அரியக்குடி ஸ்ரீ திருவேங்கடமுடையான் ஆலயம்
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே அமைந்துள்ளது அரியக்குடி. பிரபல விநாயகர் தலமான பிள்ளையார்பட்டியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

மூலவர் திருநாமம் திருவேங்கடமுடையான். தாயார் ஸ்ரீதேவி - பூதேவி. இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோவில் 400 வருடங்களுக்கும் மேல் பழைமையானது.

சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையானின் தீவிர பக்தர். அவரைக் காண வரும் மக்கள், சுவாமிக்குச் செலுத்த வேண்டிய காணிக்கையை உண்டியலில் செலுத்தி வந்தனர். செட்டியார் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்துவார். ஒரு சமயம் வயதான நிலைமையில் தலையில் உண்டியலைச் சுமந்துகொண்டு திருப்பதி மலை ஏறிச் செல்லும்போது, மயக்கமுற்று அவர் கீழே விழுந்தார். அப்போது அவர்முன் பெருமாள் தோன்றினார். "தள்ளாத காலத்தில் மலை ஏறி வரவேண்டாம். பக்தன் இருக்கும் இடத்திற்கு நானே வருகிறேன்" என்று கூறி மறைந்தார்.



ஊர் திரும்பியதும் செட்டியாரின் கனவில் தோன்றிய பெருமாள், "மேற்கே செல். எனது இடம் தெரியும்" என்று கூறினார். அதன்படி மறுநாள் விடிந்ததும் சேவுகன் செட்டியார், பெருமாள் சொன்னபடி நடந்து சென்றபோது ஓரிடத்தில் துளசிச் செடியும் தேங்காய்க் காளாஞ்சியும் இருந்தன. அதுவே பெருமாள் கனவில் வந்து சொன்ன இடம் என்பதாக உணர்ந்து, அதனைக் கோவில் கட்டத் தேர்ந்தெடுத்தார். நிலத்தைச் சீர்படுத்தியபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியைப் போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாமல், அலர்மேல்மங்கைத் தாயார், ஸ்ரீ தேவி பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்தார் சேவுகன் செட்டியார்.

கோயிலில் கருடாழ்வார் இருபுறமும் சிம்மங்களுடன் காட்சி தருவது ஓர் அதிசயம். சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜையும், ஆடி மாதம் கருடனின் ஜன்ம நட்சத்திரமான சுவாதியன்று மகாசுவாதி பூஜையும் நடைபெறுகின்றன. கோவிலில் ராஜகோபுரம், ரிஷி கோபுரம் என இரண்டு கோபுரங்கள், பக்கத்தில் ஆறு கோபுரம் உள்ளன. அலர்மேல்மங்கை, கருடாழ்வார், ஆண்டாள், ராமாநுஜர் சந்நிதி உள்ளது.

ராமாநுஜர் காலத்து உற்சவ விக்ரகங்கள் அனைத்துக் கோவில்களுக்கும் கொடுக்கப்படுகின்றன என்பதை அறிந்த சேவுகன் செட்டியார், தனது முயற்சியால், உடையவரால் ஆராதிக்கப் பெற்ற திருவேங்கடமுடையானை இத்தலத்திற்குக் கொண்டுவந்தார். திருப்பதியிலிருந்து சடாச்சாரியும், திருமெய்யத்திலிருந்து அக்னியும் கொண்டுவரப்பெற்று திருவேங்கடமுடையான் திருக்கோவில் பணி தொடங்கியது. அன்றுமுதல் அரியக்குடி 'தென்திருப்பதி' எனப் புகழ்பெற்றது.



திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கின்றனர். பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். சித்திரை மாதப் பௌர்ணமியன்று திருமஞ்சனம், சித்ரா பௌர்ணமியன்று சுவாமி வீதியுலா, வைகாசியில் பிரம்மோத்சவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, பங்குனி உத்தரத்தில் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் உட்படப் பல விழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன.

காலையில் 6.00 மணிமுதல் 12.00 மணிவரையும் மாலையில் 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com