ஏப்ரல் 2021: வாசகர் கடிதம்
மாயாபஜார் மூலம், நமக்கெல்லாம் விதவிதமான பலகாரங்களைச் செய்யும் முறைகளை, சுவையாகவும் வித்தியாசமாகவும் விரும்பிச் சாப்பிடும் வகைகளாகவும், எழுதிக்கொண்டிருந்த தங்கம் ராமசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்.

மகளிர் சிறப்பிதழான தென்றலின் சிறப்புப்பார்வை பகுதியில் பெர்சிவரன்ஸ் ரோவர் விண்கலத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, விண்கலத்தைச் சிறப்பாக வழிநடத்தி, திட்டமிட்டபடி செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்க வைத்த ஸ்வாதி மோகன், பத்மஸ்ரீ அனிதா பால்துரை, பத்மஸ்ரீ பாப்பம்மாள், சாதனைச்செல்வி ஏஞ்சலின் ஷெரில் ஆகியோரைப் பற்றி, பொருத்தமான குறட்பாக்களுடன் எழுதிய ஸ்ரீவித்யா ரமணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தியாகராஜ சுவாமிகளின் சீடர் பரம்பரையில் ஏழாவது தலைமுறை இசைக்கலைஞர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல் அற்புதம். இசையும் பாடுகிறவனும் வேறு வேறு கிடையாது. இசை மிகவும் சூட்சுமமான கலை. உங்கள் உள்மனதில் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் சங்கீதமும் இருக்கும் என்பதையும் குருவின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம் என்பதையும் அழகாகவும் நேர்த்தியாகவும் விவரித்திருந்தார்.

முன்னோடி ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாள் வாழ்க்கைப் பகுதி அந்தக் கால வாழ்க்கையின் சிரமங்களை வெளிப்படுத்தியது. தலைப்பில்லாமல் கவிதை எழுதுவது,சுதந்திரமான எழுத்திற்கு வழிவகுக்கும் என்று சொல்லும் எழுத்தாளர் அ. வெண்ணிலாவின் படைப்பு மிகவும் சுவாரசியம். ஹரிமொழியில் கர்ணன் பிறப்பும் திகைக்க வைக்கும் செய்திகளும் கட்டுரையில் எங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவரும் ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

★★★★★


மார்ச் தென்றல் இதழ் மங்கையரின் பெருமை பகர்ந்தது. சாதனைப் பெண்களை குறிப்பிட்டு, இறுதியில் பொருத்தமான குறளையும் சேர்த்தது மிகச்சிறப்பு. நீலகண்ட பிரம்மச்சாரி தொடர் மிக விறுவிறுப்பாக, துப்பறியும் தொடர்போல் உள்ளது. நாம் தெரிந்துகொள்ள வேண்டியதும் கூட. தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!

வித்யாலட்சுமி டி,
சிமி வேலி, கலிஃபோர்னியா

© TamilOnline.com