ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் (பகுதி-1)
சித்தி வாலாம்பாளிடம் தலை பின்னிக் கொண்டிருந்தாள் சிறுமி லட்சுமி. உள்ளறையில் தலைக்குக் குளித்துவிட்டு, மடிசார் கட்டிக்கொண்டு ஏதோ வேலையாக இருந்தாள் அம்மா விசாலாட்சி. அன்று ஏதோ விசேஷம். அதற்காக பாட்டியும் அம்மாவுமாக ஏதோ தின்பண்டத்தை மணக்க மணக்கத் தயார் செய்து கொண்டிருந்தனர். தலையிலிருந்து நழுவும் முக்காட்டை அவ்வப்போது சரிசெய்தவாறே சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட்டிருந்தாள் பாட்டி. அறையில் வேலையாக இருக்கும் அம்மாவையும், தனக்குத் தலை பின்னிவிடும் சித்தியையும் மாறிமாறிப் பார்த்த சிறுமி லட்சுமிக்கு அன்றும் அந்த சந்தேகம் வந்தது. ஏன், வெகுநாட்களாகவே அவளுக்கு அந்தச் சந்தேகம் இருந்தது. ஆனால், அதனை யாரிடம் கேட்பது? கேட்டால் திட்டுவார்களோ, அடிப்பார்களோ என்று பயந்து அவள் கேட்காமலே இருந்தாள்.

"அம்மா, தினந்தோறும் தலைக்குக் குளித்து மஞ்சள் பூசி, பொட்டு வைத்துக் கொண்டு, பூ வைத்துக் கொண்டு இருக்கிறாள். அப்பாவுடன் கோவிலுக்குச் செல்கிறாள். காய்கறி வாங்கக் கடைக்குச் செல்கிறாள். ஆனால், அம்மாவைவிடப் பல வருடம் சின்னவளான சித்தி மட்டும் ஏன் அந்தக் கசங்கிய வெள்ளைப் புடவையையே கட்டிக்கொள்கிறாள்? பாட்டிமாதிரி தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறாளே, ஏன்?. அம்மா, அழகழகான ஆடைகள் உடுத்த, சித்தி மட்டும் ஏன் இப்படி எந்த அலங்காரமும் செய்து கொள்ளாமல் இருக்கிறாள்? ஏன் சித்தி வீட்டைவிட்டு எங்கும் போகாமல், கோயிலுக்குக்கூடப் போகாமல் இருக்கிறாள்? உறவினர்கள் வந்தால் அவசரமாக உள்ளறைக்குள் ஓடிவிடுகிறாளே ஏன்? ஐந்து வயது லட்சுமிக்கு விடை தெரியவில்லை. யாரிடமும் கேட்கவும் துணிவில்லை.

★★★★★


ஒரு சமயம் தஞ்சாவூரில் இருந்த உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றிருந்தாள் லட்சுமி. வீட்டின் வாசலில் ஏழெட்டு வயதுள்ள சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். எதிர்வீட்டிலிருந்து அவர்களுடன் விளையாட மூன்று வயதுக் குழந்தை ஒன்று ஓடிவந்தது. ஆனால், அந்தச் சிறுமிகள் அந்தக் குழந்தையை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. 'போடி நீ விதவை' என்று சொல்லி, தங்கள் கழுத்தில் அணிந்திருந்த 'தாலி'யைக் காட்டி, அந்தக் குழந்தையைத் தள்ளிவிட்டனர். புரியாத அந்தக் குழந்தை அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடி அம்மாவிடம் புகார் சொல்ல, உடனே அந்த அம்மாள் தன் கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியைக் கழற்றிக் குழந்தையின் கழுத்தின் போட்டாள். குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு மீண்டும் விளையாட வந்தது. தன் கழுத்தில் இருந்த சங்கிலியை அந்தச் சிறுமிகளிடம் காட்டியது. ஆனால், அந்தச் சிறுமிகள் குழந்தையை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவே இல்லை.



இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுமி லட்சுமிக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'விதவை.. விதவை..' என்கிறார்களே அப்படியென்றால் என்ன அர்த்தம்? ஏன் அந்தச் சின்னக் குழந்தையை அப்படிச் சொல்கிறார்கள்? விளையாட்டுக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்களே, ஏன்? இப்படியெல்லாம் தனக்குள் யோசித்தாள். விடைதான் கிடைக்கவில்லை.

லட்சுமிக்கு அப்போது தெரியாது, தனக்கும் இன்னும் சில வருடங்களில் இப்படி ஒரு பட்டம் சூட்டப்படும் என்பதும், தானும் இம்மாதிரி எந்தவித விளையாட்டும் விளையாட முடியாமல் போகும் நிலைமை வரும் என்பதும்.

★★★★★


'லட்சுமி' என்றும், 'பொன்னக்கா' என்றும் குடும்பத்தாரால் செல்லமாக அழைக்கப்படும் ரிஷியூர் சுப்பிரமணியன் சுப்புலட்சுமி, ஆகஸ்ட் 18, 1886ம் நாள் சுப்பிரமணிய ஐயர் - விசாலாட்சி இணையருக்கு மகளாகப் பிறந்தாள். தந்தை சைதாப்பேட்டை அரசு விவசாயக் கல்லூரியில் ஆசிரியர். குழந்தைக்கு அடிப்படைக் கல்வி அளிக்கப்பட்டது. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களும் போதிக்கப்பட்டன. ஐந்து வயதானதும் சைதாப்பேட்டையில் உள்ள பாலர் பள்ளியில் சேர்க்கப்பட்டாள் சுப்புலட்சுமி. ஆரம்பக் கல்வியை அங்கு நிறைவு செய்ததும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தாள். ஈ.எஸ்.எல்.ஸி. தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தாள். மேலே நிறையப் படிக்கவேண்டும் என்று கனவு கொண்டிருந்தாள். ஆனால், எட்டாம் வகுப்போடு கல்வி நிறுத்தப்பட்டது. காரணம், அக்காலத்தில் - குறிப்பாக பிராமண சமூகத்தில் - பெண்கள் மேற்கல்வி கற்க அனுமதிக்கப்படவில்லை. உண்மையில் அடிப்படைக் கல்வி கற்பதற்கே அனுமதி மறுக்கப்பட்டது. எட்டாம் வகுப்போடு சுப்புலட்சுமியின் கல்வி நின்றுபோனது.

பால்ய விவாகம் (சிறுவயதில் திருமணம்) சகஜமாக இருந்த காலம். அதை எதிர்த்துக் குரல் எழுப்பவோ, எதிராக நடந்துகொள்ளவோ குடும்பங்களில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. குலவழக்கத்திற்கு எதிராக நடக்க யாருக்கும் தைரியமும் இல்லை. 12 வயதில் சுப்புலட்சுமிக்கு உறவினர் பையன் ஒருவனுடன் திருமணம் நடந்தது. திருமணத்தன்று கணவன் என்று சொல்லப்பட்ட அந்தச் சிறுவனைப் பார்த்ததுதான். அதன்பின் தனது சைதாப்பேட்டை இல்லத்திற்கு வந்துவிட்டாள் சுப்புலட்சுமி. வீட்டுக்குள் அடைபட்டுத் தனது நாட்களைக் கழித்தாள். நிறையப் படிக்கவும், கற்கவும் அவளுக்கு ஆர்வம் இருந்தது. அது நடக்கவில்லை. கல்யாணத்தின்போது கட்டியிருந்த பனாரஸ் புடவையை அடிக்கடி எடுத்துப் பார்ப்பதும், அதன் மென்மையை ரசிப்பதுமே அவளது முக்கிய பொழுதுபோக்காக இருந்தது.

மணமாகிச் சில மாதங்கள் கழிந்திருக்கும். திடீரென்று ஒருநாள் ஒரு தந்தி வந்தது. அதைப் படித்ததும் வீட்டில் உள்ளவர்கள் சுப்புலட்சுமி'யைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தனர். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அழுகையும் வரவில்லை. இறுதியில் சித்திதான் அந்த சோகச் செய்தியை அவளிடம் சொன்னாள்: அவளது கணவன் இறந்துவிட்டான்! பருவமடைவதற்கு முன்பே, வாழ்க்கை என்றால் என்ன என்று உணரும் முன்பே, 'கணவன்' என்ற வார்த்தையின், உறவின் பொருள் என்ன என்பது தெரியும் முன்பே 'விதவை' ஆனாள் சுப்புலட்சுமி.

