மாநிலங்கள் இப்போது தேர்தல் சட்டங்களைத் திருத்துவதில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. குறிப்பாக, அஞ்சல்வழி மற்றும் தொலைதூர வாக்காளர் வாக்குப் பதிவுக்கான சட்டங்களின் மீது இப்போது கவனம் குவிந்துள்ளது. சென்ற (கோரோனா கால) தேர்தலில் இவ்வகைகளில் பதிவான வோட்டுகளில் மிகப் பெரும்பங்கு ஜனநாயகக் கட்சிக்குச் சாதகமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. குடியரசுக் கட்சி தனிப் பெரும்பான்மை கொண்ட மாநிலங்களில், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் வழியே வாக்காளர் அடையாளத்தை உறுதி செய்துகொள்வதற்கான சட்டத்திருத்த மசோதாக்கள் கொண்டுவரப் படுகின்றன. மாறாக, ஜனநாயகக் கட்சி மாநிலங்களோ அதிகமானோர் அஞ்சல்வழியே வாக்களிக்க வசதியாக விதிகளைத் தளர்த்துவதில் ஆர்வம் காட்டுகின்றன. தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாக அமெரிக்காவைக் கருதுகிறோம். ஆனால் தேர்தல் செயல்முறைகளில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா ஏனோ முன்னணியில் இல்லை. அப்படிப் பயன்படுத்தினால், வாக்களிப்பது எளிதாகவும் முறைகேடுகளுக்கு இடமில்லாததாகவும் விரைவானதாகவும் ஆகிவிடும். இனியும் தாமதிக்காமல் அதைச் செய்தாக வேண்டும்.
★★★★★
ஆங்காங்கே நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள் கவலை தருவனவாக உள்ளன. அதிலும் பல இடங்களில் சிறுபான்மையோரே இந்தக் கொடுமைக்கு இலக்காகின்றனர். இந்த வன்முறை மனப்பான்மைக்குப் பெருந்தொற்றுக் காலம் ஏற்படுத்துகின்ற பணியிழப்பு, வருமான இழப்பு, நெருக்கமானவர்களின் மரணம், வீட்டுத் தனிமைப்படுத்தல் ஏற்படுத்தும் உடல் மற்றும் மனரீதியான அழுத்தம் என்று பலவகைக் காரணங்களைச் சொல்லலாம். உலகெங்கிலும் இந்த நிலை நிலவும்போது, ஏன் அமெரிக்காவில் மட்டுமே ஆங்காங்கே, அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன என்பது சிந்திக்கத் தக்கது. கொரோனாவின் தீவிரமும் அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் குறைந்துவரும் இந்த நேரத்தில், இத்தகைய அநியாய உயிர்ப்பலிச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான செயல்முறைகளில் உளவியல் அறிஞர்களும் அரசுகளும் சட்ட அமலாக்க அமைப்புகளும் தீவிர கவனம் செலுத்தவேண்டும்.
★★★★★
வணிக நிர்வாகத்தில் முதுகலை படித்த அரவிந்த் ஸுப்ரமண்யம் ஓர் 'ஐயப்பன் கலைக்களஞ்சியம்'. சபரிமலை ஆலய நுழைவு குறித்த சர்ச்சையில் பாரம்பரியச் சான்றுகளைக் கொடுத்து உதவியவர். காலவெள்ளத்தில் மறைந்த ஐயப்பன் குறித்த நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்தவர். அவரது நேர்காணல் மாறுபட்டதும் சுவையானதும் ஆகும். 1913ம் ஆண்டிலேயே இரவுநேரத் தமிழ்ப்பள்ளி தொடங்கிக் கற்பித்தவர் இம்மாத முன்னோடி டி.என். சேஷாசலம். அருணகிரிநாதர் வரலாற்றின் முதல் பகுதியும் இவ்விதழில் உண்டு. கவிதை, சிறுகதைகள், சமையல்.... எல்லாம்தான். ருசியுங்கள்.
தென்றல் ஜூன் 2021 |