எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 5
அதிகாரிகள் சாராவிடம் மீதமிருந்த ரோஜாப் பூக்களை எல்லாம் பிடுங்கினர். அதில் ரோஜாக்கள் உதிர்ந்தன. அவள் அழகாகக் கோத்து வைத்திருந்தது எல்லாம் நொடியில் சிதறின. அவர்கள் ஒரு வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் சாராவின் அம்மாவிடம் கொடுத்தனர். தலைமை ஆசிரியர் சட்டென்று செல்பேசியை எடுத்துப் போலீசைக் கூப்பிட்டார்.

"சார், நான் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் பேசறேன். நீங்க பள்ளிக்கூடத்துக்கு ஆள் அனுப்பறீங்களா? இங்க சிலபேர் வந்து எங்க குழந்தைகளை மிரட்டி ரகளை பண்றாங்க. சீக்கிரம் வந்து இவங்கள முட்டிக்கு முட்டி தட்டி இழுத்துகிட்டு போங்க."

சிறிது நேரத்தில் மணி அடித்துக்கொண்டு போலீஸார் வந்து சேர்ந்தனர். வந்திருந்த அதிகாரிகளுக்கோ எந்தவிதமான பதட்டமும் இல்லை. ஒருவிதமான புன்னகையோடு நின்றிருந்தனர்.

"யார் சார் நீங்க? என்ன கலாட்டா பண்ணுறீங்க?" என்று போலீசார் கேட்டனர். "இது பள்ளிக்கூடம் தெரியுமில்ல? வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி இங்க வந்து என்ன பண்றீங்க? என்ன வாரக்கடைசியும் அதுவுமா ஜெயிலுக்கு போனமா?"

ஹோர்ஷியானாவின் அதிகாரிகளில் ஒருவர், போலீஸ்காரரிடம் ஒரு நோட்டீஸ் ஒன்றைக் காட்டினார். அதைப் போலீஸார் ஒருவர்பின் ஒருவராக படித்துப் பார்த்தனர். படிக்கும்போதே அதில் ஒருவருக்கு வியர்த்தது. பள்ளிக்கூடத்தில் சுற்றி நின்று கொண்டிருந்த மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரரில் ஒருவர் தலைமை ஆசிரியரிடம் அந்த நோட்டீஸைக் கொடுத்தார். தலைமை ஆசிரியரும் அதைப் படித்தார். அவருக்கும் வியர்த்துக் கொட்டியது. அவர் மெதுவாகத் தன் பக்கத்தில் நின்றிருந்த சாராவின் அம்மாவிடம் அந்த நோட்டீஸைக் காண்பித்தார். சாராவின் அம்மாவும் அதைப் படித்தார்.

"சார், இது என்ன அநியாயம்?" என்று சாராவின் அம்மா கத்தினார். அவர் குரலில் ஒரு ஆக்ரோஷம் இருந்தது. "சார், இது அநியாயம். இது அந்த தெய்வத்துக்கே பொறுக்காது. பள்ளிக்கூடத்துக்காக நாங்க நடத்துற நன்கொடை நிகழ்ச்சி சார் இது. சீ, கேட்கவே அசிங்கமாயிருக்கு."

அம்மாவின் கத்தலைக் கேட்ட சாரா பயந்து போனாள். அவளுக்கு ஏதோ பெரிய தப்பு ஒன்று நடந்தமாதிரி தோன்றியது.

"என்னம்மா ஆச்சு?" என்று சாரா பயத்தில் அழுதுகொண்டே கேட்டாள்.

அவள் அம்மாவுக்கோ ஆத்திரத்தில் மூச்சு இரைத்தது.

ஹோர்ஷியானாவின் அதிகாரிகள் கொல்லென்று சிரித்தனர். "அம்மா, நாங்க சட்டம் படிச்சவங்க. சட்டம் எங்க பக்கம் இருக்குது. ஏதோ போலீஸ் கீலீஸ்னு பயமுறுத்தினீங்களே? என்ன ஆச்சு? அவங்களே வாய மூடிக்கிட்டு நிக்கறாங்க பாத்தீங்களா? சட்டம் அம்மா, சட்டம்! அதை மீற யாராலயும் முடியாது. நாங்க என்ன பொழுதுபோகாம வந்து கலாட்டா பண்ற ரௌடிங்கன்னு நினைச்சீங்களா?" என்று அதிகாரிகளில் ஒருவர் நக்கலாகப் பேசினார்.

அருணுக்கும் விஷயம் புரிய ஆரம்பித்தது. ஹோர்ஷியானாவின் அதிகாரிகள் சாராவிடம் இருந்த ரோஜாக்களை தங்கள் நிர்வாகம் காப்புரிமை (patent) செய்த பொருள் என்று நிரூபித்துக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் எல்லாவிதமான சான்றிதழ்களும் (certificates) இருந்தன.

போலீஸார் தங்களால் ஒன்னும் செய்யமுடியாது என்று சொல்லி, அங்கிருந்து நகர்ந்தனர். பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர் மௌனமாக இருந்தார். அவரும்தான் என்ன செய்யமுடியும்?

