ஜூன் மாதம் பதினைந்தாம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் பாங்காங் ஏரிப்பகுதியில் எப்போதும்போலத்தான் விடிந்தது. ஆனாலும் அந்தப் பல்கிட்டிக்கும் குளிர்நாளின் மற்றைய பொழுதுகள் எப்போதும்போல இருக்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் 16 பிஹார் ரெஜிமென்ட்டின் கமாண்டிங் ஆஃபீசர் லெஃப்டினன்ட் கர்னல் ராஜிந்தருக்கு ஓரளவு தெரிந்துவிட்டது.
ராஜிந்தர் என்று அழைக்கப்பட்டாலும் அவனுடைய சரியான பெயர் ராஜேந்திரன்.
ராஜேந்திரனின் இருபத்திரண்டாம் வயதில் என்.டி.ஏ.வில் சேர்ந்தான். சேர்ந்தான் என்ன, பெரியவரால் சேர்த்துவிடப்பட்டான். மதுரை காலேஜில் ஓட்டம், லாங் ஜம்ப் ஹை ஜம்ப் என்று எல்லாப் போட்டிகளிலும் அவன்தான் முதல் இடம். அவனுக்கும் அடுத்த இடத்துக்கும் எப்போதுமே நீண்ட இடைவெளிதான். ராஜேந்திரன் முதலில் போலீஸ் வேலைக்குதான் போனான்.
அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி ஒன்றில் பெரியவர் அவனை ஒருமுறை பார்த்துவிட்டார். பெரியவர் என்பவருக்குப் பெயர் கிடையாது, இல்லை, தெரியாது, தெரிந்தாலும் சொல்லக்கூடாது. அரசாங்கத்தின் வெளியே பேசப்பட முடியாத துறையில் மிகவுயர்ந்த பதவியில் இருப்பவர். அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் பிரதமரையும் ஜனாதிபதியையும் போய்ப் பார்க்கக்கூடிய ஆசாமி!
மூன்றாம் மாதத்தில் அவர் ராஜேந்திரனை தன்முன் நிற்கவைத்து ராணுவத்தில் சேர விருப்பமா என்று கேட்டு இழுத்துக்கொண்டு விட்டார். முதலில் சிபாரிசு செய்து என்.டி.ஏ.வில் சேர்த்து, முடித்த கையோடு ராஜேந்திரனை ராணுவத்தில் பிஹார் ரெஜிமென்ட்டில் இணைத்துவிட்டார்.
"மாண்டரின் கற்றுக்கொள்! நீ சைனா பக்க ஆசாமியாகவே இரு! பாகிஸ்தானுக்கு எனக்கு நிறையப் பேர் கிடைக்கிறார்கள்! இன்னும் சில வருஷங்கள் ராணுவத்திலேயே இரு அதற்கப்புறம் உயிரோடு பிழைத்தால் என்னோடு எடுத்துக்கொள்வேன்!"
ராஜேந்திரன் பெரியவரின் மானசீக சீடன். அவர் அவனுக்கு உஸ்தாத். முழுக்க முழுக்க அவரின் விசுவாசி. பிரமிப்பில் இருந்து விடுபடா சீடன்!
இதோ இந்தப் பதினேழு வருடங்களில் லெஃப்டினென்ட் கர்னல்வரை உயர்ந்துவிட்ட ராஜேந்திரன் என்னும் ராஜிந்தர் அன்றைய தினத்துக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, காலை உணவுக்காக மெஸ்ஸில் நுழைந்தபோதே ஒருவித டென்ஷன் பரவியிருந்தது.
மே மாதம் முதலே சைனாவுக்கும் நம் பக்கத்துக்கும் சின்னச்சின்ன உரசல்கள். அந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இரண்டு பக்கங்களும் மோதிக்கொண்ட தினத்துக்கு முன்தினம், ஞாயிற்றுக்கிழமை.
சில மாதங்களுக்கு முன்புதான் வாய்முழுக்கச் சிரிப்பாகவும் மனசு முழுக்க வன்மமாகவும் மகாபலிபுரத்தில் கை குலுக்கின வெப்பம் தணியுமுன்பே இந்தியாவின் இறையாண்மையைச் சீண்டிவிட முனைந்த சைனாவின் ரௌடித்தனம் வெளிச்சத்துக்கு வந்த தினத்தின் மாலை. நார்த்பிளாக் எனப்படும் தலைநகரத்தின் முக்கிய அலுவலகங்களில் ஒரே பரபரப்பு.
