நாணா
வாசல் கதவு மணிச்சத்தம் கேட்டு பத்மா கதவைத் திறந்தாள். வாசலில் நின்ற பார்வதியைப் பார்த்ததும்
மகிழ்ச்சி உண்டாயிற்று.

"பார்வதி, நானே உன்னைக் கூப்பிடணும்னு நெனச்சேன்..நீயே வந்துட்ட".

"என்ன வேணும் மாமி, உங்க கிட்ட வாங்கின பத்திரிக்கையைக் கொடுக்க வந்தேன்".

"ஒண்ணுமில்ல.. இன்னிக்கு சாயங்காலம் விருந்துக்கு ஆள் வராங்க.. சொக்கலிங்க பாகவதர் சான் டிகாயோல கச்சேரி செய்யறாராம்.. பிளேன் எட்டு மணிக்குதான் வருமாம்.. இங்க வந்து ராத்திரி தங்கிட்டு காலையில கிளம்பிப் போவாராம். அவரைக் கார்ல அழைச்சிட்டு போக சான் டியாகோலேருந்து ரெண்டு பேரு வராங்க... தட்டிக் கழிச்சிடலாம்னு பார்த்தேன்.. முடியல.. எனக்கு கவலையா இருக்கு... நாணாவை வெச்சிண்டு எப்படி சமாளிப்பேன்.. நீ அவனை அழைச்சிண்டு போயி உங்க வீட்டில வெச்சுக்க.. காலையில அவங்க போனப்பறம் அழச்சிண்டு வந்தா போதும்..... உன்னால முடியுமா"

கவலைப்படாதீங்க மாமி... நான் அழைச்சிண்டு போறேன்.. காலையில கொண்டு விடறேன்.." என்று பார்வதி சொன்னது பத்மாவுக்கு ஆறுதலாக இருந்தது.

"நாணா என் கூட வா.. பாட்டு கேட்கலாம்" என்று பார்வதி அழைத்தாள்.

நாணா பதிலே பேசவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பார்வதி கைகளால் தட்டி தாள ஒலி எழுப்பினாள்.

நாணா திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் ஒரு கோணல் சிரிப்பு தோன்றியது.

"வா... பாட்டு கேட்கலாம்" என்றவுடன், எழுந்து அவளைப் பின் தொடர்ந்தான்.

"ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு ஒரு போன் பண்ணு" என்றாள் பத்மா.

பத்மா, ராகவன் தம்பதிக்கு மூத்த பிள்ளை நாணா. ஐந்து வயதில் மூளை வளர்ச்சி இல்லை என்று இனங்காணப்பட்டு, இருவது வயதாகியும் அதிக முன்னேற்றம் இல்லை. உடல் மட்டும் வளர்ந்திருந்தது. அவன் சில வார்த்தைகளே பேசினான். யாரையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான். இவனை வெளியே அழைத்துப் போக வெட்கப்பட்டார்கள். தாங்கள் விருந்துகளுக்குப் போவதையும் நிறுத்திக் கொண்டார்கள். அவசியமானால் ஒருவர் போய் ஒருவர் வீட்டில் அவனைப் பார்த்துக் கொள்வார்கள். சில சமயம் அவனைச் சமாளிப்பது கஷ்டமாக இருந்தது. வெறி பிடித்தால் போல கத்துவான். கையில் கண்டதை எறிவான். அப்பொழுது அவனை ஒரு சிறு அறையில் அடைத்து விடுவார்கள். அவன் அமைதியானபிறகு வெளியில் விடுவார்கள். இன்னொரு குழந்தை பிறந்து அதுவும் நாணா போல இருக்குமோ என்ற அச்சத்தில் குழந்தையே வேண்டாம் என்றிருந்தார்கள். நண்பர்களின் தூண்டுதலின் பேரில் இன்னொரு குழந்தை பெற்றுக் கொண்டார்கள். குழந்தை சுரேஷ் பிரச்னை இல்லாமல் நல்லபடியாக வளர்ந்தது அவர்களுக்கு வாழ்வில் ஒரு மகிழ்வையும் பிடிப்பையும் கொடுத்தது.

நாணாவுக்கு இசையில் ஒரு விசேஷ நாட்டம் இருந்தது. இதைக் கண்டு பிடித்தது பக்கத்து வீட்டுக்கு குடி வந்த பார்வதிதான். பார்வதி ஒரு இசை ஆசிரியை. சில மாணவர்களுக்கு வாய்ப்பாட்டும் வயலினும் சொல்லி கொடுத்தாள். அவள் சில நாள் நாணாவை வீட்டுக்கு அழைத்துப் போய் வயலின் வாசித்துக் காட்டுவாள். நாணா சில நேரம் அமைதியாகக் கேட்பான். அவனுக்கு இசையில் ஆர்வம் இருப்பதைக் கேட்ட ராகவன் தம்பதியினர் அவன் அறையில் இசை கேட்க வசதி செய்து கொடுத்தார்கள். அவனுக்கு இசை முற்றிலும் பிடித்தது என்று சொல்ல முடியவில்லை.

