முனைவர் அ.போ. இருங்கோவேள்
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல் துறை மேலாளர்; சங்கர நேத்ராலயா அகாடமியில் மருத்துவ சமூகவியல் மற்றும் தமிழ் இலக்கியம் என இரு புலங்களின் பேராசிரியர் டாக்டர் இருங்கோவேள். சமூகவியல், சமூகப்பணி, தமிழ் இலக்கியம் இவற்றில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். 'பாரதத்தில் கண் தான இயக்கம் - ஒரு சமூக வரலாற்று ஆய்வு' என்ற தலைப்பிலான ஆய்வுக்கு முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். சங்கர நேத்ராலயாவில் கண் வங்கித் துறைத் தலைவராகச் சுமார் 18 வருடங்கள் சேவை செய்தவர். 'பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் சோஷியாலஜி'யில் இவரது பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. எழுதாத இதழ்களே இல்லை என்னுமளவிற்கு தமிழக மற்றும் வெளிநாட்டு (தென்றல் உட்பட) இதழ்களில், கண் பாதிப்பு, சிகிச்சை, தீர்வு குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கவிதை, சிறுகதை, குறுநாவல் என்றும் நிறைய எழுதியிருக்கிறார். சங்கர நேத்ராலயாவிலிருந்து வெளியான அகம், தர்ஷன் போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த அனுபவமும் உண்டு. இதோ, இருங்கோவேள் பேசுகிறார், கேட்போமா?

★★★★★


கே: உங்கள் பெயரே சங்ககால அரசரை நினைவுபடுத்துகிறது. இதற்கு ஏதாவது பின்னணி உண்டா?
ப: எனது முழுப்பெயர் போத்தியடியா இருங்கோவேள். போற்றி அடியார் இருங்கோவேள் என்பது மருவி போத்தியடியா இருங்கோவேள் என்றானதாக என் பாட்டனார் செல்லையா பிள்ளை (எ) போத்தியடியா இருங்கோவேள் சொல்லியிருக்கிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு அருகே, கொடும்பாளூரைத் தலைநகராகக் கொண்டு மலைநாட்டை ஆண்டு வந்த வேளிர்குல மன்னர்கள் பெயர் இருங்கோவேள். அந்த வழி வந்தவர்கள் நாங்கள். இது எங்கள் குலப்பெயர். எங்கள் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் இப்போதும் பலருக்கு இந்தப் பெயர் உள்ளது.

குரு Dr S.S. பத்ரிநாத் அவர்களுடன்



கே: உங்கள் இளமைப் பருவம் பற்றி...
ப: எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். முன்னோர்களில் ஆண்கள் படைத்தளபதிகளாகவும், வீரர்களாகவும், பெண்கள் விவசாயத்தைக் கவனித்தும் வாழ்ந்துள்ளனர். எனது தாத்தா நிலக்கிழாராக இருந்தாலும் ராணுவத்தில் பணியாற்றியவர். அப்பா மத்திய சுங்க இலாகாவில் பணியாற்றினார். மூன்று அக்காமார், ஒரு அண்ணன், அடுத்து நான், ஒரு தங்கை என்று பெரிய குடும்பம். மதுரை ஆயுதப்படைக் குடியிருப்பின் நகரசபை ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன்.

பக்கத்துப் போர்ஷனில் அன்னபூரணிப் பாட்டி-சொக்கலிங்கம் தாத்தா வசித்தனர். அவர்கள் வழியே தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருப்பள்ளியெழுச்சி, கந்தரலங்காரம் எல்லாம் அறிமுகமாயின. 'நீறில்லா நெற்றி பாழ்' என்று சொல்லி எப்போதும் திருநீற்று முகத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். அப்பாவும் அப்படித்தான். நானும் சிறுவயது முதலே அந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டேன்.

நான் குழந்தையாக இருந்தபோது அம்மா அடிக்கடி முடிவைத்தானேந்தல் கிராமத்திற்கு விவசாயத்தைக் கவனிக்கப் போய்விடுவார். நானும் அவ்வப்போது அவரோடு போவேன். தோட்டத்தில் சீனிக்கிழங்கு, பனம்பழம், பனங்கிழங்கு சுட்டுத் தின்பது ரொம்பப் பிடிக்கும். பிற்பகலில், அப்பாவின் சேகரிப்பான கல்கி, கலைமகள், அமுதசுரபி, ஆனந்த விகடன், மஞ்சரி, பொய்யாமொழி, பரணீதரன் எழுதிய அருணாசல மகிமை, கல்கியின் பொன்னியின் செல்வன், அலைஓசை போன்ற புத்தகங்களை அம்மாவுக்கு வாசித்துக் காண்பிப்பேன். அம்மா ஆர்வத்தோடு கேட்பார். ஆனால், இவை ரொம்ப வருடம் நீடிக்கவில்லை.

கே: ஏன், என்ன நிகழ்ந்தது?
ப: அம்மாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனைகள் மூலம் அது புற்றுநோய் என்று தெரியவந்தது. சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்றனர். அறுவை சிகிச்சை நடந்தது, ஆனால், பலனில்லை. மருத்துவமனையில் நோய் மிகவும் முற்றிவிட்டது என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் செல்லக் கூறிவிட்டனர். மதுரைக்கு வரும் வழியிலேயே அம்மா காலமாகிவிட்டார். அப்போது எனக்கு வயது பத்து.

