"எனக்கு வேலை பண்ணவே பிடிக்கல சரண். ஆபிஸ் போனோமா, சின்சியரா வேலை பார்த்தோமா, நிம்மதியா கிளம்பி வீடு வந்தோமான்னு இல்லாம தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை, விவாதம், பைசா பெறாத விஷயத்துக்கு வெட்டியா மீட்டிங் போட்டு அடுத்தவங்களைக் குறை சொல்றதுன்னு… சே… இதுக்குத்தான் ஆசை ஆசையா படிச்சி வேலைல சேர்ந்தோமான்னு அலுப்பா இருக்கு…" வீட்டிற்குள் நுழைந்த கையோடு நீளமாகப் புலம்பியபடி தொம்மென்று சோபாவில் சரிந்த மித்ராவை யோசனையாகப் பார்த்தான் சரண்.
"இன்னிக்கு என்ன புதுப் பிரச்சனை?" டம்ளரில் தண்ணீர் நிரப்பி அவளிடம் நீட்டியவன், அருகே வந்து அவளுடைய முன்னுச்சி முடியை ஒதுக்கினான். "என்ன சொல்லச் சொல்ற? தினமும் ஒரே கதையைச் சொல்லி உன்னை வேற போரடிக்காம… எனக்கே என்னை நினைச்சா ஒருமாதிரி வெட்கமா, இன்-எஃபிசியன்டா தோணுது..." ஏறிட்டவளின் முகமும் கண்களும் வெகுவாக வாடியிருக்க, அவள் பேசும் விதத்தைச் சரண் கவலையுடன் கவனித்தான்.
தொட்டதற்கெல்லாம் புலம்பும் சில பெண்கள் போல வேலைக்கு அஞ்சும் ஆளல்ல அவள். இப்போது என்றில்லை. கல்லூரிக் காலத்தில் இருந்தே படபட பட்டாம்பூச்சியாக உத்வேகத்துடன் வளைய வருபவள். எவ்விதப் பொறுப்பையும் தானே வலியச் சென்று ஏற்றுத் திறம்படச் செய்து முடிப்பவள். சொல்லப் போனால் அவளுடைய ஆளுமைத்திறன் கண்டுதான் சரண் அவளைக் கவனிக்கவே ஆரம்பித்தான். ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகி, பிறகு காதல் சொல்லி மணந்து, இதோ தம்பதிகளாக வாழ்ந்து வரும் இந்த ஐந்து வருடங்களாக இவளை இத்தனை உற்சாகக் குறைவாக அவன் கண்டதேயில்லை.
ஆட்டோமேஷன் துறையில் உயர்கல்வி, யுனிவர்சிடியில் தங்கமெடல், அவளின் லட்சியப்படி மிக உயர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தில் பணி எல்லாம் இருந்தும் சமீப நாட்களாக மித்ரா உற்சாகமின்றி வளைய வருவது வாடிக்கை ஆகியிருந்தது.
"ஒண்ணா, அந்த ஆள் இங்க இருந்து கிளம்பணும், இல்ல நான் வேற வேலை தேடணும். அவன் நிச்சயமா கிளம்பமாட்டான். நான்தான் எங்கயாவது போய்த் தொலையணும்" என்று புலம்பியவளுக்குக் காது கொடுத்துக்கொண்டே தேநீர் தயாரித்தவன் அவளிடம் ஒரு கோப்பையை நீட்டினான். "நீ ரிஃப்ரெஷ் பண்ணிட்டுச் சூடா குடி, நான் போய்ப் பாப்பாவைக் கூட்டிட்டு வந்துடுறேன்" கிளம்பியவன் கதவைச் சாற்றும் நிமிடம் வரை, "அச்சச்சோ... மறந்தே போயிட்டேன்…" என்ற குரல் வரும் என்று எதிர்பார்த்தான். ஆனால், மித்ரா அந்த எண்ணமே இல்லாமல் எதைக் கண்டோ மிரண்ட முகபாவத்துடன் சோபாவில் தலைசாய்த்துப் பலகணி ஜன்னல் வழியே தூரத்து வானை வெறித்துக் கொண்டிருந்தாள்.
