பலே பாண்டியன் பலகாரமும் காபியும் சாப்பிட்டுவிட்டு வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டிருந்தார். அவர் குமாரி சரோஜினி வந்து, "அப்பா, அப்பா, ஜில்லா கலெக்டர் வந்திருக்கிறார், அப்பா. உங்களைப் பார்க்கவேண்டுமாம்" என்றாள். பலே பாண்டியன் அப்படியே துள்ளி எழுந்து, "ஜில்லா கலெக்டரா? என்னைப் பார்க்கவா?" என்று ஆச்சரியம் நிறைந்த குரலில் கேட்டார். சரோஜினி, "என்னப்பா இப்படி ஆச்சரியப்படுகிறீங்க? உங்களைப் பார்க்க ஜில்லா கலெக்டர் வருவது என்ன அவ்வளவு ஆச்சரியமா? அவரும் வருவார், அவருக்கு மேலே இருப்பவரும் வருவார்" என்றாள்.
இச்சமயம் அவர் மனைவி உருளம்மா அங்கே வந்தாள். "நம்ம சரோஜினி சொல்லுவதிலே என்ன தப்பு? அவ பிறந்த அப்புறம்தானே உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகிச்சு. கலெக்டர் மகனுக்கு நம்ம சரோஜினியைக் கட்டிக்கணும்னு கேக்கறதுக்கு வந்திருப்பாருங்க. இது தெரியலையா இந்த ஆம்பிள்ளைக்கு?" என்று தன் உருளை உடம்பை ஆட்டிக்கொண்டு பேசினாள்.
பலே பாண்டியனுக்குச் சந்தோஷம் தாங்கமுடியவில்லை. எழுந்து சென்று ஜில்லா கலெக்டரை வரவேற்று உபசரித்தார். உருளம்மாவும் சரோஜினியும் கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு பேச்சுக்களை ஆவலோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஊர் விவகாரங்களை யெல்லாம் பேசிய பின்பு கலெக்டர் தாம் வந்த காரியத்தைப் பற்றிப் பேச்செடுத்தார்.
கலெக்டர்: பாண்டியரே, எனக்கு ஒரு சிறிய காரியம் நடக்கவேண்டுமே.
பலே பாண்டியன்: காத்திருக்கிறேன்.
கலெக்டர்: ஒரு நல்ல பசுமாடு வேண்டும். நீங்கள் வாங்கினால் மலிவாய்க் கிடைக்குமென்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.
பலே பாண்டியன்: (உள்ள மகிழ்ச்சியோடு) விற்பவர்கள் தெரிந்தவர்களாய் இருந்தால் மலிவாய்க் கொடுக்கத்தானே செய்வார்கள்.
கலெக்டர்: இருந்தாலும் இவ்வளவு மலிவா? ஜவுளிக்கடைக் கந்தசாமிக்கு ஒரு ஜோடி காளைமாடு வாங்கிக் கொடுத்தீர்களாமே. எல்லாரும் ஆயிரம் ரூபாய் மதிப்புப் போடுகிறார்கள். நீங்கள் ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தீர்களாமே?
பலே பாண்டியன்: ஓ ! அதுவா? அந்தக் காளையை விற்ற ஆசாமியும் நானும் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஒன்றாய்ப் படித்தவர்கள். என் பேரில் அவனுக்கு உயிர். நான் கீறிய வரையைத் தாண்டமாட்டான். ஐந்நூறு ரூபாய் வைத்துக் கொள்ளப்பா என்று சொன்னேன். அவன் ஏன் பதில் பேசப் போகிறான்?
கலெக்டர்: அந்தப் பாத்திரக்கடை பரமசிவத்திற்கு இருபது மூட்டை நெல் வாங்கிக் கொடுத்தீர்களாமே? ஊரெல்லாம் மூட்டை முப்பது ரூபாயாக விற்கும்போது நீங்கள் எப்படி இருபது ரூபாய்க்கு வாங்கிவிட்டீர்கள்?
பலே பாண்டியன்: ஓஹோ! அந்தப் பண்ணையார் கொடுத்த நெல்லைச் சொல்லுகிறீர்களா? அவர் என்னிடம் பணமே வாங்க மறுத்துவிட்டார். நான்தான் கட்டாயப்படுத்தி அவரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
கலெக்டர்: உங்களுக்கு 'பலே பாண்டியன்' என்று ஊரில் பேர் வைத்திருப்பது ரொம்பப் பொருத்தந்தான். எந்தச் சாமானாய் இருந்தாலும் உங்கள் மூலமாக வாங்கினால் ஒன்றுக்குப் பாதியல்லவா இருக்கிறது!
