அ. வெண்ணிலா
எனக்கான உன்னை
உன்னில் தேடித் தேடி
ஏமாறுகிறேன்.

உனக்கான என்னை
உனக்கு உணர்த்த முடியவில்லை.

எனக்கானதாகவும்,
உனக்கானதாகவும்
யாருக்கானதாகவும்
இல்லாமல்
இயங்கிக் கொண்டிருக்கிறது
அவரவர்களின் 'நான்'

★★★★★


தமது மாணவியருடன் வெண்ணிலா



குளித்துவிட்டு அப்படியே ஓடி வரக்கூடாது மகளே

துண்டு கட்டியிருக்கேம்மா

இடுப்பிலிருந்து துண்டை நெஞ்சுவரை ஏற்று
மேல்சட்டை அணிந்து தூங்கு

கசகசன்னு இருக்கும்மா

புழுங்கிக் கசங்கினாலும்
காற்றாட முடியாது மகளே

நம்ம வீடு தானேம்மா

செங்கல் சுவருக்கும் கண் உண்டு மகளே

குழந்தையில்லையாம்மா நான்

குழந்தைதான் தங்கமே
பெண் குழந்தை!

போன்ற பல காத்திரமான கவிதைகள் மூலம் பெண்களின் சமூகச் சிக்கல்களையும் சோகங்களையும் தனது படைப்புகளில் இயல்பாகச் சித்திரித்துக் காட்டி வருபவர் அ. வெண்ணிலா. கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், பேச்சாளர், ஆய்வாளர், பதிப்பாளர் எனப் பல திறக்குகளிலும் சிறப்பாக இயங்கி வருபவர். தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற இவர், ஆகஸ்ட் 10, 1971ல், வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு என்ற சிற்றூரில், அம்பலவாணன் - வசந்தா இணையருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். தந்தை திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர். அவர்மூலம் இளவயதிலேயே புத்தகங்கள் அறிமுகமாகின. வாசிப்பு புதிய வாசல்களைத் திறந்துவிட்டது. நவீன இலக்கியங்கள் அறிமுகமாகின. பல்வகை இலக்கியங்களைத் தேடித்தேடி வாசித்தார். எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது என்றாலும் உடனே எழுத ஆரம்பிக்கவில்லை. கணிதத்தில் இளநிலைப் பட்டமும் உளவியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றபின் ஆசிரியர் படிப்பை நிறைவுசெய்து, வந்தவாசியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி சேர்ந்தார். கிடைத்த ஓய்வு நேரத்தில் எழுதத் தொடங்கினார்.



ஆரம்பத்தில் கவிதைகளே இவரது முதன்மைப் படைப்புகளாக இருந்தன. நண்பர்களுடன் இணைந்து 'பூங்குயில்' என்ற இலக்கியச் சிற்றிதழ் ஒன்றையும் நடத்தினார். அதற்கான கவிஞர்கள் சந்திப்பு ஒன்றில் கவிஞர் மு. முருகேஷின் அறிமுகம் கிடைத்தது. நட்பு காதலாகி, ஏழாண்டுகள் காதலித்துப் பின் திருமணம் செய்துகொண்டனர்.

வெண்ணிலாவின் முதல் சிறுகதை 'பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்' கணையாழி இதழில் வெளியானது. மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் படும் அவஸ்தைகளை, குறிப்பாக, நாப்கின் புழக்கத்தில் இல்லாத காலத்தில், பெண்கள் எதிர்கொண்ட சிக்கல்களை, கஷ்டங்களை அதில் காட்சிப்படுத்தியிருந்தார். கதை பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து எழுதினார். முதல் கவிதைத் தொகுப்பு 'என் மனசை உன் தூரிகை தொட்டு' 1998ல், வெண்ணிலா-முருகேஷ் திருமணத்தையொட்டி வெளியானது. கணவர் முருகேஷுக்கு வெண்ணிலா எழுதிய காதல் கடிதங்கள் தொகுக்கப்பட்டு 'கனவிருந்த கூடு' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. அதுதான் வெண்ணிலாவின் முதல் கட்டுரைத் தொகுப்பு. முதல் சிறுகதைத் தொகுப்பு 'பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில்' 2005ல் வெளியானது. தொடர்ந்து கவிதை, சிறுகதை, கட்டுரை என்று தனது தளத்தை விரிவாக்கினார். தலைப்பில்லாமல் கவிதை எழுதுவது வெண்ணிலாவின் பாணி. அதுவே சுதந்திரமான எழுத்திற்கு வழி வகுக்கிறது என்பது இவரது கருத்து.