ஜிப்பா வேஷ்டி அணிந்த பெரிய அரசியல்வாதிகளும் மந்திரிகளும் ஓடியாடி வேலை செய்த மாலை. பகல் சூட்டின் வெம்மை தாக்கி ஊரே தகித்துக்கொண்டிருந்தது அந்தப் பாழும் தில்லி இரவு. இந்தியாவின் நட்புக்கு துரோகம் செய்த சைனாவின் திமிருக்கு பதிலடி கொடுக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. விழித்த கண்களும், புகைத்த உதடுகளும் முறித்த சோம்பலும் நிறைந்த இரவாகக் கழிந்தது அது.
அடுத்த நாள் பாங்காங் ஏரிப்பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடில்லை. ஒரு குண்டு வெடிக்கவில்லை. ஒரு கண்ணிவெடி புதைக்கப்படவில்லை. ஆனால் எலும்புகள் முறிந்தன, ரத்தமும் சதைத்துகள்களும் சிதறின.
கமாண்டிங் ஆஃபீசர் என்று ராஜிந்தர் தள்ளிநின்று வேடிக்கை பார்க்கவில்லை. எதிரிகள் கையில் முள்கம்பி சுற்றிய குண்டாந்தடிகளுடன் கள்குடித்த காட்டெருமைகளாக ஓடி வந்தபோது ராஜிந்தரும் புகுந்தான்.
இரும்புப் பூண் போட்ட தடிகளால் கூடியமட்டும் அடித்தான். கண்களில் சிவப்புடனும் புத்தியில் வெறியுடனும் வந்த சீன ஆசாமியின் பக்கவாட்டில் சாலாக்க நகர்ந்து அவனது தோள் பட்டையில் அடித்தபோது கையின் எலும்பு நொறுங்கின சப்தம் இடியாய்க் கேட்டது. அவன் மடங்கிய முழங்கையைத் தொளதொளவென வைத்துக்கொண்டே குண்டாந்தடியைக் கைவிட, ராஜிந்தர் அதை எடுத்துக்கொண்டு அவனின் முன்கழுத்தில் போட்ட அடியில் ஹையாய்டு எலும்பு நொறுங்கி அவன் நாலாக மடிந்து விழுந்து ரத்த நூல் ஒழுக இறந்துபோனான்.
நானூறு மீட்டர் தடகளப் போட்டியின் அட்ரினல் சுரப்பு, அடுத்தவன் தன்னைவிட வேகமாகத் தாண்டி ஓடுவதைப் பார்க்கும்போது உண்டாகும் அமிலச்சூடு, எல்லாத் தடைகளையும் தாண்டி முதலிட ரிப்பன், நொடிக்கு 110 முறை அடித்துக்கொள்ளும் இதயத்தின்மேல் பரவும்போது உண்டாகும் வெற்றிப் பரவசம் எல்லாம் தூண்டிய வேகத்தோடு ராஜிந்தர் களத்தில் புகுந்தான். ராஜிந்தரின் அடியிலும் ஊடுருவலிலும் ஒரு ஒழுங்கு இருப்பதைப் பார்த்து மற்ற இந்திய வீர்களும் பேயாட்டம் ஆடினர். முகம்முழுக்கச் சிவந்து கோபம் தலைக்கேற அடித்த வெறியின் மிச்சம் நீங்காமல் ராஜிந்தர் பரபரத்துத் தேடினபோது இன்னொரு குள்ளச் சீனன் அவன் கையில் அகப்பட்டான். ஒரு நொடியில் அந்தச் சீனன் சற்றே உயர்ந்த ரேங்க் என்பதைக்கண்டு கொண்ட ராஜிந்தர் இன்னும் இரண்டு வீரர்களுடன் அவனைப் புரட்டி எடுத்து முகத்தை சிதைத்து கால்முட்டியின் சில்லுகளைப் பெயர்த்து அவனைத் தரதரவென இழுத்துக்கொண்டு பேஸ் கேம்ப்புக்குக் கொண்டு வந்துவிட்டான்.
அன்று மாலை கர்னல் பக்ஷி ராஜிந்தரை அணுகினார். "என்ன காரியம் இது? நோ பிரிசனர்ஸ் தெரியாதா உனக்கு?"
"சர்! நம்ம சோல்ஜர்ஸ் பத்து பேர அவங்க கேப்டிவா கொண்டு போயிருக்காங்க!