"ப்பா…" தன்னைக் கண்டதும் ஓடி வந்து கால்களைக் கட்டிக்கொண்ட நேஹா, அடுத்த நொடியே "அம்மா எங்கப்பா...?" என்றாள். வழக்கமாக மித்ராதான் நேஹாவை கிரஷ்-லிருந்து அழைத்து வருவாள். "நான் சீக்கிரம் வந்துட்டா கூட்டிட்டு வந்துடுறேன்" என்று இவன் சொன்னால்கூட "வேணாம் சரண், நானே போறேன், என்னைக் கண்டதும் அவ ஓடி வந்து கட்டிக்கிறது எவ்ளோ சந்தோசம், தெரியுமா? குழந்தையைப் பத்துமணி நேரம் பிரிஞ்சிருக்கோம்ங்கிற கவலையெல்லாம் அந்த நிமிஷம் பஞ்சாப் பறந்துடும்" என்று பிடிவாதமாக அந்தப் பணியைத் தானே விரும்பிச் செய்பவள்.... இன்று மகளைக்கூட மறந்து நிலைபிறழ்ந்து அமர்ந்திருக்கிறாள் என்றால் பிரச்சனை தான் நினைத்ததைவிடப் பெரிது என்று புரிந்தது.
இந்த ஆறு மாதமாகத்தான் இந்தச் சிக்கல், மித்ராவின் பழைய மேலாளர் பணி உயர்வு பெற்று டெல்லி சென்றதில் இருந்து தொடங்கிய பிரச்சனை. அந்த இடத்திற்குப் பூனேவில் இருந்து ஸ்ரீதர் என்பவன் மாற்றலாகி வர, அன்றில் இருந்து என்னவோ கிரகக்கோளாறு போல அனுதினமும் ஏதோவொரு சிக்கல். அதுநாள்வரை அவள் அனுபவித்த பணி நிம்மதியும் திருப்தியும் தொலைந்தே போயிருந்தன.
"வேணும்னே குறை கண்டுபிடிக்கிற மாதிரி இருக்கு சரண், தனக்குத்தான் எல்லாம் தெரியும், நீ பண்றது கண்டிப்பா தப்புங்கிற மாதிரி முரடா நடந்துகிறாரோன்னு தோணுது. ஒருத்தங்களை உடனே தப்பு சொல்லக்கூடாது, இருந்தாலும் ஐ ஃபீல் சம்வாட் ஆக்வார்ட்…" என்று தொடங்கியவள், "இன்னிக்கு க்ளையன்ட் மீட்டிங்ல என்ன ஆச்சு தெரியுமா, அவங்கல்லாம் என்னோட பிரசன்டேஷனைப் பார்த்து பிரமிச்சு உட்கார்ந்திருக்காங்க. எல்லாம் ஓகே, இப்படியே செய்யலாம்னு முடிவான நேரத்துல, வேணும்னே இந்த டிசைன் ஏன் இப்படி இருக்கு, ஏன் அப்படி இல்லன்னு இவரே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாரு... வந்தவங்களே ஒரு மாதிரி பார்க்குறாங்க, இவங்கல்லாம் ஒரே டீம்தானேன்னு... நான் சொல்றதுல ஏதாவது சந்தேகம் இருந்தாலும் தனியா என்கிட்ட கேட்கிறதுதானே நியாயம், இந்த மாதிரி நடக்கிறது இது முதல் தடவை இல்ல, எங்க எனக்கு நல்ல பேரு கிடைச்சிடுமோன்னு வேணும்னே பண்ற மாதிரி இருக்கு..." என்று ஒரு நாள் கண்களில் நீர் வராத குறையாகப் புலம்பித் தீர்த்தாள்.
அதற்குப் பிறகு ஒன்று மாற்றி ஒன்று இப்படித்தான். "ஈகோயிஸ்டிக்கான ஆளா இருக்கும். நீ ஏன் பெர்சனலா எடுத்துக்கிற? சரி, சரின்னு விட்டுட்டுப் போ..." என்று சொல்லிப் பார்த்த சரண், அவளுடைய பிரச்சனை தீவிரமாவது தெரிந்து, என்ன செய்வதென்று தானும் குழம்பிப் போனான்.