பலே பாண்டியன்: அதற்கென்ன, உங்களுக்கு வேண்டியவைகளை யெல்லாம் நானே வாங்கித் தருகிறேன்.
கலெக்டர்: ரொம்ப சந்தோஷம். ஒரு பசு அவசரமாய் வேண்டும். வேளைக்கு இரண்டு படி பால் கறக்க வேண்டும்.
பலே பாண்டியன்: ரொம்ப சீக்கிரமாய் வாங்கித் தருகிறேன். நமக்குத் தெரிந்த ஒரு புள்ளியிடம் ஒரு கராச்சி பசு இருக்கிறது. அதையே முடித்து வைக்கிறேன். இருநூறு முந்நூறுக்குள் முடித்துவிடலாம்.
கலெக்டர்: வேளைக்கு இரண்டு படி பால் தரும் மாட்டை இருநூறு ரூபாய்க்கு முடிக்கலாமா? கராச்சிப் பசுவா? பெரிய ஆச்சரியமாய் இருக்கே?
பலே பாண்டியன்: அந்த ஆசாமி ரொம்ப நாளாக நம்ம வீட்டுக்கு அந்தக் கராச்சிப் பசுவை அனுப்பி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். நான் தான் பொறு அப்பா' என்று சொல்லி வருகிறேன். இப்போ ஒரு வார்த்தை சொன்னால் போதும். சாயந்திரத்திற்குள் பசு வந்துவிடும்.
கலெக்டர்: உண்மையிலேயே உங்களால் இந்த ஊருக்கே பெரிய நன்மை. நான் போய் வரட்டுமா?
பலே பாண்டியன்: நல்லது; மகனுக்குக் கல்யாணம்னு ஒரு பேச்சு கேட்டேனே!
கலெக்டர்: எல்லாம் உங்கள் தயவு இருந்தால் நடப்பது என்ன பிரமாதம்?
இந்தப் பதிலைக் கேட்டு பாண்டியன் மட்டுமல்ல, உருளம்மாவும் சரோஜினியும் அடைந்த ஆனந்தம் அந்த வீட்டு முகட்டிற்கு மேலேயே போய்விட்டது. கலெக்டரை வழி அனுப்பிவிட்டு பலே பாண்டியன் வீட்டுக்குள் திரும்பினார். அவர் மனைவி உருளம்மா அவரைப் பார்த்து, "ஜில்லா கலெக்டர் கூடவல்லவா உங்க தயவு வேணும்னு சொல்றாரு" என்று மகிழ்ச்சியோடு கூறினாள்.
சரோஜினி: என் அப்பா தயவு வேணும்னுதானே கலெக்டரு கேட்டாரு. உன் அப்பா தயவையா கேட்டாரு?
உருளம்மா: அடே என் பொட்டி மகளே, இவளுக்கு வந்த பெருமையைப் பார்க்கலையா? இருக்கட்டுமே, உன் அப்பாவுக்கே அந்தப் பெருமை இருக்கட்டுமே. எனக்கும்தான் அதில் பாதிப் பங்குண்டே! அது கிடக்கட்டும். எப்படித்தான் இந்த மாதிரி மலிவா நீங்கள் வாங்குகிறீர்களோ, தெரியவில்லையே.
சரோஜினி: அது ஒரு மந்திரம்.
உருளம்மா: நிஜமாகவா?
பலே பாண்டியன்: பின்னே பொய்யா சொல்லுகிறாள் உன் மகள்?
உருளம்மா: அப்படியானா அந்த மந்திரத்தை எனக்கும் சொல்லிக் கொடுங்கள்.
பலே பாண்டியன்: ஹே! அவ்வளவு சுலபமாக மந்திரத்தைப் படித்துவிட முடியுமா? நாற்பது நாட்கள் அன்ன ஆகாரமில்லாமல் பட்டினி கிடந்து அஞ்சு லட்சம் உருப் போட்டாலல்லவா அந்த மந்திரம் பலிதமாகும்.