"நம்மகிட்ட எவ்வளவு?"
"இருவத்தி மூணு பேர் மாட்டிட்டாங்க!"
"இவனையும் சேர்த்தா?"
"இல்ல! இவன டிக்ளேர் பண்ணல!"
"ராஜிந்தர்! வாட் ஆர் யூ சேயிங்?"
"எஸ் சர்! இவன் ரேங்க்கைப் பாருங்க! அங்க இவன் ஒரு கமாண்டிங் ஆஃபீசர்! விஷயம் வெச்சிருப்பான். நமக்குப் பயன்படும்!"
"அவங்க லிஸ்ட்ல மாட்டுமே?"
"மாட்டினா என்ன சர்? நமக்குத் தெரியாது! டெஸர்ட்டர்னு முடிவெடுத்துடுவாங்க!"
"சரி ராஜிந்தர்! சண்டையெல்லாம் முடிஞ்சப்பறம் இது ஒரு டிப்ளமாடிக் சமாச்சாரமாப் போய் நம்ம தலை உருளும், தெரியாதா உனக்கு?"
"தெரியும் சர்! உபயோகமான விவரம் கிடைச்சா அத மறந்துடுவாங்க!"
"ஓகே உன்னோட இன்ஸ்டிங்க்டுல எனக்கு நம்பிக்கை இருக்கு! ஐ வில் ஸ்டாண்ட் பை யூ!"
"தேங்க் யூ சர்!"
மூன்று நாள்வரை அந்தச் சீன ஆஃபீசரை இருட்டிலேயே வைத்திருந்தான். டாக்டர்கள் மட்டும் போய் அவனுக்குச் சிகிச்சை அளித்தனர். அவன் இருப்பதைச் சீன ராணுவத்துக்குத் தெரியப்படுத்தவில்லை. அவர்கள் பக்கம் ‘ஓடிப்போனவன்’ என்று தீர்மானித்து இருக்கலாம். ஓடிப்போன டெசர்ட்டர்களுக்கு சீன ராணுவம் தரும் மரியாதை மரண தண்டனை!
நான்காம் நாள் ராஜிந்தர் சீன ஆஃபீசருடன் மாண்டரினில் பேசினான்.
"உன் பெயர் போஜிங்கா?"
"ஆமாம்!"
"போஜிங் என்றால் என்ன அர்த்தம்?"
"மெல்லிய அலைகள்!"
"குடும்பம் எங்கே இருக்கிறது!"
"செங்க்டு!"
"அங்கே என்ன மொழி?"
"ஷிஷுயனீஸ்!"
"என்னுடைய மாண்டரின் எப்படி உனக்குப் புரிகிறது?"
"ஷிஷுயனீஸ் என்பதே மாண்டரின் மொழியின் தென்மேற்குப்பக்க டயலெக்ட் தான்!"
"குடும்பத்தைப்பற்றிச் சொல்!"
இப்போது போஜிங் வெட்கமின்றி அழுதான். ராஜிந்தர் காத்திருந்தான்.
"மனைவி, ஒரு பெண்!"
பெண் என்னும் வார்த்தை தட்டித்தடுமாறி வாய் கோணி சொல்லப்பட்டது.
"மகள்மீது கொள்ளை ஆசையா?"
தலை ஆடியது. உடல் குலுங்கியது.
"ம், மேலே சொல்!"
"அவளுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். நேரில் வந்துவிடுவேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன்!"
"எனக்கு வேண்டிய சில உண்மைகளைச் சொன்னால் உன் வாக்கை நிறைவேற்ற முடியும்!"
"இல்லை. முடியாது!"
பளாரென ராஜிந்தர் ஒரு அறை வைத்தான்.
ஒழுகும் எச்சில்நூலைத் துப்பியபடி போஜிங் மெல்ல உதிர்த்தான்.
"இல்லை அப்படிச் சொல்லவில்லை. என்னை அனுப்பினாலும் அவர்கள் கொன்றுவிடுவார்கள். அதைத்தான் சொன்னேன்!"
"ம் உண்மையைச் சொல்!"
ராஜிந்தர் அந்த கால்வன் வட்டார, எல்.ஓ.சி. சுற்றிய நடவடிக்கைகள், சீனாவின் ராணுவத்திட்டங்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டான். சிலவற்றுக்கு பதில் வந்தது, சிலதுக்கு மௌனம்.
