தென்றல் பேசுகிறது...
ஜோ பைடன் மின்னல் வேகத்தில் செயல்படுகிறார். பதவியேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகப்போகின்றன. அவரது ஜனநாயகக் கட்சி ஒன்றும் குடியரசுக் கட்சியைவிட மிக அதிகப் பெரும்பான்மை கொண்டிராத போதும், குடிவரவுச் சட்டத் திருத்தங்கள், கோவிட்-19 (பொருளாதாரத்) தூண்டுதலுக்கு 2 டிரில்லியன் டாலர் என்று அடுத்தடுத்து மிகச் சரியானவற்றை மிக விரைவாகச் செய்கிறார். பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கத் தொடங்கிவிட்டது வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதிலும், வட்டி விகிதங்கள் ஏறத் தொடங்கியிருப்பதிலும் இதை உணர முடிகிறது. இன்னும் 2 டிரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு நிதித் தொகுப்பு ஒன்றும் வரவுள்ளது. இது பழசாகிப்போன பாலங்கள், சாலைகள், நீர் வழிகள், தொழிற்சாலைகள், அகலப்பட்டை இணையம். தட்பவெப்ப மாற்றம் என்று இவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தத் தொகையும் நாட்டுப் பொருளாதார ரத்த நாளத்தில் புகும்போது, தொழில், உற்பத்தி, வேலை வாய்ப்பு என்று பல திசைகளிலும் விரும்பத்தக்க மாற்றங்களைப் பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, கோவிட்-19 தடுப்பூசி பல தரப்பு மக்களையும் சென்று எட்டத் தொடங்கியுள்ளதும் ஒரு சாதனைதான். தேர்தலில் வெற்றி பெறுவது வேறு, நாட்டு முன்னேற்றத் திட்டங்களில் வெற்றி பெறுவது வேறு. பைடன் - ஹாரிஸ் நிர்வாகம் இரண்டாவதிலும் வெற்றி பெறும் என்பதற்கு வலுவான சாத்தியக்கூறுகளைப் பார்க்க முடிகிறது. பிளவுபடுத்த நினைக்கும் சக்திகளைத் தூரத்தே வைத்து, முன்னேற்றத்துக்குக் கை கொடுப்பது அறிவுசார்ந்த அமெரிக்கச் சமுதாயத்தின் தலையாய கடமை.

★★★★★


ஆப்பிரிக்காவின் நாடுகள், இலங்கை, பாகிஸ்தான் போன்ற சிறிய நாடுகள் யாவும் சீனா விரித்த கடன் வலையில் விழுந்து, அதன் ஆதிக்கத் திட்டங்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் QUAD (The Quadrilateral Security Dialogue) என்ற அமைப்பாக இணைந்திருப்பது ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். எல்லோரையும் எப்போதும் மிரட்டிக்கொண்டே இருக்க முடியாது என்பதை ஜீ பிங் புரிந்துகொள்ள வேண்டும். அவர் அருகில் இருக்கும் சில போர்ப்படைத் தளபதிகளும் ஜீ பிங்கின் பன்னாட்டு உறவு அணுகுமுறையைத் துணிந்து கண்டித்திருப்பதையும் கவனிக்கவேண்டும்.

★★★★★


புது தில்லி IGNOU-யில் இணை இயக்குநராகப் பணிபுரியும் கேதாரம் விஸ்வநாதனின் ஓவியங்களும், மேடையமைப்புகளும் பல விருதுகளைக் குவித்திருக்கின்றன என்றால் காரணமில்லாமல் இல்லை. அத்தனை கலைநயம், அழகுணர்ச்சி, செய்நேர்த்தி, வண்ணச் சேர்க்கை. நேர்காணலைப் படிப்பதோடு அவரது படைப்புகளையும் பார்த்து ரசிக்கலாம். ரமலான் சிறப்புச் சிறுகதை, நீலகண்ட பிரம்மச்சாரி தொடரின் இறுதிப் பகுதி, காவ்யா சண்முகசுந்தரம் பற்றிய கட்டுரை என்று தென்றல் மீண்டும் வலம் வருகிறது. படித்து மகிழுங்கள்.

வாசகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு, ஸ்ரீராம நவமி, ரமலான் வாழ்த்துகள்.

தென்றல்
ஏப்ரல் 2021

© TamilOnline.com