தமிழிலே கட்டுரையாளர், பத்திரிகையாசிரியர், நாவலாசிரியர், சிறுகதையாசிரியர், திரைப்பட விமரிசகர் என்று எழுத்தின் பல துறைகளிலும் ஐம்பதாண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களுடைய பங்களிப்பு எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் ஏதேனும் ஓர் இயக்கம் அல்லது கட்சிப் பட்டயத்தைக் கழுத்தில் கட்டிக் கொள்ளாவிட்டால் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை. அப்படி கவனிக்கப்படாத மேதைகளில் ஒருவர் அசோகமித்திரன். அதை அவரே பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
அப்படிப் பொருட்படுத்தாமைதான் அசோகமித்திரனின் குணச்சிறப்பு. அண்மையில் கிழக்கு பதிப்பகமும், கடவு இலக்கிய அமைப்பும் சேர்ந்து அசோகமித்திரனின் ஐம்பதாண்டு எழுத்துலகச் சாதனையைப் பாராட்டு முகமாக ஒரு கூட்டம் அமைத்திருந்தார்கள். அதில் சுந்தர ராமசாமி (அவரில்லாமல் தமிழ் இலக்கியமா!), பிரபஞ்சன், மலையாள எழுத்தாளர் பால் ஜக்காரியா உட்படப் பலரும் பேசினார்கள். சு.ரா. அசோகமித்திரனின் எழுத்துப் பாணியிலேயே கொஞ்சம் நீளமாகவே பேசிக்காட்டியது நக்கலா, பாராட்டா என்பதை இன்றுவரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் அசோகமித்திரனின் ஏற்புரை தான் அதன் முத்தாய்ப்பு. அவர் சொன்னார் "நான் என்ன செஞ்சுட்டேன்னு இந்த விழாவெல்லாம்? உங்களை யாரும் கவனிக்கவில்லைன்னு திருப்பித் திருப்பிச் சொன்னாங்க. எனக்கு அப்படி எல்லாம் தோன்றவே இல்லை. இந்தச் சால்வை, மைக், கூட்டம்... இதெல்லாம் எதுக்கு?" இப்படிச் சொன்ன அவரது குரலில் ஏளனமோ எகத்தாளமோ கிடையாது. அப்போது அவரது ஏ.வி.எம். ஸ்டூடியோ கால நண்பர் ஒருவர் ஒரு சிறிய பையை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு, அதில் என்ன இருக்கிறது என்று கேட்ட அசோகமித்திரன் மேற்கொண்டு "ஆங்... பட்சணப் பொட்டலம் வாங்கிக்கலாம். அதுவே ஸ்வீட்டானா வீட்டிலே யாரும் சாப்பிடமுடியாது, சுகர்" என்றார்.
இப்படித் தன்னைப் பிரதானப் படுத்திக் கொள்ளாமல், மெல்லிய அங்கதத்தோடு யதார்த்தத்தைப் பேசும் அந்தத் தொனியை கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இரண்டு தொகுதிக் கட்டுரைகளிலும் நெடுகக் காணலாம். மொத்தம் சுமார் 1780 பக்கங்களுக்கு மேல். ஒவ்வொரு பக்கமும் ஒரு உரைநடை மேதையின் முத்திரையைத் தாங்கியவை. செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்காக எழுதப்பட்டவை. ஓடும் ஓட்டத்தில் பதிந்த சரித்திரம். ஆனால், இப்போது படிப்பவனுக்கு அந்த அவசரம் தெரியாது. அவ்வளவு தெளிவும், ஆழமும்! மனிதர்கள், சம்பவங்கள், துறைகள், நிகழ்ச்சிகள், செய்திகள், கலைகள், இலக்கியம் - இதைப்பற்றித்தான் என்று இல்லை, அவ்வளவு வீச்சு!
"நான் ஒன்றும் அமர காவியம் படைத்து விடவில்லை. பத்திரிகையில் இடம் இருக்கிறது சொல்வார்கள். அதை நிரப்புவதற்காக எதையாவது அவசரமாக எழுதித் தருவேன்" இது அசோகமித்திரன் சொன்னது தான். அவரால் மட்டுமே தன்னை இப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும். இந்திய அலட்சியமான நகைச்சுவை உணர்வைப் புத்தகம் முழுவதும் பார்க்க முடியும்.
டி.எஸ். பாலையாவைப் பற்றிய ஒரு கட்டுரையில் அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "இந்தக் கட்டுரையைப் படிக்கும் லட்சக்கணக்கானோரில் சிலருக்காவது 'சிந்தாமணி' படம் ஞாபகம் இருக்கலாம். அது ஒரு வேசியைப் பற்றிய கதை. வேசி வேடம் தரித்தவர் அசுவத்தாமா. 'சிந்தாமணி' படத்தில் அசுவத்தாமா உடுத்திய ஒவ்வொரு புடவையைக் கொண்டும் இன்றைய கதாநாயகிகள் மூவருக்கு உடை தயாரித்து விடலாம்." இதை எழுதிய வருடம் 1972. இப்போது எழுதுவதானால் 'மூவருக்கு' என்பது 'பன்னிருவருக்கு' என்று மாறியிருக்கும்.
அந்த நையாண்டியில் ஒரு நல்ல சமூக விமரிசனமும் இருக்கும்: "கல்லை எறிவதில் நல்ல பயிற்சியைக் கல்லூரி மாணவர்கள் பெறுகிறார்கள் என்று தெரிகிறது. எந்த மாணவர் கிளர்ச்சியும் கல் சம்பந்தப்படாமல் இருந்ததில்லை. 'இளமையில் கல்' என் பதற்கு இப்படி ஒரு சூழ்நிலை இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்படும் என்று ஔவையார் எதிர் பார்த்திருக்க மாட்டாள்." (இந்தக் கணத்தின் தேவை-1970).
