தேனி வேதபுரி சித்பவானந்த ஆச்ரமத்தின் பீடாதிபதியும், தர்மரஷண சமிதி இயக்க மாநிலத் தலைவருமான சுவாமி ஓங்காரநந்தா (62) மாரடைப்பால் காலமானார். இயற்பெயர் மனோகரன். இளவயது முதலே ஆன்மீக ஆர்வம் கொண்டிருந்த இவர், கோவை பேரூரில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் முறையாக வேதங்களைக் கற்றுத் தேர்ந்து சுவாமி சித்பவானந்தரின் சீடரானார். அவரிடம் தீக்ஷை பெற்று ஓங்காரநந்த சுவாமிகள் ஆனார். பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீடரான பூஜ்யஸ்ரீ சுவாமி பரமார்த்தானந்தாவிடம் வேதாந்தம் கற்றுத் தேர்ந்தார். சித்பவானந்தரது மறைவுக்குப் பின், அவரது நினைவாக தேனி வேதபுரியில் சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார்.
வேதம், உபநிடதங்கள் மட்டுமல்லாது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் போன்றவற்றில் மிகத் தேர்ந்தவர். பாரதியார் கவிதைகளைச் சரளமாக மேற்கோள் காட்டிப் பேசுவார். வடமொழி தமிழ் இரண்டிலும் மேதைமை கொண்டவர். 'திருக்குறளும் கீதையும்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பெரிதும் வரவேற்கப்பட்டன. அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையான மொழியில் சொற்பொழிவாற்ற வல்லவர்.
இந்து மதம் குறித்த ஐயங்களைப் போக்கி வழிகாட்டியவர். வேதாந்த சாஸ்திர பிரச்சார அறக்கட்டளை, ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சேவா சமிதி போன்ற அமைப்புகள் மூலம் பல்வேறு ஆன்மீக, சமூக நற்பணிகளைச் செய்து வந்தார்.
சுவாமிகளுக்குத் தென்றலின் அஞ்சலிகள்! |