உணவு தயாரிக்கிற, பரிமாறுகிற நபர்களிடமிருந்து மிக நுண்மையான தாக்கம் உணவுக்குள் செல்கிறது, உண்பவர் அதனை உள்வாங்கிக் கொள்கிறார். குணநலனுக்கு ஆதாரம் உணவுதான். உடலின் நிலைமை மனநிலையைப் பாதிக்கிறது. எண்பது வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
ஹம்சராஜ் என்ற பெயரில் பத்ரிநாத்தில் பெரிய யோகி ஒருவர் இருந்தார். அவர் எப்போதும் நாம சங்கீர்த்தனத்தில் முழுகியிருப்பார். அவருக்கு, மிக விசுவாசமான, சிரத்தையுடைய சீடன் ஒருவன் இருந்தான். அவனுக்குச் சில நாட்களாகவே ஒரு கனவு வந்து அவனுடைய மன அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது. அதில் அழகிய பதினாறு வயதுப் பெண் ஒருத்தி தோன்றி, "என்னை யாரும் காப்பாற்ற மாட்டீர்களா?" என்று பரிதாபமாகக் கேட்டாள். இந்த வினோதமான கனவு அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்தத் துயரம் நிரம்பிய உருவத்தையும் பரிதாபமான கதறலையும் அவனால் மறக்கமுடியவில்லை. அவன் தான் படும் பாட்டைக் குருவிடம் கூறினான்.
ஹம்சராஜ் நிஜமாகவே ஒரு ஹம்சம்தான், தேவலோகத்துப் பறவைதான். அன்னப் பறவையால் பாலையும் நீரையும் பிரித்துண்ண முடியும், இல்லையா? ஹம்சராஜ் தமது விவேகத்தால் நிலைமையை ஆராய்ந்து, அந்தக் கொடுமையான கனவின் காரணத்தைக் கண்டறிந்தார்.
"முதல் நாள் நீ என்ன செய்தாய்?", "எங்கே போனாய்?", "என்ன சாப்பிட்டாய்?" என்பது போன்ற கேள்விகளால் சிஷ்யனைத் துளைத்தார். தனது நண்பனோடு அவன் ஒரு விருந்துக்குப் போய் அங்கே சில பூரி, சப்பாத்திகளைத் தின்றது தெரியவந்தது. அந்த விருந்தை ஒரு ஏழை பிராமணர் தயாரித்திருந்தார். ஹம்சராஜ் தமது சீடனை அனுப்பி, அந்த ஏழை பிராமணர் ஏன், எப்படி அந்த விருந்தை பத்ரிநாத்தின் சன்யாசிகளுக்கு வழங்கினார் என அறிந்து வரச் சொன்னார். அந்தக் கனவு வந்தவேளை நான் இப்படி வீணான வேலைகளுக்கு, தேவையற்ற விஷயங்களைத் தெரிந்துவரப் போகவேண்டியிருக்கிறது என்று நொந்துகொண்டே சிஷ்யன் போனான். இதற்கும் தனது ஆத்மசாதனைக்கும் என்ன தொடர்பு என்று அவனுக்குப் புரியவில்லை.
இருந்தாலும் அவன் போய், அந்த விருந்து எதற்காக வழங்கப்பட்டது, எந்தப் பணத்தால் செய்யப்பட்டது என்பதை விசாரித்தான். ஒரு பிராமணர் தனது மகளை அறுபது வயது வட்டிக்கடைக்காரர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்து, அதற்குப் பதிலாகப் பெற்ற பத்தாயிரம் ரூபாயில் அந்த விருந்தை நடத்தினார் என்பது தெரியவந்தது. இப்போது சன்யாசிகளை நோக்கி அந்தக் கைவிடப்பட்ட யுவதி தனக்குக் கருணை காட்டும்படி வேண்டுகிறாள்.
அப்படியொரு மிக அத்தியாவசியப் பொருளான உணவை ஏற்பதற்கு முன்னர், அது எங்கிருந்து வந்தது, அதைக் கொடுப்பதற்கான காரணம் என்ன, அதைக் கொடுப்பவரின் மனக்கிளர்ச்சிகள் போன்றவற்றை ஆராய வேண்டுமென்பதைத் தமது சீடர்களுக்கு ஹம்சராஜ் நிரூபித்தார்.
நன்றி: சனாதன சாரதி, மே 2020
பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா |