2021 மே 3 ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 373,193. பிப்ரவரி 15 அன்று இந்த எண்ணிக்கை 11,200 ஆக இருந்தது! அன்றைக்கு இந்தியா இந்தக் கொடும் நோயை நிர்வகித்த விதத்தை உலகமே வியந்தது. இப்படித் தணிந்தபின் எழுவதனால்தான் கொரோனா பரவலை அலை என்கிறார்கள். இரண்டாவது அலையில் பரவல் மிக வேகமாக இருப்பதுடன், நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கிறது. ஒவ்வொரு மாற்றுருவமும் (variant) புதிய சவால்களைக் கொண்டுவருகிறது. நோய்க்குறிகள் மாறுபடுகின்றன.
ஜப்பான், பிரேசில் மற்றும் பல நாடுகளும் இந்த அலையில் சிக்கித் தவிக்கின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் இது தாக்குகிறது. மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல், தடுப்பூசியை அதிகமானோருக்குக் கிடைக்கச் செய்தல் என்று பலவகைகளிலும் அரசுகள் பொறுப்போடு செயல்பட்டாலும், ஒவ்வொரு தனி நபரும் இதன் பரவலைத் தடுக்க, தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளோரையும் பாதுகாக்க எச்சரிக்கையோடு இருக்க வேண்டுவது மிக அவசியமாகிறது. சுற்றிலும் பார்த்தால், முன்னெச்சரிக்கையை அசட்டை செய்பவர்களும், "என்னைப் பாதிக்காது" என்று ஒரு பொய் மயக்கத்தில் இருப்பவர்களும் நிறையக் காணக் கிடைக்கிறார்கள். நமக்கு ஒரு 'enlightened selfishness' இந்த விஷயத்தில் தேவையாக இருக்கிறது. இல்லையென்றால், நாமும் வெறும் புள்ளிவிவரம் ஆகிவிடுவோம். விழிப்போடிருப்போம், உயிர் பிழைப்போம்!
★★★★★
பத்தாண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை மக்கள் அரசுகட்டிலில் ஏற்றியிருக்கின்றனர். இது சவாலான நேரம். தேர்தல்காலப் பாகுபாடுகளை மறந்து, அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து, வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தைப் புதிய முதல்வர் நடத்திச் செல்வார் என நம்புகிறோம். திரு. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான புதிய அரசுக்கு எமது வாழ்த்துகள்.
★★★★★
புற்றுநோயாளிகளுக்குச் சேவை என்னும் ஆர்வத்தில் தொடங்கி, விழியிழந்தோருக்குச் சேவை என்ற களத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்ற டாக்டர் அ.போ. இருங்கோவேள் அவர்களின் நேர்காணல் இவ்விதழின் மகுடம். தமிழின் இதழியல் முன்னோடி திரு டி.எஸ். சொக்கலிங்கம், ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் வியக்க வைத்து ஊக்கம் தருபவை. சிறுகதைகளும் சிறப்புதான்.
வாசகர்களுக்கு ரமலான், புத்த பூர்ணிமை வாழ்த்துகள்.
தென்றல் மே 2021 |