சோலை சுந்தரபெருமாள்
தஞ்சை மக்களின் வாழ்வைத் தனது படைப்புகளில் முன்வைத்த சோலை சுந்தரபெருமாள் (68) காலமானார். திருவாரூர் அருகே காவனூரில் பிறந்த இவர், தொழிற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினார். திராவிட இயக்கம் இவரை ஈர்த்தது. பின்னாளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். முதல் சிறுகதை 'தலைமுறைகள்' தாமரை இதழில் வெளியானது. தொடர்ந்து பல சிறுகதைகளை எழுதினார். கவிதையார்வத்தில் 'பொன்னியின் காதலன்', 'தெற்கே ஓர் இமயம்' போன்ற தொகுப்புகளை மலிவுப் பதிப்பாக வெளியிட்டார். இவரது 'மனசு' என்னும் குறுநாவல் 1987-ல் 'கலைமகள்' இதழில் வெளியாகி இவருக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார்.

'உறங்க மறந்த கும்பகர்ணர்கள்', 'ஒரே ஒரு ஊருல', 'தப்பாட்டம்', 'பெருந்திணை', 'மரக்கால்', 'நஞ்சை மனிதர்கள்', 'பால்கட்டு' போன்றவை இவரது நாவல்களில் சில. 'செந்நெல்' இவரது படைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. ஞானசம்பந்தப் பெருமானை மையமாக வைத்து இவர் எழுதிய 'தாண்டவபுரம்' நாவல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய ஒன்றாகும். தஞ்சை மண்ணின் இலக்கியவாதிகளின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை 'தஞ்சைச் சிறுகதைகள்' என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

இவரைப்பற்றி மேலும் வாசிக்க.

© TamilOnline.com