சுப்புலட்சுமியின் ஆசிரியப் பணி தொடர்ந்தது. அதே சமயம் தன்னைப் போல இளவயதில் விதவையாகித் தவிக்கும் பெண்களுக்கு எந்த விதத்திலாவது உதவ வேண்டும் என்ற எண்ணமும் வலுப்பட்டது. 'விதவை மறுமணம்' அக்காலத்தில் வழக்கத்தில் வந்திருக்கவில்லை. அவர்கள் வாழ்நாள் முழுதும் சமையலறைகளிலும் புழக்கடைகளிலும் புழுங்கியே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த நிலைமையை மாற்ற நினைத்தார் சுப்புலட்சுமி. அவர்கள் வாழ்க்கை உயரத் தன்னால் ஆனதைச் செய்ய முடிவு செய்தார்.
அக்காலகட்டத்தில் சென்னை ராஜதானியில், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளராக கிறிஸ்டினா லிஞ்ச் (Christina Lynch) என்பவர் பணியாற்றி வந்தார். அந்தண சமூகத்தில் இளவிதவைகள் - அதுவும் ஒன்று முதல் ஐந்து, பத்து வயதுக் குழந்தைகள் வரை - இருப்பதை அறிந்த அவர் அதிர்ந்து போனார். 1901ல், ஐந்து முதல் பதினைந்து வயதுவரை உள்ள 22395 பிராமணப் பெண்கள் அப்போதைய சென்னை ராஜதானியில் இருந்தனர். 1911ல் அந்த எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்தப் பெண்களுக்கு ஒரு பள்ளி அமைத்து, கல்வி போதித்து முன்னேற்றத் திட்டமிட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஒரு சமயம் பணி நிமித்தமாக கோவைக்குச் சென்ற லிஞ்ச், தற்செயலாக சுப்புலட்சுமியின் தந்தை சுப்பிரமணியனைச் சந்திக்க நேர்ந்தது. தனது மகள் சுப்புலட்சுமி பற்றியும், அவள் இளம் விதவைகளுக்கு உதவும் எண்ணத்தில் இருப்பதையும் தெரிவித்தார் சுப்பிரமணியன். சுப்புலட்சுமியைச் சந்திக்க ஆவல் கொண்டார் லிஞ்ச்.
லிஞ்ச் சென்னை திரும்பியதும், தந்தையின் ஆலோசனையில் பேரில் அவரைச் சந்தித்தார் சுப்புலட்சுமி. அந்தச் சந்திப்பு சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையானது. தன்னைப் போலவே எண்ணங்களைக் கொண்டிருந்த சுப்புலட்சுமி, தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று லிஞ்ச் கேட்டுக் கொண்டார். எல்லா விதவைகளுக்கும் தான் ஒரு சகோதரியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய சுப்புலட்சுமியும் உடனடியாக ஒப்புக்கொண்டார். பள்ளி மற்றும் இல்லம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்பித்தார் லிஞ்ச்.
தந்தையார் அனுமதியுடன், கைவிடப்பட்ட கைம்பெண்கள் சிலரைத் தங்கள் எழும்பூர் இல்லத்தில் தங்கவைத்தார் சுப்புலட்சுமி. நாளடைவில் மேலும் சில இளம் விதவைகள் அந்த இல்லம் நாடி வந்தனர். அந்த வீடே ஆதரவற்றோர் இல்லம் ஆனது. அங்கு பெண்கள் குழுமி தங்களுக்குள் பல கருத்துக்கள் குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர். அவர்களைக் கொண்டு ஜனவரி 1912ல், சுப்புலட்சுமியின் இல்லத்தில் 'சாரதா லேடீஸ் மிஷன்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுப்புலட்சுமியின் ஆசிரியரான மிஸ். பாட்டர்ஸன் அதன் தலைவியாகப் பொறுப்பேற்றார். சுப்புலட்சுமி செயலாளர் ஆனார். லிஞ்ச் ஆலோசகர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிறிஸ்தவ, பார்சி, இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் அந்த அமைப்பில் வந்து சேர்ந்தனர். கல்வி, கைத்தொழில் என்று அமைப்பு மெல்ல மெல்ல விரிவடைந்தது. இல்லத்தின் செலவுகளுக்கான நிதியும் திரட்டப்பட்டது. நாளடைவில் இளம் விதவைப் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதால், அவர்கள் தங்குவதற்கு ஓர் இடம் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டது.
