தென்றல் பேசுகிறது...
"திருடப்பட்ட தேர்தல் (வெற்றி)" ("Stolen election") என்ற ட்ரம்ப்பின் புளுகை மாநிலச் சட்டமன்றங்கள், நீதித்துறை தொடங்கி அமெரிக்க உச்சநீதி மன்றம்வரை பொய்யென்று கூறிவிட்டன. ஆனாலும் முன்னாள் அதிபர் திருப்பித் திருப்பிச் சொல்லியே அதை உண்மையாக்கிவிட முடியுமென்று நம்புகிறார். வசவு, திரித்துப் பேசுதல், அப்பட்டமான புளுகு என்பவையே வாழ்முறையாகிப் போன அவர் அப்படிப் பேசிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட முடியவில்லை. கேபிட்டல் ஹில்லில் ஊடுருவல் மற்றும் வன்முறையைத் தூண்டிவிட்டு, அமெரிக்க ஜனநாயகத்துக்கு அழியாப்பழியை ஏற்படுத்திய போதும், அவரது கட்சியில் பலபேர் மீண்டும் அவர் பின்னே நிற்பது பெருத்த அவமானம். பென் சாஸ் (நெப்ராஸ்கா), ஆடம் கின்ஸிங்கர் (இல்லினாய்ஸ்) போன்ற ஓரிருவர் மட்டுமே ட்ரம்ப்பை விமர்சிக்கத் துணிகிறார்கள், அவர்மீது நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்கிறார்கள். அவர்களும் உள்ளூர்க் கட்சித் தலைமையால் மிரட்டப்படுகின்றனர் என்பது ட்ரம்ப் என்னும் ஒற்றை நபரின் அத்துமீறிய செல்வாக்கு அந்தக் கட்சியில் எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது கவலைக்குரியது. ட்ரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கூறியுள்ளார்.

முந்தைய அரசின் தண்டிக்கும் வகையிலான வரிகள், உள்நாட்டுத் தொழிலை நசிவுறச் செய்யும் இறக்குமதிக் கொள்கை, மனிதவளத்தை வற்றடிக்கும் குடிவரவுக் கொள்கை இவற்றை நாம் எளிதில் மறந்துவிட முடியாது. மறக்கவும் கூடாது. பல்லினக் குடிவரவு அமெரிக்காவின் தொழில், கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தெளிந்த சிந்தனையோடு மக்கள் ட்ரம்ப்பின் கேபிடல் ஹில் கனவைப் பகற்கனவாக்க வேண்டும்.

★★★★★


இசைத்திறனும் நடிப்புத் திறனும் ஒருசேர அமையப்பெற்ற, இரண்டிலும் பல விருதுகளைப் பெற்ற அனுராதா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல் இந்த மகளிர் சிறப்பிதழின் மகுடம். ஆனால், பலதுறை சாதனைப் பெண்களைப் பற்றிய பெருமிதம் தரும் தகவல்கள் இந்த இதழை ஒளிபெறச் செய்கின்றன. அருமையான 'ஹடூப்' தொழில்நுட்ப அறிமுகக் கட்டுரை இந்த இதழின் மற்றொரு மாணிக்கம். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோர் நமது பாரம்பரியத்தின் கலங்கரை விளக்கங்கள். அவர்களைப்பற்றி அறிவது நம்மைச் சீர்படுத்தும், நமது தலைமுறைகளை மேம்படுத்தும். அருமையான சிறுகதைகளும் உங்களை வரவேற்கின்றன.
வாசகர்களுக்கு மகா சிவராத்திரி, மகளிர்தின வாழ்த்துகள்!

தென்றல்
மார்ச் 2021

© TamilOnline.com