டி.என். சேஷாசலம்
இலக்கணம், இலக்கியம், நாடகம், திறனாய்வு எனப் பல்துறை அறிஞராக விளங்கியவர் டி.என். சேஷாசலம். அக்காலத்தில் தமிழறிஞர்கள் பலரும் கூடும் இடமாக இருந்தது கலா நிலயம், எண் 1, வெள்ளாளர் தெரு, புரசைபாக்கம். (இன்றைய புரசவாக்கம்). அது சேஷாசலத்தின் இல்லந்தான். 1898ல் பிறந்த சேஷாசலம், உயர்நிலைக் கல்வியை முடித்து, இளங்கலை பயின்று பி.ஏ. பட்டம் பெற்றார். பின் சென்னையில் சட்டம் பயின்று வழக்குரைஞர் ஆனார். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞராக உயர்ந்தாலும் அப்பணியில் அவர் அதிக நாட்டம் கொள்ளவில்லை. இலக்கிய உலகம் அவரை ஈர்த்தது. நாடக உலகம் அவரை மயக்கியது. மேல்நாட்டுப் பாணியில் புதுவகை நாடகங்களை அரங்கேற்ற எண்ணம் கொண்ட சேஷாசலம், நண்பர்களுடன் இணைந்து 'கலா நிலயம்' என்ற நாடகக் குழுவை உருவாக்கினார். அக்குழுவின் மூலம் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பலவற்றைத் தமிழில் அரங்கேற்றினார். சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல இடங்களுக்கும் சென்று மாறுபட்ட கதையம்சமுள்ள நாடகங்களை மேடையேற்றினார். ஷேக்ஸ்பியர் மீது கொண்ட அதே காதல் அவருக்குக் கம்பன் மீதும் இருந்தது. ஆகவே கம்ப ராமாயணம் குறித்து விரிவாக ஆய்ந்து, சொற்பொழிவுகள் ஆற்றிவந்தார்.

நாடகத்தில் நடித்த நண்பர்கள் பலருடன் பழகியபோதுதான் சேஷாசலத்துக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அக்காலத்தில் நிலவிய வறுமைச் சூழலால் கல்வி கற்க ஆர்வமிருந்தும் படிக்க இயலாத நிலைமை பலருக்கு இருந்தது. அவர்கள் வயிறு பிழைக்கப் பணிகளைச் செய்து கல்விக்காக ஏங்கியபடி காலம் கழித்தனர்.

இரவுப் பள்ளி
நண்பரும், பிரபல வழக்குரைஞருமான மாசிலாமணிப் பிள்ளையுடன் இணைந்து ஆர்வமுள்ளோர் அனைவரும் தமிழ் பயில்வதற்காக இரவுநேரப் பள்ளி ஒன்றை எற்படுத்தினார் சேஷாசலம். ஜனவரி 1913ல் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. 'Madras Young Men's Association Night School' என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் பத்துக்கும் குறைவானவர்களே இதில் சேர்ந்தனர். விரைவிலேயே மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பள்ளியின் தலைமைக் கண்காணிப்பாளராகப் பொறுப்பு வகித்த சேஷாசலம், தானே முதன்மை ஆசிரியராகவும் இருந்து பாடம் நடத்தினார். பலர் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றினர். மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி முதல் உயர் கல்விவரை இங்கு கற்பிக்கப்பட்டது. மாணவர்களில் பலர் வசதியற்றவர்கள். சேஷாசலம் அவர்களை அரவணைத்தார். 5 முதல் 25 வயதுவரை உள்ள மாணவர்கள் பள்ளியில் பயில அனுமதிக்கப்பட்டனர். சென்னை எஸ்பிளனேடில் மட்டுமல்லாது, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வார நாட்களில் இச்சிறப்புப் பள்ளி செயல்பட்டது.

தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் போதித்ததுடன் ஆங்கில நாடகங்களையும் மாணவர்களுக்குக் கற்பித்தார் சேஷாசலம். இப்பள்ளியில் பயின்ற பலர் பிற்காலத்தில் சிறந்த தமிழறிஞர்களாக உயர்ந்தனர். அவர்களில் சிலர், பிற்காலத்தில் சேஷாசலம் ஆரம்பித்து நடத்திய 'கலா நிலயம்' இலக்கிய இதழுக்குப் பங்களிக்கும் அளவுக்கு சிறந்த இலக்கியவாதிகளாக உயர்ந்தனர். பாலூர் கண்ணப்ப முதலியார், மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, மங்கலங்கிழார் போன்றோர் சேஷாசலத்தின் தமிழ் வகுப்புகளில் பயின்றவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள் ஆவர்.

