எனது முந்தைய தேஹத்தில் ஷிரடியில் இருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். பாஹல்காவுனில் ஓர் எளிய படிப்பறிவற்ற பக்தை ஒருத்தி இருந்தாள். அவள் தனது சமையலறையில் மூன்று பளிச்சென்று தேய்த்த பித்தளைக் குடங்களில், மூன்று வெவ்வேறு கிணறுகளின் நீரை ஊற்றி வைப்பாள். அந்த மூன்றுக்கும் அவள் கங்கை, யமுனை, சரஸ்வதி என்று பெயரிட்டிருந்தாள். அந்தப் பெயராலேயே அவள் அவற்றை அழைப்பாள். யாத்திரீகர் யாராவது தாகத்தோடு வந்து தண்ணீர் கேட்டால், மூன்றிலிருந்தும் தண்ணீரை எடுத்துக் கலந்து அதைத் 'திரிவேணி தீர்த்தம்' என்று சொல்லிக் கொடுப்பாள். அண்டை அயலார் அவளது நம்பிக்கையைக் கேலி செய்தனர். ஆனால், அந்த மூன்று கிணறுகளும் நிலத்தினடியே பிரயாகையின் சங்கமத்தோடு தொடர்பு கொண்டிருந்தன என்பதில் அவளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது.
ஒருநாள் அவளுடைய கணவர் காசி யாத்திரை கிளம்பினார். அப்போது அவருடைய அன்னையார் தன் கையில் இருந்த மோதிரத்தை அவருக்கு அணிவித்து ஆசீர்வதித்ததோடு, "இந்த மோதிரத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள், இது ஒரு தாயத்துப்போல" என்று கூறி அனுப்பினார். மகன் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடும்போது கையிலிருந்த மோதிரம் நழுவி விழுந்துவிட்டது, அதை எடுக்கமுடியவில்லை. வீட்டுக்குத் திரும்பிவந்து அன்னையிடம் இதைக் கூறிவிட்டு, "கங்கை அதை விரும்பினாள், எடுத்துக்கொண்டு விட்டாள்" என்று சமாதானமாகக் கூறினார்.
இதைக் கேட்ட அவருடைய மனைவி, "இல்லையில்லை. ஓர் ஏழை முதியவளின் சொத்துக்கு கங்கா மாதா ஆசைப்பட மாட்டாள். எதை நீங்கள் விருப்பத்தோடு கொடுக்கிறீர்களோ அதையே ஏற்பாள். நிச்சயமாக நமது மோதிரத்தைத் திரும்பக் கொடுத்துவிடுவாள். நான் போய் கங்கையைக் கேட்கிறேன். அவள் நமது சமையலறையில் இருக்கிறாள்" என்று கூறினாள்.
அப்படிக் கூறியபடி அவள் 'கங்கா' எனப் பெயரிடப்பட்ட குடத்தின்முன் கை கூப்பிக்கொண்டு பிரார்த்தனை செய்தாள். பிறகு தன் கையை அதற்குள் விட்டு அடியில் துழாவினாள்... அந்த மோதிரம் கிடைத்துவிட்டது! அவள் தன் கணவருடனும் மாமியாருடனும் துவாரகாமாயிக்கு வந்தாள். நம்பிக்கைதான் முக்கியம். எந்த வடிவத்தின்மீதும் நாமத்தின்மீதும் அதை வைக்கிறாய் என்பது முக்கியமல்ல. ஏனெனில், எல்லா நாமங்களும் அவருடையனவே, எல்லா வடிவங்களும் அவருடையனவே.
நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2020
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |