ஸ்வாதி மோகன்
பூமியைத் தவிர வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழச் சாத்தியக் கூறு உள்ளதா என்ற ஆர்வமும் ஆய்வும் பல நாடுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் அந்த வாய்ப்பு இருக்குமா என்ற ஆராய்ச்சியைப் பல விஞ்ஞானிகள் செய்கின்றனர். இத்தகைய ஆய்வில் நெடுநாளாக ஆர்வம் காட்டிவரும் நாசா (NASA), அதற்காக 'மார்ஸ் 2020' என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதன் சமீபத்திய முயற்சி 'பெர்சிவரன்ஸ் ரோவர்' விண்கலம்.

இந்த விண்கலத்தின் வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டு இயக்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று, ஏவப்பட்ட விண்கலத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்க வைத்தவர் ஸ்வாதி மோகன். அவர் மேற்கொண்ட பணி சாதாரணமானதல்ல. காரணம், ரோவர் தரையிறங்கிய இடம் ஒரு காலத்தில் ஏரியாக இருந்தது. நிறையப் பள்ளங்களையும், பாறைகளையும் கொண்டது. ஆகவே, வெகு கவனமாகத் தரையிறக்க வேண்டும். செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் 40% விண்கலங்கள் மட்டுமே வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளன. மிகுந்த கவனம் மற்றும் எச்சரிக்கையுடன் செய்யவேண்டிய பணியினை மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைக் குவித்துள்ளார் ஸ்வாதி.



அந்த வீடியோவைக் காண


இந்திய வம்சாவளி அமெரிக்கரான ஸ்வாதி, ஒரு வயதிலேயே இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட்டார். குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை வடக்கு வர்ஜீனியாவில் (வாஷிங்டன் டி.சி.) கழித்தார். ஒன்பது வயதாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் 'ஸ்டார் ட்ரெக்' என்னும் அறிவியல் புனைகதைத் தொடரைப் பார்த்தார் ஸ்வாதி. அது இவரது அறிவியல் ஆர்வத்துக்கு வித்திட்டது. கார்னெல் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் மற்றும் ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஏரோனாடிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பிரிவில் பயின்று எம்.எஸ். மற்றும் Ph.D. பெற்றார்.

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மார்ஸ் 2020 திட்டத்தில் வேலை பார்த்து வரும் ஸ்வாதி, தனது அறிவியல் ஆர்வத்துக்கு தனது இயற்பியல் ஆசிரியையும் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com