திருமணமான பெண் குழந்தைகளின் 'குழந்தைக் கணவர்கள்' இறந்து போனால், அந்தப் பெண் குழந்தை, தன் இறுதிக்காலம் வரை விதவைக் கோலத்தில் வாழ்வது பழகிவிட்ட காலம் அது. பருவமடைந்த பெண் குழந்தை விதவையானால், அவள் வயது என்னவாக இருந்தாலும் ஆடையலங்காரங்களைத் துறந்து, பூவின்றி, பொட்டின்றி, வெண்ணிற ஆடை பூணவேண்டியது கட்டாயம். வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது; திருமணமாகாத சிறுமியருடன் விளையாடக் கூடாது. வீட்டுக்குள்ளேயும் கூட அந்நியர், உறவினர் வந்தால் அவர்கள் கண்களில் படக்கூடாது. பிறர் ரசிக்கும், விரும்பும் எதையும் விரும்பவோ, அனுபவிக்கவோ பால்ய விதவைகளுக்கு உரிமை மறுகப்பட்டிருந்தது. மன அமைதி தேடிக் கோயிலுக்குக்கூடச் செல்ல முடியாத நிலை. சமையலறையும் புழக்கடையுமே அவர்கள் வாழ்விடம்.



இந்த நிலைமை தன் பெண் சுப்புலட்சுமிக்கும் வந்து விட்டதே என்று தாய் விசாலாட்சி கதறினாள். ஆனால், சுப்புலட்சுமியின் தந்தை சுப்பிரமணிய ஐயர் மாறுபட்ட சிந்தனைப் போக்கு உடையவராக இருந்தார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி எல்லாம் கற்றிருந்த அவர், பிற பால்ய விதவைகளுக்கு ஏற்பட்ட நிலைமை தன் மகளுக்கும் வரக்கூடாது என்று நினைத்தார். மகளை மேல்கல்வி கற்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்தார். அதற்குமுன் அவள் அடிப்படையான சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக, வீட்டிலேயே சுப்புலட்சுமி ஆங்கிலம் கற்க ஏற்பாடு செய்தார். ஆங்கிலப் புத்தகங்கள் பலவற்றை வாங்கிக்கொடுத்து, தானே ஆசிரியராக இருந்து கற்பித்தார். வயலின் ஒன்றை வாங்கிக்கொடுத்து அதை அவளே கற்க வசதி செய்தார். நாளடைவில் வீணையும் வாசிக்கக் கற்றாள் சுப்புலட்சுமி. பகவத்கீதையை தினந்தோறும் பாராயணம் செய்வதும் வழக்கமானது.

சுப்புலட்சுமியின் இம்முயற்சிகளுக்கு அவளுடைய வீட்டிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. சுப்புலட்சுமியின் பாட்டி 'இதெல்லாம் ஆசார விரோதம், அடுக்காது' என்று எதிர்ப்புக் காட்டினார். மகனையும் கண்டித்தார். ஆனால், சுப்பிரமணிய ஐயர் அசரவில்லை. உறவுகள், நட்புகளின் எதிர்ப்பை மீறி, மகளின் முன்னேற்றத்திற்கு தம்மால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தே தீருவதென்று முடிவுசெய்தார். அதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்.