ஜெயகாந்தன், SP முத்துராமன், வசந்தி பத்ரிநாத் ஆகியோருடன்



கே: அடடா, மிகப் பெரிய சோகம்...
ப: ஆமாம். அதிலிருந்து மீள எனக்கு வெகுநாட்கள் ஆயின. ஆனால், நான் அப்போது ஒரு உறுதி எடுத்துக்கொண்டேன். அந்த உறுதிதான் ஒரு விதத்தில் என்னை இங்கே, இந்த சமூகப் பணியில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

கே: ஓ. என்ன அது?
ப: புற்றுநோயின் காரணமாக அம்மா அடைந்த வலி, வேதனை, மன அழுத்தம் அனைத்தையும் நேரில் பார்த்தவன் நான். ஆகவே, புற்று நோயாளிகளுக்குச் சேவை செய்யும் மருத்துவர் ஆகவேண்டும் என்று அந்தச் சிறுவயதில் மனதிற்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். அதுவரை தமிழாசிரியர் ஆகும் குறிக்கோளில் இருந்தவன், புற்றுநோய் மருத்துவத்துறையில் சேவை என்று எனது நோக்கத்தை மாற்றிக்கொண்டேன்

உம்மாச்சித் தாத்தா தந்த தங்கக்காசு
நான் சிறுவனாக இருந்தபோது, பக்கத்து போர்ஷன் தாத்தா, பாட்டி இருவரும் என்மீது மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். ஆலயத்தில் நடைபெறும் திருநெல்வேலி சைவ சித்தாந்த நெறிக் கழகத்தின் சொற்பொழிவுகளுக்கு அழைத்துச் செல்வார்கள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, கழகத்தின் கவிதைப் போட்டி ஒன்றுக்காக அவர்கள் என்னை ஒரு பாடல் எழுத வைத்தனர்.

ஒருநாள் ஒரு பெரிய கூட்டத்தில், அந்தப் பாடலை எழுதியதற்காக அங்கிருந்த ஒரு உம்மாச்சி தாத்தா எனக்கு ஒரு தங்கக்காசு குடுத்தார். நான் வாங்க மறுத்தேன். 'யார் எது கொடுத்தாலும் வாங்கக்கூடாது' என்பது எனது தாயாரின் அறிவுரை. பாட்டி வற்புறுத்தவே, அதனை வாங்கிக்கொண்டேன். பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் எனது நெற்றியில் திருநீறு பூசிவிட்டார். தாத்தா, பாட்டி இருவரும் என்னை அந்த உம்மாச்சித் தாத்தாவை சேவிக்கச் சொல்ல, நான் சேவித்தேன்.

மறுநாள் வந்த கல்கி வார இதழ் அட்டைப்படத்தில் உம்மாச்சித் தாத்தாவின் போட்டோவைப் பார்த்தேன். அதை அம்மாவிடம் காட்டி, "இந்த உம்மாச்சித் தாத்தாதான் நேற்று எனக்குத் தங்கக் காசு குடுத்தார்" என்று சொன்னேன். அம்மா உடனே, என்னைப் பக்கத்து போர்ஷன் பாட்டியிடம் அழைத்துச் சென்றார். அப்புறம்தான் தெரிந்தது, எனக்கு தங்கக் காசு கொடுத்தவர் காஞ்சி மகா பெரியவர்தான் என்பது!
டாக்டர் அ.போ. இருங்கோவேள்


கே: அதன் பின்?
ப: ஆறாம் வகுப்பு முதல், மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, மதுரை தியாகராஜர் கல்லூரியில் புகுமுக வகுப்பு (பி.யூ.சி.) படித்தேன். கிடைத்த நேரத்தில் மதுரை நாராயணபுரம் டாக்டர் எஸ்.பி.எஸ். சண்முகத்தின் இலவச மருத்துவ ஆலோசனை மையத்தில் சேவை செய்தேன் (இப்போது அங்கு மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது). வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றேன். அப்போதே ஒரு புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆனதுபோல மகிழ்ந்தேன். ஆனால், அதே வாரத்தில் எனது மூத்த சகோதரி ராஜலெக்ஷ்மி தேவி அகால மரணமடைந்தார். அது குடும்பத்திற்கே மிகப்பெரிய பின்னடைவானது. சில சூழல்களால் மருத்துவக் கல்லூரிப் படிப்பில் சேர முடியாமல் போனது. மெல்ல மெல்ல இழப்புக்களிலிருந்து மீண்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை சமூகவியல் சேர்ந்தேன்.

கே: கல்லூரிக் கால நட்பு அருமையானது, அல்லவா?
ப: ஆமாம். ஒழுக்கம், நேர்மை, நட்பு, அன்பு, ஆன்மீக சிந்தனை, உதவும் மனப்பான்மை, தோள் கொடுக்கும் தோழமை – இவை மாணவப் பருவத்தில் கிடைக்கும் நல்ல நட்புகளின் மூலம் மட்டுமே ஒரு மனிதனுக்குச் சாத்தியம். அவை என் நண்பர்கள் முத்துக்குமாரசாமி, துளசிராமன் மற்றும் நான் என எங்கள் மூவருக்குமே வாய்த்தது. மிகவும் ஒற்றுமையாக இருப்போம். எல்லா இடத்துக்கும் ஒன்றாகப் போவோம், வருவோம். கல்லூரிப் பேராசிரியர்கள் எங்களை 'மும்மூர்த்திகள்' என்று அழைப்பார்கள் (அகவை அறுபதை எட்டிய நிலையில் இன்றும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். வாரம்தோறும் பேசிக்கொள்கிறோம்).

ஏபிஜே அப்துல்கலாம் அவர்களுடன் மேடையில்



கே: அருமை!
ப: கல்லூரிக் காலத்தில் மகாகவி பாரதி உருவச்சிலைக் கமிட்டி நடத்திய அனைத்துக் கல்லூரி தமிழ் இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியில் 'மகாகவி பாரதியின் குயில்பாட்டு - ஓர் ஆராய்ச்சி' என்ற எனது கட்டுரைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்றவர் கல்யாணி. மதுரையில் ஒரு பிரபல கல்லூரியில் தமிழ் இலக்கிய மாணவி. அவர் எனக்குச் சிறந்த தோழி ஆனார்.

