தென்றல் பேசுகிறது...
கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்து வருகிறது. முகக்கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பலவகை வணிகத் தலங்களும் தொழிற்சாலைகளும் மெல்ல மெல்லத் திறக்கப் படுகின்றன. சற்றே தயக்கத்துடன் மக்கள் வெளியே வருகின்றார்கள். இந்தியாவிலும் இதே நிலைதான்.

உற்பத்தி, தொழில், வணிகம், சேவை என்கிற இவை பழைய வேகத்தோடு செயல்பட வேண்டுமானால் அதற்குப் பணியாளர்கள் மிகவும் தேவை. ட்ரம்ப் காலத்தில் கடினமாக இறுக்கப்பட்ட குடிவரவுக் கொள்கையின் காரணமாக, தொழிலாளர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது. பைடன் நிர்வாகம் இது குறித்து எதிர்பார்த்த வேகத்தில் மாற்றங்களைச் செய்யவில்லை. ட்ரம்ப் அரசுக் காலத்தில் இடுபொருள் இறக்குமதிக்கான வரிகள் மிகவும் அதிகரிக்கப்பட்டதால் அந்தத் தட்டுப்பாடும் உற்பத்தியைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

வாகனத் துறையில் சிலிக்கான் சில்லுகள் இல்லாமல், கார்களின் உற்பத்தி குறைந்துவிடவே, புதிய கார்களின் விலைக்கு இணையாகப் பழைய கார் விலை உயர்ந்துவிட்டதைக் கவனிக்க வேண்டும். கார்கள் மட்டுமல்ல, எல்லாப் பொருட்களின் விலையும் பிறநாடுகளோடு ஒப்பிட்டால் பல மடங்கு உயர்ந்துவிட்டது. இறக்குமதிக் கொள்கை, குடிவரவுக் கொள்கை இரண்டுமே உடனடியாக மாற்றியமைக்கப்படா விட்டால், உற்பத்திக் குறைவு, பணவீக்கம், மட்டற்ற விலையேற்றம் என்கிற மிக ஆபத்தான பொருளாதாரப் புதைமணலுக்குள் நாடு அழுந்திவிடும். இந்தப் பின்புலத்தில், உள்கட்டமைப்புக்காக ஒதுக்கப்படும் பெருநிதியும் நாம் எதிர்பார்த பலன்களைத் தராமல் போய்விடும். அரசு விரைந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

★★★★★


இந்திய ஆட்சிப் பணி (I.A.S.) உட்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான கையேடுகள், பொது அறிவுக் கையேடுகள் என்கிற மாறுபட்ட களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவருபவர் டாக்டர் சங்கர சரவணன். வேலை வாய்ப்புப் போர்க்களத்தில், தமிழ் மொழி வழியே இளையோரைத் தயார்படுத்துவதில் அவரது பணி முக்கியமானது. கல்விப் புலத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டுகிறது அவரது நேர்காணல். மொழிபெயர்ப்பு நூல்களை முன்னெடுத்தோர் தொடக்க அணியில் இடம்பெற்ற த.நா. சேனாபதியை எழுத்தாளர் பகுதியில் சந்திக்கிறோம். அருணகிரிநாதரின் ஆச்சரியமான வரலாறும் இந்த இதழில் தொடர்கிறது. என்னதான் இல்லை தென்றலில்! படித்துச் சுவைத்து இன்புறுங்கள்.

வாசகர்களுக்கு குரு பூர்ணிமை மற்றும் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள்.

தென்றல்
ஜூலை 2021

© TamilOnline.com