ஈரோடு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்
தமிழ்நாட்டில், ஈரோட்டில் அமைந்துள்ளது அருள்மிகு கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்.

தலப்பெருமை
இறைவன் பெயர் கஸ்தூரிரங்கப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி-பூதேவி. தல விருட்சம் வில்வமரம். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக, பெருமாளுக்குக் கஸ்தூரி மருந்து சாற்றி வழிபடும் பழக்கத்தால் பெருமாளுக்கு கஸ்தூரிரங்கப் பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

தெய்வ மூர்த்தங்களில் மிகவும் சாத்வீக குணமுடையவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஒருமுறை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் ரிஷி துர்வாசரிடம் ஒப்படைத்தனர். கோபத்துக்குப் பெயர்பெற்ற அவர் கைலாயம், பிரம்ம லோகங்களுக்கு அனுமதியில்லாமல் சென்றபோது தெய்வங்கள் அவரைக் கடிந்து கொண்டனர்.

அதனால் சினத்துடன் அவர் வைகுண்டம் சென்று, மகாவிஷ்ணுவை, மார்பில் மிதித்துத் துயில் எழுப்பிய சமயத்தில்கூட, திருமால் சிரித்துக் கொண்டே அவரை வரவேற்றார். தூய பக்தர்களின் பாதம் தன்மீது படுவதற்குத் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றார். துர்வாசர் சினம் தணிந்தார். மனம் மகிழ்ந்தார். ஆனால், திருமாலின் மார்பில் இருந்த மகாலக்ஷ்மி சினம் கொண்டாள். தன் கணவரை மிதித்த துர்வாசரை தேவிக்குப் பிடிக்கவில்லை. தன் கணவராகிய பெருமாள் அதனைக் கண்டிக்காததால் லக்ஷ்மி தேவி பெருமாளை விட்டுப் பிரிந்து சென்றாள்.

பெருமாள், "ரிஷியே, தங்கள் கோபச் செய்கையால் என் மனைவியைப் பிரிந்தேன். ரிஷிகளுக்குச் சாந்த குணம்தான் சிறந்தது. இனியாவது சாந்த குணம் பெறுங்கள்" என்றார். துர்வாசர் அதனை ஏற்றுக்கொண்டார். சாந்தமானார். அப்படி சாந்தம் தவழும் துர்வாச முனிவரை இத்தலத்தில் காணலாம்.

கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர், ஸ்ரீதேவி-பூமா தேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். வலது கையில் தண்டத்தைப் பிடித்தபிடி அருள் பாலிக்கிறார். ஆதிசேஷன் ஐந்து தலைகளுடன் குடை பிடிக்கிறார். ஆனி மாதம் தைலக் காப்பின்போது 48 நாட்கள் பெருமாளின் முகம் மற்றும் பாத தரிசனம் மட்டுமே காண முடியும்.

கோயில் அமைப்பு
சுவாமி சன்னிதி விமானம், கோபுரம் போன்று அமைந்துள்ளது. சுவாமி சன்னிதிக்கு வலப்பக்கம் ஆண்டாள் சன்னிதி. இடப்பக்கம் பாமா-ருக்மணியுடன் வேணுகோபாலன், கண்ணன் உள்ளனர். சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன், அக்னி ஜ்வாலை கிரீடத்துடன் மிக உக்ரமாகக் காட்சி தருகிறார். பிரகாரத்தில் பெருமாள் பாதத்தைச் சுற்றி ஆதிசேஷன், ஆஞ்சநேயர், கருடாழ்வார் காட்சி தருகின்றனர். சுவாமி சன்னதியின் பின்புறம் கமலவல்லித் தாயார் தனிச் சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருமணம் செய்து கொள்கிறார். வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேயர் பிரகாரத்தில் வலது கையைத் தூக்கியபடிச் சிற்பமாகக் காட்சி தருகிறார்.

துவார பாலகர்களான ஜயன், விஜயன் இருவரும் மகாவிஷ்ணுவின் மீது பக்திகொண்டு பிரியாமல் இருந்தனர். ஒருமுறை மகாவிஷ்ணுவைப் பார்க்க வந்த மகரிஷிகள், காவலரைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அவரை உள்ளே அனுமதிக்காததால் சண்டை ஏற்பட, அடுத்துப் பெருமாள் அவர்களை பூலோகத்தில் பிறக்குமாறு சாபம் கொடுத்தார். அவர்கள் இரண்யன், இரண்யாட்சன், இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன் போன்றோராகப் பிறந்து மஹாவிஷ்ணுவால் வதம் செய்யப்பட்டனர். அப்பிறவிகள் முடிந்து மீண்டும் அவர்கள் வைகுண்டம் திரும்பி, தாள் பணிந்து சேவைசெய்ய நிற்கும் காட்சியை இங்கே காணலாம்.

புரட்டாசி மாதம் 10 நாள் பிரம்மோத்சவம், பங்குனி உத்தரம், கிருஷ்ண ஜயந்தி திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஆலயம் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com