எனது பேராசிரியர்களும் என்னை ஊக்குவித்தனர். பரிதிமாற்கலைஞரின் பேரன் பேராசிரியர் வி.சு. கோவிந்தன், பட்டிமன்றப் பேராசிரியர் தா.கு. சுப்பிரமணியன், பழமொழி மன்னர் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், சிலேடைக்கவிஞர் வி. துரைசாமி என்று தமிழ்த்துறையில் அனைத்துப் பேராசிரியர்களின் ஆசீர்வாதத்திற்கும் அன்புக்கும் பாத்திரமானேன்.

தினசரி காலை ஏழு மணிமுதல் ஒன்பது மணிவரை மதுரை அரசினர் எர்ஸ்கின் பொது மருத்துவமனையில் (பின்னர் அரசினர் இராசாசி பொது மருத்துவமனை எனப் பெயர் மாற்றப்பட்டது) சமூகசேவை. ஞாயிற்றுக்கிழமைகளில் அரவிந்த் கண் மருத்துவமனை நடத்தும் கண் சிகிச்சை முகாம்களுக்கு தன்னார்வச் சேவகர் என எனது மருத்துவ சமூகப் பணி தேசீய சேவைத் திட்டத்தின் (NSS) வழியே தொடர்ந்தது.

MS சுப்புலட்சுமி அம்மாவுடன்



கே: அடுத்து?
ப: இளங்கலை சமூகவியல் கடைசிப்பருவத் தேர்வு எழுதிய பின்னர், என்.எஸ்.எஸ். கேம்ப் செல்வதாகச் சொல்லிவிட்டு கொல்கத்தா சென்றேன். மே மாதம் 'மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி'யில் அன்னை தெரசாவுடன் தன்னார்வத் தொண்டு செய்தேன். (அப்போது அங்கே இருந்த இன்னொரு தமிழன்பர் 'உதவும் கரங்கள்' வித்யாகர். அவர் எம்.ஏ. சமூகப்பணி முடித்துவிட்டுச் சேவை செய்து கொண்டிருந்தார். பின்னர்தான் அவர் 'உதவும் கரங்கள்' அமைப்பை ஆரம்பித்தார்.) அங்கே புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மன நோயாளிகளுக்கும் சேவை செய்தோம். பின்னர் ஜூன் மாதத்தில் பேலூர் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சேவைப் பணியைத் தொடர்ந்தேன்.

சாந்தி நிகேதன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சமூகப்பணி படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், என் தந்தை வெளியூரில் படிக்க அனுமதிக்கவில்லை. கல்லூரித் தேர்வு முடிவுகள் வெளியாயின. பல்கலைக்கழக அளவில் சிறப்பிடமும் கிடைத்தது. ஆனால், தேர்வு முடிவு வந்த அன்று, எனது தோழி கல்யாணி மூளைப் புற்றுநோயால் காலமானார்.

கே: அடடா... எத்தனை சோகங்கள்! அதுவும் புற்றுநோய் காரணமாகவே...
ப: ஆமாம். இவை எனக்கு வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தின. சேவையின்மீது மென்மேலும் ஈடுபாடு கொள்ள வைத்தன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் எம்.ஏ. சமூகவியலில் சேர்ந்தேன். தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது ஆங்கில இலக்கியத்திலும் ஈடுபாடு அதிகரித்தது. பகல் நேரத்தில் எம்.ஏ. படித்துக்கொண்டே, மாலைக் கல்லூரியில் பட்டமேற்படிப்புப் பட்டய வகுப்பில் 'உளவியல்' (PG Diploma in Psychology - Psychiatric Social Work) படித்துத் தேர்ச்சிபெற்றேன்.

பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் விடுமுறையில் சென்றார். சில பேராசிரியர்களின் அன்பு காரணமாக, எம்.ஏ. இறுதித்தேர்வு எழுதிய உடனேயே அந்த விடுமுறை வேலைவாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஆனால், சம்பளம் கிடையாது. பின்னர் எம்.ஃபில். முடித்தேன். சமூகப்பணிப் பாடத்தில் மற்றும் ஒரு எம்.ஏ. பட்டம் பெற்றேன். மருத்துவமனைகளில் எனது தொண்டு தொடர்ந்தது. இரண்டு வருட விடுமுறையில் சென்ற விரிவுரையாளர் திரும்பி வர, எனக்குப் பணி விடை உத்தரவு வந்தது.

அம்மா காலமானபோது நிர்ணயித்துக் கொண்ட இலக்கை அடையவில்லை என்பதும், அம்மாவின் மரணம், அக்காவின் அகால மரணம், தோழியின் மரணம் போன்றவையும் என் நினைவில் வந்து வந்து தொந்தரவு செய்துகொண்டே இருந்தன.

பாலகுமாரனுடன்



கே: பிறகு?
ப: புது தில்லியில் ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்றவன், சென்னை வந்து அங்கு முகாமிட்டிருந்த காஞ்சி மகானைத் தரிசித்தேன். மாபெரும் அதிசயம், தங்கக் காசு அளித்து அடியேனை ஆசீர்வதித்ததை அவர் நினைவில் வைத்திருந்தார் (பார்க்க: பெட்டிச் செய்தி). என்னைப்பற்றி விசாரித்து எனக்கொரு ஆலோசனை சொன்னார். அதன்படி காளஹஸ்திக்குச் சென்று திருக்காளத்திநாதரைத் தரிசித்துவிட்டு மதுரை சென்றேன். வீட்டில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்புக் கடிதம் காத்திருந்தது.

கே: அடடா, ஆச்சரியம்தான்!
ப: சென்னையில் நேர்முகத் தேர்வை டாக்டர் சாந்தா அவர்களே நடத்தினார். ஏப்ரல் 23, 1986 அன்று - ஒரு மருத்துவராக அல்ல - மருத்துவ சமூகப் பணி ஆய்வாளராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எனது பயணத்தைத் தொடங்கினேன்.