உருளம்மா: நாப்பது நாள் பட்டினியா? அடேயம்மா! எனக்கு வேண்டாம், அந்த மந்திரம். அப்படிப் பசியும் பட்டினியுமாக் கிடந்து ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் எதற்காக இப்படி வாங்கிக் கொடுக்க வேண்டும்?
சரோஜா: இல்லையானால் ஜில்லா கலெக்டர் உங்கள் வீட்டைத் தேடி வருவாரோ?
உருளம்மா: அது நிசந்தான்
★★★★★
பலசரக்குக் கடை பார்வதிநாதன் ஒரு நாள் பலே பாண்டியனின் பிரதாபத்தைப் பற்றித் தமது கடையில் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். "250 ரூபாய் வேண்டுமென்று என்னிடம் சொன்ன பேர்வழி அவரிடம் 150 ரூபாய்க்கு அதே சைக்கிளை விலைக்குக் கொடுத்திருக்கிறானென்றால் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" - என்று ஒரு போடு போட்டார்.
சாந்தப்பன்: அவரிடத்தில் அருள் கிருள் இருக்குமோ?
பூசைப்பிள்ளை: பௌர்ணமி தோறும் இரவு பூராவாக பூஜை செய்வதாக நான் கேள்விப்படுகிறேன்.
அல்லாடி: ஏதாவது சித்து இருக்கும். இல்லையானால் மனிதனால் இந்தக் காரியங்களைச் செய்ய முடியுமா?
பார்வதிநாதன்: இதிலே இன்னொரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இம்மாதிரி குறைவான விலைக்கு வாங்குகிறாரே, இந்தச் சாமர்த்தியத்தைச் சொந்தத்திற்கு அவர் உபயோகித்துக் கொள்வதில்லை.
பூசைப் பிள்ளை: அது நியாயந்தானே. சொந்தத்திற்கு உபயோகப்படுத்தினால் அப்புறம் அந்தச் சித்து பலிக்காமல் போய்விடும்.
சாந்தப்பன்: இந்தச் சித்துவை எப்படியாவது அவரிடமிருந்து தெரிந்து கொள்ளவேண்டுமே.
அல்லாடி: எனக்கு மட்டும் அந்தச் சித்து தெரிந்தால்...!
சாந்தப்பன்: தெரிந்தால் என்ன செய்வீராம்?
அல்லாடி: என்ன செய்வேனோ? ஒரே வருஷத்தில் லட்சக்கணக்காய்த் தட்டிவிடுவேன்.
★★★★★
அல்லாடி ஒரு நாள் பலே பாண்டியனைத் தேடி வந்தார். அல்லாடியிடம் விவசாயத்துக்காக இருந்த இரண்டு காளைகளில் ஒன்று செத்துப்போயிற்று. கையில் நூறு ரூபாய்தான் இருந்தது. அதைக் கொண்டு ஒரு காளை வாங்க அல்லாடிக் கொண்டிருந்தார். அதனால் பாண்டியனிடம் வந்து அந்த நூறு ரூபாயைக் கொடுத்து ஒரு காளை வாங்கிக் கொடுக்கும்படி கேட்கலாம் என்று நினைத்தார். அச்சமயம் பாண்டியன் வீட்டில் மைனர் மாணிக்கம் பேசிக்கொண்டிருந்தார். "காதில் போட்டிருக்கிற வயிரக் கடுக்கன் பலே ஜோராய் இருக்கிறதே, புதிதாய் வாங்கினீர்களா?" என்றார் மைனர் மாணிக்கம்.
பலே பாண்டியன்: ஆமாம், நேற்று அபேஸ்லாலா கடைக்குப் போயிருந்தேன். எப்பவோ ஒரு காலத்தில் என்னவோ அவனுக்கு உதவி செய்தேனாம். அதனால் இந்தக் கடுக்கனைக் கண்டிப்பாக வாங்கிக் கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினான். இனாமாக இவனிடம் எதற்காக வாங்கவேண்டுமென்று மறுத்துவிட்டேன். அப்போ, ‘நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள். வாங்கிக் கொள்கிறேன்’ என்றான். ஜேபியில் ஐந்நூறு ரூபாய் இருந்தது. அதைக் கொடுத்தேன். இவ்வளவு வேண்டாம் என்றான். நான் முடியாது என்று மறுத்துவிட்டேன். அப்புறம் அவனே காதுகளில் மாட்டி விட்டான்.
மைனர்: உங்கள் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம்? அது என்ன ஒரு காரட் இருக்கும் போலிருக்கே?
