பிப்ரவரி 2021: வாசகர்கடிதம்
ஜனவரி மாதத் தென்றல் இதழில் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் நேர்காணல் அற்புதம். ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் எத்தனை எத்தனை நினைவுகள்! அத்தனையையும் ஒருங்கே சேர்த்து, சுவையான தகவல்களாகச் சமைத்து, ஆறிவிடாமல் பக்குவமாக QFR நிகழ்ச்சிகள் மூலமாக மக்களிடம் சேர்க்கிறார். இந்த நிகழ்ச்சியை 300 என்று முடிக்காமல் தொடரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்

பா.சு. ரமணன் அவர்களின் 'நீலகண்ட பிரம்மச்சாரி அருமையான தொடர். சாதிக்க நினைத்தது, நடந்தது எல்லாம் சரித்திரங்களாக மாறியிருக்கும் நிகழ்வுகளின் ஒப்பற்ற தொடர்.

ஆன்மீக எழுத்தாளர் ரா. கணபதி அவர்களின் 'தெய்வத்தின் குரல்' படிக்கும்போதே நம்மை ஆன்மிக சிந்தனைக்கு உட்படுத்தியது. அவரின் வாழ்கை வரலாற்றைத் தென்றலில் படித்து அவரைப்பற்றித் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. விஸ்வரூபத்தின் உண்மையான அர்த்தத்தை 'தரிசனம்' சிறுகதையில் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்

இந்த வருடம் நூற்றாண்டு கொண்டாடும் சிறந்த முருகனடியார்களில் ஒருவராகவும், தமிழ் பஜனைப் பாடல்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவருமாகிய பித்துக்குளி முருகதாஸ் அவர்களைப் பற்றிய விவரங்கள் அருமை.

அன்புள்ள சிநேகிதியாகப் பரிந்துரைத்த தீர்வு, ஒரு நல்ல குடும்பமாக வளர்ந்துள்ளது என்ற சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு பெறுகின்றோம்.

குருபிரசாத் அவர்களின் 'ரெய்னியரில் ஒரு பூபாளம்' சுவாரசியமாக இருந்தது. அனைத்து வயதினரும் விரும்பிப் படிக்கும் தென்றலுக்கு எங்களின் அன்பான நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

© TamilOnline.com