பத்மா சமையலை முடித்து உடை மாற்றி வந்தவுடன் வாசலில் மணி அடித்தது. அவள் எதிர்பார்த்த நேரத்துக்கு முன்பே விருந்தாளிகள் வந்து விட்டார்கள். சொக்கலிங்க பாகவதருடன் கூட இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களை அமரச் சொல்லி காப்பி கொடுத்தாள்.

கூட வந்தவர்களில் ஒருவர் டாக்டர் குருமூர்த்தி. இன்னும் மருத்துவப் பயிற்சியில் இருக்கிறாராம்.
இன்னொருவர் விசு, எஞ்சினீயர். சான் டியாகோ கர்நாடக சங்கீத சபையின் காரியதரிசியாம்.

கடிகாரத்தைப் பார்த்த பாகவதர் "என்ன மணி ஆறுதானா?" என்றார்.

"சிகாகோ நேரம் வேற. இங்க நேரம் வேற. இங்க ரெண்டு மணி நேரம் பின்னால இருக்கோம்" என்று
விசு விளக்கினார்.

"உங்களுக்கு குழந்தைகள் இருக்கா?" என்றார் பாகவதர் பத்மாவைப் பார்த்து.

"ரெண்டு பிள்ளைகள்.. பெரியவன் நாணா... வெளியில போயிருக்கான்.. சின்னவன் சுரேஷ்..
ஹைஸ்கூல்ல இருக்கான்" என்றாள் பத்மா.

"பெரியவன் காலேஜ்ல இருக்கானோ?"

"ஆமாம்" என்றாள் பத்மா சற்று கூச்சத்துடன். நாணாதான் பார்வதி வீட்டில் இருக்கிறான்.

இவர்கள் போனப்பறம்தான் வருவான். எதற்கு இவரிடம் போய் சொல்லிக் கொண்டு...

சிறிது நேரத்தில் ராகவனும், சின்னப் பிள்ளை சுரேஷும் வந்தார்கள். இந்திய, அமெரிக்க அரசியல் பற்றி விவாதித்த பிறகு, பேச்சு இசை, இசைக் கலைஞர்கள் பற்றி தொடங்கியது.

"போன வருஷம் கேசிவி சார் பாட வந்தார். காருல 'ப்ரீவேல அறுவது மைல் வேகத்துல
ஓட்டிட்டுருக்கேன். பின்னால சத்தம் கேட்டுது. கேசிவி சார் கதவுகிட்ட ஏதோ தேடறார்.

காத்து வேணும்னு ஜன்னல் கண்ணாடிய கீழ இறக்கப் பார்க்கிறார்னு நெனச்சா, அவரு கதவை திறக்கப் பார்க்கிறாரு.. அலறிப் போயிட்டேன்.. சார் கதவு பூட்டி இருக்கேன். வண்டி ஓடறச்சே திறக்காதீங்கனு கத்தினேன். அவர் சொல்றாரு.. வெத்திலயைத் துப்பணும் அதான் கதவு தெறக்கப் பார்த்தேன்... மெட்ராஸ்ல வழக்கமா செய்யறதுதானேங்கறார். சார் கார் இங்க போற வேகத்துல நீங்க கதவு தெறந்தா ரோட்ல விழுந்துருவீங்க. தவிர இங்க ரோட்ல எச்சல் துப்பினா போலிசுக்கு பதில் சொல்லணும்னு சொல்லிப் புரிய வைக்கறதுகுள்ள.."

"வெத்தில பரவாயில்ல.. வித்வான் எல்கே சாருக்கு கச்சேரிக்கு அப்புறம் தண்ணி போடணும். ஒரு
கச்சேரிக்கு வந்திருந்தார். ஹோஸ்ட் வீட்டுல நிறையப் பேரைக் கூப்பிட்டு சாப்பாடு பண்ணி வெச்சிருக்கா. கச்சேரி ஆரம்பிக்கவே ரொம்ப லேட்டாயிடுத்து. கச்சேரி முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்கு பத்து மணியாயிடுத்து. எல்லாரும் எல்கே சாரோடா சேர்ந்து சாப்பிட காத்திண்டுருக்கா.. எல் கே சார் மாடியில இருக்கார் தண்ணி போட்டிண்டு இருக்கார்னு நியூஸ் வரது. ரெண்டு டிரிங்க் முடிச்சிட்டு வந்திடுவார்னு இருக்காங்க.. அவர் சம்சாரம் கீழ வந்து நீங்க எல்லாம் சாப்பிடுங்க.. தெரியாத்தனமா பெரிய பாட்டிலை அவர்கிட்ட கொடுத்திட்டாங்க. அவர் பாட்டிலை முழுக்க முடிக்காம வரமாட்டார்னு சொன்னாங்க. நாங்க சாப்பிட்டுட்டு போயிட்டோ ம். அவர் கீழ வரதுக்கு பண்னண்டு மணி ஆயிடுத்துனு கேள்விப்பட்டேன்".

