ஞாபகச்சின்னம்
"இப்படி வந்து பாருங்கள், நிலா வெளிச்சத்தில்!" என்றான் எங்களுக்கு வழிகாட்டி வந்த அந்தக் கிராமவாசி.

அன்று மாலைதான் நாங்கள் மகாபலிபுரம் வந்திருந்தோம். துல்லிய பௌர்ணமி நிலவில் அங்குள்ள சிற்ப விசேஷங்களைக் காண்பதே ஓர் ஆனந்தம். பஞ்சபாண்டவ ரதம், பகீரதன் தவம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே வருகையில், பழமையான அந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தின் உன்னத நிலையைச் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் வர்ணித்திருந்த பகுதி என் நினைவுக்கு வந்தது. சட்டென்று கல்லால் ஆன ஒரு யானைக்கு எதிரே வந்து நின்றோம்.

கிராமவாசி மறுபடியும், "அதை உற்றுக் கவனியுங்கள்" என்றான். அவ்வெண்ணிலவில் அந்தக் கல்யானை கண்ணீர் விட்டுக்கொண்டே பெருமூச்சு விடுவதுபோல் பிரமை ஏற்பட்டது. அதைச் சமைத்த சிற்பியின் திறமையை வியந்தவண்ணம் நின்றிருந்தேன், வெகுநேரம்.

"இதில் ஏதாவது விசேஷம் இருக்கவேண்டும்" என்று பேச்செடுத்தேன் நான்.

"ஆமாம்," என்ற பாவனையாகத் தலையசைத்தான் அந்தக் கிராமவாசி. எனக்கு அதை அறியவேண்டும் என்ற ஆவல் மூண்டது. நான், "என்ன அப்பா, அது? சொல்லேன்" என்றதும் அவன் ஆரம்பித்தான்.

அவன் பாட்டனார் சொல்லிக் கேட்டிருக்கிறானாம், இந்த வரலாற்றை.

தொண்டை மண்டலத்தை மகேந்திர பல்லவன் ஆண்டுவந்த காலம். கடாரம், சாவகம், சிங்களம் முதலிய தூர தேசங்களிலிருந்து வியாபாரிகள் இங்கே பொன்னும் மணியும் கொண்டுவந்து பொருளோடு திரும்பிப் போவார்கள். இவற்றோடு உள்நாட்டிலிருந்தும் சரக்குகள் வந்ததால், அந்தக் காலத்தில் தலைநகரமாக இருந்த காஞ்சீபுரத்தில் கிடைக்காத பண்டமே இல்லை.

நவராத்திரி நெருங்கிற்று. பல்லவ ராஜா அதைச் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். காஞ்சியில் இருந்த தேவாலயங்களும் அரண்மனையும் பழுது பார்க்கப்பட்டு வந்தன. கோபுரங்களின் நிலைகளிலும் அதன் பக்கங்களிலும் விளக்கு வரிசைகள் வைக்கவும், கச்சியின் அதிதேவதை ஒன்பது நாளும் ஒன்பது திருக்கோலத்தில் பவனி வரவும் ஏற்பாடு செய்திருந்தான் சக்கரவர்த்தி.

அன்று நவராத்திரிக்கு முந்திய நாள். மகேந்திரன் தன் கட்டளை சரிவர நிறைவேறிற்றா என்று அறிய நேரில் புறப்பட்டு ஒவ்வோர் இடமாகப் போய்ப் பார்க்கலானான். தேவாலயங்களுக்குள் நுழைய வேண்டியிருந்ததால் நடந்தே சென்றான். ஐந்தே வயசு நிரம்பிய தன் இளைய மகனையும் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். பரிவாரத்தில் முக்கியமானவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

கடைசியாக, அரண்மனையருகிலுள்ள யானைக் கூடத்தைப் பார்வையிட அதனுள் நுழைந்தான். ஒவ்வொரு யானையாகப் பார்த்துக்கொண்டே பட்டத்து யானையாகிய மாதங்கத்தண்டை வந்து நின்றான். சக்கரவர்த்திக்கு அதனிடம் தனிப் பிரீதி. கொஞ்சநேரம் அதன் துதிக்கையைத் தடவிக் கொடுத்தான். பிறகு அங்கிருந்த தலைமைப் பாகனிடம் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். பாகனும் மறுநாள் காலை மங்கள கும்பம் ஏந்திவர எல்லாம் சித்தமாக இருப்பதாகத் தெரிவித்தான்.