அசோகமித்திரன் நாடகத்தில் நடித்த அனுபவத்தைக் கேளுங்கள்: "எனக்கு நாடகங்கள் பற்றி விசேஷ அபிப்பிராயம் கிடையாது. 'பைத்தியக்காரர்களால் பைத்தியக்காரர்களுக்கு நிகழ்த்தப்படும் பைத்தியக்கார நிகழ்ச்சி' என்று ஒருவர் இலக்கணம் கூறியபோது "ஏன் ஒரே சொல்லை மூன்று முறை பயன்படுத்துகிறீர்கள்?" என்று மட்டும் கேட்டேன். நான் நடித்த பாத்திரம் இரண்டு அடாவடிக் குழுக்கள் நடுவில் மாட்டிக்கொள்ளும் பைத்தியப் பாத்திரம். நாடகத்தன்று காலையிலிருந்து என் மூக்குக் கண்ணாடி சரியாக இல்லை. நாடக இறுதியில் இரண்டு குழுக்களும் சேர்ந்து தர்ம மற்றும் அதர்ம அடிகள் கொடுக்க, நான் கீழே விழுந்தபோது என் மூக்குக் கண்ணாடி என்னிடமிருந்து விடுபட்டு மேடையின் முன் விளிம்பில் போய் விழுந்தது. பலத்த கரகோஷம். என் மூக்குக் கண்ணாடியைக் கூட இவ்வளவு பொருத்தமாகக் கீழே விழ வைப்பதற்கு எனக்குப் பாராட்டுக்கு மேல் பாராட்டு. என்னைப் பாராட்டி மாலை அணிவித்தபோது கண்ணாடி மீண்டுமொருமுறை கீழே விழுந்தது" (நடிப்பு-1990)
ஆரம்பத்தில் அமெரிக்க எழுத்தாளர்கள் எப்படி பிரிட்டிஷ் எழுத்தாளர்களைப் போல இருக்க விரும்பினார்கள் என்பதிலிருந்து, அன்னா கரீனினா, மார்க்வெஸ், வ.வே.சு. ஐயர், பிற நாட்டு விஜயங்கள், அரசியல் என்று எல்லாவற்றைப் பற்றியும் இப்படி எழுதித் தள்ளியிருக்கிறார். எதுவுமே சோடை போகவில்லை. அவர் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களும் இப்போது செய்யவேண்டியது என்ன என்று இப்படிச் சொல்லுகிறார்: "இந்தத் தருணத்தில் நாம் செய்யக் கூடியது என்ன? நமக்கு என்ன சாத்தியக் கூறுகள் உள்ளன? நம் படைப்புகளை நுட்பமாகவும் சுயமாகவும் படைக்கும் போது, மக்களை ஒருவரிடமிருந்து இன் னொருவரைப் பிரித்து துவேஷமூட்டி எழுதுவதை அறவே ஒழிக்கவேண்டும். மக்களின் பார்வைக்கு வராத பல தகவல்களையும் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் கூறி, படைப்புகளுக்குப் புதுமையும் ரசனையும் அளிக்கவேண்டும். நம் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுவோரை உடனே துரோகி, பாம்பு, கரடி, புலி என்று கோஷமிட்டுக் கல்லை எறியக் கூடாது. இறுதியாக, எந்தவிதச் சுரண்டலுக்கும் எழுத்து பயன்படுத்தப்படக்கூடாது." (1992)
இந்த இலக்கணத்துக்கு அசோகமித்திரனின் எழுத்துக்களே சான்றாக இருக்கின்றன. வெறுப்பு, துவேஷம், வன்முறை இவற்றுக்கு அவரது எழுத்துக்களில் இடமில்லை. மீண்டும், ஆரம்பத்தில் கூறிய ஐம்பதாண்டுப் பாராட்டு விழாவில் சு.ரா. பேசியதுதான் நினைவுக்கு வருகிறது: "அசோகமித்திரனின் எழுத்துக்களில் எவ்வளவுதான் தேடிப் பார்த்தாலும் ஒரு கத்தி, அரிவாள் என்று எந்த ஆயுதத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு இடத்தில் காய்கறி நறுக்கும் அரிவாள்மணை வருகிறது" என்றார். தனது ஏற்புரையில் அதை ஒப்புக்கொண்ட அசோகமித்திரன் "உண்மைதான். நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஏமாற்றப்பட்டதுண்டு. பிறரால் வஞ்சிக்கவும் வெறுக்கவும் பட்டதுண்டு. ஆனால் என்னால் யாரையும் வெறுக்க முடியாது. வன்முறை என்பதை நான் நினைத்துப் பார்ப்பதே கிடையாது" என்றார்.
ஒவ்வொரு தமிழனும் வீட்டில் வைத்து, எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்க வேண்டிய பொக்கிஷம். அருமையான கட்டமைப்புக் கொண்ட புத்தகங்கள். இறுதியில் அகரவரிசைக் குறிப்புக் கொடுத் திருப்பது மிகப் பயனுள்ளதாக இருக்கிறது. அவர் தன்னைப் பொருட்படுத்திக் கொள்ளா விட்டால் போகட்டும், நாம் அசோக மித்திரனை அலட்சியப்படுத்துவது கூடாது; முடியாது.
நூல்: அசோகமித்திரன் கட்டுரைகள் (பகுதி 1 - அனுபவங்கள், அபிப்பிராயங்கள்) (பகுதி 2 -எழுத்தாளர்கள், புத்தகங்கள், நுண்கலை)
ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், எண் 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை 600004.
வலைத்தளம்: http://www.newhorizonmedia.co.in
இணையம் மூலம் வாங்க: http://www.kamadenu.com
மதுரபாரதி |