கடவுள் நேசிக்கும் அனைவரையும் நீ நேசி
கோபியருக்கு வேறெந்த இலக்கோ, லட்சியமோ, ஆசையோ கிடையாது, முழுமையான, கேள்விகளற்ற, சஞ்சலமில்லாத ஆத்ம சமர்ப்பணம் அவர்களுடையது. சென்ற நூற்றாண்டில் ஒரு சிறிய மஹாராஷ்டிர கிராமத்தில் வாழ்ந்த பக்தையின் கதையைச் சொல்கிறேன். வாழ்வின் சிறிய செயல்களைக்கூட அவள் அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தாள். அவளுக்கு நடப்பதே தீர்த்த யாத்திரை, பேசுவது ஜபம். தன் கணவர் உண்டபின் அவர் சாப்பிட்ட இடத்தைச் சாணத்தால் மெழுகுவாள். அப்போது எஞ்சிய சாண உருண்டையைக் "கிருஷ்ணார்ப்பணம்" என்று கூறியபடி வீசுவாள். அவளுடைய தவம் எவ்வளவு வலியதென்றால், அந்தச் சாண உருண்டை தினமும் அந்தக் கிராமத்தின் கோவிலில் இருந்த கிருஷ்ண விக்கிரகத்தின்மீது போய் ஒட்டிக்கொண்டது!

இந்த அதிசயமான அபசாரத்தைப் பூசாரி பார்த்தார். அவருக்கு ஆச்சரியமும் அச்சமும் ஏற்பட்டன. இப்படி ஒரு அவச்செயலைப் பார்த்தும் நான் உயிரோடு இருக்கிறேனே என்று அவர் தன்னையே நொந்துகொண்டார். தினமும் மதியவேளையானால் அதே அளவில் ஒரு சாண உருண்டை! அவமானத்தில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, அந்த விஷயத்தை அவர் வெளியே சொல்லாமலே நடமாடினார்.

ஒருநாள் அந்தப் பெண்மணி "கிருஷ்ணார்ப்பணம்" என்று சொன்னபடியே சாண உருண்டையை மற்றப் பெண்கள் போலவே வீசுவதைக் கவனித்தார். அவருக்குச் சந்தேகம் வந்தது. நேரம், சாணத்தின் அளவு, தன்மை எல்லாவற்றையும் கவனித்து வைத்துக்கொண்டார். அழகான கிருஷ்ணரை அசிங்கப்படுத்துவது அவள்தான் என்பது அவருக்கு நிச்சயமாகும்வரை கவனித்தார். சாணத்தை வீசியெறிந்த கை உடையும்வரை அவளை ஒருநாள் அவர் அடித்து நொறுக்கிவிட்டார்.

மிகுந்த வெற்றிப் பெருமிதத்தோடு, ஒரு மோசமான பெண்ணை தண்டித்ததற்குப் பகவானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று எண்ணியபடி அவர் கோவிலுக்குத் திரும்பினார். அங்கே ஸ்ரீகிருஷ்ணரின் வலது கை அதே இடத்தில் ஒடிந்து, ரத்தம் கசிந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். "உன்மீது கொண்ட அன்பினால்தான் நான் அவளை அடித்தேன். பிரபு! அவள் உமது அழகைக் குலைத்தாள்" என்று துக்கப்பட்டுக் கண்ணீர் சிந்தியபடி கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், "நினைவிருக்கட்டும், நான் யாரையெல்லாம் நேசிக்கிறேனோ அவர்களையெல்லாம் நீயும் நேசிக்கவேண்டும்" என்று கூறினார்.

இங்கேயும் (பிரசாந்தி நிலையத்தில்) நீங்கள் அப்படித்தான் நடந்துகொள்ளவேண்டும் என்று நான் நினைக்கிறேன். பக்தர்களுக்கிடையே பொறாமை, தீய எண்ணம், வெறுப்பு இவற்றை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். நீங்கள் உங்களை வெறுப்பதையோ, உங்களை நீங்களே தாழ்வாக, பலவீனராக எண்ணுவதையோகூட நான் சகித்துக்கொள்ள மாட்டேன்.

நன்றி: சனாதன சாரதி, ஆகஸ்ட் 2020.
(சனாதன சாரதி மின்னூலுக்கு ஆண்டுச் சந்தா ரூ90 மட்டுமே. ஆன்லைனில் சந்தா செலுத்த)

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com