இதற்குள் இளவரசன் மாதங்கத்தின் எதிரில் வந்து நின்றுகொண்டான். அதுவும் ஆதரவோடு சிறுவனைத் தன் துதிக்கையினால் தடவிக் கொடுத்தது. திடீரென ராஜகுமாரன் கண்களில் ஓர் ஒளி வீசியது. அவன் குறும்புச் சிரிப்புடன் மெதுவாகத் தன் இடுப்பிலிருந்து ஒரு சிறு கத்தியை எடுத்தான். யானை துதிக்கையை நீட்டும் பொழுதெல்லாம் அதன் நுனியைக் குத்த ஆரம்பித்தான். யானையின் சின்னஞ்சிறு கண்கள் சிவந்து வந்தன. ஆனாலும் அது சகித்துக் கொண்டுதான் இருந்தது. அதை மேலும் கோபமூட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமென்று ஆசை இளவரசனுக்கு. இந்த முறை துதிக்கை நுனியில் ஆழமாக வெட்டிவிட்டான். அதனால் பொறுக்க முடியவில்லை; வெகுண்டு சிறுவனை அப்படியே துதிக்கையினால் தூக்கித் தரையில் ஓங்கி அறைந்தது.

அந்த ஓசையைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அரசிளங்குமரன் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பிணமாய்க் கிடந்தான். யானையின் துதிக்கை நுனியில், வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. பல்லவன் சற்று நேரம் திகைத்து நின்றான். சிறுவனின் கையருகில் கிடந்த கத்தியைக் கண்டு நடந்ததை ஊகித்துக் கொண்டான். அவன் முகம் ஒளி இழந்து கறுத்துவிட்டது. சுற்றியிருந்தவர்கள் அரசன் என்ன ஆக்கினை இடுவானோ என்று நடுநடுங்கினார்கள்.

ஆனால் மகேந்திரன், "அதை ஒன்றும் செய்யாதீர்கள்!" என்று கம்மிய குரலில் கூறிவிட்டு முகம் கவிழ்ந்தபடி அரண்மனையில் நுழைந்து தன் அறைக்கதவைத் தாழிட்டுக் கொண்டான். மகன் இறந்த செய்தியைக் கேட்டதும் அரசி மூர்ச்சையானாள். இளவரசன் சவத்தை எடுத்து உரிய மரியாதைகளுடன் அடக்கம் செய்தபோது கூட மகேந்திரன் வெளியே வரவில்லை; அறையில் அவன் வேதனையினால் பெருமூச்சு விடுவது மட்டுமே கேட்டது. எவருக்கும் உள்ளே நுழையத் தைரியம் இல்லை .

இங்கே, பட்டத்து யானை ராஜகுமாரன் விழுந்த இடத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தது. பாகன் வாழைத்தண்டும் கரும்பும் கொண்டுவந்து அதன் எதிரில் நீட்டினான். அப்போதும் அது அப்படியே இருந்தது. இரை எடுக்கவும் இல்லை; அவ்விடத்தை விட்டு நகரவும் இல்லை. மாதங்கத்திற்கு மதம் பிடித்துவிட்டது என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

மகாராஜா துக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது நவராத்திரி எப்படி நடக்கும்? ஊரே சோபை குன்றிக் கிடந்தது. எட்டுநாள் யானை இரை எடுக்காமலும் நின்ற இடத்தை விட்டு அசையாமலும் இருந்தது. பாகன் எவ்வளவு ஆசுவாசப்படுத்தியும் ஒன்றும் பலன் இல்லை. புத்திர சோகம் ஒருபுறம்; மறுபுறம் தன் அருமை மாதங்கம் தீனி எடுக்காமல் கிடக்கிற வருத்தம் அவனுக்கு.