யார் அவர்?
அது 1980ம் வருடம். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம். மதுரை அரசினர் பொது மருத்துவமனையில் தினசரி காலை இரண்டு மணி நேரம் மருத்துவ சமூகப் பணி செய்து கொண்டிருந்தேன். என்.எஸ்.எஸ். வாலன்டியர் ஆன எங்களுக்கு வெள்ளை பேண்ட், வெள்ளைச் சட்டை சீருடை. நோயாளிகள் எங்களை டாக்டர் என்றே நினைப்பார்கள். நாங்களும் முதலுதவி உள்பட பல மருத்துவப் பணிகளைக் கற்றுக்கொண்டு, மருத்துவர்களுக்கு உதவியாகச் சில சேவைகளைச் செய்து வந்ததால் பலரும் அப்படி நினைத்ததில் ஆச்சரியமில்லை.

பொது வார்டில், கட்டிலில் இடமில்லையென்றால், தரையில், பாயில் பல நோயாளிகள் படுப்பது வழக்கம். அப்படிப் படுத்திருந்த ஒரு நோயாளியை பாத்ரூம் செல்வதற்கு அழைத்துச் சென்று, அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து அவரது வேஷ்டியைச் சரியாகக் கட்டிவிட்டு, பாயில் படுக்க வைத்தேன். திடீரென்று ஐந்தாறு பேர் அங்கே வேகமாக வந்தார்கள். அவர்களைவிட வேகமாக முன்னால் ஓடிவந்தவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்!.

நோயாளியைத் தரையில் படுக்கவைத்து, ஒரு போர்வையை நான் போர்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்தவர், நான் வெள்ளை பேண்ட்-சட்டை அணிந்திருந்ததைப் பார்த்து, நான் மருத்துவ மாணவர் என்று நினைத்து, "என்ன இது? இவரை இப்படித் தரையில் படுக்க வைத்திருக்கிறீர்களே! இவர் யார் என்று தெரியுமா உங்களுக்கு?" என்று மிகுந்த கோபத்துடன் கேட்டார்.

நான் பயந்து நடுங்கிக்கொண்டே, 'தெரியாது' என்றேன். எனக்கு மட்டுமல்ல, மதுரை மருத்துவக் கல்லூரி டீன், ஆர்.எம்.ஓ. உள்ளிட்ட யாருக்குமே தெரியாது. சொல்லாமல் கொள்ளாமல், திடீரென்று எம்.ஜி.ஆர். அந்த வேளையில் அங்கே வருவார் என்பதும் தெரியாது.

முன்னாள் மக்களவை உறுப்பினரும், காமராஜர் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக 9 வருடங்கள் இருந்தவருமான கக்கன் அவர்கள்தான் அங்கே தரையில் படுத்திருந்தவர்!

முதல்வர் எம்.ஜி.ஆர். உத்தரவின்படி கக்கனுக்கு தனியறை ஒதுக்கப்பட்டது. ஆனால், அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் பொது வார்டிலேயே ஒரு கட்டில் ஏற்பாடு செய்தோம். பின்னர் எம்.ஜி.ஆர்., நாங்கள் சமூக சேவகர்கள் என்று தெரிந்து, என்னையும் என் நண்பர் முருகேசனையும் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அப்போதெல்லாம் செல்ஃபோன் கிடையாது; செல்ஃபி கிடையாது. இருந்திருந்தால் செல்ஃபி எடுத்திருக்கலாம்! நிச்சயமாக எம்.ஜி.ஆர். செல்ஃபோனைத் தட்டிவிட்டிருக்க மாட்டார். கட்டி அணைத்து போஸ் குடுத்திருப்பார். ஏனென்றால், அவர் எம்.ஜி.ஆர்.
டாக்டர் அ.போ. இருங்கோவேள்


கே: உங்கள் ஆரம்பகாலப் பணிச்சூழல் எப்படி இருந்தது?
ப: பணிச்சூழல், தனிப்பட்ட வாழ்க்கைச் சூழல் எல்லாமே சவாலாகத்தான் இருந்தன. நான் பணியாற்றியது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு திட்டத்தில். அரசினர் பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரி இவைதாம் எனது முக்கியமான பணிக்களம். அது போகச் சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஐந்து சென்னை மாநகராட்சி அலுவலகங்கள். பிற்பகல் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளை நேர்முகப் பேட்டி கண்டு பதிவுசெய்ய வேண்டும். நோயாளிகளுக்கு ஆலோசனை (கவுன்சலிங்), புற்றுநோய் குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

சர்ஜிகல் கேஸ்ட்ரோ என்டிராலாஜிஸ்ட் (இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர்) டாக்டர் என். ரெங்கபாஷ்யம், நரம்பியல் நிபுணர் டாக்டர் என். ராமமூர்த்தி, மூத்தோர் மருத்துவ நிபுணர் டாக்டர் வி.எஸ். நடராஜன், பேதாலஜிஸ்ட் டாக்டர் சரசா பாரதி, பொது மருத்துவ நிபுணர் டாக்டர் பி.என். ராஜப்பன் இவர்களோடு, எங்கள் சேர்மன் டாக்டர் விலாசினி சாந்தா அவர்களுடனும் பணியாற்றுவது எனக்குப் பெருமையாக மட்டுமல்ல; மிகப்பெரிய சவாலாகவும் இருந்தது.

என்னுடன் பணியாற்றிய சிலருக்கு நாங்கள் சோஷியல் ஒர்க்கர்தானே என்ற ஏளனம் இருந்தது. ஆனாலும் உடலிலும் மனதிலும் வேதனையைச் சுமந்துகொண்டு, ஏதாவது மாயம் நடந்துவிடாதா என்று மிரட்சியோடு இருக்கும் நோயாளிகளுக்கு நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணம் அந்த ஏளனங்களைத் தவிடு பொடியாக்கியது. அவ்வப்போது ஏற்படும் மனச்சோர்விலிருந்து இலக்கியமும் எழுத்தும் என்னைக் காப்பாற்றியது.