கணவர் முருகேஷ், வெண்ணிலா



வெண்ணிலா எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஆய்வுப் பரப்பிலும் தனது சிறகை விரித்திருக்கிறார். தமிழ்ச்சூழலில் இயங்கிய பெண் எழுத்தாளர்கள் குறித்த இவரது பல்லாண்டு காலத் தேடல், 'மீதமிருக்கும் சொற்கள்' என்ற தலைப்பில் நூலாக வெளியானது. வை,மு. கோதை நாயகி அம்மாள், மு. ராமாமிர்தம் அம்மாள் தொடங்கி அ. வெண்ணிலா வரை 1930 முதல் 2004 வரை எழுதிய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பெண் எழுத்தைப் பற்றிய ஒரு முக்கியமான ஆவணமாக இந்த நூலைச் சொல்லலாம். வெண்ணிலாவின் மற்றுமொரு குறிப்பிடத் தகுந்த படைப்பு, 'தேவரடியார்: கலையே வாழ்வாக' என்னும் ஆய்வு நூல். திருக்கோயில்களில் இறைவன் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை, அவர்களது சமூகப் பங்களிப்பை மிக விரிவாக இந்த நூல் ஆராய்கிறது. 'நிகழ்முகம்' என்ற தலைப்பில் கருணாநிதி, கமல்ஹாசன், குறிஞ்சிவேலன், அம்பை, பாமா உள்ளிட்ட பதினான்கு பேரை நேரில் சந்தித்து உரையாடி நேர்காணல் நூலாகத் தொகுத்திருக்கிறார்.

வெண்ணிலாவின் படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்: என் மனசை உன் தூரிகை தொட்டு, நீரில் அலையும் முகம், ஆதியில் சொற்கள் இருந்தன, இசைக் குறிப்புகள் நிறையும் மைதானம், கனவைப் போலொரு மரணம், இரவு வரைந்த ஓவியம், துரோகத்தின் நிழல், எரியத் துவங்கும் கடல்.
சிறுகதைத் தொகுப்புகள்: பட்டுப்பூச்சிகளைத் தொலைத்த ஒரு பொழுதில், பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், இந்திர நீலம்.
கட்டுரைத் தொகுப்புகள்: பெண் எழுதும் காலம், ததும்பி வழியும் மௌனம், தேர்தலின் அரசியல், அறுபடும் யாழின் நரம்புகள், எங்கிருந்து தொடங்குவது, மரணம் ஒரு கலை.
நாவல்: கங்காபுரம், சாலாம்புரி.
ஆய்வுநூல்: தேவரடியார்: கலையே வாழ்வாக
தொகுப்பு நூல்கள்: வந்தவாசிப் போர்-250, (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து தொகுத்தது), நிகழ்முகம் (நேர்காணல் கட்டுரைகள்), மீதமிருக்கும் சொற்கள், காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது, கனவும் விடியும்.
பதிப்பு நூல்கள்: இந்திய சரித்திரக் களஞ்சியம் - எட்டு தொகுதிகள் (ப. சிவனடி அவர்கள் எழுதிய நூலின் மறுபதிப்பு), ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு - பன்னிரண்டு தொகுதிகள் (டாக்டர் மு.ராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து தொகுத்தது)


'கங்காபுரம்' வெண்ணிலா எழுதிய முதல் நாவல். ராஜேந்திர சோழனின் வாழ்க்கையைக் கூறும் வரலாற்று நாவல் இது. நாவலின் முன்னுரையில் வெண்ணிலா, "கங்காபுரம் நாவலின் வழியாக ராஜேந்திர சோழனுக்குள் இருந்த தனிமையைப் பின்தொடர்ந்து சென்றிருக்கிறேன்.... புகழின் உச்சத்தில் இருந்தபோது தஞ்சையிலிருந்து தலைநகரை ஏன் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான், தஞ்சை பெரிய கோயிலை ஒத்த இன்னொரு பெரிய கோயில் எதற்கு போன்ற கேள்விகளுக்கு விடை காணச் செய்வதே நாவலின் மையம்..... பேரரசனாக, மாவீரனாக இருந்த ராஜேந்திரனின் மனத்தில் இருந்த அகப்போராட்டம் ஒன்றைப் பின் தொடர்ந்ததே இந்நாவல்" என்கிறார். 2018ல் வெளியான இந்த நாவல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இந்நாவலுக்கு கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 'ரங்கம்மாள் நினைவு விருது' கிடைத்தது. 'அவள் விகடன்' வழங்கிய இலக்கிய விருதும் கிடைத்திருக்கிறது.

