எப்படிக் கண்டறிவேன்!
யாயும் ஞாயும் யாராகியரோ?
யாயும் ஞாயும் யாராகியருமில்லை
எந்தையும் நுந்தையும் கேளிருமில்லை
செம்புலப் பெயல் நீர் போல
கலந்தது மட்டும் தெரிகிறது

எப்படிக் கலந்தீர் என்னில்
சாதி மதம் தெரியவில்லை
முன்பின் பார்த்ததுமில்லை
முகமும் அறிமுகமில்லை
உம்மால்தான் என் இதயம் துடிக்கிறது

நீர் ஆணா? பெண்ணா?
பலமுறை கேட்கிறேன்
பதில்மட்டும் கிடைக்கவேயில்லை

அன்றொரு நாள் விபத்தில்
அடிபட்டுக் கிடந்த என்னில்
குருதியாய்க் கலந்தவரே

அன்னைக்கு அடுத்தபடியாய்
என்னைப் பிரசவித்த உம்மை
எப்படிக் கண்டறிவேன்!

கி. இராம்கணேஷ்,
பொள்ளாச்சி, தமிழ்நாடு

© TamilOnline.com