கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் தலைவராகவும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராகவும் பணியாற்றிய பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன் (92) கோவிட்-19 தொற்றால் காலமானார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், 1928ல் பிறந்த இவர், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இந்தியா திரும்பிய இவர் புதுதில்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகத் தனது பணி செய்தார். பின் கான்பூர் ஐ.ஐ.டி.யின் பேராசிரியர் மற்றும் தலைவரானார். தொடர்ந்து தமிழக அரசால் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களுள் ஒருவரான இவர், தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உழைத்தார். கணித்தமிழ் வளர்ச்சிக்காக பல செயல்பாடுகளை முன்னெடுத்தார். கணினியிலும் இணையத்திலும் தமிழைப் பயன்படுத்துவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் இணைய மாநாடுகள், உத்தமம் அமைப்பு போன்றவற்றின் முன்னோடி இவர்தான். உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) தலைவராக இருந்த இவர், தமிழ்நாடு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர், இந்திய உயர்கல்விக் குழுக்களின் ஆலோசகர், தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் ஆளுமைத் துறை ஆலோசகர் உட்படப் பல பொறுப்புகளைத் திறம்பட வகித்தவர்.
வாஷிங்டன் இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐக்கிய நாடுகள் சபைக்கான அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு மையத் துணை இயக்குநர், ஐ.நா. ஆலோசனைக் குழுச் செயலாளர் எனப் பல பொறுப்புகளில் பணியாற்றியவர். தமிழகத்தின் உயர்கல்வி சார்ந்து பல சிறப்பான வழிகாட்டுதல்களைத் தந்தவர். பல நூல்களை, கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது உயரிய பணிகளுக்காக இந்திய அரசு இவருக்கு, 2002ல் பத்மஸ்ரீ வழங்கிச் சிறப்பித்தது. (இவர் தென்றலுக்கு வழங்கிய நேர்காணல் வாசிக்க)
முதுபெரும் பேராசிரியருக்குத் தென்றலின் அஞ்சலி! |