பலே பாண்டியன்: ஒரு காரட்டா? ஒன்றரை காரட்! புளூ ஜாகர். ஆயிரம் ரூபாய்க்கு மேலே மதிப்புப் போடுகிறார்கள்.
மைனர்: மாமா, மாமா, எப்படியாவது எனக்கு நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். நானும் ரொம்ப நாளாக வயிரக் கடுக்கன் வாங்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நல்லதாகக் கிடைக்கவில்லை. நீங்கள் தயவு வைக்கவேண்டும்.
பலே பாண்டியன்: சரி சரி , மாப்பிள்ளை, இவ்வளவு ஆசைப்பட்டு நீங்கள் கேட்கும் போது நான் எப்படி மறுப்பது? எடுத்துக் கொள்ளுங்க. என்ன அல்லாடி, எங்கே வந்தீங்க?
அல்லாடி: உங்க தயவுக்காகத்தான் வந்தேன். மைனருக்கு அதிர்ஷ்டம் கிடைத்த மாதிரி எனக்கும் கிடைக்கும்படி நீங்கள்தான் செய்ய வேண்டும். நூறு ரூபாய் இதோ வைத்துக் கொள்ளுங்கள். எப்படியாவது எனக்கு ஒரு காளை மாடு கிடைக்க நீங்கள் அருள்புரிய வேண்டும். எவனைக் கேட்டாலும் இருநூறுக்கு மேல் சொல்லுகிறான்.
பலே பாண்டியன்: (சலித்துக் கொண்டு) அட என்னய்யா இது? பொழுது விடிந்தால் இதுதானா வேலை? என்னாலே இன்னும் ஒரு மாதத்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. என் வேலை தலைக்கு மேலே இருக்கிறது. போய் வாருங்கள்.
அல்லாடி: அப்படிச் சொல்லக் கூடாது. பணக்காரர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் என்னைப் போன்ற ஏழைகளுக்குத்தான் நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும்.
பலே பாண்டியன்: (கோபத்தோடு) இதில் பணக்காரர் என்ன, ஏழை என்ன வந்ததய்யா? எனக்குச் சௌகரியம் இல்லையென்றால் இல்லைதான். சும்மா பேசிப் பிரயோஜனமில்லை. சரி, மைனர்வாள், நீங்கள் போய் வருகிறீர்களா? எனக்குக் கொஞ்சம் அவசரமான வேலை இருக்கிறது.
அல்லாடியைத் திரும்பிப் பார்க்காமலேயே பாண்டியன் உள்ளே போய்விட்டார். அல்லாடிக்கு மிகவும் கோபம் வந்தது. "இவனிடம் அருள் இருந்தாலென்ன? சித்து இருந்தாலென்ன? ஏழைகளுக்கு உதவ இவனுக்கு மனமில்லையே. பணக்காரர்களைக் காக்கா பிடிப்பதில்தான் அவனுக்கு விருப்பமிருக்கிறது. அடக் கடவுளே, இது என்ன ஜன்மம்?" என்று புலம்பிக்கொண்டே தெரு வழியாகப் போனார். எதிரே பண்ணையார் வீட்டு வேலைக்காரன் பரமசிவன் வந்துகொண்டிருந்தான். அவன் வருவதைக் கூடக் கவனிக்காமல் உளறிக்கொண்டே போனார்.
பரமசிவம் அல்லாடியின் கையைப் பற்றி, "என்ன, பகல் சொப்பனம் காண்கிறீங்களா?" என்று கேட்டான். அப்புறம்தான் அல்லாடிக்கு விழிப்பு வந்தது.
"என்னப்பா செய்கிறது? அந்தப் பாவியிடம் போய் ஒரு காளைமாடு வாங்கிக் கொடுக்கச் சொன்னேன். அவனுக்கு வேலையிருக்கிறதாம். முடியாது என்று சொல்லிவிட்டான். நமக்கெல்லாம் செய்வானா? பண்ணையார், கலெக்டர், மைனர் இந்த மாதிரிப் பெரிய புள்ளிகளுக்குத்தான் செய்வான்" என்று சோகத்தோடு கூறினான்.
பரமசிவம்: யாரு, பாண்டியரைச் சொல்லுகிறீர்களா? அவரைப் பார்த்து வரத்தான் போகிறேன். பண்ணையார் ஐயா பார்த்துவரச் சொன்னாங்க. அவங்க சமாசாரத்தை விட்டுத் தள்ளுங்க, பெரிய டம்பம்!