ராகவன் விசுவிடம் கேட்டார்: கச்சேரிக்கு போறோம் பாட்டுக் கேட்க. முதல்ல அரைமணி வித்வான்களோட வாழ்க்கை வரலாற எதுக்கு விலாவாரியாப் படிக்கறாங்க.. கர்ப்பத்துலேயே சங்கீதம் கேட்டவர்... மூணு வயசுல முப்பது ராகம் கண்டுபிடிப்பார்.. நாலு வயசில தகப்பனார்கிட்டயே சிஷ்யனாகி அஞ்சு வயசுல முதல் கச்சேரி... இந்தப் பெருமை இல்லாத வித்வானே தமிழ்நாட்டில இல்ல.. சபா காரியதரிசி எதுக்கு இந்த தம்பட்டத்தை அனுமதிக்கனும்... கச்சேரிக்கு நேரம் ஆயிடறது இல்லயா?"

"சார்... இதை நாங்க எழுதறது இல்ல.. வித்வான்களே தயாரிச்சுண்டு வரா.. தவிர இந்த மாதிரி விவரம்
இந்தியால தேவையில்ல.. எல்லாருக்கும் வித்வானைத் தெரியும்.. வெளிநாட்டுல அப்படியில்ல... அதுனால சொல்ல வேண்டியிருக்கு.. ஆனா சுருக்கமா குரு பேரு, வாங்கின பெரிய அவார்டுகள் பத்தியாவது சொன்னாதான் வித்வானுக்கும் சந்தோஷம், பெருமை.. என்ன பாகவதர் சார் நான் சொன்னது சரிதானே.." என்றார் விசு.

"வாஸ்தவம்.. சொல்லாட்டா யாரோ வந்து பாடிட்டு போயிட்டானு நெனப்பாங்க" என்றார் பாகவதர்.

"முன்னுரைய விடுங்க.. கச்சேரி முடிஞ்சாச்சு.. ஜனங்க ரசிச்சு அஞ்சு நிமிசம் எழுந்து நின்னு தட்டியாச்சு. நன்றியுரைங்கிற பேர்ல ஒரு ஆளு வந்து, வித்வான் நல்லா பாடினார் மறுபடியும் கைதட்டுங்க.. மிருதங்கம் நல்லாவே அடிச்சாரு மறுபடியும் கை தட்டுங்க.. வயலின் ரொம்ப நல்லாயிருந்துது மறுபடியும் கை தட்டுங்க... கச்சேரி நல்லாவே இருந்துது மறுபடியும் கைதட்டுங்கனு மக்களை நோகடிக் கறது கேனத்தனமா இல்லியா.. சுருக்கமா பாடகரை கவனிச்சிண்ட ஹோஸ்டுக்கு, அரங்க நிர்வாகத்துக்கு, மைக்செட் கொடுத்தவருக்கு நன்றி. அடுத்த வாரக் கச்சேரி நாலு மணிக்கு... இப்படி ஒரு லைன்ல சொல்லிட்டு போயிட லாமே?' என்றார் குருமூர்த்தி.

"இந்தியால கச்சேரின்னா வித்வான் மறுநாளக்கி பேப்பர்ல விமரிசனம் படிச்சு தெரிஞ்சிக்கலாம்.. இங்க வர வித்வான் இன்னிக்கு எல்.ஏ. நாளக்கி சிக்காகோனு போறவங்க.. கச்சேரி முடிஞ்சவுடனே ஒரு சின்ன விமரிசனம், ரெண்டு நல்ல வார்த்தை சொன்னா தப்பில்ல. ஆனா நீங்க சொல்ற பாயிண்டு புரியுது. சங்கீதம் தெரிஞ்ச ஒருத்தர் இந்த அபூர்வ ராகம் நல்லா இருந்துது, ராக மாலிகையில இந்த ராகங்கள் வந்தது, இந்த இடத்துல மிருதங்கம், வயலின் சூப்பரா இருந்துதுனு சங்கீதத்தைப் பத்தி ரெண்டு வரி சொன்னா ஆர்ட்டிஸ்டுக்கு சந்தோஷம். ரசிகனுக்கும் பிடிக்கும். சங்கீதம் பத்தி தெரியாதவங்க மேடையில ஏறினா ஏடாகூடமாயிடுது".

சில இளம் பாடகர்கள் கச்சேரியில் செய்யும் தவறுகள் பற்றி பாகவதர் சுவையாகப் பேசினார்.

'தாயே யசோதா உந்தன்', இதைத் தாயேய... சோதா.. உந்தன்னு பிரிச்சிடறாங்க. 'உந்தன் ஆயர் குலத்தில் உதித்தஒன்னு சொல்லாம, 'உந்த... நாயர் குலத்தில் உதித்த'னு பாடி ஜாதியை மாத்தினவா உண்டு. மழபாடியுள் மணிக்கமே'ன்னு சொல்லாம மளபாடியுல் மானிக்கமே'னு தப்பா பாடறாங்க. முன்காலத்தில கர்நாடக சங்கீதம் கத்துக்கறதுக்கு முன்னால தெலுங்கு கத்துக்கறது வழக்கம். அப்பதான் தெலுங்கு கீர்த்தனத்தை சரியா உச்சரிக்க முடியும். இப்ப கான்வெண்டுல படிச்சு வர இளைஞர்கள் தமிழ் சரியாத் தெரியாம ழ, ள, ல, ண, ன எல்லாம் மாறிடறது"

"பாகவதர் சார், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை பெரிய பாடகர்களோட கச்சேரியில பக்க வாத்யமா போடறது பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"திறமை இருந்து பாடகனுக்கு ஈடு கொடுத்து நன்னா வாசிக்கறவர்களைப் போடறதுல தப்பு இல்ல.
எங்காத்துப் புள்ளையும் மேடை யேறிடுத்துனு கத்துக்குட்டிகளைப் போட்டா, கச்சேரியோட வேகம், சுகானுபவம் குறைஞ்சிடும். பாடறவாளுக்கு கேட்கறவாளுக்கு மூடு போயிடும். ரெட்டை மாட்டு வண்டியில ஒரு மாட்டுக்கு பதிலா ஒரு கன்னுக்குட்டியக் கட்டிட்டா அதால இழுக்க முடியாதில்லயா?