பலரது எதிர்ப்பையும் மீறி, எழும்பூரிலிருந்த பிரசிடென்ஸி செகண்டரி அண்ட் ட்ரெயினிங் பள்ளியில் சேர்க்கப்பட்டாள் சுப்புலட்சுமி. ஆனால், தினந்தோறும் சைதாப்பேட்டையில் இருந்து எழும்பூருக்குச் சென்று வருவது கடினமாக இருந்தது. அக்காலத்தில் பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் தனியாக எங்கும் வெளியில் செல்லும் வழக்கம் இல்லை. அதுவும் பள்ளிக்குச் செல்லும் வழக்கம் அறவே இல்லை. சுப்புலட்சுமி அதையும் மீறி ஜட்கா வண்டியில் பள்ளிக்குச் சென்றுவர ஆரம்பித்தார். மீண்டும் பாட்டி மிகக் கடுமையாக எதிர்த்தார். இந்த நிலைமை தொடர்ந்தால் தான் எங்காவது சென்றுவிடுவதாக சுப்பிரமணிய ஐயரிடம் கூறினார். இதனால் சுப்புலட்சுமியின் பள்ளிப் படிப்புக்குத் தடை ஏற்பட்டது.

ஆனால், சுப்பிரமணிய ஐயர் தளரவில்லை. மகளின் உயர்கல்விக்காக எதையும் செய்வேன் என்று உறுதி பூண்டார். எழும்பூரில் பிரசிடென்ஸி பள்ளிக்கு எதிரே இருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். குடும்பத்துடன் அதற்குக் குடிபெயர்ந்தார். சைதாப்பேட்டைக்கு, தன் அலுவலகத்துக்கு, ரயிலில் சென்று வந்தார். சுப்புலட்சுமியின் கல்வி தொடர்ந்தது. வீட்டுக்கு எதிரே பள்ளி என்பதால் பாட்டியின் எதிர்ப்பும் மழுங்கியது.

ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் படித்த அந்தப் பள்ளியில் படித்த ஒரே இந்துப்பெண் சுப்புலட்சுமிதான். மட்டுமல்ல, ஒரே விதவைப் பெண்ணும் அவள்தான். பள்ளியில் சக மாணவிகளிடமிந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் அவள் பலவித அனுபவங்களைப் பெற்றாள். முயன்று படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றாள். அதனையடுத்து ஜார்ஜ் டவுனில் இருந்த பிரசன்டேஷன் கான்வெண்டில் Faculty of Arts (F.A., Junior Class) பயில ஆரம்பித்தாள். அதற்கும், தந்தையின் ஏற்பாட்டின்படி குதிரை வண்டியிலேயே சென்றுவந்தாள். படிப்பதற்காக ஒரு பெண் - அதிலும் ஒரு விதவைப் பெண் - பள்ளி செல்வதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். சிலர் திட்டவும், சபிக்கவும் செய்தனர். ஆனால், அதையெல்லாம் மனதில் கொள்ளாமல் முழுக்க முழுக்கக் கல்வியிலேயே தனது கவனத்தைச் செலுத்தினாள் சுப்புலட்சுமி. கான்வென்டில் மதம் மாற்றும் முயற்சிகளும் நடந்தன.தலைமைப் பொறுப்பில் இருந்த மதர் பேட்ரிக், சுப்புலட்சுமி என்ற பெயருக்குப் பதிலாக, அவளை 'சிபில்' என்றே அழைத்தார். பைபிளைக் கொடுத்து தினந்தோறும் படித்துவரச் சொன்னார். அதனையேற்று, தந்தையின் ஒப்புதலுடன் கீதையோடு சேர்த்து பைபிளையும் தினந்தோறும் வாசித்தாள் சுப்புலட்சுமி. அவள் மனமும் மாறவில்லை; மதமும் மாறவில்லை.

ஆனால், தன்னலமற்றுப் பணியாற்றும் அந்தப் பள்ளியின் தூய கன்னியரின் சேவை அவளை மிகவும் கவர்ந்தது. இயேசுநாதருக்குத் தங்களை ஒப்புவித்திருக்கும் அவர்களைப்போல, தானும் படித்து முடித்ததும் தன்போன்ற விதவைகளின் உயர்வுக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் எண்ணம் உறுதிப்பட்டது. சுப்புலட்சுமியின் பிற்கால சேவைப்பணிகளுக்கான விதை அங்கேதான் விழுந்தது.