பல்லவனும் எட்டு நாள் இரவு பகல் உண்ணாமல் உறங்காமல் களைத்துப் போய் அன்று பின்னிரவு கண்ணயர்ந்தான். அருணோதய வேளை. அரசனுக்கு விழிப்பு ஏற்பட்டது. அவன் மனத்தில் என்றும் இல்லாத அமைதி நிலவியது. ‘தவிர்க்க முடியாத ஒன்றை நினைத்து எத்தனை நாள் வருந்துவது? நம் மாதங்கத்தைப் போய்ப் பார்த்து அதற்கு ஆறுதல் சொல்லலாம்’ என்று எல்லா ஜீவராசிகளிடத்திலும் அன்பு பொங்க எழுந்தான். பாகன் பின் தொடர யானைக்கூடத்தை அடைந்தான்.

மகேந்திரனைக் கண்டதும் மாதங்கம் பெருமூச்சு விட்டு அவனை அழைப்பது போல் அதன் துதிக்கையை நீட்டி வளைத்தது. "ஏதோ ஆத்திரத்தில் உன் அருமை மைந்தனைக் கொன்றுவிட்டேன். என்னை மன்னிப்பாயா?" என்று கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தது, அதன் ஒளி மங்கலான பார்வை. பல்லவன் கருணையே உருவாக அதனருகில் வந்து நின்றான். "மன்னித்துவிட்டேன்; பயப்படாதே!" என்று அதைத் தடவிக் கொடுத்தான். அப்போது யானையின் சிறு விழிகளிலிருந்து மடை விண்டதென இத்தனை நாள் தடைப்பட்டிருந்த கண்ணீர் பெருகி ஓடியது. சக்கரவர்த்தி தன் கையாலேயே ஒரு கருப்பந்துண்டை அதற்குக் கொடுத்தான். அதை வாங்கித் தன் வாயருகில் கொண்டு வரும்போது மாதங்கத்தின் தலை சுழன்றது. அது உடனே தொப்பென்று கீழே விழுந்து உயிர் விட்டது. பாவம், தன் யஜமானனின் மகனைக் கொன்றதுமே அதன் உள்ளம் உடைந்துவிட்டது! இவ்வளவு நாள் அரசனிடம் மன்னிப்பைக் கோரத்தான் அது உயிர் வைத்திருந்தது.

பிற்காலத்தில் மகேந்திரன் இந்த ரதங்களைச் செதுக்குவித்தபோது மாதங்கத்தின் ஞாபகார்த்தமாக இந்தக் கல்யானையைச் செய்து வைத்தான்.

அவன் கதையை முடித்ததும் என்னுடன் வந்திருந்த நண்பர்களில் ஒருவன் - அவன் நவநாகரிகத்தில் ஊறியவன் - ஏளனச் சிரிப்புடன், "கல்யானையாவது, கண்ணீர் விடுகிறதாவது! எல்லாம் வெறுங் கட்டுக்கதை. அந்தப் பக்கம் சமுத்திரத்திலிருந்து உப்புக் காற்றுப் பட்டுக் கல் சொரசொரவென்று ஆகிவிடுகிறது. இதன் கண்ணருகில் அதோடு மழை ஜலமோ என்னவோ ஊறியிருக்கிற கறை இருக்கிறது; வேறு ஒன்றுமில்லை. நிலாவில் எல்லாம் அதிசயமாகத்தான் தோன்றும்!" என்றான்.

"ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? அப்படி இதில் நடக்கக்கூடாதது என்ன இருக்கிறது, சொல்லேன்" என்றேன் நான்.

த.நா. சேனாபதி

© TamilOnline.com