இப்ப என்ன நேரமாச்சு?"

"பாகவதர் சாருக்கு சிக்காகோ டயத்துல இப்ப பத்து மணி. சீக்கிரம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு பத்மா என்றார் ராகவன்.

"சாப்பாடு தயாரா இருக்கு... புதிசா பீங்கான் தட்டு செட்டா வாங்கினமே, அது காரேஜ்ல பீரோல இருக்கு.. எடுத்திட்டு வாங்க.. அதுல சாப்பிடலாம்"

ராகவன் போய் தட்டுகளை எடுத்து வந்தார்.

"சாப்பாட்டை பஃபே போல மேஜையில வெச்சிடலாம். தட்டுல அவங்கங்க தேவை யானதை போட்டு
சாப்பிடலாம். இந்த சோபாவில உட்காரலாம்.. வேணுன்னா பின்பக்கம் ஸ்விம்மிங் பூல்கிட்ட சேர் போட்டுருக்கு.. அங்க போய்கூட சாப்பிடலாம்.. உங்க வசதிப்படி பண்ணுங்க" என்றாள்.

எல்லாரும் உணவைத்தட்டில் எடுத்து பறிமாறிக் கொண்டார்கள். அப்பொழுது மணி அடித்தது. பத்மா
ஓடிப்போய் கதவைத் திறந்தாள். வாசலில் "ஊள, ஊள.." என்று வினோதமாக ஒலி எழுப்பிக் கொண்டு
நாணா உள்ளே வந்தான். பார்வதியும் உள்ளே வந்தாள்.

"சாயங்காலத்திலேருந்து காசெட் போட்டுக் காட்டி, வயலினும் வாசிச்சேன். ஒழுங்காக் கேட்டுக்கிட்டுதான் இருந்தான்... எனக்கு ஒரு போன் கால் வந்தது.. பேசிட்டு வரதுகுள்ள மூடு மாறிக் கத்த ஆரம்பிச்சு, டம்ளரைத் தூக்கிப் போட்டு... சமாளிக்க முடியல மாமி.. சாரி.. உங்களுக்கு போன் பண்ணி வரோம்னு சொல்லக்கூட நேரமில்ல.. அதான் இங்கயே அழைச்சிட்டு.."

"பரவாயில்ல பார்வதி.. பார்த்துக்கிட்டதுக்கு தேங்க்ஸ்.. சாப்பிட வரயா.. இப்பதான் ஆரம்பிச்சோம்'

"தேங்ஸ்.. எனக்கு வேலை இருக்கு... ஒரு ஸ்டூடண்ட் பாட்டுக் காசெட்டைத் தொலைச் சிட்டாளாம்..
மறுபடியும் பாட்டு ரெக்கார்டு பண்ணிக் குடுக்கணும்"

"நாணா ரூமுல போயி பாட்டுக் கேக்கறியா' என்ற பத்மாவை நாணா அலட்சியமாய் தள்ளி விட்டு
சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தான்.

"பத்மா, அவனுக்கு பசி வந்துடுத்து. அவனுக்கும் சாப்பிட ஒரு தட்டு குடு.. அவனும் இங்க சேர்ந்து
சாப்பிடட்டும்" என்றார் ராகவன்.

"சாப்பிடுவானா தெரியாது" என்ற பத்மா அவனிடம் பீங்கான் தட்டை கொடுத்தாள். அதை அவன் வீசி எறிந்தான். அவன் வீசின தட்டு டாக்டர் குருமூர்த்தி தட்டின் மேல் விழுமுன்னர் அவர் அதை இடது கையால் லாகவகமாகப் பிடித்து மேசை மேல் வைத்தார்.

"சாரி சார் உங்க மேல படலியே" என்றாள் பத்மா.

நாணா "டப்பா...டப்பா" என்று கத்திக் கொண்டு எதையோ தேடினான்.

"அவன் வழக்கமா சாப்பிடற கிண்ணத்தைத் தேடறான் போல.. எடுத்துக் கொடேன்' என்றார் ராகவன்.

"இப்ப அது ஒண்ணு எதுக்குனு பார்த்தேன்" என்ற பத்மா, உள்ளேயிருந்து ஒரு சிவப்பு

பிளாஸ்டிக் கிண்ணத்தை எடுத்து அதில் சிறிது உணவு போட்டுக் கொடுத்தாள். ஒரு சிரிப்புடன் நாணா அதை வாங்கிக் கொண்டான்.