Ph.D. வழிகாட்டி Dr. G. சீதாலக்ஷ்மி அவர்களுடன்



கே: அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
ப: சென்னையில் தனிக்கட்டைகள் மேன்ஷன் ஒன்றில் தங்கி இருந்தேன். பக்கத்து அறையில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ். அவரோடு தினசரி இரவு சரவணபவனில் சாப்பிடப் போவதும், ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னிமரா நூலகம் செல்வதும் வழக்கமானது. சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி வந்ததால், எழுத்தாளரான அவரிடம் எனது அன்றாடப் பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன். அவரும், "இதையெல்லாம் அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பயன்படும்" என்பார்.

ஒருநாள் நான் பயனாளி ஒருவருக்குக் கவுன்சலிங் செய்து கொண்டிருந்தபோது சஃபாரி உடை அணிந்த ஒரு பெரியவரும் மற்றொருவரும் அந்தப் பயனாளியைச் சந்திக்க அங்கே வந்தனர். நான் பேசுவது முழுவதையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். பின் அந்தப் பெரியவர், "நீங்கள் இவரோடு பேசியதை அப்படியே எழுதித் தரமுடியுமா?" என்று கேட்டார். நான் ஆச்சரியமாகப் பார்த்தபோது, "நான் மகாதேவன். ஐராவதம் மகாதேவன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். உடன் வந்தவர் லா.ச.ரா.! நான் அதை எழுதிக் கொடுக்க, 'கடகம்' என்ற அந்தக் கட்டுரை தினமணியில் வெளிவந்தது. அன்று இரவு ஸ்டெல்லா புரூஸ், என்னைச் சரவணபவனுக்கு அழைத்துச் சென்று இனிப்புடன் ஸ்பெஷல் சாப்பாடும் வாங்கிக் கொடுத்தார். இவ்வாறாக இலக்கியமும் மருத்துவ சமூகவியலும் என்னை வார்த்தெடுத்தன.

கே: டாக்டர் சாந்தாவிடம் பணியாற்றிய காலத்தின் மறக்க முடியாத நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
ப: ஒன்றை மட்டும் சொல்கிறேன். அது 1987ம் வருடம். அப்போது சாந்தா மேடம் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் டைரக்டர் அன்ட் சயின்டிஃபிக் டைரக்டர் ஆக இருந்தார். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சேர்மன். திடீரென ஒருநாள் சாந்தா மேடத்தின் தாயார் காலமாகிவிட்டார். நானும் இன்னும் சிலரும் இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றோம்.

அவரே வாசலுக்கு வந்து எங்களை வரவேற்றார். என்றும் மாறாத அதே புன்சிரிப்பு. ஆனாலும் தனது தாயார் மரணமடைந்த வேதனை அவரது முகத்தில் தெரிந்தது. நாங்கள் எங்களது இரங்கலைத் தெரிவித்தபோது, "அம்மாவை இத்தனை காலம் என்னோடு விட்டுவைத்தமைக்காக கடவுளுக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும். அர்ப்பணிப்பு மனப்பான்மை மிக்க சமூகசேவகர்கள் நீங்கள் எல்லோரும் இருக்கும்போது எனக்கு என்ன கவலை?" என்றார். எங்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து எங்களுடன் பேசினார். அவரே எங்களுக்கு அந்த வேதனையான நிலையிலும் டீ, பிஸ்கட்டைத் தன் கையாலேயே கொடுத்தார்.

நான் எனது கையில் ஒருட்ரான்ஸ்ஃபரன்ட் ஃபைல் வைத்திருந்தேன். அதில் அன்று வெளிவந்த ஒரு வாரப் பத்திரிகை இருந்தது. அதனைப் பார்த்தவர், "என்ன எழுத்தாளரே, இந்த இஷ்யூவில் உங்கள் கதை, கட்டுரை ஏதும் வந்திருக்கிறதா?" என்று கேட்டார். 'இவருக்கு எப்படி அது தெரிந்தது?' என்று நான் ஆச்சரியத்துடன் எங்களில் சீனியரான திருமதி லெக்ஷ்மி சாரதியைப் பார்த்தேன். அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

சிவசங்கரி, ரஜினிகாந்த் ஆகியோருடன்



மேடம் கைகளை நீட்ட, அந்த வார இதழை அவரிடம் பயம் கலந்த மரியாதையுடன் கொடுத்தேன். எனது சிறுகதை ஒன்று அந்த இதழில் வெளிவந்திருந்தது. இதழைப் புரட்டிக்கொண்டே வந்தவர், புத்தகத்தின் பின்புற உள் அட்டையைப் பார்த்தார். அது ஒரு திரைப்பட விளம்பரம். கதாநாயக நடிகர் வாயில் சிகரெட்டுடன் இருக்கும் படம். பின் அட்டையைப் பார்த்தார். அது ஒரு பிரபல நடிகை, கையில் மதுக் கோப்பையுடன் இருக்கும் விஸ்கி விளம்பரப் படம்,

நாங்கள் அனைவரும் 'தேசியப் புற்றுநோய்ப் பதிவு' (National Cancer Registry) என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Medical Research) திட்டத்திலும் பணியாற்றி வந்தோம், அதனை மனதில் வைத்து, "ஒவ்வொரு நாளும் கேன்சர் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இப்படிப் பிரபலமான புத்தகங்களிலும் ஸ்மோக்கிங், ட்ரிங்கிங் எல்லாவற்றையும் ஊக்குவிக்கும் விளம்பரங்களும், சினிமாக்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாம் இன்னும் அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்" என்றார். அந்தச் சோகச்சூழலிலும் கூட அவரது தொழில் மீதான அக்கறை வெளிப்பட்டது.

