எங்கிருந்தோ வந்த விதை
அத்தியாயம் - 4
அருண் கொடுத்த ஐடியா சாராவின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. வீட்டுக்குப் போன பின்னாலும் அவன் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள். "அடடா, என்ன ஒரு யோசனை! நாம ஏன் பள்ளிக்கூடத்துக்கு இதை வைத்து நிதி திரட்டக்கூடாது!' என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

சாரா பெற்றோர்களிடம் பேசினாள். மலர்க்கொத்து செய்து, அதை விற்பதில் கிடைக்கும் வருவாயைப் பள்ளிக்கு கொடுக்கலாம் என்பது சாராவின் அம்மாவுக்கு மிகவும் உயர்வாகப் பட்டது. அப்பாவுக்கோ அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

"சாரா, இது ஒரு காட்டுரோஜாச் செடி மாதிரி இருக்கு. இதைப்பத்தி நமக்கு ஒண்ணுமே தெரியாது. இதனால யாருக்காவது ஏதாவது நோய் வந்துடப் போகுது" என்று அப்பா எச்சரித்தார். "நம்ம வீட்டு மண்ணு அவ்வளவு செழிப்பானதில்லை. சொல்லப் போனால் இதில எதுவுமே சரியா வளராது. அதுல, இப்படி ஒரு செடி படக்குன்னு வந்தா இயற்கைக்குப் புறம்பா இருக்கு."

"என்னங்க இது, குழந்தை ஆசைப்படறா. இதுல என்ன தப்பு? நம்ப வீட்டுல வளர்ந்த செடியில வந்த பூவை வச்சுதானே சாரா மலர்க்கொத்து செய்யப் போறா, அதுக்கு ஏன் பயப்படணும்?" என்று அம்மா வக்காலத்து வாங்கினார்.

"இல்ல சூஸன், எனக்கு ஏனோ இது சரியாப் படல. நாம ஏன் எப்போதும் போல bake sale பண்ணக்கூடாது?" என்றார் அப்பா.

Bake sale என்று கேட்டதும் அம்மா மூக்கைச் சுளித்தார். அவருக்கு அது போதும் போதும் என்று ஆகிவிட்டது. அம்மாவின் முகத்தைப் பார்த்து சாரா புரிந்துகொண்டாள்.

சாராவின் அப்பாவுக்குத் திடீரென்று ரோஜாச்செடி வீட்டின் பின்புறம் முளைத்ததில் இருந்தே அவருக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டிருந்தது. அந்தச் செடியை உடனே பிடுங்கவேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், அதைப் பார்த்து சாரா அப்படி ஒரு சந்தோஷம் அடைவாள் என்று அவர் நினைக்கவில்லை. பெற்ற பாசம் அல்லவா.

"அப்பா, ப்ளீஸ் அப்பா. நான் மலர்க்கொத்து விற்கிறேன் அப்பா. ஒரு மாற்றம் வேணும் அப்பா." சாரா அப்பாவின் மனதை மாற்ற முயன்றாள்.

அம்மா மௌனமாகத் தன் கணவரைப் பார்த்தார். அவருக்கு இந்த இரண்டு பெண்மணிகளிடம் மாட்டிக்கொண்டு விட்டோமே என்று இருந்தது.

"ஆமாம், எப்படி சாரா உனக்கு இந்த ஐடியா வந்தது?" என்று அப்பா கேட்டார். "நீ இப்படி எல்லாம் யோசிக்க மாட்டியே?"

"அருண்தான் இந்த ஐடியா கொடுத்தான். Such a genius!" என்று சாரா உற்சாகமாகச் சொன்னாள்.

"அதானே பார்த்தேன், சோழியன் குடுமி சும்மா ஆடுமான்னு" அப்பா முனகினார். "அந்தப் பய ஏதாவது சொல்லி மத்தவங்கள வம்புல மாட்டி விட்ருவான். அவனோடு கொஞ்சம் பார்த்துதான் பழகணும்."

"அப்பா ப்ளீஸ், அருணைப்பத்தி அப்படியெல்லாம் தப்பா பேசாதீங்க. அவன் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்டு."

"என்னவோ போ, அந்தப் பய எதுல மூக்கை நுழைச்சாலும், வம்புதான் வரும். நான் இப்பவே சொல்லிட்டேன். ஊர் முழுக்க வம்பு. அதுவும் எங்க நிர்வாக முதலாளி டேவிட் ராப்ளேயோட வேற சண்டை. அப்பப்பா, இத்தினூண்டு இருந்துகொண்டு என்ன திண்ணக்கம் பார் அந்தப் பயலுக்கு. எனக்கே எங்க முதலாளியைப் பார்த்தா நடுங்கும்."

ஒன்றுமே சொல்லாமல் அவர் அங்கிருந்து போய்விட்டார்.

"சாரா, அப்பாவைப் பத்திதான் உனக்கு நல்லாத் தெரியுமே. நான் உனக்கு உதவி பண்றேன். நாம ஒரு கலக்கு கலக்கிடலாம், சரியா? அருணுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லு" என்று அம்மா சாராவைப் பெருமிதம் கலந்த புன்னகையோடு அணைத்துக் கொண்டார்.

