புற்றுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் செயல்பட்ட டாக்டர் வி. சாந்தா (94) காலமானார். 'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று வாழ்ந்தவர். 1927 மார்ச் 11 அன்று சென்னை மைலாப்பூரில் பிறந்தார். பூர்வீகம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம். மைலாப்பூர் பி.எஸ். சிவசாமி பெண்கள் பள்ளியில் கல்வி பயின்றார். தொடர்ந்து சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றார். டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களை தனது முன்மாதிரியாகக் கொண்டு புற்றுநோய் சிகிச்சையில் கவனம் செலுத்தினார். சிகிச்சைக்குப் பணமில்லாமல் வாடும் ஏழைகளுக்கு நிதி திரட்டி அவர்களது மருத்துவச் செலவுக்கு உதவினார். 1980 முதல் 1997 வரை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் இயக்குனராகப் பணியாற்றினார். ஏழைகளுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்தார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார்.
புற்றுநோய் சிகிச்சையில் எந்தப் புதிய நுட்பம் வந்தாலும், அதனை உடனடியாக அடையாறு புற்றுநோய் மையத்திற்குக் கொண்டுவந்தார். ஆதரவற்ற புற்று நோயாளிகள் குறித்தே எப்போதும் சிந்தித்துச் செயல்பட்டார். இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற உயரிய விருதுகள் அளித்துச் சிறப்பித்தது. உலகின் புகழ்பெற்ற விருதுகளில் ஒன்றான மகசாசே விருது இவரைத் தேடிவந்தது. தமிழக அரசின் ஔவையார் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு 'My Journey, Memories' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
எளிமை, அன்பு, இரக்கம், கனிவு இவற்றுடன் மாறாப் புன்னகையோடு இறுதிநாள்வரை செயல்பட்டவர், முதுமையில் திடீர் மாரடைப்பால் காலமானார். மேலும் வாசிக்க |