மார்ச் 1913ல், சென்னை திருவல்லிக்கேணியில், 'சாரதா இளம் கைம்பெண்கள் இல்லம்' தொடங்கப்பட்டது. அரசு அதனை அங்கீகரித்தது. சுப்புலட்சுமி அந்த இல்லத்தின் கண்காணிப்பாளர் ஆனார். பெண்களுக்கு அடிப்படைக் கல்வி அங்கு கற்பிக்கப்படது. கூடவே கைத்தொழில்களும், விளையாட்டும் கற்பிக்கப்பட்டன. இல்லத்தைப் பற்றிக் கேள்வியுற்று ஆதரவற்ற இளம் விதவைகள் பலர் நாடி வந்தனர். பலர் குடும்பத்தாரால் அங்கு கொண்டுவந்து விடப்பட்டனர். பெண்களின் எண்ணிக்கை பெருகியதால் அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இடத்திற்காக அங்குமிங்கும் அலைந்து திரிந்த சுப்புலட்சுமி, கடற்கரை எதிரே இருந்த 'ஐஸ்ஹவுஸ்' என்று அழைக்கப்படும் 'கெர்னான் மாளிகை' வாடகைக்கு விடப்படும் என்ற செய்தியை அறிந்தார். அதற்குப் பொறுப்பாக இருந்த ஜமீன்தாரின் செயலாளருடன் பேசி அதில் இல்லம் நடத்த அனுமதி பெற்றார். அரசும் அனுமதி அளித்தது. விவேகானந்தர் தனது சென்னை வருகையின்போது தங்கியிருந்த அந்த இல்லத்திலிருந்து தனது சேவைப் பணிகளைத் தொடர்ந்தார் சகோதரி சுப்புலட்சுமி. அவருக்குத் துணையாக அவரது சித்தி வாலாம்பாள் இருந்தார். மிஸ் லிஞ்சும் உடனிருந்து நிர்வாகப் பணிகளை மேற்கொண்டார்.
பெண்களுக்கு படிப்புடன் கூடவே விளையாட்டு, கலை, இலக்கியம், நாடகம் எல்லாம் படிப்படியாகக் கற்றுத்தர ஆரம்பித்தார் சுப்புலட்சுமி. அரசின் ஆதரவும் கிடைத்தது. கருணை உள்ளம் கொண்ட கிறித்தவப் பெண் துறவிகளும், அரசின் அதிகாரிகளும் இல்லத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தனர். கருணையோடும், அதே சமயம் கண்டிப்போடும் அங்கு தங்கியிருந்த பெண்களை அரவணைத்து ஆளாக்கினார் சுப்புலட்சுமி. அவர்களுக்குத் தாயாகவும், சகோதரியாகவும் இருந்து வழிகாட்டினார். அங்குள்ள அனைத்துப் பெண்களும் இளவயதுப் பெண்கள் என்பதால், அவர்கள் அன்போடு சுப்புலட்சுமியை 'சிஸ்டர்' என்றே அழைத்தனர். சுப்புலட்சுமியின் அயராத முயற்சியால் அப்பெண்களுக்கு அரசின் உதவிப் பணம் கிடைக்க ஆரம்பித்தது. அதனை அறிந்து, வறுமையில் வாழ்ந்து வந்த குடும்பங்களின் இளம் விதவைகள் பலர் மேலும் மேலும் அந்த இல்லம் நாடி வந்தனர். 1918ல் அங்கு சுமார் 70 விதவைகள் இருந்தனர். குழந்தை விதவைகள் அருகிலுள்ள பள்ளிகளில் பயின்றனர். உயர்கல்வியை முடித்திருந்தவர்களில் சிலர் சென்னை ராணி மேரி கல்லூரியிலும், சிலர் சென்னை ராஜதானி கல்லூரியிலும் சேர்ந்து பயின்றனர். கவர்னர் பெண்ட்ல்ண்டும் அவரது மனைவியும் ராணி மேரி கல்லூரியின் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். கவர்னரின் நினைவாக, கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு 'பெண்ட்லண்ட் ப்ளாக்' என்று பெயரிடப்பட்டது. அங்கு பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள் சென்னை சர்வகலாசாலையில் (தற்போதைய சென்னைப் பல்கலைக்கழகம்) சேர்ந்து முதுகலை படிக்க ஆரம்பித்தனர். சிலர் டெல்லியில் உள்ள ஹார்டின்ஜ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். சிலர் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினர். சுப்புலட்சுமியின் தன்னலமற்ற சேவை நாடெங்கும் பேசப்பட்டது.