நேஹாவை அழைத்துக்கொண்டு வீடு வந்தபோதும் மித்ரா அதே நிலையில் அமர்ந்திருந்தாள். "அம்மா..." என்று தன்னிடம் ஓடிவரும் குழந்தையிடம்கூட அவள் மனது செல்லவில்லை. நேஹாவைத் தூக்கி மடியில் வைத்தபடி லேசாகச் சிரித்தாளே ஒழிய, மீண்டும் அதே வெறித்த பார்வை, யோசனையில் குழிந்த கண்கள், சோர்ந்த முகம்.
சரணுக்கு உண்மையில் பயமாக இருந்தது.
"பேசாம வேலையை விட்டுட்டு குழந்தையோட நிம்மதியா வீட்டுல இரேன்…" என்று சொல்லப் போனவன், மித்ராவிற்குத் தன் வேலை மேல் இருக்கும் காதல் புரிந்ததால் யோசனையுடன் இரவுணவு தயாரிக்க ஆரம்பித்தான். இப்போது இருக்கும் வேகத்தில் சரி என்று உடன்பட்டுப் பணியை விட்டுவிடலாம். ஆனால், அவளுடைய உயிர்ப்பு அல்லவா அடிபட்டுப் போகும்! வேலையை மாற்றிக்கொள்ளச் சொல்லலாமா என்று எண்ணியவன், தானே அந்த யோசனையைக் கைவிட்டான். இந்த அலுவலகம் பல வகைகளிலும் இருவருக்கும் வசதியாக இருந்தது. வீட்டின் அருகில் இருந்தது, சிறந்த மனிதவளக் கொள்கைகள், மேலும் மேலும் கற்க நல்ல வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் அனுகூலமாக இருப்பதை உதறிவிட்டு தினமும் நான்கு மணிநேரம் நகரத்தின் மூலைக்குப் பயணித்து, களைத்துப் போய்த் திரும்பி, குடும்பத்தின் மொத்த சந்தோசத்தையும் தொலைப்பதா?
"மித்ரா, வந்து படு... நாளைக்குச் சனி, ஞாயிறு லீவுதானே… ஊருக்குப் போயிட்டு வரலாமா? திங்கள் ஒரு நாள் லீவு போட்டுடலாம்... அம்மாவும் சொல்லிட்டே இருக்காங்க..." என்றவனிடம் மித்ரா ஒன்றுமே பேசாமல் தலையாட்டினாள். அவளுக்கு இருந்த மனநிலையில் எங்காவது தொலைவாக ஓடிவிட்டால் தேவலாம் போலிருந்தது.
அடுத்த நாள் அதிகாலையிலேயே கிளம்பி பத்துமணி போல விழுப்புரம் சென்றடைந்தபோது வாசலிலேயே அம்மா காத்து நின்றாள். "வாங்க... வாங்க… நேஹா குட்டி.." அப்பா பேத்திக்குப் பிடித்த மிக்கி மவுஸ் முகமூடியை அணிந்து காம்பவுண்ட் பின்னாலிருந்து எட்டிப் பார்க்க, "தாத்தா!" குழந்தை குலுங்கிச் சிரித்தது. அப்பா பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் அம்மா இன்னும் வேலையில் இருக்க, பேத்தியை இரு வாரங்களுக்கு ஒருமுறை சந்திக்கிற வாய்ப்புக்காகக் காத்திருக்கிறவர்கள் அவர்கள். அப்பா குழந்தையுடன் விளையாட ஆரம்பிக்க, மித்ரா உதவி செய்ய, அம்மா பேசிக்கொண்டே சமைத்தாள்.
சாப்பாட்டு வேலை முடிந்து, "கொஞ்ச நேரம் படுத்துக்கோயேன்மா..." என்ற பிறகும் மித்ரா அதையும் இதையும் எடுத்து வைத்தபடி அங்கேயே உழன்று கொண்டிருக்க, அம்மா அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். வந்ததில் இருந்து சகஜமாகக் காண்பித்துக்கொள்ள முயன்றாலும் கருமையடித்துக் களையிழந்திருந்தது அவள் வதனம்.