"நாணா, இப்ப உன் ரூம்ல பாட்டுக் கேண்டுண்டு சாப்பிடறியா, இல்ல நான் உனக்கு ஸ்பூனால ஊட்டவா". கிண்ணத்தின் மீது கையால் மூடி தலையை பக்கவாட்டில் ஆட்டி நாணா தன் மறுப்பைத் தெரிவித்தான்.

"இங்க இடம் இருக்கு... இங்க வாப்பா" என்று பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டினார்
பாகவதர்.

ஒன்றையும் லட்சியம் செய்யாமல் நாணா தரையில் அமர்ந்து இரு கைகளாலும் வாயில் சோற்றை அள்ளி அடைத்துக் கொண்டான். சுற்றிவரப் பருக்கைகள் தரையில் தெரித்தன. பத்மாவுக்கு அவமானமாக இருந்தது. எல்லோரும் பார்க்கிறார்களே என்ற கூச்சம் அவளைப் படுத்தியது.

"இவந்தான் மூத்தவனா.. காலேஜ்ல வாசிக்கறவனா?" என்றார் பாகவதர்.

பத்மாவுக்கு பேச்சு எழவில்லை. மெளனமாகத் தலையசைத்தாள். ராகவன் "காலேஜ்ல படிக்கிறானா" என்பது போல பத்மாவை வியப்புடன் பார்த்தார்.

"இப்ப கம்யூட்டர் படிப்புக்குதான் இந்தியால மவுசு.. மத்தபடி அக்கவுண்டிங், கெமிகல் எஞ்சினீயரிங்,
எலக்டிரிக்..." பாகவதர் இன்னம் பேச்சை முடிக்கவில்லை..

"எலக்டிரிக்" என்ற அவர் சொல்லைக் கேட்டவுடன் நாணாவின் முகம் அஷ்ட கோணலாகி கைகளால்
முகத்தைப் பொத்திக் கொண்டு "ஊவ்வைய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று உரக்கக் கத்தினான்.

பாகவதர் பதறிப் போனார். "என்னாச்சுப்பா.. என்னாச்சு உனக்கு?"

ராகவன் சற்று கூச்சத்துடன் "அந்த எலக்டிரிக் என்ற வார்த்தை கேட்டால் இப்படி வினோதமா பயந்து போய் கத்துவான். ஏன்னு தெரியல. அதுனால நாங்க அந்த வார்த்தைய கூடிய மட்டும் சொல்றதில்ல" என்றார்.

"உடம்பு சரியாயில்லயோ அவனுக்கு... ஒரு மாதிரியா இருக்கானே.. ஏதாவது உள்ளுக்குள்ள படுத்தறதோ என்னவோ.. டாக்டர்கிட்ட போனேளா" என்றார் பாகவதர்.

"பார்க்காத டாக்டர் இல்ல.. வேண்டாத தெய்வம் இல்ல" என்றாள் பத்மா கண்களில் நீர் பொங்க.

விசு டாக்டர் குருமூர்த்தியைப் பார்த்தார். டாக்டர் குருமூர்த்தி 'ந்யூராலாஜிகல் டிஸார்டர்..' என்று
முணுமுணுத்தார்.

எல்லோரும் உண்டு முடித்தார்கள். பத்மா ஒரு துணியால் நாணாவின் வாயைத் துடைத்து தரையில்
இருந்த பருக்கைகளைப் பொறுக்கி சுத்தம் செய்தாள்.

எல்லோருக்கும் சிறிய கண்ணாடி கிண்ணங் களில் குலோப் ஜாமுன் கொண்டு வந்து கொடுத்தாள். நாணாவுக்கு கையில் கொடுக் காமல், 'இதை சாப்பிட்டு பார்க்கறியா.. நான் ஸ்பூன்ல தரேன்' என்றதும், அவன் உறுமலோடு கிண்ணியை பிடுங்கிக் கொண்டான்.

கிண்ணத்தில் விரலால் தொட்டு நக்கினான். பிறகு கைகளால் தொடை மேல் தட்டி தாளம் போட்டான்.

அதைக் கவனித்த பாகவதர் 'பேஷ்.. தாளம் போடறானே.. ஆதி தாளம்.. சங்கீதம் தெரியுமோ?' என்று வியக்க, 'பக்கத்து வீட்ல பார்வதினு ம்யூசிக் டீச்சர் இருக்கா. அவ கிட்ட கத்துண்டு இருப்பான். பாட மாட்டான்.. பாட்டு பாடினா, டேப் போட்டா கேப்பான்'

பாகவதர் சார், உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி ஒரு பாட்டு பாட முடியுமா?' என்றாள் பத்மா.

'என்ன பாட்டு வேணும் உங்களுக்கு' என்றார்.

சுரேஷ் பத்மாவின் காதில் கிசுகிசுத்தான் 'மாம்.. வாட் ஈஸ் தட் ஸாங்... யா.. ஆஸ்க் ஹிம் டு ஸிங்.. ராக்கம்மா.. கையத் தட்டு...'

பத்மா 'பேசாம இருடா' என்பது போல அவனை முறைத்தாள்..

'என்ன வேணாப் பாடுங்கோ.. அது தமிழ்ல இருந்தா நல்லது' என்று கேட்டுக் கொண்டார் விசு.