நாங்கள் விடைபெற எழுந்தோம். "கொஞ்சம் இருங்கோ…" என்றவர், உள்ளே சென்று ஒரு தட்டு நிறைய லட்டுக்களுடன் வந்தார். ஆளுக்கு ஒவ்வொரு லட்டுக் கொடுத்தார். 'துக்கம் விசாரிக்க வந்த இடத்தில் லட்டுக் கொடுக்கிறார்களே?' என்று நான் மேடம் முகத்தைப் பார்த்தேன்.

"எங்க அம்மா, தன்னைப் பார்க்க யார் வந்தாலும், அவங்களுக்கு லட்டு குடுப்பா. இப்போ அவ இல்லை, அதனாலே நான் குடுக்கிறேன்" என்று அவர் சொன்னபோது அவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. எங்களது கண்களையும் கண்ணீர் மறைத்துவிட்டது.

அதன் பின்னர், அந்த வார இதழில் சிகரெட், மது விளம்பரங்கள் இன்றுவரை வருவதில்லை. மட்டுமல்ல; புற்றுநோய் என்றால் மரணம்தான் என்று பேசும் வகையிலான கதைகளும் வெளிவருவதில்லை. மேடம் அந்தப் பத்திரிகை நிர்வாகத்துடன் பேசியிருக்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

டாக்டர் சாந்தாவுடன் மூன்று வருடங்கள் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் நான் பணியாற்றினேன் என்பது எனக்கு என்றும் கண்ணீர் கலந்த கௌரவம்.

தனது மாணவர்களுடன்



கே: உங்கள் வாழ்க்கையையே ச.மு. - ச.பி. (சங்கர நேத்ராலயாவுக்கு முன் – சங்கர நேத்ராலயாவுக்குப் பின்) என்று பகுக்கலாம் அல்லவா?
ப: முற்றிலும் உண்மை. நான் சங்கர நேத்ராலயாவில் இணைவதற்கு முன்பு, குறிப்பிட்ட துறைகளில் - அதாவது புற்றுநோய் மருத்துவர்கள், பயனாளிகள், மனநல மருத்துவ வல்லுநர்கள், உளவியல் வல்லுநர்கள், மனநோயாளிகள், குடி மற்றும் போதை மருந்துகளுக்கு ஆளானவர்கள் என்று அந்தத் தளங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தேன்.

புற்றுநோய் நிறுவனம் மற்றும் சங்கர நேத்ராலயா அத்தியாயங்களுக்கு இடையில் அகில இந்திய சமூக மருத்துவ சங்கம் என்னும் என்.ஜி.ஓ.வில் மூன்று ஆண்டுகள் ஒரு மனநல சமூக சேவகர் மற்றும் உளவியல் ஆலோசகராகப் பணியாற்றினேன். அந்தக் காலகட்டத்தில் மனநல வல்லுநர்கள் டாக்டர் சாரதா மேனன், டாக்டர் சுரேஷ் குமார், டாக்டர் சகுந்தலா சுரேஷ்குமார், டாக்டர் சாந்தி கருணாகரன் ஆகியோருடன் பணிபுரிந்தேன். அந்த அமைப்பின் தலைவராகப் பிரபல மூத்த வழக்கறிஞர் திரு என்.சி. ராகவாச்சாரி இருந்தார். இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் அந்த அமைப்பு செயல்பட்டது.

ஒரு நாள் சங்கர நேத்ராலயாவின் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். தலைவர் என்.சி. ராகவாச்சாரியின் அனுமதி பெற்று அதற்கு விண்ணப்பித்தேன். கடும் போட்டிக்கிடையில் நான் தேர்வானேன்.

கலாமும் நானும்
திரு அப்துல் கலாம் அவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியபோது, சங்கர நேத்ராலயாவில் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அந்த நிகழ்ச்சியில் நான் கவிதை வடிவில் நன்றியுரையாற்றினேன். அப்போது அவர் பாரதத்தின் முதற் குடிமகனாகப் பொறுப்பேற்று இளைய பாரதத்தை வழிநடத்த வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

நிகழ்ச்சி முடிந்த பின் கலாம் என்னிடம், "இன்றைய நிலையில் நம் அரசியல்வாதிகள் ஆசிரியரையோ அல்லது ஓர் அறிவியலாளரையோ அத்தனை சுலபமாக குடியரசுத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஓர் ஆசிரியராகவே நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார். அந்தக் கவிதையைக் கேட்டு வாங்கிக் கொண்டார். அன்று மாலை, சென்னை மியூசிக் அகாடெமியில் நடந்த எங்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கும் அவர்தான் சிறப்பு விருந்தினர். அவருக்கே தெரியாமல் ஒரு வீணையை ஏற்பாடு செய்து, ஒரு கீர்த்தனை வாசிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டோம். ஆனந்தமாக வாசித்தார்.

2002ம் வருடம், அவரது பெயர் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது. அடுத்த நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, "தம்பி நீ கவிதையில் வேண்டுகோள் வைத்தாய். அது இறைவன் காதில் விழுந்துவிட்டது போல. மகிழ்ச்சி. நன்றி." என்று சொல்லி ஆசீர்வதித்தார். எங்கள் டெலிமெடிசின் துறையை குடியரசுத்தலைவர் ஆனபிறகு அவர்தான் தொடங்கி வைத்தார். அந்தத் துறையின் பொறுப்பையும் சிறிது காலம் நான் ஏற்றுக் கொண்டிருந்தேன்.

அவருக்கு சங்கர நேத்ராலயாவில் தான் கேடராக்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது. நமது தேசம் அவரை, அவரது திறமையை, அறிவை, மேதைமையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
டாக்டர் அ.போ. இருங்கோவேள்


கே: சங்கர நேத்ராலயாவில் உங்கள் பங்களிப்புகள் என்ன?
ப: எனது பன்முகத் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் சங்கர நேத்ராலயா நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களும் துணைத்தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரனும் பல வாய்ப்புகளை வழங்கினர். சங்கர நேத்ராலயாவில் இணைந்தபோது கண் வங்கியின் தலைமைப் பொறுப்பு, கிராமப்புற இலவசக் கண் சிகிச்சை முகாம்கள், கண் மருத்துவ ஆராய்ச்சிகளின் ஆலோசகர், பொதுமக்களிடையே கண் நலம் மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வுப் பணி என்னுடையது. அதற்காகப் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசு/தனியார் நிறுவனங்கள், ரோட்டரி, அரிமா போன்ற சேவை அமைப்புகள், தொழிற்சங்க அமைப்புகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பல்துறைக் கலைஞர்கள் என்று எல்லோருடனும் இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது.