சாரதா இல்லம் அருகே இருந்த மீனவர் குப்பத்தில் குழந்தைகள் பலரும் கற்காமல் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார் சுப்புலட்சுமி. மீனவர் தலைவர்களை அழைத்துப் பேசினார். அவர்களின் ஆதரவுடன், அந்தக் குழந்தைகள் கற்பதற்காக 'குப்பம் பள்ளி'யைத் தொடங்கினார். தானே ஆசிரியராக இருந்து கற்பித்தார்.
இந்நிலையில், நீதிக்கட்சி மூலம் சாரதா இல்லத்திற்கு எதிர்ப்பு வந்தது. "பிராமணர்களுக்கு என்று ஒரு தனி இல்லம் இருப்பது பிரிவினையைத் தோற்றுவிப்பதற்கு வழி வகுக்கும். இல்லத்தில் ஜாதி வித்தியாசமின்றி அனைத்து விதவைகளையும் அனுமதிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மூடிவிட வேண்டும்" என்று சிலர் மேடைகளில் பேசவும், பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்தனர். உண்மையில் சுப்புலட்சுமிக்கு ஜாதி வித்தியாச நோக்கு எதுவும் இல்லை. அவர் அப்படி மன வேறுபாடுடன் யாரிடமும் பழகவுமில்லை. அதனை நன்கு அறிந்திருந்ததால் தான் கிறித்தவப் பெண் துறவியர் பலரும் அவருக்கு உதவினர். அதே சமயம் சாரதா இல்லத்தில் அந்தணப் பெண்கள் மட்டுமே இருந்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதற்குக் காரணம், அக்காலத்தில் அந்தச் சமூகத்தில்தான் பால்ய விவாகம் அதிகம் இருந்தது என்பதும், இளம் விதவைகள் பலர் அச்சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதும்தான். நாளடைவில் சாரதா இல்லத்தில் பெண்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது. இல்லத்தின் மருத்துவக் கண்காணிப்பாளராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இருந்தார். அவரும் இல்லத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். அவரது சகோதரியான நல்லமுத்து ராமமூர்த்தி, சுப்புலட்சுமியின் மாணவி. (ஐரோப்பியப் பெண்கள் மட்டுமே முதல்வராகப் பதவி வகித்த சென்னை ராணி மேரி கல்லூரின் முதல் இந்திய முதல்வராகப் பிற்காலத்தில் நல்லமுத்து ராமமூர்த்தி பணியாற்றினார். முதல் உலகப் போருக்குப் பின் ஏற்படுத்தப்பட்ட, சர்வதேச சங்கத்தின் அமைதிப் பணிக்காக, உலக அளவில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணியும் இவர்தான். சென்னையில் உள்ள அவ்வை இல்லத்தைத் தோற்றுவித்ததும் இவரே!)
பள்ளி திறப்புவிழாவில் கவர்னர் வில்லிங்டன், லேடி வில்லிங்டன், லின்ச் ஆகியோருடன்
1921ல் சாரதா இல்லத்தைப் பார்வையிட, நீதிக் கட்சியின் தலைவரும், அப்போதைய முதல்வருமான சுப்பராயலு ரெட்டி வருகை புரிந்தார். சுப்புலட்சுமியின் பணிகளை வெகுவாகப் பாராட்டியவர், "பிராமணர் அல்லாத விதவைகளும் இல்லத்தில் சேர்க்கப்பட வேண்டும்; விதவைகள் அல்லாதவர்கள் அங்கிருந்தால், அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் இல்லத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்ற தனது கருத்தை உறுதிபடத் தெரிவித்துவிட்டுச் சென்றார். நாளடைவில் இல்லத்தை நாடி மேலும் மேலும் கைம்பெண்கள் வர ஆரம்பித்தனர். சென்னை ஐஸ் ஹவுஸில் அமைந்ததுபோல் நாடெங்கும் இளம் விதவைகளுக்கான இல்லங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது சுப்புலட்சுமியின் விருப்பமாக இருந்தது. லிஞ்ச்சும் தமிழகமெங்கும் பயணம் செய்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையாலும், அரசியல் சூழல்களாலும் அது நிறைவேறவில்லை.
