ஃபிரிமான்ட் கவுன்சிலர் - அனு நடராஜன்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி

ஃபிரிமான்ட் நகரின் நகர மன்ற உறுப்பினரான முதல் இந்தியர், மற்றும் ஒரே பெண் உறுப்பினர் என்னும் பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அனு நடராஜனை பாரதி சந்தித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருப்பான். வளைகுடாப் பகுதியின் நான்காவது பெரிய நகரமான ஃபிரிமான்ட் டின் நகர செயற்குழு உறுப்பினராக (City Councilor) மிக முக்கியப் பொறுப்பை 2004-ம் ஆண்டில் பதினேழு வேட்பாளர்களின் கடும் போட்டிக்கிடையே அனு வென்றார். இறுதிக் கட்டத்தில் வாக்களித்த நால்வரில் மூவர் அனுவுக்கே வாக்களித் தனர். (ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.)

அனு பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவர் கிரண் பேடி, ஹில்லரி கிளிண்டன் போன்றோரை முன்னு தாரணமாகக் கொண்டவர். மே 11, 2005 அன்று வெளிநாட்டு இந்தியர்களின் அமைப்பான என்.ஆர்.ஐ. இன்ஸ்டிட்யூட் (NRI Institute) அனுவிற்கு டில்லியில் 'பாரத் சம்மான்' விருது வழங்கிக் கெளரவிக்க இருக்கிறது. பெங்களூரிலிருந்து வளைகுடாப் பகுதிவரை (Bangalore to Bay Area) வென்ற அனு அவர்களைச் சந்தித்தபோது...

மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்த அனு, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவரான சாந்தா ரங்க ஸ்வாமியுடன் கிளப் நிலை கிரிக்கெட் ஆடியவர். இன்று, கிரிக்கெட்டுடன் பேஸ்பாலையும் ரசிப்பவர். சிறந்த கிரிக்கெட் வீரரான தந்தை நடராஜன் நுங்கம்பாக்கம் கிரிக்கெட் கிளப்பை நிறுவியவர். பெங்களூரில் வளர்ந்தாலும், தாய், தந்தையர் வீட்டில் தமிழில் பேசுவதைக் கட்டாயமாக்கினர். இது நம்மில் பலர் பின்பற்ற வேண்டிய வழியாகும்.

கல்லூரியில் மின்னணுப் பொறியியல் (Electronics Engineering) வகுப்புகளில் சிறிது நாட்கள் படித்தார். ஆனால் அவரது நாட்டம் கட்டிடத் துறையிலேயே இருந்ததது. எனவே கட்டிடத் துறைக்கு மாறிப் படித்தார். மேற்படிப்புக்காக சியாட்டிலுக்கு வந்து, நகரத் திட்டவியல், நகர வடிவமைப்பியல் (Urban Planning, Urban Design) இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின் இந்தியாவிற்குத் திரும்பி, 'த்ரெஷோல்ட்' (Threshold) என்ற நிறுவனத்தைத் தொடங்கி, வீட்டு வடிவமைப்பியல் (Residential Architectural Design) துறையில் சிறந்து விளங்கினார்.

அவரது தொழில் அவரைப் பல சுவாரசியமான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. ஏற்காடு சுற்றுலாத் தலங்கள், பெங்களூர் மருத்துவமனை, ரிஷி பள்ளத்தாக்குப் பள்ளி (Rishi Valley School) போன்ற இடங்களில் அவரது முத்திரையைக் காணலாம். வீடு மற்றும் நகர வளர்ச்சிக் கழகத்தின் (Housing & Urban Development Corporation) பல திட்டங்களிலும் பங்கேற்றார்.

மீண்டும் அமெரிக்காவில்...

