பத்மஸ்ரீ அனிதா பால்துரை
அர்ஜுனா விருதை இலக்காக வைத்துச் செயல்பட்டார் அனிதா. அவரைத் தேடி வந்திருப்பதோ பத்மஸ்ரீ! இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனான அனிதா, பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ஒன்பது ஆசிய நாடுகளில் விளையாடிய முதல் மற்றும் ஒரே இந்தியப் பெண் அனிதாதான். கூடைப்பந்து தேசிய சாம்பியன்ஷிப்பில் 30 பதக்கங்களை வென்ற பெருமைக்குரியவர். இந்தியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்கள் கூடைப்பந்தாட்ட வீரர். 18 ஆண்டுகளாக (2000-2017) இந்திய தேசிய அணிக்காக விளையாடிச் சாதனை படைத்தவர். ஆசிய சேம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பல வெற்றிகளைத் தேடித் தந்தவர். இந்திய அணிக்காக விளையாடிப் பல தங்கப் பதங்ககளைப் பெற்றுத் தந்துள்ளார்.



அனிதா, சென்னையில், ஜூன் 23, 1985 அன்று பிறந்தார். பள்ளியில் படிக்கும்போது தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலால் கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் வந்தது. 11 வயதில் கூடைப்பந்து ஆடத் தொடங்கினார். பள்ளி அளவில் பல போட்டிகளில் விளையாடி வென்றார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்திய அணிக்காக விளையாடும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளக் கடும் பயிற்சி செய்தார். இடைவிடாத உழைப்பும், அயராத பயிற்சியும், தளராத ஆர்வமும் அவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இந்திய அணியில் மிகச் சிறப்பாக விளையாடியதால், கேப்டன் பொறுப்பு தேடி வந்தது. சுமார் 18 ஆண்டுகள் (2000–2017) இந்திய அணிக்காக அர்ப்பணிப்புடன் விளையாடினார்.

சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதைப் பலமுறை பெற்றிருக்கிறார் அனிதா. 'கேல் ரத்னா', 'பெண் சாதனையாளர் விருது', 'வாழ்நாள் சாதனையாளர் விருது', 'சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது' எனப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.



சென்னைப் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டம் பெற்றிருக்கும் அனிதா, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் பட்டம் பெற்றுள்ளார். 2003ல், தெற்கு ரயில்வேயில் பணியில் சேர்ந்தார். அனிதாவின் சாதனைகளையும் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்


ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com