"ரொம்ப தேங்க்ஸ் அம்மா."

"கிரேட். நான் இப்பவே கொஞ்சம் டிஸைன்ஸ் போட்டு வச்சுக்கறேன். அப்புறம், பள்ளிக்கூட P.T.A-வுக்கு சொல்லிடறேன். சரியா?"

"அபாரம் அம்மா!"

★★★★★


சில நாட்கள் போயின. ஒரு வெள்ளிக்கிழமை. மதியம் பள்ளி முடிந்த பின்னர், பள்ளி வளாகத்தில் fund raiser நடந்தது. அதில் சாரா அம்மாவோடு நின்றுகொண்டு ரோஜாப் பூக்களால் செய்த பல பூங்கொத்துகளை விற்றுக் கொண்டிருந்தாள். அருணும் அவ்வப்போது அங்கு வந்து அவர்களுக்கு உதவினான்.

சிறிது நேரத்திலேயே சாரா விற்ற ரோஜாச்செண்டுகளின் புகழ் பரவியது. கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. சாரா கொண்டு வந்திருந்த எல்லாமே நிமிடமாய் விற்றுப் போனது. சாராவின் அம்மா கடகடவென்று ஓடிப்போய்க் காரிலிருந்து மேலும் பூச்செண்டுகளை எடுத்துக்கொண்டு வந்தார். அவையும் நிமிடங்களில் விற்றுப்போயின.

பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ரொம்ப சந்தோஷம். பள்ளிக்கும் நல்ல வரும்படிதான். ஒரு சில பெற்றோர் புகைப்படம் எடுத்து முகநூலில் போட்டார்கள். பலபேர் விரும்பினர்.

எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. தீடீரென்று சூட்-கோட் அணிந்த அதிகாரிகள் தபதபவென்று ஒரு கூட்டமாக வந்தார்கள். நேராக சாரா இருக்குமிடத்திற்குச் சென்றார்கள். தலைமை ஆசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை.

யார் அவர்கள்? எங்கிருந்து வருகிறார்கள்? எதற்காக வந்திருக்கிறார்கள்? ஏன் சாரா இருக்கும் இடத்திற்குச் செல்கிறார்கள்? பல கேள்விகள் தலைமை ஆசிரியரின் மனதில் எழுந்தன.

அதிகாரிகளில் ஒருவர், "யார் இங்க கடை போட்டு இந்த ரோஜாக்களை விற்பது? இதற்கு எங்கிருந்து அனுமதி கிடைச்சது?" என்று சாராவின் அம்மாவைக் கேட்டார்.

"சார், இது எங்க வீட்டுல பூத்த ரோஜா. எதுக்கு நாங்க அனுமதி வாங்கணூம். போங்க சார்" என்று பயப்படாமல் பதில் சொன்னார் சாராவின் அம்மா.

அதற்குள் தலைமை ஆசிரியரும் வந்து சாராவின் அம்மாவுக்குத் துணை நின்றார். "யார் சார் நீங்க எல்லாம்? என்ன இப்படி அநாகரீகமா எங்க பள்ளிக்கூடத்துல வந்து கலாட்டா பண்ணி, குழந்தைகள பயமுறுத்தறீங்க? போங்க சார் திரும்பி. நான் போலீஸ கூப்பிடட்டுமா?' என்று அவரும் சத்தம் போட்டார்.

வந்திருந்தவர்கள் சளைக்கவில்லை. "அம்மா, இந்த ரோஜாக்கள் உங்க வீட்டுல பூத்ததா இருக்கலாம். ஆனா, இது எங்க நிர்வாகத்தின் சொத்து. இதை விக்கிற உரிமை எங்க நிர்வாகத்தைத் தவிர வேற யாருக்கும் கிடையாது."

சாராவுக்கும் அம்மாவுக்கும் தூக்கிவாரிப் போட்டது. "என்னது? இந்த ரோஜா உங்க நிர்வாகத்தோட சொத்தா? எந்த நிர்வாகம்?" என்று இரண்டு பேருமே ஒரே சமயத்தில் கேட்டனர்.

"நாங்க ஹோர்ஷியானா நிறுவனத்திலிருந்து வரோம். அவங்களோட வக்கீல் நாங்க. சட்டப்படி உங்க வீட்டுல வளர்ற ரோஜா ஹோர்ஷியானா உரிமம் பதிவு செய்தவை. அது எங்கே இருந்தாலும் முழு உரிமை எங்க நிறுவனத்துக்கு மட்டும்தான். இப்ப நீங்க வித்த பணம் எல்லாத்தையும் இப்படிக் கொடுங்க," என்று மிரட்டினார்கள்.

சாராவுக்குத் தலை சுற்றியது. அவள் அம்மாவுக்கோ, போச்சுடா திரும்பவும் ஹோர்ஷியானா சங்கதியா என்று கோபம் வந்தது.

(தொடரும்)

ராஜேஷ்

© TamilOnline.com