் நான் வெளிப்படையாக இருப்பவள். இந்த மின்னஞ்சலையும் காட்டினேன். மிகவும் அழுதேன். அவர் ''உன்னுடைய குழந்தை மனதை உலகம் புரிந்து கொள்ளுவது கஷ்டம். இனிமேல் எந்தப் பையனையோ, பெண்ணையோ பரிதாபம் என்ற பெயரில் வீட்டுக்கு கூப்பிட்டுச் சோறு போடாதே. மறுபடியும் பிரச்சினையை வரவழைத்துக் கொள்ளாதே. அவர்கள் நன்றி மறந்தவர்களாக இருந்துவிட்டுப் போகட்டும். இது உனக்கு ஒரு பாடம்'' என்று எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனாலும் என்னால் அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. நான் என்ன தவறு செய்தேன்? எப்படி அந்தச் சின்னப்பெண், இங்கே வந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை, என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டாள்? அவனும் எப்படி மாறிப்போனான்? நடந்ததை மறக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை.

இப்படிக்கு...
.................................

அன்புள்ள

நேசமும், பாசமும் நிறைந்த செய்கைகளைச் சிலர் ஆபாசமாக நினைக்கும் போது நீங்கள் அடையும் வேதனை புரிகிறது. மனதில் களங்கமில்லாமல் மற்றவருக்கு உதவி செய்யும் போதும், இதுபோன்ற அவதூறுகள் நம்மைத் தாக்குவது சகஜம். நாம் 'சேவை' என்று நினைத்துச் செய்வோம். அது 'தேவை'தானா என்று பிறர் நினைக்கலாம். எல்லாம் பார்க்கும் கோணத்தைப் பொறுத்தது.

பிரதியுபகாரம் எதுவும் எதிர்பார்க்காமல் நீங்கள் உதவி செய்தாலும், அதனால் உண்டான ஒரு பாச உறவில் சில சலுகைகளை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதை இந்த இளம் மனைவி தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கலாம். எது தவறாக எடுத்துக் கொள்ள கூடிய சலுகை, எது சரியாக எடுத்துக் கொள்ளக்கூடிய சலுகை என்பதற்கு ஒருவிதிமுறை, அளவு கோல் இல்லை. அவரவர் குடும்பக் கோட்பாடுகளைப் பொறுத்தது. எனக்கும், எந்தச் சம்பவத்தின் அடிப்படையில் நீங்கள் தவறாக கணிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

எனக்குப் புரிவதெல்லாம் நீங்கள் மனதில் காயப்பட்டு இருக்கிறீர்கள் என்பதுதான். உங்களுக்கு மிகவும் நல்ல மனது. இந்தத் துன்பம் உங்களுக்கு வந்திருக்க வேண்டாம். ஆனாலும் நாம் எல்லோருமே ஒருவர் மேல் உள்ள அன்பால் சில சமயம் நாம் வரம்பை மீறிவிடுகிறோம். அது எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம். உங்கள் மனதில் எந்தக் களங்கமும் இல்லாமல் இருக்கும் போது உங்கள் வேதனையை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டு வாழ்வின் இனிமைகளைக் காணுங்கள்.

சுயநலமாக இருப்பதைவிட, பிறர் நலம் காணும் மனிதராக இருப்பதற்குப் பெருமைப்படுங்கள்.

குற்றம் காணும் மனிதர்கள் இடையே, குழந்தை குணத்தைப் பெற்ற நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள்.

உங்களைப் புரிந்துக் கொண்ட ஒரு அருமையான கணவர் - இதைவிட பாக்கியம் வேறென்ன வேண்டும்! He is your soulmate.

உங்கள் கணவர் 'இனிமேல் இப்படிப் பழகாதே' என்று சொன்னாலும் நீங்கள் மறுபடியும் யாரேனும் பரிதாபமாக இருந்தால் அவர்களுக்குப் பரிந்து உதவி செய்யத்தான் போகிறீர்கள். இது உங்கள் இயற்கைக் குணம். மாறுவது சிரமம். ஆனால், ஒருமுறை விபத்து நடந்தால் எப்படி ஒவ்வொரு முறை நாம் வாகனம் செலுத்தும் போதும் நமக்கு ஒரு எச்சரிக்கை உணர்வு வந்துபோகுமோ, அதுபோல அந்த உள்ளுணர்வு உங்களுக்கு ஒரு சங்கேதம் காட்டும். அப்போது நம் அன்புக்கு எங்கே அணை கட்டி, உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்று உங்களுக்கே புரியும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்

© TamilOnline.com