"அதெல்லாம் இருக்கட்டும் விடு, அப்புறம் கழுவிக்கலாம், இங்க வா... இப்படிக் காத்தாட கொஞ்சம் உட்காரலாம்" என்று மருமகளைத் தோட்டத்து முற்றத்தில் அமரவைத்த அம்மா, "சரண் எல்லாம் சொன்னான்… வீணா கவலைப்படாதே" மெதுவாகச் சொல்ல, மித்ரா உடைந்து போனாள். கண்களில் சன்னமாகக் கண்ணீர் பூத்தது.
"வேலையை வீட்டு வாசலோட கழட்டிப் போட்டுடணும், வீட்டுக்குள்ள கொண்டு வரக்கூடாதுன்னு எல்லோரும் சொல்றதை நானும் சொல்ல மாட்டேன்மா. எனக்குத் தெரியும், வேலை செய்யற இடத்துல நிம்மதி இல்லேனா அது எந்த அளவுக்குக் காயப்படுத்தும்னு. அதுவும் குறிப்பா நமக்கு, வேலை பார்க்கிற பொண்ணுங்களுக்கு வேலை, வீடு இரண்டு இடத்துலயும் நிம்மதி வேணும்" அவர் மென்மையாகப் பேசும் விதம் காயம்பட்ட மனதை மயிலிறகால் வருடுவது போலிருந்தது.
"நானும் இதே மாதிரி நிலைல இருந்திருக்கேன். நீ இப்ப சொல்றியே, அதே விதம்தான், ஒரு செக்ஷன் மேனேஜர் நான் நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்னு நான் எழுதி அனுப்புற பைல்ல எல்லாம் ரிமார்க் எழுதி என்னைப் பாடாப்படுத்தி வச்சாரு. எல்லாத்துக்கும் காரணம் நான் எந்த இச்சுபிச்சுவுக்கும் ஈயின்னு அசடு வழியாம உள்ளதை உள்ளபடி நேருக்கு நேரா பேசுற ஆளுங்கிறதாலதான். ஒரு கட்டத்துல அவரோட டார்ச்சர் தாங்காம இந்த வேலையே வேணாம், நிம்மதிதான் வேணும்னு முடிவு எடுத்து ரெசிக்னேஷன் லெட்டரே கொடுத்துட்டேன்."
"அப்புறம்...??" "அன்னிக்கு அந்த ஆளு முகத்துல தெரிஞ்ச சந்தோசத்தைப் பார்க்கணுமே.. ஆனா, நானே எதிர்பார்க்காத விதத்துல எங்க எம்டியே என்னைக் கூப்பிட்டு பேசினாரு. 'ஏம்மா, என்ன காரணத்துக்காக வேலையை விடணும்னு நினைக்கிறீங்க'ன்னார். 'இங்க இருக்குற உள்ளரசியல் எனக்குப் பிடிக்கல சார். என்னால நிம்மதியா உட்கார்ந்து வேலை செய்ய முடியல. ஈகோவை வச்சு விளையாடுறாங்க'ன்னு எல்லாப் பிரச்சனைகளையும் விரிவா சொன்னேன்."
"கேட்டுட்டு அவர் பெருசா சிரிச்சாரு. 'அம்மா, இதுக்கா வேலையை விடணும்னு நினைக்கிறீங்க... நீங்க எங்க போனீங்கன்னாலும் இந்த அரசியல் இருக்கும். இங்க இவருன்னா, வேற இடத்துல வேற ஒருத்தர் வேற மாதிரி அரசியல் செய்யக் காத்திருப்பாங்க. எந்த இடத்திலயும் இந்த ஈகோ, முட்டல், குட்டல், பவர் ப்ளே எல்லாம் இருக்கும். நாமதான் அதையெல்லாம் கடந்து புறக்கணிச்சு முன்னேறி வரணும்'னாரு... எனக்கு அவர் அப்படிச் சொன்னதும் கோபமான கோபம், என்ன இவரு, தப்பு பண்றவங்களைக் கூப்பிட்டு கண்டிக்காம இப்படிப் பேசுறாரேன்னு..."
