சொஜ்ஜியப்பம்
தேவையான பொருட்கள்

பூரணம் செய்ய
மெலிதான ரவை - 1/2 கிண்ணம்
நடுத்தர ரவை - 1/2 கிண்ணம்
தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம்
கொப்பரைத் துருவல் - 1/2 கிண்ணம்
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
பொடித்த வெல்லம் - 2 கிண்ணம்
சர்க்கரை - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 கிண்ணம்

மேல்மாவுக்கு
மைதா - 2 கிண்ணம்
பொடி ரவை - 1/2 கிண்ணம்
(ரவை பருமனாக இருந்தால் மிக்ஸியில் பொடிக்கவும்)
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

பூரணம்: ரவைகளையும் தேங்காய்த் துருவலையும் லேசாக வறுக்கவும். அத்துடன் கொப்பரைத் துருவல், ஏலக்காய்ப்பொடி, நெய், சர்க்கரை சேர்த்துப் பிசிறி அரைமணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கம்பிப் பாகு செய்துகொண்டு, அதில் ரவை கலவையைச் சேர்த்து, ஐந்து நிமிடம் மிதமான தீயில் கிளறவும். நன்கு ஆறவிடவும். மென்மையான உருண்டைகளாக உருட்ட வரவேண்டும்.

மேல்மாவு: மைதா, ரவை, உப்பு, நெய், எண்ணெயை நன்கு கலந்து, உதிரியாகப் பிசிறவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, பூரிமாவு போல் கெட்டியாகப் பிசையவும். மாவின்மேல் சிறிது எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, பூரணம், மேல்மாவு, இரண்டையும் (சம அளவு) எடுத்துச் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

மாவைச் சொப்புபோல் செய்து, பூரணத்தை உள்ளே வைத்து, வட்டமாக இட்டு அல்லது கையால் தட்டி, சூடான எண்ணெயில் நிதானமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சுவையான மொறுமொறு சொஜ்ஜியப்பம் தயார்!

வசுமதி கிருஷ்ணஸ்வாமி,
வெஸ்ட் புளூம்ஃபீல்டு, மிச்சிகன்

© TamilOnline.com