தேவாதி தேவர்களும் திரண்டு வந்து கண்ணனை வணங்கி வழிபட்ட புண்ணிய பூமி பிருந்தாவனம். மதுராவில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகத் தோன்றிய கண்ணன் பிருந்தாவனத்தில் கோகுலத்தில்தான் 11 ஆண்டுகள் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாக வளர்கிறான். எனவேதான் இவ்விரண்டு தலங்களும் புண்ணியத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.
மாயங்களும் லீலைகளும் பலவற்றை நிகழ்த்திய அவதாரம் கிருஷ்ணாவதாரம். அவதாரம் செய்தபோதே சர்வாலங்காரத்துடன் வசுதேவர்க்கும் தேவகிக்கும் காட்சி தந்து தன் ஆற்றலை உணர்த்தினான் கண்ணன்.
"தலையில் இரத்தினங்கள் இழைத்த கிரீடம்; காதுகளில் மகர குண்டலம்; கால்களில் மின்னும் பாதசரம்; மார்பில் ஸ்ரீவத்சம் என்றழைக்கப்படும் மச்சம்; தோள்களில் கேயூரம் எனப்படும் தோள் வளை; நான்கு கரங்களிலும் முறையே பாஞ்ச சன்னியம் (சங்கு), சுதர்சனம் (சக்கரம்), கௌமோதகி (கதை), சார்ங்கம் (வில்), இடுப்பில் மஞ்சள் பட்டாடை, மேலே பீதாம்பரம், உச்சிக் கொண்டையில் மயிற்பீலி."
நாராயண தீர்த்தர் கண்டு ஆனந்தித்த கண்ணனின் அவதாரத்தோற்றம் இதுவாகும்.
இராமாவதாரத்தில் அரக்கர் பயம் ஒழித்துத் தங்களைக் காத்த இராமபிரானை நெஞ்சாரத் தழுவிக்கொள்ள முனி புங்கவர்கள் விழைந்தபோது இராமன் அதனைத் தடுத்து விடுகின்றான். இராமாவதாரத்தில் ஏக பத்தினி விரதம் பூண்ட காரணத்தால் சீதை மட்டுமே தன் தோளைத் தழுவிக் கொள்ளும் உரிமை உடையவள் என்று கூறுகின்றான். அடுத்து வரும் கிருஷ்ணா வதாரத்தில் இந்த முனிவர்கள் கோபிகைகளாகப் பிறந்து தன்னைத் தழுவிக் கொள்ளலாம் என்றும் ஆறுதல் தருகின்றான். பிருந்தாவனத்தில் யமுனாநதி தீரத்தில் ராச லீலையில் முனிவர்களது ஆவல் நிறை வேறுகின்றது.
பிருந்தாவனத்தின் பெருமை:
சைதன்ய மஹாப்பிரபு பூரியில் ஜகந்நாதரைத் தரிசித்தது போல, திருப்பாணாழ்வார் ஸ்ரீரங்கத்தில் திருமாலைத் தரிசித்தது போல, நந்தனார் சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசித்ததுபோல, மேவார் ராணாவின் மனைவி மீராபாய் பிருந்தாவனத்தில் கண்ணனைத் தரிசித்தாள்.
தரிசித்ததுமட்டுமின்றி அந்தக் கண்ணனிடத்தில் ஜோதியாய்க் கலந்துவிட்டார். இவர் வழிபட்ட அந்தக் கண்ணனும் சாளிக் கிராமமும் இன்னமும் அங்கே உள்ளன. 'மீராபாய் மந்திர்' என்றழைக்கப்படும் அத் திருக்கோயில் இன்று சிதிலமடைந்து காணப்படுவது வேதனைக்குரிய ஒன்று.
கோவிந்தஜி மந்திர்:
பிருந்தாவனத்தில் எழுப்பப்பட்ட முதல் கோயில் இது. முகம்மதியர் படையெடுப்பால் கோயிலும் கோபுரமும் சிதைந்து போன போது உள்ளே இருந்த ப்ராசீன விக்கிர கத்தை (ஆதியில் பிரதிஷ்டை செய்தது) பாதுகாப்பாக ஜெய்ப்பூருக்குக் கொண்டு சென்று அங்குள்ள அரண்மனையில் வைத்தார்கள். இன்றைக்கும் விக்கிரகம் அங்கேதான் கோயில் கொண்டுள்ளது. மீராபாய் பாடியுள்ள ஒரு பாட்டில் 'தர்ஷண கோவிந்தஜிகோ' என்ற சொற்றொடர் இதற்குச் சான்றாக உள்ளது.