"'நீங்க வயசுல ரொம்பச் சின்னவங்க. சில வருஷ அனுபவம்தான், அதுதான் இத்தனை வருத்தப்படுறீங்க… கொஞ்ச நாளாச்சுனா உங்களுக்கே நான் சொல்றது புரியும்'னவர், 'இந்த லெட்டர் இப்படியே இருக்கட்டும். உங்களுக்கு இரண்டு வாரம் டைம் கொடுக்கிறேன், அதுக்கு மேலயும் நீங்க உங்க முடிவுல உறுதியா இருந்தா அக்செப்ட் பண்ணிக்கிறேன், திறமையான ஒருத்தரை எங்க கம்பெனி இழக்குறதுல எனக்கு விருப்பம் இல்ல'ன்னு சொல்லி என்னை அனுப்பி வச்சார்."
"ஏமாற்றமா இருந்தாலும் அவரு என்னை மதிச்சுக் கூப்பிட்டு பேசினது எனக்குப் புது நம்பிக்கையைத் தந்தது. என் திறமையும், வேலை சுத்தமும் அவர் வரைக்கும் போயிருக்குறதால தானே அவரே இத்தனை தூரம் சொல்றாருன்னு மனசுக்குள்ள ஒரு தெம்பு. அடுத்த இரண்டு நாள் லீவ் போட்டுட்டு வீட்டுல உட்கார்ந்து பொறுமையா யோசிச்சேன். யாரோ ஒருத்தரோட ஈகோவுக்கு, அவங்க விளையாடுற கீழ்த்தரமான அரசியலுக்கு நான் ஏன் என் திறமைக்கான வாய்ப்பை இழக்கணும்னு தோணுச்சு... அப்படி நான் வெளில வந்துட்டா நஷ்டம் எனக்குத் தான்னும் புரிஞ்சது."
"ஒரு உறுதியோட வேலையைத் தொடர முடிவு பண்ணி என்னோட லெட்டரை ரிவோக் பண்ணினேன். திரும்பவும் அதே செக்ஷன்ல தொடர்ந்தேன். அவர் வேணும்னே செய்யுற பிரச்சனைகளைத் துணிவோட எதிர்த்து நின்னேன். உங்களோட கமென்ட்ஸ ரைட்டிங்ல கொடுங்கன்னு நிர்பந்திச்சேன். என் போராட்டம் புரிஞ்சு, அதில் இருக்குற நியாயம் உணர்ந்து என் செக்ஷன்ல இருந்த மற்ற ஆட்களும் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. கடைசில என்ன ஆச்சு தெரியுமா, தன்னோட பேரு கெட்டுப் போறது தெரிஞ்சு அந்த மனுஷன் தானே ஒரு வருஷத்துல ரிசைன் பண்ணிட்டுப் போயிட்டாரு. அடுத்த மூணாம் வருஷம் நான் அதே செக்ஷனுக்கு ஹெட்டா வந்து, இதோ இப்ப ரீஜனல் மேனேஜரா அதே கம்பெனில இருக்கேன்."
"செம... சூப்பர் மா..." இந்தக் கதைகளை எல்லாம் புதிதாக அறிந்துகொண்ட மித்ரா மாமியாரை இன்னும் சற்று மதிப்புடன் பார்த்தாள்.
"என் எம்டி அன்னிக்கு எனக்குச் சொன்னதை உனக்கு நான் சொல்றேன். துணிஞ்சு நில்லு. உன் வேலையில் துல்லியமும் திறமையும் இருந்தா இந்த மாதிரி பாலிடிக்ஸை தைரியமா ஒரு கை பாரு, இல்ல, அலட்சியமா தள்ளி விட்டுட்டுப் போயிட்டே இரு... சொல்லப் போனா எங்கதான் அரசியல் இல்ல சொல்லு? நாமதான் சாதுர்யமா சமாளிக்கணும்" கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல அவர் நிதானமாகப் பேசிய விதம், மித்ராவின் அலையடித்த மனதை அமைதியாக்க முயன்றது.