அது மட்டுமல்ல 25 வருடங்களுக்கு முன்பே, மெட்ராஸ் மெடிகல் மிஷன் மற்றும் சில மருத்துவ அமைப்புகளில் வருகைப் பேராசிரியர் அழைப்புகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் ஆஃப் மெடிகல் சோஷியாலஜி போன்றவற்றில் கௌரவப் பொறுப்புகள் கிடைத்தபோது. "இது சங்கர நேத்ராலயாவுக்குப் பெருமை, கண்டிப்பாக நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று என்னை ஆசீர்வதித்து அனுமதி வழங்கி மகிழ்ந்தார் என் குருநாதர்.

இன்று பல பத்திரிகைகளுக்கு 'கண்கள்' பற்றிய விழிப்புணர்ச்சிக் கட்டுரையாளராக இருப்பதும், மருத்துவ சமூகவியல், தமிழ் இலக்கியம் என இரண்டு புலங்களுக்குப் பேராசிரியராக இருப்பதும் சங்கர நேத்ராலயா அடியேனுக்குத் தந்த கொடை என்றே மகிழ்ச்சியுடன் சொல்வேன்.

சுவாமி கௌதமானந்தரிடம் விவேகானந்தர் விருது பெறுதல்



கே: இந்த கோவிட்-19 நாட்கள், கண் நோயாளிகளுக்கும் சங்கர நேத்ராலயாவுக்கும் மிகப்பெரிய சவால் அல்லவா?
ப: ஆம். நிர்வாகத்தின் எச்சரிக்கை மிகுந்த செயல்பாடு, சட்டதிட்டங்களைச் சரிவரப் பின்பற்றுவது, பிரபல நிறுவனங்கள் உதவ முன்வந்தமை, அந்த காலகட்டத்தில் 'தென்றல்' இதழில் வெளிவந்த அடியேனின் செய்திக் கட்டுரைகளைப் படித்து நன்கொடை வழங்கிய அமெரிக்கா வாழ் அன்பர்களின் நன்கொடைகள் - இவை எங்கள் சேவையை பலப்படுத்தின. சுமார் ஐந்து மாதங்கள், ஒற்றை இலக்கத்தில், அவசர அறுவை சிகிச்சைகளை மட்டுமே செய்தோம். அனைத்து ஊழியர்களும் 10% முதல் 40% வரை ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு, நலத்திட்டங்களைத் தியாகம் செய்து, ஏழை எளியவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம்.

கே: திரைத்துறை அனுபவங்களும் உண்டு, அல்லவா?
ப: ஆம். திரைப்படத்திற்கு எழுதும் குட்டி ஆசை எனக்கு இருந்தது. திரு ஸ்டெல்லா புரூஸின் 'ஒருமுறைதான் பூக்கும்' நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது, என்னைப் பகுதிநேர உதவி இயக்குநராகச் செயல்பட ஊக்குவித்தார் படத்தின் இயக்குநர் திருமுருகன். அவர் மதுரைக்கல்லூரியில் எனக்கு சீனியர். திரைப்படத்திற்காக அலெக்ஸ் பாண்டியன் ஆனார். அப்போது நடைபெற்ற பல சம்பவங்கள், எனது இயல்புக்குத் திரைத்துறை ஒத்துவராது என்பதை உணர்த்தின. அந்த அற்புதமான புதினம், 'ஆண்களை நம்பாதே' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. அதனால் கிடைத்த ஒரே அனுகூலம் நடிகர் 'சார்லி' (இயற்பெயர் மனோகர்) என்ற இலக்கிய ஆர்வலரின் நட்புக் கிடைத்ததுதான்.

ஒரு சமயம், சங்கர நேத்ராலயாவின் ஆட்சிக்குழு உறுப்பினரான ஏ.வி.எம். சரவணன், ரஜினியை வைத்து 'கண் தானம்' பற்றி ஒரு குறும்படம் தயாரிக்க முன்வந்தார். எஸ்பி. முத்துராமன் இயக்குநர். ரஜினிக்குக் கண் தானம் பற்றிய வசனங்களை எஸ்பி.எம்மும், நானும் வாசித்துக் காண்பித்தோம். எனது ஈடுபாட்டைக் கவனித்த திரு ரஜினி, 'நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தில் நடிக்கவேண்டும்' என்று வற்புறுத்தி என்னைக் கண் மருத்துவர் டாக்டர் கணேஷ் ஆக நடிக்க வைத்தார்.(பார்க்க) சங்கர நேத்ராலயாவில் கண் வங்கிக்குப் புதிய வசதிகள் ஏற்படுத்தியபோது, அதனைக் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தவர்கள் ரஜினி, சிவசங்கரி மற்றும் எஸ்பி. முத்துராமன் ஆகியோர்தாம்.

கே: இன்றைக்குக் குழந்தைகளுக்கும் 'கேடராக்ட்' ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறதே!
ப: ஆமாம். 'பிறவிக் கண்புரை' என்பது, குழந்தையின் இயற்கையான கண்ணின் லென்ஸ் தெளிவாக இல்லாமல், மேகமூட்டம் போலத் தெளிவற்று இருக்கும் அல்லது பார்வை மறைக்கப்படும் நிலை. இந்நிலை கண்புரையாக இருக்கலாம் அல்லது வேறு பிரச்சினையாகவும் இருக்கலாம். இதனை மருத்துவப் பரிசோதனை மூலமே உறுதியாகச் சொல்லமுடியும்.