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் சுப்புலட்சுமி. அதுபற்றிய செய்திகளும் அக்காலப் பத்திரிகைகளில் வெளியாகின. உடனே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. "சாதாரணமான பெண்களே கற்றறிய வேண்டாத கல்வியை இவர்கள் - விதவைகள் - பெறுவதென்றால் அது மிகக் கெடுதலான ஒன்று. அதைவிட மிகவும் மோசம், வயதுவந்த விதவைகள் தலைமயிர் வைத்துக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுவது. பளிச்சென்று அவர்கள் ஆடைகள் அணிவதும், நண்பர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்வதும் மானக்கேடான காரியங்கள்" என்றெல்லாம் பேசியும், எழுதியும் உறவினர்களும் நண்பர்களும் சுப்பிரமணிய ஐயரைக் கண்டித்தனர். அவரை ஒதுக்கி வைத்தனர். ஆனால், ஐயர் அதற்கெல்லாம் அசரவில்லை. மகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தன்னால் ஆன முயற்சிகளை முன்னெடுத்தார்.



அது விடுதலைப் போராட்டம் கொழுந்துவிடத் தொடங்கிய காலகட்டம். மக்கள் அறியாமையிலும், அடிமைத்தனத்திலும் மூழ்கி இருந்தனர். பாரதியார் போன்றவர்கள் தங்கள் பாடல்களாலும், கட்டுரைகளாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தனர். அக்காலகட்டத்தில் பாரதியாரின் ஆசிரியத்துவத்தில் 'சக்கரவர்த்தினி' என்ற பெண்களுக்கான இதழ் ஒன்று வெளியாகி வந்தது. அசலாம்பிகை அம்மாள், அலர்மேல் மங்கை, ஜானகி அம்மாள், தேவ குஞ்சரி அம்மாள் போன்றோர் அந்த இதழில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான கதை, கட்டுரை, தொடர்களை எழுதி வந்தனர். பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பாரதி, சுப்புலட்சுமியையும் எழுதுமாறு வேண்டிக் கொண்டார். கீதை, பைபிள், மேனாட்டுத் தத்துவ நூல்கள், இலக்கியங்களை எல்லாம் நன்கு கற்றவர் சுப்புலட்சுமி. சித்தி வாலாம்பாளிடமிருந்து வேதாந்த நூல்களையும் அவர் கற்றுத் தேர்ந்திருந்தார். தன் தாய் விசாலாட்சி எழுதிய 'ஐக்கிய குடும்ப சரித்திரம்' என்ற நூலைப் புத்தகமாக்கி வெளியிட்ட அனுபவமும் அவருக்கு இருந்தது. இந்த அனுபவங்களின் படி, 'சக்கரவர்த்தினி' இதழில் 'பார்வதி சோபனம்' என்ற தலைப்பில், பாடல் வடிவிலான தொடர் ஒன்றை எழுதினார். அதுதான் அச்சில் வெளியான அவரது முதல் எழுத்து. அந்த பத்திரிகைத் தொடரை எழுதும்போது சுப்புலட்சுமிக்கு வயது இருபதுதான்.

படிப்பை முடித்ததும் சுப்புலட்சுமிக்கு இங்கிலாந்து சென்று மேற்கல்வி கற்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளாததால் போகவில்லை. ஆகவே, மேலும் கல்வி கற்கும் நோக்கத்தில், 1908ல் சென்னை ராஜதானிக் கல்லூரியில் (தற்போதைய சென்னை மாநிலக் கல்லூரி) பி.ஏ. (ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்தார். அவருக்கு அது மிகவும் புதுவிதமான அனுபவம் என்றாலும் தினந்தோறும் அவர் சக மாணவர்களின் கேலி, கிண்டல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. காரணம், பெண்கள் - அதிலும் தமிழ்ப் பெண்கள் - கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி படிப்பது என்பது மிக அரிதாக இருந்த காலம் அது. அதுவும் சுப்புலட்சுமி ஒரு கைம்பெண் வேறு. பெண்கள் பொதுவில் புழங்குவதே அரிதான காலத்தில், விதவைப் பெண் ஒருத்தி கல்லூரியில் பயில்வதை சமூகம் வியப்புடன் பார்த்தது. வெறுப்பையும் கக்கியது. ஆண்கள் பலர் இருந்த வகுப்பில் அவள்மட்டுமே பெண். அது ஒரு விதமான சங்கடத்தை அனைவருக்கும் - பாடங்களைப் போதிக்கும் ஆசிரியருக்கும் கூட - ஏற்படுத்தியது. ஆனால், அதையெல்லாம் சவாலாக எதிர்கொண்டுதான் சுப்புலட்சுமியின் கல்லூரி வாழ்க்கை தொடர்ந்தது.

