அத்தியாயம் - 6 சாராவின் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்தது. சாராவின் அப்பா கொஞ்சம்கூட நிதானமே இல்லாமல் லபோதிபோ என்று கத்தினார். சாராவின் அம்மாவுக்குத் தன் கணவர் பேசியவை, அதுவும் தங்கள் மகள் முன்னர் பேசிய வார்த்தைகள், எரிச்சலை ஊட்டின.
"பீட்டர், சின்னக்குழந்தை முன்னாடி இப்படியா கண்டபடி கத்துறது? ஒரு இங்கிதம் வேண்டாம்? அப்படி என்ன தப்பு பண்ணிட்டா? நிதானமா அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்காம, கத்துறதுனால யாருக்கு என்ன லாபம்?" என்றார் அம்மா.
"அப்பா, நம்ப வீட்டு ரோஜா ஒரு காட்டுச் செடின்னு நீங்கதானே சொன்னீங்க. நீங்க எவ்வளவோ ஆராய்ச்சி பண்ணிப் பார்த்த பின்னாலதானே சொன்னீங்க? இப்ப எல்லாதுக்கும் நான்தான் காரணம்னு ஏன் சொல்றீங்க?" என்று சாரா தன் பக்கம் நியாயத்தைக் கூறினாள்.
பீட்டர், தன் மகள் தன்மீது குற்றம் சாட்டியதைப் போலச் சீறினார். "சாரா, என்ன அதிகப் பிரசங்கித் தனம்? நீ பண்ணின இந்த முட்டாள்தனத்தால நமக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கு பாத்தியா?"
பீட்டர் ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்குமாக நடந்தபடி கத்தினார். "எல்லாத்துக்கும் அருண் பயதான் காரணம். அப்பவே சொன்னேன் கேட்டீங்களா நமக்கு இந்தப் பூ விக்கிற வேலை எல்லாம் வேணாம்னு? ஒழுங்கா கேக் பண்ணி வித்து எப்போதும் போல நன்கொடை திரட்டியிருக்கலாம். அந்த பொடிப்பய ஐடியா கொடுத்தானாம், அத இவங்க செஞ்சாங்களாம். என்ன கிறுக்குத்தனம்டா இது? சாராதான் சின்னப் பொண்ணுன்னா, உனக்கு எங்க போச்சு புத்தி?"
"அப்படி என்ன பெரிய ஆபத்து?" சாராவும் அப்பாவுக்குச் சமமாக வாதாடினாள். "என்ன வழக்குப் போடுவேன்னு மிரட்டுறாங்க? நாம வேணும்னே சட்டத்துக்குப் புறம்பா எதுவும் செய்யல. அப்பா, யோசிச்சுப் பாருங்க."
"சூஸன், என்ன வளர்த்திருக்க இவள? இப்படியா பெற்றோரை எதிர்த்துப் பேசுறது? அதிகப்பிரசங்கி" என்று பீட்டர், மனைவிமீது சீறினார்.
சூஸனுக்கு சூடாகத் திருப்பிப் பதில் கொடுக்கத் தோன்றியது. எரியும் நெருப்பில் எண்ணையை விடுவானேன் என்று ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார்.
"அப்பா, நீங்க ஏன் அம்மாவ இழுக்கறீங்க? நான் உங்கள ஒரு கேள்விதானே கேட்டேன். நீங்கதானே கேள்வி கேட்டாத்தான் பதில் வரும், அப்பத்தான் சமுதாயம் முன்னேறும், நாடு முன்னேறும், ஆ ஊன்னு எனக்கு புத்திமதி சொல்லுவீங்க. நீங்க சொல்ற புத்திமதி எல்லாம் என்ன சும்மா தமாஷா? அப்பறம், என் நண்பன் அருணைப்பத்தி எதுவும் பேசாதீங்க. அவனால நம்ம ஊர்ல எவ்வளவு நல்லது நடந்திருக்குன்னு எல்லாருக்கும் தெரியும். இந்த சம்பவத்தினாலயும் இன்னொரு நல்லது நடக்கப்போறதா இருக்கலாம். அப்படி எடுத்துக்குங்க அப்பா."