"அய்யா தலைமை ஆசிரியரே, அந்த அம்மா எங்க நிர்வாக அனுமதி இல்லாம எங்களுக்குச் சொந்தமான பொருளை வித்துக் காசு பண்ணினது தப்பு. அதை நீங்க உங்க வளாகத்துல நடக்கவிட்டது மிகப் பெரிய தப்பு. அதனால, நாங்க இந்த அம்மாவோட குடும்பத்து மேலையும், உங்க பள்ளிக்கூட நிர்வாகம் மேலையும் வழக்குத் தொடுக்கப் போறோம். எங்களை நீதிமன்றத்துல சந்திக்க ரெடியாகுங்க" என்று ஹோர்ஷியானா வக்கீல் எச்சரித்தார்.

சாரா அருணை பயத்தோடு பார்த்தாள். தன்னால் தன் உயிர்நண்பிக்கு இப்படி ஒரு நிலைமை வந்துவிட்டதே என்று அவன் வருந்தினான். தான் பூ விக்கற ஐடியா கொடுத்திருக்காவிட்டால் இந்த வம்பு வந்திருக்காது என்று நினைத்தான். தன்னையறியாமல் கண்ணீர் பொங்கி வந்தது. சாராவுக்கு அருண்மீது எந்தக் கோபமும் இல்லை. அவனை அந்தத் தருணத்திலும் நட்போடு அணைத்துக் கொண்டாள்.

"சாரா, ஐயம் சாரி" என்று மன்னிப்புக் கேட்டான் அருண்.

"It's okay. நீ ஒண்ணும் தெரிஞ்சு இதைப் பண்ணலையே" என்று சாரா ஆறுதல் கூறினாள்.

"ஐயம் சாரி அம்மா" என்று சாராவின் அம்மாவிடமும் மன்னிப்புக் கேட்டான் அருண். அவர் அவனைச் செல்லமாக ஒரு தட்டுத் தட்டி, அணைத்துக் கொண்டார். அவர் கண்களிலும் கண்ணீர் மெதுவாக வழிந்தது.

"தம்பீ, சின்னப் பொண்ணே" என்று வக்கீல் அருணையும் சாராவையும் கூப்பிட்டு, "இப்ப புரியுதா சட்டத்தை மீறி எதுவும் பண்ணக்கூடாதுன்னு? நாங்க எங்க பொருள எங்க உசிரப்போல பாதுகாப்போம். யாராவது எதுனாச்சும் வம்பு பண்ணினா, அது கிழவியா இருந்தாலும் சரி, இல்ல ஒரு குழந்தையா இருந்தாலும் சரி, விடவே மாட்டோம். புரிஞ்சுதா?"

அருண் கண்களில் கோபம் தெரிந்தது. சாராவை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முறைத்தான். வக்கீல் அதைச் சட்டை செய்யாமல் நகர்ந்தார்.

"வா சாரா, நாம வீட்டுக்கு போகலாம். அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் க்ளீன் பண்ணிட்டுப் போகலாம்" என்று சாராவின் அம்மா மெதுவாகச் சொன்னார். "நாம வீட்டுக்கு போய் அப்பாகிட்ட இதைப்பத்திப் பேசிக்கலாம். இப்ப ஒண்ணும் பேசவேண்டாம்."

"சரி, அம்மா."

"அருண், நீயும் வீட்டுக்குப் போய்விடு. உன் அம்மாகிட்ட நான் அப்பறமா ஃபோன்ல கூப்பிடறேன்னு சொல்லு. சரியா?" என்றார் சாராவின் அம்மா.

"சரி, மிசஸ் ஃப்ளவர்ஸ்."

சாராவின் அம்மா, ஹோர்ஷியானா வக்கீலைப் பார்த்து, "சார், தப்பு எங்களோடது. இதுல பள்ளிக்கூடத்த தயவுசெய்து இழுக்காதீங்க. அவங்க ஒரு பாவமும் அறியாதவங்க."

வக்கீல் கொல்லென்று சிரித்தார். அவர் மூஞ்சியில் ஒரு குத்து குத்தலாம் போல இருந்தது அருணுக்கு.

"அம்மா, நீங்க எல்லாருமா சேர்ந்துதானே இந்த கூட்டுக் களவாணித்தனம் பண்ணிருக்கீங்க. இதுல பள்ளிக்கூடத்துக்கும் பங்கு இருக்கு இல்ல. அதெப்படி நாங்க விடமுடியும்? நூத்துக்கணக்குல இல்ல எங்க பொருள வித்து சம்பாதிச்சிருங்கீங்க. சும்மா விட்டுருவோமா?"

வக்கீலோடு இன்னமும் பேசினால் நேரம்தான் வீணாகும் என்று சாராவின் அம்மாவுக்குப் புரிந்தது. அவர் தலைமை ஆசிரியரிடம் விடை பெற்றுக்கொண்டு, சாராவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com