அக்கல்லூரியில் அக்காலத்தில் பயின்ற பெண்கள் பெரும்பாலும் ஆங்கிலோ இந்தியர்களாக இருந்தனர். அவர்களது கல்விப் பிரிவும் வேறாக இருந்தது. அதனால் வகுப்புகளில் சுப்புலட்சுமி தனித்து விடப்பட்டார். அதுவே அவருக்கு ஒருவித மன அழுத்தத்தைத் தந்தது. அடுத்த ஆண்டில் அவர் பெண்கள் சிலர் படித்த தாவரவியல் பிரிவுக்கு மாறிக்கொண்டார். அதன்பின்தான் அவரால் ஓரளவுக்கு நிம்மதியாகக் கற்க முடிந்தது.

இந்நிலையில் தந்தை சுப்பிரமணிய ஐயர் பணியாற்றி வந்த கல்லூரி கோவைக்கு மாற்றப்பட்டது. அதனால் அவர் மனைவி விசாலாட்சியுடன் கோவைக்குச் சென்று வசிக்க நேர்ந்தது. தனது சித்தி மற்றும் தன் இளைய சகோதரிகள் ஸ்வர்ணாம்பாள், பாலாம்பாள், சாவித்திரி, நித்யா ஆகியோருடன் சென்னையில் தங்கிப் பயின்றார் சுப்புலட்சுமி. 1911ம் வருடத்தில் நடந்த கல்லூரி இறுதித் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றார். சென்னை ராஜதானிக் கல்லூரியின் முதல் இந்துப் பெண் பட்டதாரி; முதல் விதவைப் பெண் பட்டதாரி என்றெல்லாம் இந்தியா முழுவதும் சுப்புலட்சுமி குறித்துச் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகின. நாடெங்கும் இச்செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. திருவாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா போன்றோர் தங்கள் சமஸ்தானங்களுக்கு வந்து பெண்கள் கல்வி உயர்வுக்கு வழிகாட்டுமாறு சுப்புலட்சுமியை அழைத்தனர். இலங்கை அரசும் ஆசிரியர் பணியாற்ற அழைத்தது. ஆனால், அவற்றையெல்லாம் சுப்புலட்சுமி ஏற்கவில்லை. சென்னையிலேயே பணியாற்றுவது, அதுவும் ஆசிரியர் பணியை மட்டுமே ஏற்பது என்பதே அவருடைய அப்போதைய விருப்பமாக இருந்தது. அதன்படி தான் படித்த பள்ளியிலேயே, குறைந்த சம்பளத்தில், ஆசிரியப்பணியில் சேர்ந்தார் அவர்.

ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆசிரியர்களாகப் பணியாற்றிய அந்தப் பள்ளியின் முதல் இந்து ஆசிரியை சுப்புலட்சுமிதான். முதல் விதவைப் பெண்ணும் அவரே! சுப்புலட்சுமி கற்பித்த அதே பள்ளியில் அவரது இரு சகோதரிகளும் படித்தனர். அவர்கள் சுப்புலட்சுமியை 'மிஸ்' என்று அழைக்காமல், உறவின் உரிமையில், 'சிஸ்டர்' என்று அழைத்தனர். அதனைக் கேட்டு மற்ற மாணவர்களும் அவரை அவ்வாறே அழைக்க ஆரம்பித்தனர். சுப்புலட்சுமி, 'சிஸ்டர்' சுப்புலட்சுமி ஆனார். பிற்காலத்தில் அவர் தனது தன்னலமற்ற சேவைகளால் 'சேவைக்கு ஒரு சகோதரி' ஆக உயர்வு பெற்றார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்

© TamilOnline.com