ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள்
60 வயதானாலே மூட்டுவலி, முதுகுவலி என்று முனகிக்கொண்டு முடங்கிவிடுபவர்கள் மத்தியில், வாராவாரம் குழந்தைகளுக்காகப் புதுப்புதுக் கதைகளை இணையம் வழியே சொல்கிறார் திருநெல்வேலி சுப்ரமணியன் நாகராஜன். 90 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு இது பொழுதுபோக்கு அல்ல. இளம் தலைமுறையினருக்கு உலகப் பண்பாட்டுச் சாளரத்தைத் தமிழின் வழியே திறந்து வைக்கும் தீவிர ஆவலின் வெளிப்பாடு.

'ஐங்கரனின் கர்ணபரம்பரைக் கதைகள்' என்ற தளத்தில் ஐம்பதுக்கும் அவர் சொன்ன மேற்பட்ட சுவையான கதைகளை நீங்கள் கேட்கலாம். அறிமுகத்தில் தொடங்கி, 'செருப்புத் தைப்பவர் ஜோஸியரான கதை' எனப் பல கதைகள். அறிமுகம் பகுதியில் கதை சொல்லும் ஐங்கரனைப் பற்றி மட்டுமல்ல, 'கர்ண பரம்பரை' என்றால் என்ன என்பது பற்றிய விளக்கமும் உண்டு.

தமிழ்நாடு மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் உலவிவரும் கதைகளை, அந்தந்தப் பாத்திரமாகவே மாறிக் கதை சொல்கிறார் இவர். 1992ல் அமெரிக்கா வரத் தொடங்கியவர் 2003லிருந்து இங்கே நிரந்தர வாசியாகிவிட்டார். ஆயகலைகள் அறுபத்து நான்கையும் கற்கும் ஆசையில் 60 வயதில் இவர் தொடங்கிக் கற்றவற்றில் சில: ஜோதிடம், நிழல் பொம்மலாட்டம், மேஜிக், மேற்கத்திய புல்லாங்குழலில் கர்நாடக சங்கீதம்.... பட்டியல் இப்படித் தொடர்கிறது. இங்கே எல்லாவற்றையும் போட இடமில்லை!

1997ல் பிறந்த மூத்த பேரனுக்குக் கதை சொல்ல ஆரம்பித்தார். ராமாயணம், பாரதம், தெனாலிராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் எல்லாம் சொல்லி முடித்தாயிற்று.... இன்னும் தேவைப்பட்டது. நூலகத்தைக் குடைந்தார். உலக நாடுகளின் கதைகள் கிடைத்தன. இவற்றை உலகத்திலுள்ள எல்லாத் தமிழ்க் குழந்தைகளுடனும் பகிர்ந்துகொண்டால் என்ன என்று தோன்றவே பிறந்துதான் 'ஐங்கரனின் கர்ண பரம்பரைக் கதைகள்'. ஐங்கரனான விநாயகனே கதை சொல்வதுபோல இந்த ஒலிபரப்புகள் அமைந்துள்ளன.

இவரது கதைகளை யூடியூபிலும் கேட்கலாம்.

கேளுங்கள், உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் கேட்க வையுங்கள். செவிக்குப் பல்சுவை விருந்து இது.

© TamilOnline.com