அல்லாடி: என்ன, டம்பம் என்றா சொல்லுகிறாய்? சித்து இல்லை அவரிடம்? அவர் செய்வதெல்லாம் சித்து அப்பா! தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று பேசாதே!
பரமசிவம்: அந்தச் சித்தெல்லாம் எனக்குத் தெரியுமுங்க. உங்களுக்கு வேண்டுமானால் சொல்லித் தருகிறேன்.
அல்லாடி: (ஆவலோடு) உனக்குத் தெரியுமா? அப்போ எனக்குச் சொல்லிக்கொடுக்க மாட்டாயா?
பரமசிவம்: கண்டிப்பாய் சொல்லித்தாரேன். சாயந்தரமா ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயில் பக்கமாக வாருங்கள்.
★★★★★
அந்தி மயங்குகிற வேளையில் பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் பண்ணையார் வீட்டுப் பரமசிவம் நின்று கொண்டிருந்தான். தூரத்தில் அல்லாடி வருவதைப் பார்த்ததும் எதிரே போய் அழைத்து வந்தான்.
அல்லாடி: தேங்காய், பழம், கற்பூரம் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.
பரமசிவம்: முதலில் நான் சொல்லுகிறபடி செய்யவேண்டும். நான் எந்த இடத்தில் உங்களை உட்கார வைக்கிறேனோ அங்கேயே அசையாமல் இருக்க வேண்டும். உங்கள் கண்ணால் எதைப் பார்த்தாலும் சரி, காதால் எதைக் கேட்டாலும் சரி, உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரக்கூடாது. மௌனமாய் இருக்க வேண்டும். அப்படியானால்தான் சித்து பலிதமாகும். தெரிகிறதா?
அல்லாடி: அப்படியே செய்கிறேன். பாம்பு வந்து காலைச் சுற்றினாலும் சரி, நான் வாய் திறப்பதில்லை. போதுமா? எப்படியாவது எனக்குச் சித்து கிடைத்தால் போதும்.
பரமசிவம்: பின்னாலே படித்துறையில் யார் இருக்கிறார்கள் தெரியுமா?
அல்லாடி: தெரியாதே?
பரமசிவம்: பண்ணையார் எஜமானும் பலே பாண்டியனும் இருக்கிறார்கள்.
அல்லாடி: இந்த நேரத்திலா? படித்துறையிலா? ஒருவேளை பண்ணையாருக்குச் சித்து ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கிறாரோ?
பரமசிவம்: என்ன விஷயம் என்பதை நாமே பார்த்து விடுவோமே. என்ன நான் சொன்னது ஞாபகம் இருக்குதா? மூச்சுவிடக் கூடாது!
அல்லாடி: சரி.
இருவரும் அரச மரத்தடியில் ஒரு பக்கமாய் இருந்தார்கள். பண்ணையாரும் பாண்டியனும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பண்ணையார்: அவ்வளவு அவசரம் என்னங்க பணத்திற்கு? உங்கள் நிலம் ரொம்ப அருமையான நிலமாயிற்றே. அதையா விற்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்?
பலே பாண்டியன்: என்ன செய்வது? இந்தக் கடன் பிடுங்கல் என்னால் சமாளிக்க முடியாது. அவர்கள் கோர்ட்டுக்குப் போனால் மானம் போய்விடும்.
பண்ணையார்: அப்படி என்ன கடன்? யாருக்குக் கொடுக்க வேண்டும்?
பாண்டியன்: காளை மாட்டுக்காரன், சைக்கிள் கடை, அபேஸ் லாலா, உங்கள் கடன், இன்னும் எத்தனையோ!
பண்ணையார்: இது என்னத்திற்கு இந்த வம்பு? சும்மா இருக்காமல் சாமான்களை வாங்கிப் பாதி விலைக்குக் கொடுப்பானேன்? இப்போ அருமையான நிலத்தை விற்பானேன்?
இச்சமயம் அல்லாடி ஒரு துள்ளு துள்ளினார். "அட பாவி! இதுதானா உன் சித்து?" என்றார்.
பலே பாண்டியனும் ஒரு துள்ளுத் துள்ளி, "அட பாவி, என் மானம் போயிற்றே!" என்று கத்தினார்.
டி.எஸ். சொக்கலிங்கம் |