மிகச் சிறப்பாக நடைபெற்ற இப்பள்ளியை அக்காலத்தின் பிரபல கல்வியாளர்களான ஜே.சி. ரோல்லோ (முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரி), பேரா. எஸ்.வி. சந்திரசேகரன் (மஹாராஜா கல்லூரி, திருவனந்தபுரம்), ஆர்தர் டேவிஸ் (முதல்வர், சென்னை சட்டக் கல்லூரி), பேரா. ஓ. கந்தசாமி செட்டி, பேரா. ஏ.ஜி. ஹோக், பேரா. பக்ளர் (இம்மூவரும் சென்னை கிறித்துவக் கல்லூரி) உள்ளிட்ட பலர் வருகை தந்து பாராட்டினர்.

கலா நிலயம்
தனது இலக்கிய நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு 'கலா நிலயம்' என்ற இதழ் ஒன்றைத் தொடங்கினார் சேஷாசலம். ஜனவரி 5, 1928ல் முதல் இதழ் வெளியானது. 'வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை' என்ற அறிவிப்புடன் இது வெளியானது. இதன் நோக்கங்களாகச் சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருந்தார்.



இதழின் சிறப்புகள்
இதழின் விலை 3 அணா. உள்நாட்டு வருட சந்தா ரூ. 7 அணா; புற நாடு (இதழில் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளது) 9 அணா. பிற்காலத்தில் இந்த விலை சற்றே உயர்த்தப்பட்டு உள்நாடு 7 ரூபாய் எட்டணா என்றும், புறநாடு 9 ரூபாய் எட்டணா என்றும் விற்பனை செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 20 பக்கம் கொண்டிருந்தது. பிற்காலத்தில் 16 பக்கமானது. ஆரம்ப கால இதழ்களில் நளவெண்பா, கம்பராமாயாணம் போன்றவை விளக்க உரையுடன் தொடர்களாக வெளியாகின. குறிப்பாக நளவெண்பாவைத் 'தமிழ்ப்பாடம் - 1' என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட சேஷாசலம், முதல் கட்டுரையின் முன்னுரையில், “பேசுவதுடன் எழுதவும் படிக்கவும் மாத்திரமல்லாது வேறு எவ்விதப் பயிற்சியும் இல்லாதவரும் சிறிதுகாலத்திற்குள் தமிழ் பாஷையில் தேர்ச்சியுற்று வேண்டிய நூலைப் பிறருதவியின்றித் தாமே வாசித்தறிந்து அனுபவிக்கக் கூடியவர்களாகும் பொருட்டு, வாரந்தோறும் போதனை முறையில் இப் பாகம் எழுதிவரப்பெறும். இலக்கியச் செய்யுள்கள் சிலவற்றை இங்கு நாம் போதிக்கும் முறையிற் கற்பவர் பின் எந்நூலையும் படித்து எளிதில் பொருள் செய்து கொள்ளலாம். இலக்கியப் பழக்கமும் சொற்களைப் பிரித்து அர்த்தம் செய்துகொள்ளுவதற்குப் போதுமான இலக்கணப் பயிற்சியும் பெறுவது, பார்க்கப் போனால், மிகச்சுலபம். ஒன்று மாத்திரம் முக்கியம். அன்றன்று இதன் மூலமாய்க் கற்கும் பாடங்களை நம் நண்பர்கள் மறந்துவிடாமல் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு வரவேண்டும். செய்யுள்களை மனப்பாடம் செய்துகொண்டால் கற்றதும் நன்றாக நிலைத்திருக்கும். மாணவர்களை நேரில் வைத்துக்கொண்டு சொல்லித் தருவது போல் எழுதுகின்றோமாகையால் இதனைத் தொடர்ந்து படிப்பது ஒருபோதும் கஷ்டமாயிருப்பதற்கு இடமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இக்கட்டுரைகளைப் பாடல், பதவுரை, கருத்து, விளக்கம் என மிகவும் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருக்கிறார். இதிலிருந்து அவருக்குத் தமிழ் கற்பித்தலில் இருந்த ஈடுபாட்டை அறியலாம். இத்தொடரில், நளவெண்பா விளக்கத்தில் அன்னம் - நளன் உரையாடலை ரோமியோ - ஜூலியட் உரையாடலுடன் தொடர்புபடுத்தி எழுதியிருக்கும் விதம் அவரது மேதைமைக்குச் சான்று. முதல் இதழிலேயே 'காந்திமதி என்னும் காந்தார நாட்டுக் கண்ணழகி' என்ற நாவல் தொடரை ஆரம்பித்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட நாடகங்களும் இதழில் வெளியாகின. 'டெம்பெஸ்ட்' என்பதை 'காற்றுமழை' என்ற தலைப்பில் தந்துள்ளார். ஜூலியஸ் சீசர், ஒத்தெல்லோ போன்ற நாடகங்களைத் தமிழில் தொடராக வெளியிட்டுள்ளார்.