ராதாரமண மந்திர்:
பிருந்தாவனத்தில் 450 ஆண்டுகளுக்கும் முற்பட்டதான பழமையான இக்கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் முக்கியமான சீடர்கள் ஆறு பேர். அவர்களில் கோபாலபட்ட கோஸ்வாமி என்பவர் ஒருவர். இவர் வேங்கடபட்டரின் திருக்குமாரர். தாமோதர சாளக்கிராம மூர்த்தியை வழிபாடு செய்து வந்தார் கோஸ்வாமி. அவருடைய கிருஷ்ண பக்தியில் வசப்பட்டு, அவர் ஆராதித்த சாளக்கிராம மூர்த்தி பால ரூபத்தில் குழந்தைக் கண்ணனாக மாறி பூஜையில் அமர்ந்தது. இதனால் கோஸ்வாமி கண் ணனைக் குழந்தையாகவே பாவித்து வெய்யில் காலத்தில் அதற்கேற்ற அலங்காரமும் குளிர்காலத்தில் வென்னீரில் நீராட்டி, கம்பளிச் சட்டையும் அணிவித்து நிவேதனத்தை ஊட்டி பிரேம பக்தியுடன் வழிபட்டிருக்கின்றார். இப்படிப்பட்ட ஆராதனை முறையை இன்றும் இவ்வூர் மக்கள் பின்பற்றி வருகின்றனர். இக் கோயிலில் கோபாலபட்ட கோஸ்வாமியின் பாதுகையும் அதிஷ்டானமும் காணப்படுகின்றன.
நிதிவனம் நிகுஞ்சம்:
இது பிருந்தாவனத்தின் மிகவும் பழமையான தோட்டம். ஸ்ரீ ஹரிதாஸ் ஸ்வாமிகள் இங்கே தங்கியிருந்து பஜனை செய்து கொண்டிருந்த காலத்தில் அவரது பக்தியை மெச்சி, கண்ணன் அவருக்குக் காட்சி தந்த நந்தவனம் இது. கண்ணன் இவருக்குத் தந்த காட்சிக்கு 'பாங்கேவிஹாரி' என்று பெயர். பாங்கே என்றால் வளைவு என்று பொருள். கழுத்தைச் சாய்த்தும், இடுப்பை வளைத்தும், வலது காலை வளைத்து இடப்புறம் எடுத்துச் சென்று தரையிலிருந்து சற்று உயர்த்தி நிற்கும் காட்சி. இவ்வாறு கழுத்து, இடுப்பு, பாதம் என்று மூன்றிலும் வளைவு காட்டி நிற்கும் கண்ணனுக்கு இடப்புறம் நிற்கும் ராதை கண்ணனின் தோளை அணைத்துக் கொண்டு நிற்கும் காட்சிதான் இங்கு மிகப் பிரஸித்தம்.
வம்சி வடம்:
இங்குள்ள ஆலமரமே கண்ணனின் வடிவம் எனப்படுகின்றது. இதில் அமர்ந்து தான் கண்ணன் ராஸலீலைக்காக வேணு கானம் பொழிந்தான் என்பது ஐதிகம்.
கோபேஸ்வர் மந்திர்:
கோகுலத்தில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளைக் காண விழைந்தவர்களில் சிவபெருமானும் அடங்குவார். மேலே குறிப்பிட்ட வம்சி வடத்தின் அருகில் கோபேஸ்வர் என்ற நாமத்துடன் தங்கி பஜனை செய்து கொண்டு கண்ணனின் தரிசனத்திற்காகக் காத்திருந்ததாகவும், "கைலாஸவாசத்தைக் காட்டிலும் பிருந்தா வனத்தில் ஒரு கோபிகையாக இருக்கவே விரும்புகின்றேன்" என்று கூறியதாகவும் பிருந்தாவன மஹாத்மியத்தில் கிருஷ்ண பிரேமி கூறுகிறார்.