கைம்பெண்கள் அல்லாது, அதே சமயம் படிக்கும் ஆர்வம் கொண்டிருந்த பெண்களுக்கும் உதவ விரும்பினார் சுப்புலட்சுமி. அத்தகையோர் கற்பதற்காக ஐஸ் ஹவுஸ் அருகில் பள்ளி ஒன்று கட்டப்பட்டது. அந்தப் பணியில் மிகவும் அக்கறை காட்டினார் அப்போதைய கவர்னரான வில்லிங்டனின் மனைவி லேடி வில்லிங்டன். டிசம்பர் 1922ல், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்தப் பயிற்சிப் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. 'லேடி வில்லிங்டன் பயிற்சிப் பள்ளி' திருவல்லிக்கேணியின் அடையாளமானது. சுப்புலட்சுமி அப்பள்ளியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். லேடி வில்லிங்டன் பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்கள், ராணி மேரி கல்லூரியில் உடனடியாக மேலே படிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ் ஹவுஸ் சாரதா இல்ல மகளிருடன்
லேடி வில்லிங்டன் பயிற்சிப் பள்ளியின் முதல்வர் என்பதோடு கூடவே, சாரதா இல்லத்தின் மேற்பார்வையாளர் ஆகவும் தனது சேவைப் பணிகளைத் தொடர்ந்தார் சுப்புலட்சுமி. ஆனால், 'சாரதா இல்லம்' இளம் விதவைகளுக்கானதாக மட்டுமே இருந்தது. ஆர்வமுள்ள பிற பெண்களும் தங்கிக் கல்வி பயில்வதற்காக, 1927 ஜூலை 1ல், உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார் சுப்புலட்சுமி. அதுதான் 'சாரதா வித்யாலயா'. 'சாரதா இல்லம்', 'சாரதா வித்யாலயா' இரண்டும் 1928 முதல் 'சாரதா லேடீஸ் யூனியன்' தலைமையில் செயல்பட ஆரம்பித்தது. லேடி சிவசாமி ஐயர் (நீதிபதி சிவசாமியின் மனைவி) அதன் தலைவராக இருந்தார். (மே 3, 1938ல் அந்தப் பள்ளி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுதான் தற்போது தி. நகரில் இருந்து செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா பள்ளி.
இல்லப் பணிகளோடு பெண்களின் வாழ்க்கை உயர்வுக்கான பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார் சுப்புலட்சுமி. 1927ல் பூனாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய மகளிர் மாநாட்டில், சென்னை ராஜதானியின் சார்பாகக் கலந்துகொண்ட ஆறு பேர் குழுவில் சுப்புலட்சுமியும் ஒருவர். பால்ய விவாகம் தடை செய்யப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிர அக்கறை காட்டினார். வைதீகர்களின் பலத்த எதிர்ப்பை எதிர்கொண்டாலும் அயராமல் பணிகளைத் தொடர்ந்தார். மேடைதோறும் பேசினார். மாதர் சங்கக் கூட்டங்கள் மூலம் வலியுறுத்தினார். அவரது பேச்சிற்கு ஆதரவு இருந்த அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது. சுப்புலட்சுமி போன்றவர்களின் அயராத முயற்சியால் 1929ல் 'சாரதா சட்டம்' அமல் ஆனது. அது பெண்களுக்கு 14 வயதுக்குள்ளும், ஆண்கள் 18 வயதிற்கு முன்னும் திருமணம் செய்துகொள்வதைக் கண்டித்தது. ஆனால், அந்தச் சட்டத்தால் அப்போது பெரிதாகப் பயன் விளையவில்லை. 1931ல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி, சென்னை ராஜதானியில், ஒரு வயதுக்குட்பட்ட விதவைகளின் எண்ணிக்கை 1515. 15 வயதுக்குட்பட்ட மணமானவர்களின் எண்ணிக்கை 3,21,701. சாரதா சட்டத்தால் அதிகப் பயன் விளையவில்லை என்பதை இவை காட்டின.
வை.மு.கோ, மகளிர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுடன்
சுப்புலட்சுமி ஆலோசகராக இருந்த All India Women's Conference அமைப்பு சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. சுப்புலட்சுமிக்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டது. அவர் ஓர் அரசு ஊழியராக இருந்ததால் இவற்றிலிருந்து விலகி இருக்க நேர்ந்தது. அதே சமயம், நாடெங்கும் சென்று பெண்கள் உயர்வு தொடர்பான பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றினார். தனது சமூகப் பணிகளை விடாமல் தொடர்ந்து செய்தார். ருக்மணி லட்சுமிபதி, வை.மு. கோதைநாயகி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சகோதரி பாலம்மாள் உள்ளிட்ட பலர் சுப்புலட்சுமியின் சமூகப் பணிகளுக்கு துணையாக இருந்தனர். சுப்புலட்சுமிக்கு காந்தியக் கொள்கைகளின் மீது ஆர்வம் இருந்தது. காந்தி தமிழகம் வந்தபோது, அவரை வரவேற்றவர்களுள் இவரும் ஒருவர்.