இந்நோய்க்குப் பரம்பரை மூலக்கூறியல் காரணங்கள், தொற்றுநோய்கள், வளர்சிதை மாற்றச் சிக்கல்கள் (Metabolic Problems), நீரிழிவு, விபத்து, அழற்சி, மருந்துகளின் எதிர்விளைவு என்று பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு ஆபரேஷன் ஒருவகை சிகிச்சைதான். கண்புரை ஆபரேஷனின்போது செயற்கை லென்ஸ் பொருத்தப்படுவது நல்ல தீர்வு. ஆபரேஷனுக்குப் பின்னர் கான்டாக்ட் லென்ஸ் அல்லது கண்ணாடி அணிவது போன்றவையும் பரிந்துரைக்கப்படலாம். ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலமும் தீர்வு கிடைப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.

குருநாதருடன் இருங்கோவேள் குடும்பத்தினர்



கே: கண் தானத்தின் முக்கியத்துவம் பற்றி...
ப: உலகில் கண் பார்வை இழப்புக்கு முதல் காரணம் கேடராக்ட் என்றால் அடுத்த காரணம், கார்னியல் கோளாறு. கார்னியா எனப்படும் விழி வெண்படலம், நமது கருவிழிக்கு முன்புறம் ஒரு கண்ணாடி ஜன்னலைப் போலச் செயல்படுகிறது. கார்னியா பாதிப்பை மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட கார்னியாவை அகற்றிவிட்டு, மரணமடைந்தவரின் கண்களை தானமாகப் பெற்று அதிலிருக்கும் கார்னியாவைப் பொறுத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதனைக் கண்கள் தானமாகக் கிடைக்கும்போது தான் செய்யமுடியும்.

ஒருவர் தனது கண்களை தானமாக அளிக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். அவரது மறைவிற்குப் பிறகு நெருங்கிய உறவினர் உடனடியாகக் கண் வங்கியைத் தொடர்பு கொண்டு, அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். மரணம் நிகழ்ந்த ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுக்க வேண்டும். இதற்கு வயது, வரம்பு கிடையாது. கண்களை அகற்றுவதற்கு அதிகபட்சம் 30 நிமிடங்களே ஆகும். கண்களை அகற்றிய அடையாளமே தெரியாது. எனவே மற்றச் சடங்குகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.

கே: உங்களது குடும்பம் பற்றி...
ப: மருத்துவர்கள் மட்டுமல்ல, பல ஊழியர்களும் தங்கள் வாழ்க்கைத் துணையை சங்கர நேத்ராலயாவில் தான் சந்தித்திருக்கிறோம். அடியேனும் என் துணைவி ஸ்ரீதேவியை இங்குதான் சந்தித்தேன். எனது அனைத்து இயக்கங்களிலும் தோள் கொடுக்கும் தோழி அவர். ஒரு மருத்துவமனையில் பல துறைகளில் சேவை செய்து, தற்போது Quality Head ஆக இருக்கிறார். என் இளவரசர் அஸ்வின் பத்ரிநாத் அமெரிக்காவில், 'ஸ்டேட் யுனிவர்சிடி ஆஃப் நியூயார்க்'கில் டாக்டர் பட்ட ஆராய்ச்சி மாணவர். இளவரசி அபிராமி பி.காம்., சி.ஏ. மாணவி. சிறந்த வீணை இசைக் கலைஞராவது அவரது இலக்கு.

அகவை அறுபதை நெருங்கிய இன்று திரும்பிப் பார்க்கிறேன். என்னை நான் விரும்பிய அனைத்துத் துறைகளிலுமே அன்னை மீனாட்சி வைத்து அழகு பார்த்திருக்கிறாள். புற்றுநோயாளிகள் நலம், மன நோயாளிகள் நலம், கண் நோயாளிகள் நலம், அடுத்த தலைமுறை மருத்துவர்களுக்கு வழிகாட்டி என்று பணித்தவள், தமிழ் இலக்கியம், மருத்துவ சமூகவியல் பேராசிரியர் என்ற அடையாளமும் கொடுத்து ஆசிர்வதித்திருக்கிறாள். அன்னை மீனாட்சியின் திருப்பாதங்களுக்கு, எனது பெற்றோரை வணங்கி, இந்த நேர்காணலைச் சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்வோடு சொல்கிறார் இருங்கோவேள். நேர்காணலுக்கு நன்றி கூறி விடைபெறுகிறோம்.

டாக்டர் அ.போ. இருங்கோவேள் பெற்ற விருதுகள்
சைவ சித்தாந்த நெறிக் கழகத்தின் கவிதைப் போட்டியில் காஞ்சி மஹா பெரியவர் கையால் தங்கக்காசு. (பள்ளி மாணவன்)
பாரதி ஆய்வாளர் சீனி. விஸ்வநாதன் திருக்கரங்களால் பாரதி ஆய்வியல் விருது. (கல்லூரி மாணவன்)
எம்.ஜி.ஆர். திருக்கரங்களால் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகச் சிறப்பு நிலை விருது.
விவேகானந்தா கல்விக்கழகத்தின் சேவா விருது.
உதவும் உள்ளங்கள் அமைப்பு வழங்கிய சேவா விருது
சங்கர நேத்ராலயாவில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரும் முதன்மை விருது - 'மேன் ஆஃஃ த இயர் - 1997' (டி.என். சேஷன் கரங்களால்).
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் திருக்கரங்களால் 'சேவா ரத்ன' விருது.
ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சுவாமி விவேகானந்தா தலைமைப் பண்புப் பயிற்சி நிறுவனம் வழங்கிய சுவாமி அபேதானந்தா விருது.
ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை மீனாக்ஷி வழங்கிய 'ஃபார் தி சேக் ஆஃப் ஆனர்' விருது
மற்றும் பல விருதுகள்.


உரையாடல்: அரவிந்த்

© TamilOnline.com