ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!
கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்று அர்த்தம் என்று கண்டோம். ஸிட்ரிக்ஸ் நிறுவனம் & ஆப்பிள் ஐபேட், paypal & E-Bay மற்றும் Zinga & Facebook போன்ற சூறாவளி மேடையைச் சார்ந்து அனுகூலம் தேடிக்கொண்ட விவரத்தைப் பார்த்தோம். அவ்வாறு அனுகூலம் பெற வேண்டுமானால் அந்தச் சூறாவளி மேடையின் பயனர்கள் பெரும்பாலோர்க்கு மிகத் தேவையான அம்சம் ஒன்றை அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டோம்.

சென்ற பகுதியில், சூறாவளி மேடையின் பயனர்களுக்கு எவ்வாறு உங்கள் விற்பொருள் சென்றடைய முதல் வழிமுறையாக, அம்மேடையினரே உங்கள் விற்பொருளை தங்கள் பெயரில் விற்பதைப் பற்றியும், அதற்கான விளம்பரம் மற்றும் தேடல் வசதியளிப்பதையும் பற்றி விவரித்தோம்.

அப்படியானால், சூறாவளி மேடையைச் சார்வதால் பலமான அனுகூலந்தானே?! பிரதிகூலம் ஒன்றும் இல்லையல்லவா? அப்படி இல்லாமலிருக்க வாய்ப்பில்லையே! யின்-யாங் என்று சொல்வார்கள். தமிழில் இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் என்றும் ஒரு பாடல் கூறுகிறது! அதுபோல், பல அனுகூலங்கள் இருப்பினும், சில சூறாவளி மேடை அளிக்கும் பிரதிகூலங்களும் அத்தோடு வருகின்றன.

ஸிங்காவுக்கு அளித்துவந்த சந்தை வசதிகளை முகநூல் நிறுத்தியதும் ஸிங்கா பட்ட பாட்டைப் பற்றி இக்கட்டுரையில் நாம் முன்பே கண்டோம். அதுபோல் சூறாவளி மேடையையே முழுவதுமாக அல்லது மிக அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலையில், அம்மேடை உதவியை நிறுத்தினால் நிலைமை ததிங்கணத்தோம்தான். அல்லது அம்மேடை, தன் பலத்தைப் பயன்படுத்தி உங்கள் வருமானத்தில் மிக அதிகப் பங்கைத் தனக்கு அளிக்குமாறு வற்புறுத்தவும் கூடும். அதை அளிக்க மறுத்தால் மறுவிற்பனை அல்லது வணிக மேம்பாட்டை நிறுத்திவிட்டு உங்கள் போட்டியாளரை மேம்படுத்தக் கூடும். அல்லது உங்கள் வருமானத்துக்கு பங்கம் விளைவித்து உங்கள் நிறுவனத்தைக் குறைந்த விலைக்கு வாங்கிவிட வற்புறுத்தவும் வாய்ப்புள்ளது!

அத்தகைய மேடைக் கூட்டாளி பிரதிகூல அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டுமானால் ஒரே ஒரு பங்காளர் நிறுவன மேடையையே சார்ந்திருக்கக் கூடாது. அம்மேடைக்கு சம்பந்தப்பட்ட ஒரு மேல்நிலை மேடையைச் சார வேண்டும். உதாரணமாக, அமேஸான் மேகக் கணினியை மட்டும் சார்ந்து அதன் சந்தையை மட்டும் நாடாது, பொதுவாக பல மேடைக் கணினிச் சந்தைகளிலும் உங்கள் மென்பொருள் அல்லது சேவையை அளிக்கவேண்டும்.

அல்லது, நீங்கள் சார்ந்த மேடையின் மறுவிற்பனையை மட்டுமே உங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையும் நம்பியிருக்கக் கூடாது. அதே வாடிக்கையாளர்களைச் சென்றடையப் பல விற்பனை வழிமுறைகளையும் பலதரப்பட்ட கூட்டு நிறுவனங்களையும் பயன்படுத்தி கூட்டாளி அழுத்த அபாயத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மேடைக் கூட்டாளிகள் விற்பனை வழிச்சார்பு மட்டுமே அபாயமில்லை. அம்மேடை நிறுவனமே உங்கள் விற்பொருளுக்குப் போட்டியாக வரக்கூடும். இது இரு வழிகளில் நடக்கலாம். முதலாவதாக, அம்மேடை விற்பொருளைத் தாங்களே உருவாக்கக் கூடும். இதைத்தான் ஒருகாலத்தில் ஐ.பி.எம். செய்துவந்தது. பிற்காலத்தில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேடையில் செய்து வந்தது. போர்லண்ட், லோட்டஸ் நிறுவனங்களை, தான் உருவாக்கிய மென்பொருட்களால் மைக்ரோஸாஃப்ட் பொடியாக்கியது ஞாபகம் உள்ளதா? தற்காலத்தில் அதே வேலையைத்தான் அமேஸான் நிறுவனம் தன் மேகக்கணினி மேடையைப் பயன்படுத்திச் செய்கிறது. தன் மேடைச்சந்தையில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் அல்லது சேவையை அமேஸான் சில காலத்துக்குப் பிறகு தன் சேவையாக அளிக்க ஆரம்பிக்கிறது.

மற்றொரு வழிமுறை உங்கள் போட்டியாளரை விலைக்கு வாங்கி அவர்களின் விற்பொருளைத் தங்கள் விற்பொருளாக்குவது. மறுவிற்பனை பற்றி விவரிக்கும்போது முன்பு இதைக் கண்டோம். ஆனால் போட்டியாளரை வாங்கிவிட்டால் மேடை நிறுவனத்தால் தீவிரமாகப் போட்டியிட இயலும். ஏனெனில், வேறொரு நிறுவனத்துக்கு மறுவிற்பனைக் கட்டணம் அளிக்கும் தேவை இல்லாததால் விலையை அபரிதமாகக் குறைத்து, உங்கள் வாடிக்கையாளர்களை அபகரிப்பது சாத்தியமாகிவிடும்.

மேற்கண்ட இரு வழிமுறைகளிலும் ஒரு தீவிரமான நடைமுறை உள்ளது. அது என்னவென்றால், தாங்கள் உருவாக்கிய அல்லது வாங்கிய விற்பொருளை மேடையின் ஓர் அம்சமாகவே ஆக்கி, விலையை பூஜ்யமாக்கி, பயன்பாட்டை தானியக்கமாக (automatic) எளிதாக்கி போட்டியாளரின் விற்பனையைத் தவிடுபொடி ஆக்கிவிடுவது. நாம் முன்பு கண்டபடி நெட்ஸ்கேப் நிறுவனத்தின் இணைய உலாவிக்குப் போட்டியாகத் தன் மின்வலை ஆராய்வு உலாவியை விண்டோஸ் மென்பொருளின் ஓர் அம்சமாக, இலவசமாக்கி நெட்ஸ்கேப்பின் கழுத்தை இறுக்கிவிட்டது!

அதுமட்டுமல்லாமல் மற்ற இலவச உலாவிகளையும் (உதாரணமாக மோட்ஸில்லா) பயன்படுத்துவதற்கு இடையூறு விளைவித்தது. அதனால் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தையே உடைக்க அமெரிக்க அரசாங்கம் முனைந்ததுகூட நினைவிருக்கலாம்!

அடுத்த பகுதியில், சூறாவளி மேடைகளோடு சார்ந்து செயல்படும்போது உண்டாகக்கூடிய பிரதிகூலங்களைத் தவிர்ப்பதற்கான நுட்பங்களைப் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com