கோபி உத்தவ சம்வாத ஸ்தலம்:
உத்தவர் என்பவர் ஞானத்தால் பெரியவர். பிரேமை என்பதைப் பற்றி ஏதும் அறியாத அவர் கண்ணனிடம் அதுபற்றிக் கேட்க, கண்ணன் அவரை பிருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தாராம். மனம், வாக்கு, காயம், அலங்காரம், ஆசை அனைத்தையும் கண்ணனுக்கு அர்ப்பணித்துவிட்டு மயங்கிக் கிடக்கும் கோபிகைகளைப் பார்த்து அவர்களிடம் வாதம் செய்து பிரேமை என்பதன் தாத்பர்யத்தை உணர்ந்து கொண்டாராம் உத்தவர். எனவேதான் பிரமரகீதம் என்றழைக்கப்படும் இந்த நந்தவனம் (பிரமரம் என்றால் வண்டு) கோபி உத்தவ சம்வாத ஸ்தலம் என்று பெயர் பெற்றது.
லீலாஸ¤கர்:
நாராயண பட்டத்திரியின் சமகால பக்தர் லீலாஸ¤கர். பில்வமங்களர் என்பது இயற்பெயர். கண்ணனிடம் மிகுந்த பக்தி உடையவர். இவர்தம் பக்திக்கு மெச்சி கண்ணன் இவருக்குக் காட்சி கொடுத்த போது நேரில் கண்ணனைத் தரிசித்து அந்த அழகினை வருணித்து 'ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம்' என்ற பெயரில் 300 சுலோகங்கள் பாடியுள்ளர். பிருந்தாவனத்தில் இவர் கண்ணனை வழிபட்ட இடத்தில் இவருடைய அதிஷ்டானமும் உள்ளது.
சேவாகுஞ்ச்:
பிருந்தாவனத்தில் இன்னுமொரு பழமையான அழகான தோட்டம் ஒன்று உள்ளது. இங்குதான் கண்ணன் ராதைக்கு அலங்காரம் முதலியன செய்து அழகு பார்த்தானாம். ராதைக்குச் செய்த சேவை என்பதால் இப்பெயர் பெற்றது. இன்றுவரை இந்த அலங்காரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று நம்பும் இவர்கள் இரவில் இக்கோயில் அருகில் பிரவேசிக்க யாரையும் அனுமதிப்பதில்லை.
கண்காட்சி அமைந்த கண்ணன் கோயில்:
கண்ணன் வாழ்க்கை வரலாற்றுச் செய்தி கள் அனைத்தையும் உருவங்களாகச் செய்து, மின்விளக்குகள் அமைத்து ஒளிபாய்ச்சி, காட்சிச் சாலையை மிகச் சிறப்பாக அமைத்துள்ளனர். சுவற்றிலும் தரையிலும் மேற்கூரையிலும் பல்வேறு நிறங்களில் விலை மதிப்பற்ற கண்ணாடிக் கற்களும் பளிங்குக் கற்களும் பதிக்கப்பெற்ற கண்ணைப் பறிக்கும் இக்காட்சிச் சாலையின் அழகினோடு ஒப்பிடுகையில் இதனைக் காண்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் மிகக் குறைவேயாகும்.
கண்ணன் பிறப்பு முதல் ஆரம்பித்து மாடுகள் மேய்த்தல், வெண்ணை திருடுதல், உரலில் கட்டுண்டிருத்தல், யசோதை பிரம்பை ஓங்குதல், பூதகி மற்றும் பிற அசுரர்கள் வதம் காளிங்க நர்த்தனம், ராசலீலை, ராதையுடன் மகிழ்ந்திருத்தல் போன்ற அற்புத்க் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்படுள்ள இக் கலைக் கூடத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.
வார்த்தைகளில் எல்லா இடங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் விவரித்துவிட முடியாது. நீண்ட நெடுந்தூரம் நடக்கக் கால்களில் வலிமையும் நெஞ்சில் ஆர்வமும் இருப்பவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த லீலைகள் புரிந்த அற்புதக் காட்சிகள் நிறைந்த பல இடங்களை நேரில் சென்று கண்டு களிக்கலாம்.
"எங்காகிலும் எமதிறைவா இறைவா எனும் அடியவரிடம் தங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் மனத்துடையான் ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட மயிலின் இறகாட மகரக் குழையாட மதிவதனம் ஆட மயக்கும் விழியாட மலரணிகள் ஆட மலர்மகளும் ஆட இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட"
என்று பாடி நிஜமான சுகமென்று ஒன்று இதுதான் நீடுலகில் இதுவன்றி வேறெதுவும் அன்று என்று திட்டவட்டமாக அடிக்கோடிட்டுக் கூறும் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடல் எத்தனை அனுபவபூர்வமான உண்மை!
முனைவர் அலர்மேலு ரிஷி |