ராஜிந்தர் அடித்தான். உதைத்தான்.
"என்னைக் கொன்றாலும் எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்! உங்கள் ராணுவம்போல இல்லை. நீ ஒரு கமாண்டிங் ஆஃபீசர். நானுமே அதுதான். ஆனால் உனக்குத் தெரிந்த அளவு எனக்குத் தெரியாது. உனக்குள்ள மரியாதை எனக்குக் கிடையாது. அதுதான் பி.எல்.ஏ!"
ராஜிந்தர் மௌனமாக இருந்தான். ஒன்றும் அதிக ரகசியங்கள் இல்லை. ஏற்கனவே இந்திய ராணுவத்துக்குத் தெரிந்திருந்த விஷயங்கள்தாம். ஆனால் ஒன்றிரண்டு தகவல்களை உறுதிப்படுத்த முடிந்தது.
ராஜிந்தர் எழுந்தான். போஜிங் ஹீனமான குரலில் பேசினான்.
"என் பெண்ணின் ஃபோட்டோ என் மொபைலில் இருக்கிறது. ஒரு முறை பார்க்க ஆசையாக இருக்கிறது!"
"சண்டைத் தலத்துக்கு வரும்போது உன் ஆர்மியில் மொபைல் ஃபோன் அனுமதிக்கிறார்களா?"
"நான் ரகசியமாகக்கடத்தி எடுத்து வந்துவிட்டேன். என் பெண்ணின் முகத்தைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருக்க இயலாது!"
பறிக்கப்பட்ட அவன் மொபைலில் இருந்த ஃபோட்டோவை ராஜிந்தர் பார்த்தான்.
சின்னப்பெண். இரட்டைப்பின்னலுடன் நடு ஓட்டைப் பல்லுடன் கன்னக்குழியுடன் சிரித்துக்கொண்டிருக்கும் படம். ராஜிந்தருக்கு அவன் இரண்டாவது அக்காவின் பெண் தமிழ்மலர் நினைவுக்கு வந்தாள். படத்தைப்பார்த்து போஜிங் கண்ணீர் விட்டான்.
"மிக்க நன்றி!"
மொபைலை ராஜிந்தரிடம் கொடுத்தான். "எப்போது என்னைக்கொல்லப்போகிறீர்கள்?"
ராஜிந்தர் ஆச்சரியப்பட்டான். "உன்னை ஏன் கொல்லவேண்டும்?"
"கமான் ஆஃபீசர்! என் கதி எனக்குப் புரிந்துவிட்டது. என்னைத் திருப்பி அனுப்பினாலும் அவர்கள் என்னைச் சும்மா விடமாட்டார்கள். நான் ஏதாவது முக்கியத் தகவலைச் சொல்லியிருப்பேன் அல்லது உங்களின் உளவாளியாகியிருப்பேன் என்றுதான் முடிவு செய்வார்கள். எனக்கு அவ்வளவுதான் வாழ்நாள்!"
"நீ இல்லாவிட்டால் உன் குடும்பத்தின் கதி?"
"அவர்கள் கதியும் அவ்வளவுதான்!" போஜிங் இப்போது அடக்கமாட்டாமல் அழுதான். "என்னை ஓடிப் போனவனாகக் கருதி என் குடும்பத்தை துரோகிக் குடும்பமாக அறிவித்து... என் மனைவி, குழந்தை….!"
போஜிங்கின் அழுகை இப்போது சின்னப்பெண்ணின் அழுகைபோலக் கிறீச்சென்று ஒலித்தது.
ராஜிந்தர் யோசனையுடன் வெளியேறினான்.
அடுத்த மூன்று நாட்கள் ராஜிந்தர் பிஸியாக இருந்தான். மூன்றாம் நாள் ராஜிந்தர் போஜிங்கைச் சந்தித்துப் பேசிவிட்டு, தன் ஆர்டர்லியை அழைத்தான். சில பேப்பர்களை அவனிடம் கொடுத்தான்.
"ஸ்பாங்மிக் கிராமத்தில் விட்டுவிடு. அங்கே நம் திபெத்திய செக் போஸ்டில் ஏற்பாடு செய்தாயிற்று!"