வளர்த்த கடா மாரில் பாய்ந்தது போல இருந்தது பீட்டருக்கு. ஹோர்ஷியானா நிறுவனம் வெறுமனே மிரட்டுகிறார்களா, இல்லை உண்மையிலேயே தன் குடும்பத்தின்மீது வழக்குத் தொடுக்கப் போகிறார்களா என்ற கவலை அவருக்கு வந்தது. வழக்கு என்று வந்துவிட்டால் ஹோர்ஷியானா ஒரு ராட்சசன் என்று அவருக்குத் தெரியும். அவரே பல வழக்குகளில் தன் நிறுவனத்திற்காகச் சாட்சியம் சொல்லி இருக்கிறார்.
"அப்பா, அம்மா, கொஞ்சம் நிதானமா உட்கார்ந்து பேசலாமா? நம்ம யாரு கிட்டயாவது ஆலோசனை கேக்கலாமா?" சாராவின் குரலில் தெளிவு இருந்தது. சூஸன் பெருமிதத்தோடு பார்த்தார். அப்பா பீட்டருக்கும் காச்சுமூச்சென்று கத்துவதால் ஒரு லாபமும் இல்லை என்று புரிந்தது. மெதுவாகத் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்தார்.
"வாங்க இரண்டு பேரும் சாப்பிட்டுக்கிட்டே இதைப்பத்தி பேசலாம்" என்று சூஸன் அவர்களைக் கிளப்பினார்.
அப்போது அவர்கள் வீட்டு டெலிஃபோன் மணி அடித்தது. சாரா ஓடிப்போய் எடுத்தாள். "Yes buddy, what’s up?" என்று ரிசீவரை எடுத்தவுடனேயே கேட்டாள். மறுமுனையில் ஒரு தயக்கம் இருந்தது. பதில் உடனேயே வரவில்லை.
"அருண்? என்னப்பா சத்தமே இல்லை?"
"அது வந்து…" அருணின் குரல்.
"அருண், என்னடா இப்படித் தயங்கித் தயங்கி பேசறே? நான் என்னைக்குமே உன் உயிர் நண்பிடா. நம்ம நட்பு ரொம்ப உறுதியானது தெரிஞ்சுக்கோ."
"தேங்க்ஸ் சாரா. எனக்கு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு."
அருண் என்று சாரா சொல்லக் கேட்டதும் பட்டென்று எழுந்த பீட்டரை சூஸன் தடுத்து நிறுத்தினார். அமைதியாக இருக்கும்படிக் கண்களால் கேட்டுக்கொண்டார்.
சாரா தொடர்ந்து பேசினாள், " உனக்கு எதுக்கு குற்ற உணர்வு? நீ என்ன தப்பு பண்ணிட்ட?"
"நான்தானே பூ விக்கிற ஐடியா கொடுத்தேன்…"
"அதனால என்ன? தானா வளர்ந்த அந்த ரோஜா, ஒரு உரிமம் பெற்ற பொருள்னு உனக்கு எப்படித் தெரியும்? விடு அருண்."
பீட்டர் சூஸனைப் பார்த்தார். சாரா மேலும் பேசினால் பீட்டர் எரிமலை ஆகிவிடுவார் என்று அம்மா பயந்தார். "சாரா, அருண்கிட்ட அப்புறமா பேசறேன்னு சொல்லிட்டு சாப்பிட வா. நேரம் ஆகுது பாரு. அப்பா காத்துக்கிட்டு இருக்காரு."
அம்மா சொன்னது அருணுக்கும் கேட்டுவிட்டது. "உங்கம்மா கூப்பிடறாங்க போல. அப்புறமா பேசலாம், சரியா?" என்றான் அருண்.
"சரி அருண். நானே உன்னை சாப்பிட்ட பின் கூப்பிடறேன், சரியா?" என்று சொல்லி சாரா ரிசீவரை வைத்தாள்.
அப்பாவின் அருகே சென்று சாப்பிட அமர்ந்தாள் சாரா. அவர் எதுவும் சொல்லாமல் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சூஸன் எதிரே வந்து அமர்ந்தார். சாரா தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொண்டாள்.
"அப்பா…"
பீட்டர் புத்தகம் படிப்பதில் மும்முரமாக இருந்தார்.
"அப்பா…"
என்ன என்பதுபோல சாராவைப் பார்த்தார்.
"சாப்பிடும்போது புத்தகம் வேண்டாம்பா. கொஞ்சம் கீழே வைக்கிறீங்களா அதை?" என்று உரிமையோடு சொன்னாள். "நாம இந்த வழக்குப்பத்தி பேசலாம் அப்பா, ப்ளீஸ்."
(தொடரும்)
ராஜேஷ் |