'பாடினா.. போச்சு..' என்று சொல்லி ஒரு சிறிய ராக ஆலாபனை செய்து, விதியானை.....

விண்ணவர் தாம்தொழுது ஏத்திய நெதி யானை.... என்று தொடங்கி சற்று நிறுத்தினார்.

நாணா தலையை ஆட்டி கையால் தாளம் போட்டு ரசித்தான்.

'யார் பாடின பாட்டு சார் இது?' என்றாள் பத்மா.

'திருஞானசம்பந்தர் திருமணஞ்சேரில பாடினது. அந்தக் கோயில் சுவாமி பேரு கல்யாண சுந்தரேஸ்வரர் என்னும் அருள் வள்ளல் நாதர்.. அம்பாள் பேரு.... கோகிலாம் பாள் என்னும் யாழினும் மென்மொழியம்மை. திருமணஞ்சேரி ஸ்தலம் காவிரிக்கு வடக்கில.........

அப்பொழுது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

எதிர்பாராதவிதமாக நாணா பாகவதர் மேல் தன் குலொப் ஜாமுன் கப்பை வீசி எறிந்தான்.

அவர் சட்டையில் குலோப் ஜாமுனும் பாகும் பட்டு கறையானது. பாகவதர் செய்வதறியாது திகைக்க,
ராகவன் மிகுந்த கோபத்தோடு எழுந்து, நாணாவைப் பளாரென்று முதுகில் அறைந்தார். 'வாடா சுரேஷ் ஒரு கை கொடு இவனை உள்ள அடைச்சிடணும்' என்று கத்தினார். சுரேஷும் அவரும் நாணாவின் கையைப் பிடித்து தர தரவென இழுத்து ஒரு அறைக்குள் தள்ளினார்கள். கையில் எதையோ எடுத்து அவனைத் தாக்கும் சத்தமும் அவன் அலறலும் கேட்டது. விளக்கை அணைத்து கதவைப் பூட்டினார்கள். நாணாவை அவர்கள் இழுத்த வேகமும், லாகவமும் இதைப் பலமுறை அவர்கள் செய்ததனால் வந்த தேர்ச்சி போலப் பட்டது.

அறையிலிருந்து 'ஊய்ய்ய்ய்' என்ற நாணாவின் குரல் மெதுவே கேட்டது. பத்மா கண்ணில் துளிர்த்த நீரை யாரும் பார்க்காமல் துடைத்துக் கொண்டாள்.

ராகவன் ஒரு சட்டையைக் கொண்டு வந்து பாகவதரிடம் கொடுத்தார். 'மன்னிச்சிங்கோ.. அவனுக்கு நாலு பேரோட பழகத் தெரியல.. எப்படி நடந்துக்கணும்னு தெரியல.. இதை மாத்திக்கங்க. காலையில் நீங்க கிளம்பறதுகுள்ள உங்க துணியை தோய்ச்சு கொடுத்திடறேன்' என்றார். முதலில் மறுத்து பின்பு பாகவதர் அதை வாங்கி அணிந்து கொண்டார்.

அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலையில் யாருக்கும் பேச்சு எழவில்லை.

'பத்மா காப்பி கொடு' என்றார் ராகவன்.

பத்மா எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள்.

'எனக்குக் களைப்பா இருக்கு. பாடமுடியலை.. நான் படுத்துக்கப் போகலாமா?' என்று பாகவதர் கேட்டதும், விசு 'ஆமா சார்.. சீக்கிரம் படுத்துக் கணும். காலையில ரோடுல டிராஃபிக் அதிக மாகறதுகுள்ள கிளம்பிட்டா நல்லது' என்றார்.

ராகவன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளைக் காட்டினார்.

காலையில் அவர்கள் கிளம்புமுன் பத்மா முன்னதாகவே எழுந்து உப்புமா தயாரித்து

காப்பியோடு கொடுத்தாள். அவர்கள் அமைதியாக உண்டார்கள். சுரேஷ் முதுகில் புத்தகப் பையோடு
சமயலறைக்கு வந்து ஒரு ரொட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு 'எனக்கு ஸ்கூல் பஸ்ஸைப் பிடிக்கணும்' என்று வெளியேறினான்.

விசுவும் குருமூர்த்தியும் பாகவதரின் பெட்டியைக் காரில் ஏற்றினார்கள். சாப்பிட்டு முடிந்ததும் பாகவதர் ஒரு நிமிஷம் தயங்கி நின்றார்.

'உங்க சட்டையைத் தோச்சு இஸ்திரி போட்டு இந்தப் பையில வெச்சிருக்கேன். ராத்திரி நாணா தப்பா நடந்ததுக்கு எங்களை மன்னிச்சிருங்கோ. எவ்வளவு பெரிய வித்வான் நீங்க. உங்களுக்கு இதுமாதிரி...'

'அதெல்லாம் கிடக்கட்டும்.. நான் மனசில வெச்சிக்கல. அவன் வேணும்னா செஞ்சான்.. போறதுக்கு முன்னால அவனைப் பார்க்கணும். வரச்சொல்ல முடியுமா' என்றார்.