1930ல் கல்வித்துறை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார் சுப்புலட்சுமி. கடலூரில் உள்ள அரசாங்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கும் அதையொட்டி இருந்த உயர்நிலைப் பள்ளிக்கும் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார். அருகிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி போதிப்பதை லட்சியமாகக் கொண்டார். அங்கும் ஒரு 'சாரதா பள்ளி'யை உருவாக்கினார். சமுதாய நலக்கூடம் அமைத்து அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், அவர்கள் கைத்தொழில்களைக் கற்க ஏற்பாடு செய்தார். மாவட்ட ஆட்சியர் தொடங்கி செல்வந்தர்கள் பலரும் இப்பணிகளுக்கு ஆதரவளித்தனர். சாரதா பள்ளியை நன்கு வளர்த்தெடுத்து 'தென்னாற்காடு சமூக சேவை அமைப்பினரி'டம் (South Arcot Society Service Association) ஒப்படைத்தார்.
பிரசன்டேஷன் கான்வென்ட் 1912-13
1941ல் பணி ஓய்வு பெற்றார் சுப்புலட்சுமி. அதன்பின் பெண் சமூக உயர்வுக்காக AIWC, WIA (Women's Indian Association) போன்ற அமைப்புகளுடன் இணைந்து தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். பெண்களின் வாழ்க்கை உயர்வு குறித்துத் தனது பேச்சுக்களின் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார். 1942ல், வயதுவந்த பெண்கள் கல்வி பயில்வதற்காக, மைலாப்பூரின் ஸ்ரீவித்யா காலனியில், 'ஸ்ரீவித்யா கலாநிலையம்' என்ற பள்ளியைத் தோற்றுவித்தார். 1944ல் மதுராந்தகத்தில், 'மதுராந்தகம் தொடக்கப் பள்ளி'யை ஆரம்பித்தார். 1945ல் இந்திய மாதர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மைலாப்பூர் மகளிர் சங்கத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றார். அதன்மூலம் The Mylapore Ladies Club School Society என்ற நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். அதுவே பின்னர் 1956ல், 'வித்யா மந்திர் பள்ளி' (Vidya Mandir, M.L.C. School Society) ஆனது. 1956-62 வரை, அப்போதைய சென்னை கவர்னரால், சட்டசபையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில பல சமூக நற்பணிகளை முன்னெடுத்தார். 1958ல், இந்திய அரசு இவரது உயரிய சேவையைப் பாராட்டி 'பத்மஸ்ரீ' விருதளித்தது.
எழுத்தாளாரகவும் முத்திரை பதித்தார் சுப்புலட்சுமி. 'கலைஞானி தாயுமானார்', 'தினசரி ஸ்தோத்திரங்கள்', 'பார்வதி சோபனம்', 'லலிதா சோபனம்', 'குசல வாக்கியம்' போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் 'பார்வதி சோபனம்' என்பது பாரதியார் ஆசிரியராக இருந்த 'சக்கரவர்த்தினி' இதழில் தொடராக வெளியானது. பகவத் கீதைக்கு எளிய உரை ஒன்றையும் எழுதியுள்ளார்.
பால்ய விதவைகளுக்குக் கல்வி தந்து அவர்களை வாழ்க்கையில் உயர்த்த வேண்டும் என்று சுப்புலட்சுமி அம்மாள் கண்ட கனவு நிறைவேறியது. இன்றைக்குத் தமிழகத்தில் பெண்கள் பள்ளிகள் அதிகமாக இருப்பதற்கு விதை போட்டவர் ஆர்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாள்தான் என்றால் மிகையல்லை. அவரிடம் பயின்றவர்களாலும், அவரால் ஊக்கம் பெற்றவர்களாலும், அவரை முன்மாதிரியாகக் கொண்டவர்களாலும் தான் தமிழகத்தில் பல பெண்கள் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. பார்வதி, தர்மாம்பாள், ஸி. சுப்புலக்ஷ்மி, செல்லம் ஆகியோர் சகோதரி சுப்புலட்சுமியின் வளர்ப்பில் உருவான சாதனைப் பெண்கள். இவர்கள் 1960களில் 7000த்திற்கு மேற்பட்ட மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டிகளாக விளங்கினர்.
டிசம்பர் 20, 1969ல் சுப்புலட்சுமி காலமானார். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்கு மறக்கமுடியாத பங்களிப்பைத் தந்திருக்கும் ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள், பெண்கள் என்றும் மறக்கக்கூடாத ஒரு முன்னோடி.
பா.சு. ரமணன் |