கணினித் துறையிலிருக்கும் சுந்தரம் நடராஜனுடனான திருமணம் அவரைக் கலி·போர்னியாவிற்கு அழைத்து வந்தது. 1995-ல் ஃபிரிமான்ட் நகர நிர்வாகத்தில் சேர்ந்து தன்னார்வச் செயலாற்றினார். பின்னர் சான்ஃபிரான்சிஸ்கோ கென்கே கட்டமைப்பு நிறுவனத்தில் சேர்ந்து 2003-ம் ஆண்டுவரை பல திட்டங்களில் பணியாற்றினார். கயோட்டி பள்ளத்தாக்கு, வலேஹோ, மில்பீட்டஸ், ரெட்வுட் சிடி நகரங்களில் நகர்மைய (downtown) அமைப்புகளில் அனுவின் கலை வண்ணத்தைக் காணலாம். 2002ல் குடிமக்கள் திட்டக் குழுவிற்கு (Citizens Planning Commission) நியமிக்கப் பெற்றார்.

இப்பொழுது முழுநேரமும் நகர வளர்ச்சி வேலைகளில் ஈடுபட்டிருப்பதால், சொந்த நிறுவனம் தொடங்கி, சிறிய திட்டப் பணிகளை ஏற்று நடத்துகிறார். இந்தியச் சமூக மையத்தின் (India Community Center) வசதி மற்றும் கட்டமைப்புப் பணிகளுக்கு அவைத்தலைவராகவும் தொடர்ந்து பதவி வகிக்கிறார்.

முப்பரிமாண நகர வடிவமைப்பில் சிறந்து விளங்கும் அனு அவர்களின் கல்வியும் அனுபவமும், நகர நிர்வாகத்திற்கும், பொதுத்துறை ஈடுபாட்டிற்கும் இயல்பான உந்துதலாய் அமைந்து விட்டன. அவரைப் பொறுப்பில் அமர்த்தியபோது ஃபிரிமான்ட் டின் நகரத் தந்தை பாப் வாசர்மேன் (Mayor Bob Wasserman), "அனு அவர்கள் திட்டக் குழுவில் மிகச் சிறந்து செயலாற்றியதை நானறிவேன். இப் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் அனுவே மிகுந்த தகுதியுள்ளவர். அவரது பின்னணிக்கும் அனுபவத்திற்குமே முன்னிலை தந்திருக்கிறோம். அவரது செயல்பாட்டால், நகர மன்றத்திற்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.

நகர மன்ற செயற்குழு உறுப்பினரான பின் அனுவின் குறிக்கோள்...

ஃபிரிமான்ட்டை மேம்படுத்தி, அதைப் படுக்கையறை சமூகத்தினின்று (bedroom community) வளைகுடாவின் தன்னிறைவு பெற்ற முதன்மை நகரங்களில் ஒன்றாக உருவாக்குவதே. இக்கனவை நினைவாக்கப் பல்வேறு திட்டங்களை நகரக் குழுமத்துடன் சேர்ந்து உருவாக்கக் கடும் உழைப்பையும் துவங்கி விட்டார். 43 சதம் ஆசிய இனத்தவர் வாழும் ·ப்ரீமாண்ட்டை வெளியுலகுக்கு விளம்பரப்படுத்துவதில் முனைப்பாயிருக்கிறார்.

ஃபிரிமான்ட்டின் நடுவ வருமானமான 107,000 டாலர், அமெரிக்கச் சராசரி வருமானத்தைவிட அதிகம். மக்கள் தொகையோ 210,000; நகரப் பரப்பு, 92 சதுரமைல். ஃபிரிமான்ட் நகரம், பள்ளித் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் உயரிய நிலையில் உள்ளது. இவ்வளவு இருந்தும், இங்கிருப்போர் வளைகுடாவின் மற்ற நகரங்களில் வருடத்திற்கு 1.1 பில்லியன் டாலர் செலவிடுகின்றனர். காரணம், இங்குள்ள பலவகைக் கடைகளில் பொருள் வாங்கும் அனுபவம் மகிழ்ச்சியானதாக அமைவதில்லை. உயர்தர வர்த்தக மையங்கள் இல்லாதது நகருக்குப் பெருத்த நட்டமே. ஐந்து சிறு நகரங்களின் கூட்டால் உருவாகிய ஃபிரிமான்ட்டில் வர்த்தக நகர்மையம் (commercial downtown) இல்லாததும் குறையே. பார்ட் (BART) ரயில் நிலையம் அருகே ஒரு வணிக மையத்தை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன, கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கின்றன. மேலும், ஏற்கனவே இருக்கும் டொயோடா தொழிற்சாலை போன்ற பெரிய நிறுவனங்களை ஈர்க்கும் பணியும் தொடங்கி விட்டது என்பது இனிப்பான செய்தி. ஃபிரிமான்ட்டில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் லட்சியமும் அனுவின் பட்டியலில் அடங்கும்.