நல்லாசிரியர் விருது



'சாலாம்புரி' இவரது இரண்டாவது நாவல். 1950-60களில் அம்மையப்ப நல்லூர் என்ற ஊரில் வாழ்ந்த நடராஜனின் கதையோடு அக்கால அரசியலையும், சமூக நிகழ்வுகளையும் பிணைத்து இந்நாவலை உருவாக்கியிருக்கிறார். டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் இணைந்து புதுவை ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை 'ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு' என்ற தலைப்பில் தொகுத்திருப்பது வெண்ணிலாவின் மிக முக்கியமான இலக்கியப் பங்களிப்பாகும்.

பெண்களின் அக உலகைப் பாசாங்குகளின்றி தனது படைப்புகளில் முன்வைப்பவராக வெண்ணிலாவை மதிப்பிடலாம். சமூகத்தில் பெண் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும், புறச் சூழல்களில் பெண்கள் நாள்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் படைப்புகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு மறுக்கப்படும் சமூக உரிமைகள், குடும்பங்களில் அவர்கள்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள், அவர்களின் கனவுகள், ஏக்கங்கள், இயலாமைகள் எனப் பெண்ணியம் சார்ந்த பல விஷயங்களை இவரது படைப்புகள் பேசுகின்றன.



பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் வெண்ணிலா. சிற்பி அறக்கட்டளை விருது, கவிப்பேரரசு - கவிஞர் தின விருது, சக்தி - 2005 விருது, ஏலாதி இலக்கிய விருது, சென்னை மற்றும் நெய்வேலிப் புத்தக்காட்சிகளில் சிறந்த படைப்பாளிக்கான விருது, புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதை விருது (பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக), கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது, செயந்தன் நினைவு கவிதை விருது, கவிதை உறவு விருது, திருப்பூர் அரிமா சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது எனப் பல விருதுகள் இவர் வசம். இவரது 'கனவைப் போலொரு மரணம்' என்னும் கவிதை நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த கவிதை நூலுக்கான பரிசைப் பெற்றிருக்கிறது. இவரது படைப்புகள் ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்திற்கு வசனம் எழுதியிருப்பதுடன், அப்படத்தின் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். சாகித்திய அகாதெமிக்காக உலகெங்கிலுமுள்ள தமிழ்ப் பெண் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை 'கனவும் விடியும்' என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். இவரது நூல்கள் சில பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளமுனைவர், முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.



2008ல், SAARC நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக ஒரிசாவில் நிகழ்ந்த கவிதை விழாவில் தமிழகத்தின் சார்பாகப் பங்கேற்றார். 2011ல், டில்லியில் நடந்த காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறார். சமச்சீர் கல்விப் பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஆசிரியப்பணி, எழுத்து மற்றும் பதிப்புப் பணிகளின் ஊடே ஆய்வுசெய்து இவர் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத் தகுந்த ஒன்று. கணவருடன் இணைந்து வந்தவாசியில் 'அகநி' பதிப்பகம் என்பதை நிறுவி அதன் மூலம் கருத்தாழமிக்க நூல்களை வெளியிட்டு வருகிறார். முருகேஷ் - வெண்ணிலா இணையருக்கு மூன்று மகள்கள். அன்புபாரதி (அ), கவின்மொழி (க), நிலாபாரதி (நி). அவர்களது பெயரின் முதலெழுத்தைக் கொண்டு உருவானதுதான் 'அகநி' பதிப்பகம். வந்தவாசியில் குடும்பத்துடன் வசித்துவரும் அ. வெண்ணிலா, தான் படித்த அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியிலேயே கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com