'அவன் தூங்கிண்டுருப்பான். எழுந்துக்க நாழியாகும்' என்று பத்மா ல்லவும் 'ஊய்..ஊய்' என்ற குரல் பூட்டப்பட்ட அறையிலிருந்து சன்னமாகக் குரல் கேட்டது.

ராகவன் கதவைத் திறந்து அவனை அழைத்துக் கொண்டு வந்தார்.

பாகவதர் அருகேயிருந்த பூஜை அலமாரி முன் அமர்ந்து 'இப்படி வாப்பா. இங்க உட்காரு' என்றார். நாணா அமர்ந்தான். அவன் கன்னம் ரத்தம் கசிந்து வீங்கியிருந்தது. ஒரு கண் பாதி மூடி இருந்தது. மறுபடியும் எதுவும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பத்மாவும் ராகவனும் பாகவதர் அருகில் அரண் போல உட்கார்ந்தார்கள்.

கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு பாகவதர் பாடினார்.

விதியானை விண்ணவர் தாந்தொழுது ஏத்திய
நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்
மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை மாறுமே...
விடையானை மேலுலகு ஏழும் இப்பாரெலாம்
உடையானை ஊழிதோ றூழி உளதாய
படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கில்லை அல்லலே.


திருமணஞ்சேரியில் குடிகொண்டுள்ள இறைவனை வேண்டித் தொழும் அடியார்க்கு தீவினைகள் அழியும். துயரங்கள் இல்லாமல் போகும். இதான் இந்தப் பாட்டின் அர்த்தம்.

என்னடா ராத்திரி ஆரம்பிச்ச பாட்டை முடிக்க முடியாம போயிடுத்தேன்னு வருத்தமா இருந்துது முடிக்காம போகவும் பிடிக்கல. இப்ப நல்லபடியா முடிச்சாச்சு' என்ற பாகவதர், தெய்வப் படங்களைக் கை கூப்பித் தொழுது கிண்ணத்தில் இருந்த வீபூதியை நாணாவின் நெற்றியில் இட்டார். 'எல்லாம் சரியாய்டும் பகவான் கிருபையில' என்றார்.

'நமஸ்காரம் பண்ணு மாமாக்கு' என்றாள் பத்மா.

'வேணாம். எங்கயாவது காலைக் கடிச்சிடப் போறான்' என்றார் ராகவன் எச்சரிக்கை உணர்வோடு.

நாணா சுவாமி படத்தைப் பார்த்தவாறு கன்னத்தில் போட்டுக் கொண்டான். இது பத்மாவுக்கு ப்ருமையாகவும் திருப்தியாகவும் இருந்தது. பாகவதர் ராகவன் பத்மாவிடம் விடை பெற்றார்.

'உங்க சாப்பாடு உபசாரம் எல்லாம் ரொம்ப நன்னா இருந்துது. வீடு, வாசல், கொளம், கொல்லை, சொத்து, சுகம், குழந்தைகள் எல்லாம் இருந்தாலும் கடவுள் உங்களுக்கு நாணா உருவில ஒரு சின்னக் குறையை வெச்சிட்டான். கடவுளை வேண்டிங்கோ.. மனசைத் திடமா வெச்சிங்கோ.. நான் போயிட்டு வரேன்'.

அவர்கள் காரில் ஏறிப் போனார்கள்.

* * *

அடுத்த வாரம் சான் டியாகோவில் ஒரு விருந்தில் குருமூர்த்தியும் விசுவும் சந்தித்தார்கள். அவர்கள் கையில் தட்டில் உணவு இருந்தது.

'இவ்வளவு செலவு செஞ்சு கேட்டர் பண்றாங்க.. சாப்பிடற தட்டை மெல்லிசா பேப்பர் ப்ளேட்டாக்
கொடுத்திட்டாங்க' என்றார் விசு.

'வாங்க இப்படித் தனியாப் போயி டேபிள்ல உட்காரலாம்' என்றார் குருமூர்த்தி.

'ஆமா. தட்டு சாப்பிடும் வரை தாங்குமானு தெரியல. போதாத வேளைக்கு ஏதாவது ஒரு நாணா வந்து தட்டைத் தட்டி விட்டுடப் போறான்' என்றார் விசு சிரித்துக் கொண்டே.

குருமூர்த்தி பேசாமல் நடந்தார். இருவரும் அமர்ந்த பிறகு, குருமூர்த்தி சொன்னார். 'நாணாவுக்கு
இருக்கிற வியாதி பேரு ஆட்டிசம். மூளையில ஏற்படுகிற ஒரு குறைபாடால் மூளை வளர்ச்சி இல்லாம போயிடும். இருந்தாலும் ஒரு துளி செயல்பாடு இருக்கும். இந்த நோயாளி களோட உலகமே தனி. அவர்களுக்கு சில சொற்கள், பழக்கங்களே இருக்கும். மற்றவர்களுக்காக தங்களை மாற்றிக் கொள்ள முடியாது. ராகவனும் பத்மாவும் நாணாவை மற்றவர்கள் பார்வையிலிருந்து அகற்றவே முயல்கிறார்கள். மற்றவர் முன்னிலையில் அவன் சாதாரணமாகத் தெரிய வேண்டும் என்பதில் முனைகிறார்கள். பாருங்கள், நாணாவுக்கு என ஒரு சிகப்பு பிளாஸ்டிக் தட்டில் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். திடீரென்று அவனுக்கு பீங்கான் தட்டு கொடுத்தால் அவனுக்கு பிடிக்கவில்லை. மற்றவர்களுக்காக அவன் தன்னை மாற்றிக் கொள்ள முடியாது. அவனுக்குப் பழக்கமானபடி தரையில் உட்கார்ந்து வாயில் அடைத்துக் கொள்கிறான். இது பார்ப்பவர்க்கு அருவெறுப் பாய் இருக்கும் என்பது அவனுக்கு புலப்படாது'