ராஜாஜி 'நம்மாழ்வார் வைபவம்' என்ற தலைப்பில் ஆழ்வாரது பாடல்களின் சிறப்பை விளக்கி இதழ்தோறும் எழுதியிருக்கிறார். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் தொடர் ஒன்றும் வெளியாகியுள்ளது. தெ.பொ.மீ., வையாபுரிப்பிள்ளை, அ. ஸ்ரீநிவாச ராகவன், கே. ராமரத்னம், டி.ஏ. கனகசபாபதி முதலியார், கோவிந்தசாமி ராஜூ, கி. வெங்கடசாமி ரெட்டியார், திம்மப்பா ஐயர், எம். சோமசுந்தரம் பிள்ளை, ஈ.என். தணிகாசல முதலியார், டி.எஸ். நடராஜப் பிள்ளை, மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, சுப்பராயச் செட்டியார், அருணாசலம் பிள்ளை, ஈ.த. ராஜேஸ்வரி அம்மாள், கே.என். சுந்தரேசன் உள்ளிட்ட பலர் இலக்கியக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். ஒவ்வொரு வார இதழிலும் சேஷாசலம் எழுதியிருக்கும் தலையங்கங்கள் சிந்திக்கத் தகுந்ததாய் உள்ளன. அவரது மேதைமையும், சிந்தனைத் திறனும் கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. சிந்தனையைத் தூண்டும் குறுக்கெழுத்துப் போட்டியும் 'சொல்லூடாட்டம்' என்ற தலைப்பில் இதழில் இடம்பெற்றுள்ளது. 'தேவகி' என்ற தலைப்பில் நாவல் ஒன்றும் தொடராக வெளியாகியுள்ளது. மனம், அதன் உணர்வு, செயல்பாடுகள் பற்றிய மிக விரிவான சிந்தனைகளைத் தனது 'மானத சாத்திரம்' எனும் தொடரில் முன் வைத்திருக்கிறார் தெ.பொ.மீ. தமிழின் ஆரம்ப காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த உளவியல் தொடராக இதனைக் கருதலாம். 'சூரியன்', 'வான சாஸ்திரம்' தொடர்கள் இடம்பெற்றுள்ளன. நளவெண்பா, நைடதம், கம்பராமாயணம், சூளாமணி போன்றவற்றிற்கு உரையெழுதியுள்ளார். சூளாமணி உரையை எனோ பாதியில் சேஷாசலம் நிறுத்திவிட, தெ.பொ.மீ. அதனைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.

'வர்த்தமானம்' என்ற தலைப்பில் அக்காலத்து நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தர்மம் வளர்ப்பதற்காக ஜான் ராக்பெல்லர் கொடுத்திருக்கும் 300 கோடி, புதுச்சேரியில் நிலவரி குறைக்கப்பட்டது, இந்திய ராஜப்பிரதிநிதி விடுதலை இயக்கங்களை அடக்குவதற்காக இயற்றியிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள்,

சந்திரபோஸ் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைமீது தொடுத்த மானநஷ்ட வழக்கு, சென்னையில் 'மர்க்காரா' என்ற கப்பல் எரிந்தது, பாரதி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது எனப் பல்வேறு செய்திகள் காணக் கிடைக்கின்றன. மதுகரம், சபரி போன்ற புனைபெயர்களிலும் பல கட்டுரைகளை சேஷாசலம் எழுதியுள்ளார். சிறுகதைகளும் அவ்வப்போது வெளியாகியுள்ளன. பல ஆங்கிலக் கட்டுரைகள், நூல்கள், கதைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. ரவீந்திரநாத் தாகூரின் பல கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. மதுரைக் கோவை, தினகர வெண்பா, மாறன் பாப்பாவினம், களவியல் காரிகை, பொதிகை நிகண்டு போன்ற இலக்கிய நூல்கள் முதன் முதலில் உரை விளக்கமாக கலா நிலயம் இதழில்தான் அச்சேறியிருக்கின்றன.