"ரொம்பவே குழம்பிப் போயிருந்தேன்மா. நீங்க பேசினதைக் கேட்டதும் கொஞ்சம் தைரியமா இருக்கு" என்றாள் மாமியாரின் கைகளைப் பற்றி.
"பாருடா. சைக்கிள் கேப்ல இங்க ஒரு ஞான உபதேசம் நடக்குதே... இதென்ன போதி மரமா? வேப்ப மரமா?" சரண் உள்ளேயிருந்து கிண்டலடிக்க, லேசான மனதுடன் சிரித்தாள். அந்த வாரம் முழுவதும் விடுமுறை எடுத்து அங்கேயே தங்கியவள், தெளிவான சிந்தனை ஓட்டத்துடன் தனக்குள் பலவாறாக யோசித்தாள். அடுத்த திங்களன்று அலுவலகத்தில் நுழைந்தவள் மனதில் அமைதியும், உறுதியும், தீர்க்கமும் இடம் பிடித்திருந்தன. "என்ன மித்ரா, ஒரு வாரம் லீவ் போட்டுட்டு ஜாலியா போயிட்டீங்க..?" என்று கிண்டலாக ஸ்ரீதர் கேட்டபோது, "எடுக்கிறதுக்குத்தானே ஸ்ரீதர் கம்பெனில லீவே வச்சிருக்காங்க" என்றாள் மித்ரா இயல்பாக. ஸ்ரீதர் ஒருமாதிரி பார்த்துவிட்டுச் செல்ல, இவள் சிரித்துக் கொண்டாள்.
அடுத்த நாள் முக்கியமான வாடிக்கையாளர் சந்திப்பு. அவன் வழக்கம் போலக் குறைசொல்ல ஆரம்பிக்க, "ஸ்ரீதர், நான் உங்களுக்கு ஏற்கனவே டெமோ காண்பிச்சேன், இப்ப சொல்ற பாயிண்ட்ஸை அப்பவே சொல்லி இருந்தா உடனே செய்திருக்கலாம். இப்பவும் ஒரு பிரச்சனையும் இல்லை. நாம இன்டர்னலா டிஸ்கஸ் பண்ணலாம், இப்ப கஸ்டமர் தேவைகளைக் கேட்டு குறிப்பெடுத்துக்கலாம்…" என்று அவள் எந்தத் தயக்கமும் இல்லாமல் அனைவர் முன்னிலும் திட்டவட்டமாகச் சொன்னாள்.
இதை எதிர்பார்க்காத ஸ்ரீதரின் முகத்தில் ஈயாடவில்லை.
அரசியல் பழகுவதின் முதல் அம்சம் நமக்கு நாமே பேசுவது, மற்றவர் யாராவது இடையிட்டு ஆபத்பாந்தவனாக உதவுவார்கள் என்றில்லாமல் பிரச்சனைகளை நேருக்கு நேராகத் தானே எதிர்கொள்வது என்று தான் கற்ற பாலபாடத்தை எண்ணிக் கொண்டவளின் முகத்தில் நம்பிக்கையும் கம்பீரமும் ஒளிர்ந்தன. அவளும் அரசியல் பழக ஆரம்பித்திருந்தாள். மற்றவரைச் சாய்க்க அல்ல, தான் நிலைசாயாமல் உறுதியாக நிற்பதற்கென!
"மித்ரா இஸ் ரைட்... உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா நீங்க அப்புறம் தனியா பேசிக்கோங்க ஸ்ரீதர். இப்ப அவங்க ப்ரசன்டேஷனை தொடரட்டும்" அவர்களுடைய பொது மேலாளர் இடையிட்டுச் சொல்ல, திகைத்து நின்றவனைக் கண்டுகொள்ளாத மித்ரா புன்னகையுடன் உரையாடலைத் தொடர்ந்தாள்.
ஹேமா ஜெய், யுடா |