போஜிங் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
"கிளம்பு! உன்னுடைய ஐடி பேப்பர்கள் என் ஆர்டர்லியிடம் இருக்கின்றன. உன் பெயர் மற்றும் ஐடிக்கள் இப்பொது வேறு. நீ இனிமேல் போஜிங் இல்லை. உன் பெயர் ட்ஸெரிங் டோண்டூப். ஸ்பாங்மிக் கிராமத்திலிருந்து சுதந்திர திபெத்துக்கு தப்பித்துப் போவது உன் சாமர்த்தியம். ம்... கிளம்பலாம்!"
"என் குடும்பத்தை விட்டு என் அடையாளத்தை இழந்து நான் ஏன் உயிர்வாழ வேண்டும்? தேவையில்லை, என்னை இங்கேயே கொன்று விடு! நீ இந்திய அரசாங்கத்திடம் இன்னொரு மெடல் வாங்கி சட்டையில் குத்திக்கொள்!"
ராஜிந்தர் அந்தக் கசப்பான சொற்களைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. "நீ போகவேண்டிய இடம் திபெத்தின் நாங்சென் கிராமம்! ஸ்டார்ட் மேன்! கெட் கோயிங்!"
போஜிங் பிடிவாதமாக நின்றான்.
"நான் ஏன் நாங்சென்னுக்கெல்லாம் போகவேண்டும். அங்கே எனக்கு யார்…"
"முட்டாளே! உன் மனைவியும் கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும் உன் மகளும் அங்கே காத்துக்கொண்டு இருப்பார்களடா! போ போ! திரும்பிப்பார்க்காமல் போ!"
புழுதியைக் கிளப்பிக்கொண்டு அந்த ஜீப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் ராஜிந்தர் தன் பாரக்ஸுக்குள் நுழைந்தான்.
அன்று மாலை கர்னல் பக்ஷி பொரிந்து கொண்டிருக்க, ராஜிந்தர் தலை குனிந்து நின்றான்.
"ராஜிந்தர்! ஸாலா! க்யா பக்வாஸ் கர்தியா?"
மௌனம்.
"அவனுக்கு பொய் ஐடி தயாரித்துக்கொடுத்து, அவன் குடும்பத்தை திபெத்தின் சுதந்திரப் பகுதிக்கு ஓடிவர ஏற்பாடு செய்து, நம் ஜீப்பிலேயே அனுப்பி…….வாட் ஹேவ் யூ டன்?"
மௌனம்.
"சொல்லு மேன்! ஏதாவது பதில் சொல்லு!"
"நம் நாட்டு நலனை முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல குடும்பத்தின் தந்தைதான் தெரிந்தான் சர்! சந்தோஷமான ஒரு குடும்பமே அழியக்கூடாது என்கிற எண்ணம் என்னை ஆக்கிரமித்துவிட்டது சர்!"
"ராஜிந்தர்! நாமெல்லாம் ராணூவ வீர்கள்!"
"ஆனாலும் மனிதர்கள்! இந்தியர்கள் சர்!"
கர்னல் பக்ஷி சில வினாடிகள் பேசாமல் ராஜிந்தரின் முகத்தைப்பார்த்தார். மெதுவாகச்சிரித்தார். நெற்றியில் கோபத்தின் ரேகைகள் இன்னும் மறையவில்லை.
"நீ ஒரு முட்டாள் ராஜிந்தர்! ஆனால் நல்லவன்!"
மௌனம்.
"இந்தக்குற்றத்திற்கு நீ கோர்ட் மார்ஷல் செய்யப்படவேண்டும், தெரியுமா?"
"யெஸ் சர்!"
"ஆனால் நான் யாரிடமும் சொல்லப் போவதில்லை! ஏனென்றால் நீ ஒரு முட்டாள்! ஆனால் நல்லவன்!"
"சர்!"
"ராஜிந்தர், இன்னொன்று தெரியுமா?"
"சர்?
"நானும் ஒரு முட்டாள்தான்!" பக்ஷி கடகடவெனச் சிரித்தார்.
"சர்! நான் ஒன்று சொல்லலாமா?"
"ஷூட் ராஜிந்தர்!"
"நீங்களும் நல்லவர்தான் சர்!"
இந்திய ராணுவத்தின் ஒரு கர்னல் தன் லெஃப்டினன்ட் கர்னலின் கையை இறுக்கமாகப் பிடித்துக் குலுக்கிவிட்டு வெளியேற, எதிரே மாலைச்சூரியன் தன் செக்கர் வண்ணத்தை மேற்குவானம் முழுவதும் இறைத்து ரகளை பண்ணிக்கொண்டிருந்தான்.
ஜெ. ரகுநாதன், சென்னை |