மிகக் கடுமையான பணச்சிக்கலை இதழ் எதிர்கொள்ள நேரிட்ட போதும் மனம் தளராமல் இதழை நடத்தி வந்தார் சேஷாசலம். நாடகங்கள் பலவற்றைத் தன் குழுவினர் மூலம் மேடையேற்றி, அதில் கிடைத்த வருவாயை இதழின் வளர்ச்சிக்குச் செலவிட்டார். இதழின் உதவி ஆசிரியராக கே. ராஜகோபாலன் செயல்பட்டார். ஆகஸ்ட் 1, 1935 இறுதி இதழ் வெளிவந்தது. அதன் பின் தொடர இயலவில்லை.



சேஷாசலத்தின் இலக்கியப் பங்களிப்பு
'வில்லியம் ஷேக்ஸ்பியர்' என்ற நூலைத் தமிழில் தந்திருக்கிறார் சேஷாசலம். 'ஏமாங்கதத்திளவரசன்', 'காந்திமதி அல்லது காந்தார நாட்டுக் கண்ணழகி' போன்றவை நாவல்கள். 'இராஜ தந்திரம்', 'பிஸாரோ' போன்றவை நாடகங்கள். கலாநிலையம் தலையங்கங்கள், கம்பராமாயணம் உரையும் விளக்கமும், கம்பர், கல்ச்சர் (பண்பும் பயனும் அது) போன்றவை இவரது குறிப்பிடத் தகுந்த கட்டுரைத் தொகுப்புகள்.

நாடக, திரைப்பட ஆர்வம்
சேஷாசலத்திற்கு நாடகங்களில் - குறிப்பாக மேல்நாட்டு நாடகங்களில் - மிகுந்த ஆர்வம் இருந்தது. அவரே பல நாடகங்களை மொழிபெயர்த்து, கதை, வசனம் எழுதி மேடையேற்றினார். அதற்காகவே 'கலா நிலையம்' குழுவை உருவாக்கினார். பல நகரங்களுக்குச் சென்று நாடகங்கள் நடத்தினார். ஆர்.பி. ஷெரிடன் ஆங்கிலத்தில் எழுதிய 'பிஸாரோ' நாடகத்தைத் தமிழாக்கி, இயக்கியதுடன், தலைமைக் கதாபாத்திரத்திலும் நடித்தார். சென்னையில் மட்டுமல்லாது தஞ்சை, கும்பகோணம், சிதம்பரம், காரைக்குடி எனத் தமிழகத்தின் பல இடங்களிலும் மேடையேற்றினார். திரைப்படத்திலும் சேஷாசலத்திற்கு ஆர்வம் இருந்தது. தெலுங்குப் பட முயற்சியில் இறங்கினார். ஆனால், அது பண இழப்பில் முடிந்தது. தான் எழுதிய 'ஏமாங்கதத்திளவரசன்' என்ற நாவலைத் திரைப்படமாக்க முயன்றார். அதில் வெற்றிபெறவில்லை.

மறைவு
1938ல் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சேஷாசலம் காலமானார். பிரபல எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், கேலிச் சித்திரக்காரராகவும், நாடக ஆசிரியராகவும் விளங்கிய பரணீதரன் (டி.எஸ். ஸ்ரீதர், மெரீனா) இவரது மகன். பிரபல எழுத்தாளரான ஆர்.கே. நாராயணன் சேஷாசலத்தின் சகோதரி மகன்.

தமிழ் இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு வளர்ச்சிக்கு முக்கியத் தொண்டாற்றியிருக்கும் டி.என். சேஷாசலம் என்றும் நினைவில் கொள்ளவேண்டிய இலக்கிய முன்னோடி.

பா.சு. ரமணன்

© TamilOnline.com