இங்கிருந்து கல்லூரிப் படிப்புக்காக வெளியே செல்லும் இளைய தலைமுறையினரை, "திரும்பி வாருங்கள், நாம் சேர்ந்து செயலாற்றலாம், மாற்றம் உண்டாக்கலாம்" என்றழைக்கிறார் அனு.

ஃபிரிமான்ட்டின் பொன்விழா...

செப்டம்பர் 2006-ல் ஐம்பதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடப் போகும் ஃபிரிமான்ட்டிற்கு, நகர மன்ற உறுப்பினராய் அனு நடராஜன் கிடைத்திருப்பதும் அவர் பொன்விழாக் குழுவின் நிகழ்ச்சித் தலைவராக (Chair Person, Event Committee) நியமிக்கப்பட்டிருப்பதும் இந்தியருக்கு, அதிலும் தமிழரான நமக்கு, மிகுந்த பெருமை தருவதாகும். "கடந்த காலத்தைப் பேணு, நிகழ் காலத்துடன் இணைந்து வாழ், வருங்காலத்தைப் படை" ('Cherish' the Past, 'Connect' with the Present and 'Create' the Future) என்னும் அருமையான கொள்கையை அடித்தளமாகக் கொண்டு பொன் விழா நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட இருக்கின்றன.

www.celebratefremont.org என்னும் வலைத்தளத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பான செயல்கூற்று, வடிவமைப்பு ஆகியவற்றைக் காணலாம். ஒரு மில்லியன் டாலர் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சிப் பணிகளுக்கு நிதியுதவி மற்றும் வேறு வகைகளில் ஆதரிக்க விரும்பும் நிறுவனங்கள் anu@webslides.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

தென்றல் வாசகர்களுக்கு அனுவின் யோசனைகள்...

"நம் இந்தியர்களில் பலர் பள்ளி நிர்வாகத்தில் பங்கேற்பது, தம் குழந்தைகள் அப்பள்ளியில் படிக்கும் காரணத்தினாலன்றிச் சமூகத் தொண்டாற்றும் பொறுப்பினாலன்று (it's a consequence, not a cause). இதற்கும் மேலாக, அவர்கள் ஒருமித்த சக்தியுடன் தத்தம் நகர மேம்பாட்டிலும், விரிவான வளைகுடாப் பகுதி மேம்பாட்டிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தாம் சார்ந்துள்ள சமூகங்களுக்கு வெளிநோக்குடன் (outward focused) தொண்டாற்ற முயல வேண்டும்.

இங்கிருந்து இந்தியா செல்லும் இந்தியர்கள், இங்குள்ளது போல் குடிமக்கள் குழுமங்களும் (Citizens Commission), அண்டை வீட்டார் அலுவலகங்களும் (Office of the Neighborhood) அங்கும் அமைத்துச் சீரிய செயலாற்ற வேண்டும். மேலும், ஃபிரிமான்ட்டின் சகோதர நகரமாக (sister city) விளங்கும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்கள், திட்டப் பரிமாற்றங்களால் சிறப்புறலாம்".

அனுவின் உதாரண மனிதரான கிரண் பேடிக்கும் அவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும், கற்பனை வளம் மிக்கவர்கள். தம் கற்பனைத் திறத்தைப் பயன்படுத்தி, தனிப்பட்ட மற்றும் பொது வாழ்வில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துகிறவர்கள். வேலைப் பணி என்பது கடமையல்ல, முழு மனதுடன் ஈடுபடும் ஒரு தவம் என்று கருதுபவர்கள். அனுவின் இயல்பான துணிவையும், கற்பனா சக்தி யையும் அவரது புதிய பணியிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

உமா வெங்கட்ராமன்

© TamilOnline.com