'எலக்டிரிக்னா பயப்பட்டான்.. ஏன்?' என்றார் விசு.

'இருட்டு அவனுக்கு பயம் தருகிறது. எலக்டிரிக் விளக்கை அணை என்று சொல்லியிருக்கலாம். அதனால் இருட்டு வரும் என்பது கண்டு பயப்படுகிறான். அந்தச் சொல்லை வேறு அர்த்தத்தில் சொன்னால் அவனுக்கு புரியாது. இரவில் அவனை அடித்து அறையில் தள்ளி விளக்கை அணைத்தார்கள் அல்லவா? அதுதான் அவனுக்கு தண்டனை என்பது போல செய்தார்கள். இருட்டில் அவன் பயப்பட்டு அதிகம் கத்தாமல் இருக்கிறான். இவர்களுக்கு அது நிம்மதியாய் இருக்கிறது.'

'பாகவதர் மேல கப்பை விட்டு எறிஞ்சது ராகவனுக்கு கோபம் வந்து..'

'ஏன் கப்பை எறிஞ்சான்.. அதுக்கு காரணம் இருக்கு.. பக்கத்து வீட்டு பார்வதி அம்மா என்ன சொன்னாங்க... நாணா அவள் பாட்டை, கேட்டுகிட்டு இருந்தான். அவளுக்கு போன் கால் வந்துது.. பாட்டு நின்னு போச்சு. அவன் மூடு மாறிட்டுது.. அவனுக்கு இசை பிடிச்சிருக்கு... அதுல ஒரு ரிதம் அவனுக்கு இதமா இருக்கு... பாகவதர் பாடறச்சே பொறுமையாத் தாளம் போட்டுக் கேட்டான்.. அவர் பாட்டை நிறுத்தி விளக்கம் சொன்னது அவனுக்கு பிடிக்கல. ஏன்னா பாட்டு தடைப் பட்டு போச்சு.. பேச்சு அவனுக்கு வேண்டாம். அவனோட வெறுப்பை அவனுக்குத் தெரிஞ்ச முறையில கப்பைத் தூக்கி எறிஞ்சு வெளிப்படுத்தினான்.. பாகவதரைத் தாக்க ணும்ங்கிறது அவன் நோக்கம் இல்ல.'

'மறுநாள் காலையில கிளம்பரச்செ பாகவதர் பாடி முடிச்சதும் ஏன் அவன் எதையாவது எறிஞ்சு பாட்டு முடிஞ்சதுல தன் வெறுப்பைக் காட்டல?'

'அங்கே சூழல் வேற. சாமி படத்துக்கு எதிரே உட்கார்ந்திருக்கான். ஏதோ மந்திரம் சொல்லிட்டு கன்னத்தில போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கான். அவனைப் பொறுத்த வரை அது ஒரு சடங்கு.'

'இதுக்கு மருந்தே இல்லியா டாக்டர்?'

'மூளையில் குறிப்பா எந்த இடத்துல என்ன மாறுதல்னு முழுசா தெரியல. செரோடோனின் அதிகமா இருக்கு... மூளை செல்களிடையே கனெக்ஷன் சரியா வளரலே.. அதுனால செயல்பாடு உள்ள இடம் கம்மியா இருக்கு. ஆராய்ச்சி நடந்திண்டுருக்கு. இதை கவனிக்க மூளை மருத்துவர், உளவியல் நிபுணர்,
பேச்சுப் பயிற்சியாளர் இப்படிப் பல நிபுணர்கள் ஒத்துழைப்பு, பெற்றோருடைய ஒத்துழைப்பு எல்லாம் தேவைப்படுது. ஆனா பொறுமையா அன்பா நடத்தி ஓரளவு இவர்கள் தன்னைத் தானே கவனித்துக் கொள்கிற அளவுக்கு செய்யலாம்.'

'இதை நீங்க ராகவன் கிட்ட அங்கயே சொல்லியிருக்ககலாமே?'

'எல்லாரையும் வெச்சிண்டு இதச் சொல்றது சங்கடம்.. ராகவனை ஆபீசில கூப்பிட்டு விவரம் சொல்லிவிட்டேன்.. சில டாக்டர்கள் விலாசம்... ஆட்டிச நோயாளிகளை சமாளிக்கும் வழிகள் பத்தின விவரம் தபால்ல அனுப்பியாச்சு'

எல்லே சுவாமிநாதன்,
லாஸ் ஏஞ்சல்ஸ்

© TamilOnline.com