நாரதருக்குப் புத்தி புகட்டிய கோபியர்
அகந்தையை வெல்வதற்குக் கடுமையான உடற்பயிற்சியோ மூச்சுப் பயிற்சியோ தேவையில்லை. சிக்கலான பாண்டித்தியமும் தேவையில்லை. கோபியர் இந்த உண்மையை நிரூபிக்கின்றனர். அவர்கள் அதிகக் கல்வியில்லாத, எளிய கிராமவாசிகள். ஆன்மீக முன்னேற்றம் குறித்த அவர்களது அறியாமை நாரதருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் நடுவே சென்று நாரதர் சிறிது ஞானபோதனை செய்யத் தலைப்பட்டார்.

பிருந்தாவனத்தில் நுழைந்ததும் அதன் தெருக்களில் ஆய்ச்சியர் தாம் விற்கக் கொண்டு வந்தவற்றின் பெயர்களான பால், தயிர் என்பதை மறந்து "கோவிந்தா, நாராயணா" என்று கூவினர். அந்த அளவுக்கு அவர்கள் இறைவன் குறித்த சிந்தனையில் மூழ்கியிருந்தனர். பால் எல்லாம் விற்றுப் போனதையும் அறியாமல், பகவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டு அவர்கள் சுற்றித் திரிந்தனர், ஏனென்றால் அவர்களுக்குப் பிருந்தாவனத்தின் புழுதிகூட மிகப் புனிதமானதாக இருந்தது. அவர்களிடம் விஷயவாசனை, அதாவது புலனின்ப ஆசையே இல்லாத காரணத்தால் அஞ்ஞானமும் இருக்கவில்லை.

தான் அவர்களுக்குக் கற்பிக்க விரும்பிய பாடங்கள் அவர்களுக்குத் தேவையே இல்லை என்று நாரதர் புரிந்துகொண்டார். அந்தத் தாபத்தையும், சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனின் தரிசனத்தைப் பெறுவதற்கான ஏக்கத்தையும் தனக்குக் கற்றுத் தருமாறு கோபியரிடம் அவர் வேண்டிக்கொண்டார்.

உதாரணமாக, சுகுணா என்றொரு கோபி இருந்தாள். அவளுக்குக் கிருஷ்ணனைத் தவிர வேறு நினைவே கிடையாது. பிருந்தாவனத்திலிருந்த ஒவ்வோர் இல்லத்தரசியும் தினந்தோறும் நந்தகோபரின் வீட்டுக்குச் சென்று அவரது தீபச்சுடரில் தமது தீபங்களை ஏற்றிக்கொள்வது வழக்கம். மூத்தோர் மற்றும் உயர்ந்தோரின் வீட்டுச் சுடரில் விளக்கேற்றிக் கொள்வதை அவர்கள் மிக மங்களகரமானதாகக் கருதினார்கள். விளக்கை எடுத்துக்கொண்டு சுகுணா, நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றாள். அந்த வீட்டைப் பார்த்ததும் அவள் பேரானந்தத்தில் மூழ்கினாள். இந்த வீட்டில்தானே கிருஷ்ணன் தன் குழந்தைப் பருவத்தைக் கழித்தான்! அவனுடைய குறும்புகளும் மழலையும்தானே இடைச்சிறுவர் சிறுமிகளைக் கவர்ந்தது!

நடுக்கூடத்தில் எரிந்துகொண்டிருந்த விளக்கினருகே அவள் வெகுநேரம் மெய்மறந்து நின்றுவிட்டாள். விளக்கை அவள் சுடருக்கு அருகில் வைத்திருந்தாள், ஆனால் அது போதுமானதாக இல்லை. அவளுடைய விரல் சுடருக்குள் இருந்தது. நெருப்பு தன் விரலைத் தீய்ப்பதை அவள் உணரவில்லை. வலியை உணரமுடியாத அளவுக்கு அவள் கிருஷ்ண சிந்தனையில் முழுகிவிட்டாள். அங்கே வந்த யசோதை இதைக் கவனித்துவிட்டு, அவளைக் கனவுலகிலிருந்து எழுப்பினாள். அது கனவா, இல்லை தரிசனம் என்று சொல்லலாமா? எங்கு பார்த்தாலும் அவளுக்கு அந்த வீட்டில் கிருஷ்ணனே தெரிந்தான்.

அந்தத் தன்மயத்தையே, முழுமையான ஐக்கிய பாவத்தையே யாவரும் அடையவேண்டும். பறவைக்குஞ்சு கூட்டில் இருந்தால் பயனில்லை. அது சிறகு முளைத்து வானத்தில் பறக்கவேண்டும். மனிதன் புழுதியில் புரண்டு பயனில்லை. அவன் தொலைவிலுள்ள, மகத்தான லட்சியத்தைத் தெளிவாகக் காணவேண்டும். அவன் சிறகு விரித்துப் பறக்கவேண்டும்.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

நன்றி: சனாதன சாரதி, ஏப்ரல் 2020.

© TamilOnline.com